2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

நுரைச்சோலை சவூதி வீட்டுத் திட்டம்; எந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்?

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு  13 வருடங்களாக இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படாதிருக்கின்ற நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றிய கருத்துக்கள் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன.

இந்த வீட்டுத் திட்டத்திற்குப் பிறகு நிர்மாணிக்கப்பட்ட எத்தனையோ வீடமைப்புத் திட்டங்கள் பயனாளிகளுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்ட நிலையில், நுரைச்சோலை சவூதி வீட்டுத் திட்டம் மட்டும் இன்னும் காடாகிக் காட்சியளிக்கின்றது.

இப்படி ஆண்டுக்கொரு தடவை அதுபற்றி வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கப்படுகின்றதே தவிர ஆன பலன் ஒன்றுமில்லை.
இந்த விவகாரம் இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டு பின்னர் நீதிமன்றம் சென்றது. உயர் நீதிமன்றம் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் வீடுகளைப் பகிர்ந்ததளிக்குமாறு தீர்ப்பளித்தது.

ஆனால், இது நியாயமற்றது என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இதுவரை அவ்வீடுகள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.நீதிமன்றத் தீர்ப்பை நாம் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆயினும், அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முற்றுமுழுதாக முஸ்லிம்கள் வாழும் அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மாவட்ட இன விகிதாசரத்தின் படி, பகிர்ந்தளிப்பதே தார்மீகம் என்ற கருத்துக்கள் முஸ்லிம்களால் முன்வைக்கப்படுகின்றன.

இந்த 500 வீடுகளும் இப்படி யாருக்கும் பயனற்றுக் கிடப்பதை விடவும் எல்லா சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெறும் வகையில் அதுபகிர்ந்தளிக்கப்பட்டால் கூடப் பரவாயில்லை என்று இப்போது பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

இருப்பினும், அது முஸ்லிம்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் என்பதால், ‘பெரிய பங்கு’ முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றே 
முஸ்லிம்கள் கோருகின்றனர்.  அது ஒருபுறம் இருக்க, இந்த வீட்டுத் திட்டத்தை போல நாட்டில் உள்ள அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்தில் காணப்படும் அரச காணிகளையும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ஏன் அரசாங்கங்கள் பிரித்துக் கொடுக்க முன்வரவில்லை என்ற முக்கியமான ஒரு கேள்வியையும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைத்து வருகின்றனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சில மாதங்களின் பின்னர் அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷரப் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது அவருக்கு இளவரசரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வேளையில், தான் கொண்டு சென்றிருந்த சிறியதொரு வீடியோவை அவர் போட்டுக் காண்பித்தார். சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளைக் கொண்ட அதனைப் பார்த்த இளவரசர் கண்கலங்கிப் போனாராம்.

 அப்போதுதான் பேரியல் அஷ்ரப் அந்த வேண்டுகோளை முன்வைத்தார். ‘வீடியோவில் நீங்கள் பார்த்த இம்மக்கள் வீடற்று இருக்கின்றனர். அவர்களுக்கு வீடுகளை அமைத்துத்தர முன்வர வேண்டும்’ என்று அவர் கோரி நின்றார்.

இதற்கு உடனடியாக இணக்கம் தெரிவித்த இளவரசர் அப்போது இந்தோனேசியாவில் நடைமுறைப்படுத்துவதற்கென தயார்நிலையில் இருந்த வீடமைப்புத் திட்டம் ஒன்றை இடைநிறுத்திவிட்டு, அந்த நன்கொடையை இலங்கைக்கு வழங்க முன்வந்தார்.

இதற்கென பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசியில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டதும் ஆலிம்நகர் கிராமத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதுமான நுரைச்சோலையில் 64 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டது.

 இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் பேரியல், சவூதிக் குழுவை இலங்கைக்கு அழைத்து வந்தார். நுரைச்சோலைக் காணியில் 500 வீடுகள் உள்ளடங்கலாக அனைத்து வசதிகளையும் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2006 மே மாதம் 2ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

ஆனால், அந்த தருணத்தில்தான் இனவாதம் தூண்டிவிடப்பட்டது. தீகவாபி எனும் சிங்கள குடியேற்றக் கிராமத்திற்கு மிக அருகில் முஸ்லிம் குடியேற்றம் மேற்கொள்ளப்படுமானால் சிங்களவர்களுக்கு அது பாதகமாக அமையும் என்றனர். அதுமட்டுமன்றி, தீகவாபி புனிதபூமிக்கு அண்மித்ததாக இது அமைவதற்கு இடமளிக்க முடியாது எனவும்  கோஷமிட்டனர்.

வீடமைப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஆரம்பமாகிய போது தீகவாபி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு குழுவினர் விழா இடம்பெற்ற வளாகத்திற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.

‘சிங்கள மக்களுக்கும் வீடுகளைக் கட்டித் தருவதாக’ சவூதி அரசின் பிரதிநிதி அங்கு கூறியதைக் கூட செவி மடுக்காமல், அந்நாட்டு கொடியை சின்னாபின்னமாக்கியும் கூட்டத்தை குழப்பியும் அவ்வளாகத்தை களேபரமாக்கினர். 

 இதற்குப் பின்னால் இனவாத சக்திகள் மட்டுமன்றி பல சிங்கள பிரதேச அரசியல்வாதிகள் இருந்தனர். ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் பேரியல் அஷ்ரபுக்கு எதிரான அரசியலொன்றை இதில் செய்ததாக அக்காலத்தில் பேசப்பட்டதுண்டு.

இதன் விளைவாக இந்த வீட்டுத் திட்ட நிர்மாணப்பணிகள் முடிவடைந்த பிறகு கூட அவ்விடத்திற்கு வந்து நாட்டின் ஜனாதிபதியால் கூட வீடுகளை திறந்து வைக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, 2011ஆம் ஆண்டு அலரி மாளிகையில் வைத்து சவூதி அரசாங்கத்தினால் இவ்வீடுகள் மஹிந்த அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதே வரலாறு.

நாட்டின் தேசிய இன விகிதாசாரத்தின்படி, வீடுகள் கையளிக்கப்பட வேண்டும் என சிங்கள இனவாத சக்திகளால் தொடரப்பட்ட வழக்கின் மீது,  2009இல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

இருப்பினும். முஸ்லிம்களிள் வேண்டுகோளுக்கு அமைவாக சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக இஸ்லாமிய நாடொன்றினால் வழங்கப்பட்ட வீடுகளை, சுனாமியால் பாதிப்படையாத சிங்கள மக்களுக்கு கணிசமான அளவில் வழங்குவது தர்மமல்ல என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர்.  

அன்று தொடக்கம் இன்று வரை மஹிந்த, மைத்திரி, கோட்டபாய, 
ரணில் அரசாங்கங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள், தலைவர்கள் தேனிலவு கொண்டாடிய போதிலும் இந்த நுரைச்சோலை வீடுகளை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியவில்லை. நல்லிணக்கம் பேசும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இதனை செய்யவில்லை.

500 வீடுகளை மட்டுமன்றி, பாடசாலை, பஸ்தரிப்பு நிலையம், பள்ளிவாசல், சந்தை என எல்லாவற்றையும் உள்ளடக்கிய இந்த மாதிரிக் கிராமம் காடாகிக் கிடந்தது. கொரோனா காலத்தில் இடைத்தங்கல் முகாமாகவும் பின்னர் சில காலம் படையினரின் வசமும் இது இருந்த போதும், இப்போது மீண்டும் காடாகத் தொடங்கியிருக்கின்றது.

நிலைமை இவ்வாறிருக்க, இந்த வீடுகளை தேசிய இன விகிதாசாரத்தின்படி அல்லாமல், அம்மாறை மாவட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் பகிர்;தளிப்பது நல்லது என்ற தீர்மானம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சில காலத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டது.

இருப்பினும், ஏன் இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று காதர் மஸ்தான் எம்.பி. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானத்தின் படி முஸ்லிம்களுக்கு 270 வீடுகளும் சிங்களவர்களுக்கு 174 வீடுகளும் தமிழர்களுக்கு 87 வீடுகளும் வழங்க முன்மொழியப்பட்டிருந்ததாகவும், 
ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அமையவே செயற்பட வேண்டும்
 என சட்ட மா அதிபர் திணைக்களம் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் குழு ஒன்றை அமைத்து நீதிமன்ற தீர்ப்புக்கு முரண்படாத வகையிலும், நியாயமான அடிப்படையிலும் இவ் வீடுகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பல ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அமைச்சர்களும் இதே விதமான வாக்குறுதிகளையே வழங்கியிருந்தமை இவ்விடத்தில் 
நினைவு கொள்ளத்தக்கது.

இந்த வீடுகள் முழுமையாக முஸ்லிம்களுக்காக நிர்மாணிக்கப்பட்டது என்பதால், அவர்களுக்கு வழங்கப்படுவதே தார்மீகமாகும். ஆனால், நீதிமன்ற உத்தரவையும் மதிக்க வேண்டியுள்ளது.

எனவே, யாருக்கும் பயன்படாமல் இவை வீணாகிப் போவதை விட,முஸ்லிம்களுக்கு பெருமளவான வீடுகளும் ஏனைய சமூகங்களுக்கு 
ஏனைய வீடுகளும் என்ற அடிப்படையில் இவற்றை பகிர்ந்தளிக் தோழழர்களின் 
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .