2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’

R.Tharaniya   / 2025 ஜூன் 26 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தன் தவம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்  யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட  

ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது. 

‘நாடு அனுரவோடு ஊர் எங்களோடு’ என்றார்  தமிழரசின் தலைவர் ஒருவர். ஆனால், இன்று ‘நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ என்றவாறாக வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழரசு கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகளின் தாய் கட்சி என போற்றப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின்   ஆட்சியை, மேயர், பிரதி மேயர், தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகளை தாங்களே கைப்பற்ற  வேண்டுமென்ற அதிகார ஆசையினால் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைப் புறக்கணித்து,அவர்களின் சில நிபந்தனைகளை நிராகரித்து விட்டு பேரினவாதிகளினதும் துரோகிகளினதும் ஆதரவோடு சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றது.  

பேரினவாதக் கட்சிகளான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்கன் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழினத் துரோகி என இவர்களினாலேயே குற்றம் சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றே வடக்கின் சபைகளைக் கைப்பற்றி தமிழரசுக் கட்சி கட்சி மிகப்பெரும் காட்டிக்கொடுப்பையும் துரோகத் தனத்தையும் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழினத்திற்கும் செய்துள்ளது.

வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றவர்கள் ஆட்சியமைக்க நாம் ஆதரவளிப்போம். அதேவேளை, இரண்டாவது இடத்தில் நாம் இருந்தால் எமக்குப் பிரதி மேயர், அல்லது பிரதி தவிசாளர் பதவி தரவேண்டும்

என்ற நிபந்தனையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்திருந்தது. அத்துடன், ஒரு சில சபைகளில் தமக்கு பிரதி தவிசாளர் பதவி வேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் (சங்கு) கோரியிருந்தது. 

ஆனால், யாழ். மாநகரசபையை ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளின் எந்தவொரு ஆதரவுமின்றி, முழுமையாகக் கைப்பற்றத் தமிழரசு   திட்டமிட்டது. அதனால் அவர்களை நிராகரித்து விட்டு ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழரசு சரணாகதி அடைந்தது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றினுடனும் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு ஆதரவு கோரியது.

யாழ். மாநகரசபையில் மொத்தமாக 45 ஆசனங்கள் உள்ளன. இந்நிலையில், 2025 மே 6இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, 1,0370, வாக்குகள் பெற்று 13, ஆசனங்களையும்  தமிழ்த் தேசிய பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 9,124 வாக்குகள் பெற்று, 12, ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி, 7,702, வாக்குகள் பெற்று 10 ஆசனங்களையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, 3,567 வாக்குகள் பெற்று 4, ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, 3,076, வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி, 587  வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும்  ஐக்கிய மக்கள் சக்தி, 464, வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும்  பெற்றிருந்தன.

யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்கும் கட்சி 23 ஆசனங்களை பெறவேண்டும்.
 தமிழரசுக் கட்சி மேயர் வேட்பாளராக நிறுத்திய மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளைப் பெற்று  யாழ். மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசுக் கட்சி 13  ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், ஈ.பி.டி.பியின் 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 1 ஆசனம், ஐக்கிய தேசியக் கட்சியின் 1 ஆசனம் என்பவற்றை பெற்றே 19 ஆசனங்களை   பெற்றுக்கொண்டது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 23 ஆசனங்கள் தேவையென்பதனால், யாழ். மாநகரசபையில் சிறுபான்மை ஆதரவுடனேயே தமிழரசு ஆட்சியமைத்துள்ளது.

அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிறுத்திய மேயர் வேட்பாளர் -தமிழ் மக்கள் பேரவை-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 12 ஆசனங்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது.

தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மேயர் பதவியைப் பெற கஜேந்திரகுமார் விரும்பியிருந்தால் தேசிய மக்கள் சக்தியின் 10 ஆசனங்கள் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களைப் பெற்று 26 ஆசனங்களுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால், அவர் தமிழ்த் தேசியக் கொள்கைக்காக அதனைச் செய்யவில்லை.

ஆனால், ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்க மறுத்திருந்தால் தமிழரசு நிச்சயம் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவைக் கோரியிருக்கும். ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எதிரிகளே தவிர, பேரினவாதக் கட்சிகளோ துரோகிக் கட்சிகளோ எதிரிகள் கிடையாது.

தமிழரசின் தலைமைகள் எப்போதும் பேரினவாத கட்சிகளின் தலைவர்கள், எஜமானர்களின் விசுவாசிகளாக, அடிமைகளாகவே இருந்து வந்துள்ளனர். அதன் இறுதி உதாரணமாக, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகத் தமிழ் தேசியக் கட்சிகள்  அரியநேத்திரனை நிறுத்தியபோது, அவரை தோற்கடிக்க முழு மூச்சாக இந்த தலைவர்கள் சிலர் செயற்பட்டதுடன், அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாதெனவும் கூறியதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவையே பகிரங்கமாகவே ஆதரித்திருந்தார்கள்.

இவ்வாறாக யாழ். மாநகரசபையை எதிரிகளோடும் துரோகிகளோடும் சேர்ந்து கைப்பற்றிய தமிழரசு இங்கு தமக்குப் போட்டியாக வேட்பாளரை நிறுத்திய தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சாவகச்சேரி நகரசபையிலும் ஆட்சியைக் கைப்பற்ற சகுனித்தனமாக அக்கட்சியின் இரு வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து அவர்களுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பெற்று வாக்களிப்பில்  பங்கேற்க விடாது செய்து அதிகாரத்தைக் கைப்பற்றச் சதி செய்தது.  

சாவகச்சேரி நகர சபையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் பெற்றிருந்தன. வாக்குகள் அடிப்படையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2,959 வாக்குகளையும் தமிழரசுத் தரப்பு 2,594 வாக்குகளையும் பெற்றன. இதன்படியே தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை வகித்தது. இச்சபையில், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (சங்கு) இரு ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் கொள்கை ரீதியில் ஒப்பந்தம் செய்து ஓரணியாகி தமது ஆசனங்களின் எண்ணிக்கையை 8 ஆக அதிகரித்தது. இதேவேளை, தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியிடம் ஆட்சியைக் கைப்பற்ற ஆதரவைக் கோரியிருந்தது.

இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வசம் 8 ஆசனங்களும் தமிழரசு, ஈ.பி.டி.பி. வசம் 7 ஆசனங்களும் இருந்தன. தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது.

தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஓர் ஆசனத்தால் முன்னிலை வகித்த நிலையில்தான் இவர்களை வீழ்த்தி ஆட்சியைக்  கைப்பற்றவேண்டுமென்ற அதிகார ஆசை மற்றும் பழிவாங்கும் வெறியில் அவசர அவசரமாக 11ஆம் திகதி தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால்   வழக்குப் போடப்பட்டது.

13ஆம் திகதி மாலை சபை கூடவிருந்த நிலையில், அன்று காலை   அந்த உறுப்பினருக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.  இதனால், தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்தது.தமிழரசு - ஈ.பி.டி.பி தரப்புக்கும் ஆசனங்கள் 7ஆக இருந்தன. இதற்கிடையில் ஏற்கனவே, தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பின் மற்றொரு பெண் உறுப்பினரை சபைக்குப்  போகக்கூடாது என்று தமிழரசின் எடுபிடிகள் தொலைபேசி மூலம் பலதடவைகள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தகவல்கள் உண்டு.

அவரையும் சபைக்கு வரவிடாமல் தடுத்து தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்பு 7:6 என்ற ஆசனங்கள் அடிப்படையில் சபையைக் கைப்பற்றுவதே சதித் திட்டமாகவிருந்தது.

ஆனாலும், அந்த பெண் உறுப்பினர்  சபைக்கு வந்து விட்டார். இந்நிலையில், தமிழ் மக்கள்  பேரவை -தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்புக்கும் தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்புக்குமிடையில் தவிசாளர் - உப தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற போது, இரு தரப்புகளும் தலா 7 வாக்குகளைப் பெற்று சமனிலை பெற்றன.

இதனால் திருவுளச்சீட்டு (குலுக்கல் முறை) முறை மூலம் இரு பதவிகளுக்கும்  தெரிவு இடம்பெற்றது. இரு தடவைகளும்  தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு  வெற்றி கிடைத்தது. இதற்கமைய தமிழரசின்  சதியை, சகுனித்தனத்தை அதிர்ஷ்டத்தின் மூலம் முறியடித்து  சாவகச்சேரி நகர சபையைத்  தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .