R.Tharaniya / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதிகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றன. வெள்ளிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க “ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை” என்று கூறியிருந்தார்.
அதே நாள் மாலையில் நடைபெற்ற பாராளுமன்ற வரவு-செலவுத் திட்ட விவாகத்தில், “ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பிளவுபடாமல் தேசிய சபையாகச் செயற்பட வாருங்கள்” என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
காலையில் கூறிய விடயங்களின் அடுத்தநிலையே அது.கடந்தவாரத்தில் நாடு டிட்வா சூறாவளியில் சிக்கி பெரும் அழிவுகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்த அழிவிலிருந்து மீள்வதற்கு நெடுஞ்சாலைகள், மின்சாரம், குடிநீர், எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள், கல்விக் கட்டமைப்புகள் என அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தவேண்டிய நிலையில், அரசாங்கம் இருக்கிறது.
உண்மையில் இந்த மீட்புக்கு அரச தரப்பு மாத்திரமல்ல பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் தரப்பினரும், நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள மக்கள் பற்றிச் சிந்திக்கின்ற அனைத்து அமைப்புகளும் நிறுவனங்களும் சேர்ந்து உழைப்பதேதேவையானது.
அனர்த்தங்கள் இவ்வாறான சேர்ந்து உழைக்கும் வாய்ப்புகளைக் கொடுப்பது வழமையே. அதனைப் பற்றிக் கொள்வதற்கு யாரெல்லாம் தயாராக இருக்கிறார்கள் என்பதே இதிலுள்ள முக்கிய விடயம்.
நாட்டிலுள்ள இனப் பிரச்சினை, அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றிய சம்பவம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தது.
அதற்கு விமர்சனங்கள், எதிர்ப்புகள் இருந்தன. சுனாமி என்கிற ஆழிப் பேரலை அழிவு ஏற்பட்டபோது, வடக்கு கிழக்கை கட்டியெழுப்புவதற்கான ஏற்பாட்டுக் கட்டமைப்பு கொண்டு வரப்பட்டபோது, பாராளுமன்றத்திலிருந்த ஜே.வி.பி.
முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. நாட்டையும் அதற்கெதிராக அணிதிரட்டியது.
தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஏற்பட்டிருக்கின்ற
அனர்த்தத்தில் நாட்டின் மீட்சிக்காக ஒற்றுமையாகச் செயற்படுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்தவகையில், தான் இதனை காலத்தின் அழைப்பாகவே கொள்ளப்பட வேண்டும்.
அனர்த்தங்கள் அவசரமாக நடந்து முடிபவையாகவும் நீண்டநாட்களாக நடைபெறுவதாகவும் அமைந்து விடுகின்றன. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் பின்னர் நாடு பல்வேறு பின்னடைவுகளையும் சவால்களையும் எதிர்நோக்கியிருந்தது.
யுத்த மௌனிப்புக்குப் பின்னர் கொவிட்-19 எனப்படும் மற்றுமொரு பாரிய சவாலுக்கு முகம் கொடுத்து பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியிருந்தது. உருவாக்கிய நெருக்கடி நாட்டின் வரலாற்றில் நடைபெறாதிருந்த ஜனாதிபதித் தெரிவு நடைபெறக் காரணமானது. அதன் பின்னர்,நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்கு கிடைக்காத நிலையிலும், ஜனாதிபதியைத் தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.
அரசியல் தரப்பினர் யாரும் எதிர்பாராத ஆட்சி மாற்றம் ஒன்று நாட்டில் ஏற்பட்டது. இதுதான் இலங்கையின் வரலாறு. இப்போது ஏற்பட்டிருக்கின்ற அனர்த்த அழிவானது இந்நாட்டினது எதிர்காலம் குறித்த அச்சத்தினை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
இன முரண்பாடுகளினாலும் உள்நாட்டு யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த வடுக்களிலிருந்து வெளிவரவேண்டுமென முயற்சித்துக் கொண்டிருக்கையில் தான் இந்தப் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனை யாரும் மறந்து விடக் கூடாது. மத்திய, ஊவா, வடமத்திய, வடமேல், வடக்கு கிழக்கு என நாட்டின் பல மாகாணங்கள் இந்த டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நாட்டின் மத்திய மாகாணமே மிகப் பெரியளவில் அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. ஏற்கெனவே கொஸ்லந்தை மணிசரிவு மலையகத்தில் ஒரு பெரும் அழிவைத் தந்திருந்தது.
அதே நேரத்தில், கடந்த காலங்களில் சிறு சிறு மண் சரிவுகளையும் மலையகம் எதிர் கெண்டிருக்கிறது. ஆனால், இப்போது ஏற்பட்ட அழிவு மிகப் பெரியது. இந்த அனர்த்தத்தின் பின்னர் நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற, கஷ்டங்களுக்குக் கைகொடுக்கின்ற செயற்பாடுகளில் அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றர். இதுவே மனிதாபிமானம்.
இந்த மனிதாபிமானம் பாராளுமன்றதிலுள்ள அரசியல் தரப்பினர் அனைவரிடமும் உருவாக வேண்டும் என்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பாக தேசிய சபை இருக்கலாம். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அது ஒருபுறமிருக்க, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்தால் 11 பேரைக் கொண்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவோம்’ நிதியத்திற்கு முகாமைத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.
தொழிலாளர் அமைச்சரும் நீதி அமைச்சருமானடாக்டர் அனில் ஜெயந்த பெர்ணாண்டோ, ஜனாதிபதியில் சிரேஷ்ட செயலாளர் ஜீ.எம்.ஆர்.டி.அப்போன்சு, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், ஜனாதிபதியின் வெளிநாட்டு முதலீடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவதன, ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மோகன் பண்டிதகே, ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா, ஐட்கென் ஸ்பென்ஸின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, பிராண்டிக்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரஃப் ஒமர், எல்.ஓ.எல்.சி.ஹோல்டிங்ஸின் நிர்வாகத் தலைவர் இஷார நாணயக்கார ஆகியோர் உள்ளனர்.
இந்த நிதியத்தின் நிதியின் பயனுள்ள நிர்வாகத்தை உறுதி செய்வதற்கு இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை அமைத்தல், வளங்களை ஒதுக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் என பலவும் இதற்குள் இருக்கின்றன.
இந்த இடத்தில்தான், இந்தக் குழுவின் உறுப்பினர்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாட்டைப் பொறுத்தவரையில், ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதும், குழுக்கள் உருவாக்கப்படுவதும் வழமையாக இருந்தாலும், இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்ற குழுவும்
அவ்வாறில்லாதிருந்தால் சரி என்று கடந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.
இதற்கு முன்னரும் அனுரகுமார திசாநாயக்கவினால் உருவாக்கப்பட்ட குழு ஒன்றில் சிறுபான்மைப் பிரதிநிதிகள் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்ட பின்னரே இணைப்பொன்று நடைபெற்றிருந்தது.
அதே போன்று, இந்த இலங்கையைக் கட்டியெழுப்புதல் குழு மீது முன்வைக்கப்படுகின்ற அனர்த்தங்களில் பெண்கள், மற்றும் குழந்தைகள்
பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால்,பெண் பிரதிநிதி ஒருவர் கூட குழுவில்
இல்லை. நாட்டின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், வளப்பகிர்வு, முடிவெடுத்தல் குழுக்களில் பெண்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவதை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி விரும்பவில்லை என்கிற குற்றச்சாட்டும் கவனத்திலெடுக்கப்படும் என்று நம்புவோம்.
நாட்டு முன்னேற்றம் நாட்டின் அமைதியிலும் ஒருமித்த செயற்பாட்டிலுமே இருக்கிறது. ஆனால், அதிகாரம் எவற்றையெல்லாம் செய்யும் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்ற அனர்த்தம் பெரும் தடைக்கல்லாக இருக்கப் போகிறது.
அந்தவகையில், ஆட்சியைப் பொறுப்பேற்றது.முதல் கடந்த ஆட்சிக் காலங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஊழல்களைக் கண்டுபிடித்தல், அதிகம் சொத்துச்
சேர்த்தல், அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளைக் கைது செய்தல், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குதல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதி வாய்ப்புகளைப் பறித்தெடுத்தல், அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட பட்டங்கள் சரியானவைகள்
தானா என கண்டுபிடித்தல் என தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் செயற்பட்டுக் கொண்டிருந்த அரசாங்கம் தற்போது ஒரு பெரும் வேகக் கட்டுப்பாட்டுத் தடையை (ஸ்பீட் பிரேக்கர்) சந்தித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவர்களைச் சிறையிலடைப்பதும், முன்னாள் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட
சலுகைகளைப் பறிப்பதும் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியே. இதன் மூலம் சேமிக்கப்படும் பணம் நாட்டிற்கு செழிப்பை ஏற்படுத்தும்.
பொருளாதார நெநருக்கடியைக் குறைக்கும், மக்களின் அன்றாட அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த
மக்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எதனையும் செய்யவில்லை. இவ்வாறான நிலையில்தான் நாட்டிற்குப் பேரழிவை
டிட்வா அனர்த்தம் ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டினை கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்குக் கைகோர்த்தலே
இப்போது தேவையாக இருக்கிறது. என்றாலும் எப்போது எதிர்ப்பினை வெளியிட வேண்டும். பாராட்டு எவ்வேளையில் தேவையாக இருக்கும் என்பவை பற்றிப் பிரித்தறியப்படுவதும் அவசியமானது.
ஆனால், எதிர்க்கட்சியினருடைய நடவடிக்கைகள், எதிர்வினைகள்,
ஏற்றுக் கொள்ளமுடியாதளவுக்கிருப்பது கவலைகளை உருவாக்கிவருகிறது.
அத்துடன் அதனையும் அரசியலுக்குப் பயன்படுத்தலும் நடைபெறாமலில்லை. எது எவ்வாறானாலும் நாட்டைக் கட்டியெழுப்பலும் மீட்டெடுத்தலும் இதயசுத்தியுடன் நடைபெற்றால் சரி.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025