Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மார்ச் 10 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
சர்வதேச பெண்கள் தினம், நேற்று முன்தினம் (மார்ச் 8) முடிந்திருக்கிறது. வழக்கமான எல்லாத் தினங்களையும் போல, அரசியல் தலைவர்களின் வாழ்த்து, பத்திரிகைக் கட்டுரைகள், இணையக் கட்டுரைகள், பேஸ்புக் எழுத்துகள் எனக் களைகட்டியிருந்தது மார்ச் 8. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் கவலைக்குரியது.
உலகில் ஏறத்தாழ 50 சதவீதம் வாழ்ந்துகொண்டிருக்கும் குழுமமொன்றின் நிலை, முன்னேற்றமடைவதற்கு இன்னமும் அதிகம் இருக்கின்ற நிலையிலேயே ஒவ்வோர் ஆண்டும், சர்வதேச பெண்கள் தினத்தை வெறுமனே பெயருக்காகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
குறித்த ஒரு விடயம் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கி, அது தொடர்பான மாற்றத்தை உண்டாக்கவே சர்வதேச தினங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில், வெறுமனே குறியீடாகவும் வர்த்தக நிறுவனங்கள் தமது வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவுமெனவே, இத்தினங்கள் மாறிப் போயின. இம்முறை சர்வதேச பெண்கள் தினத்திலும் கூட, இலங்கையிலுள்ள வங்கிகள் சிலவற்றில், குறிப்பிட்டளவு பணத்தை வைப்பிலிட்டால், சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தியாவிலுள்ள நிறுவனமொன்று, 'பெண்கள் தினமென்றால் பெண், பெண்களென்றால் காலணிகள், ஆகவே காலணிகளை வாங்குங்கள்' என்று விளம்பரப்படுத்தியிருந்தது. என்ன காரணத்துக்காக பெண்கள் தினம் உருவாக்கப்பட்டதோடு, அந்த நோக்கத்தை விடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பது தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.
1857ஆம் ஆண்டு அமெரிக்காவில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் உரிமைப்போராட்டமே, பின்னர் கிளர்ச்சிக்கு வித்திட்டது. 1909ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்காவின் சோசலிசக் கட்சியால், உழைக்கும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட தினம், தொடர்ச்சியாக மாற்றமடைந்து, 1975ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாடப்பட்டதோடு, அவ்வருடத்திலிருந்து மார்ச் 8ஆம் திகதி, சர்வதேச பெண்கள் தினமாக மாறியிருந்தது. இவ்வாறு, ஏறத்தாழ நூறு வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட இத்தினம், இன்னமும் ஆரம்பகட்ட நோக்கத்தைத் தானும் அடைந்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே உறுதியான பதிலாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் தொடர்பான பிரிவால், சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தரவுகள், அதிர்ச்சியை வழங்கின. காலங்காலமாக, அமெரிக்காவில் காணப்படும் ஊதிய ஏற்றத்தாழ்வு பற்றியே ஆய்வுகள் கவனஞ்செலுத்தி வந்தன. ஒரே வேலையைச் செய்வதற்காக, ஆணை விடப் பெண்ணுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவது, அத்தரவுகள் மூலம் வெளிப்படும்.
அண்மையில் வெளியிடப்பட்ட தரவு, இலங்கையோடு நெருங்கிய நாடான இந்தியா பற்றியது. இந்தியாவின் கிராமியப் பிரதேசங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 26 சதவீதமானோர் பெண்களாக இருக்கிறார்களெனவும், ஒரே வேலையைச் செய்வதற்காக ஆண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 62 சதவீதம் மாத்திரமே, பெண்களுக்கு வழங்கப்படுவதாகவும், அந்த ஐ.நா தரவுகள் தெரிவித்தன. இவ்வாறு, சமூகத்தில் ஏனைய பகுதிகளில் ஒதுக்கப்படுவது மாத்திரமன்றி, ஊதியத்திலும் கூட, பெண்கள் மீது பாகுபாடு காண்பிக்கப்படும் நிலைமை தொடர்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் தினத்துக்கான வாழ்த்துச் செய்தியைச் சொல்லிவிட்டு, பெண்களின் சமவுரிமைக்கான நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது பொருத்தமற்றது. பெண்களின் சமவுரிமை தொடர்பில் சிந்திக்கும் போது, பெண்ணியம் பற்றிச் சிந்திக்காமலிருப்பது பொருத்தமற்றது.
பெண்ணியம்... ஐ.எஸ்.ஐ.எஸ், பயங்கரவாதம் போன்ற சொற்களின் வரிசையில், அதிக அச்சத்தை ஏற்படுத்தும் சொற்களில் ஒன்றாக அண்மைக்காலத்தில் மாறியிருக்கிறது. பெண்ணியம் தொடர்பான போதிய விளக்கமின்மை, பெண்ணியத்துக்கும் ஆண் வெறுப்புக்குமான வித்தியாசத்தை உணராதிருத்தல் போன்றனவே, பொருத்தமற்ற இந்த அச்சத்துக்கான காரணம்.
பெண்ணியமென்றால் என்ன? இலகுவான வரைவிலக்கணமாக, 'சமூக, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளைப் பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோட்பாடு' என்பதைக் குறிப்பிடலாம். அதாவது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே, அதன் அர்த்தமாகும்.
பெண்ணியம் என்ற சொல்லில், அச்சப்படவோ அல்லது வெறுக்கவோ வைக்கும் எந்தவோர் அர்த்தமும் காணப்படாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென நீங்கள் எண்ணினால், வாழ்த்துகள், நீங்களும் பெண்ணியவாதி தான்.
இருந்த போதிலும், பெண்ணியவாதி என அடையாளப்படுத்திக் கொள்ள, பலருக்குக்கும் தயக்கமும் விருப்பமின்மையும் காணப்படுகிறது. அவர்களுக்குப் பொருத்தமாக, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்க நகைச்சுவையாளரான அசீஸ் அன்சாரி தெரிவித்த விடயத்தை மீளப்பதிதல் பொருத்தமானது. 'ஆண்களும் பெண்களும் சமவுரிமையைக் கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நம்பினால், நீங்கள் ஒரு பெண்ணியவாதியா என யாரும் கேட்டால், ஆமென நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
ஏனெனில், அவ்வாறு தான் சொற்கள் செயற்படுகின்றன. 'ஆம், தோலில் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் வைத்தியர் நான்' என்று நீங்கள் சொல்லும் போது, 'ஆகவே நீங்கள் டேர்மடோலொஜிஸ்டா?' எனக் கேட்கும் போது, 'அது மிகவும் ஆக்ரோஷமான சொல். அவ்வாறில்லை, அவ்வாறில்லை' என நீங்கள் பதிலளிக்க முடியாது' என்றார். இதை விட இலகுவாகவும் தெளிவாகவும், இதை விளக்க முடியாது.
பெண்ணியம் என்ற வார்த்தையை விளக்கும்போது, சமவுரிமைக்காகப் போராடும் கோட்பாடு என்றால், எதற்காக சமவுரிமை இயக்கமோ அல்லது அதைப் போன்றதோர் அர்த்தத்தில் அழைக்கப்படவில்லை, எதற்காகப் பெண்களை மாத்திரம் மையப்படுத்தி அச்சொல் காணப்படுகிறது என்பது, அடிக்கடி கேட்கப்படும் வினா. உலகில் பெரும்பான்மையான இரண்டு பாலினப் பிரிவுகள் காணப்படுகின்றன.
ஒன்று, ஆண். மற்றையது பெண். இந்த இரண்டு பிரிவுகளில் ஒன்று (ஆண்), மற்றைய பிரிவை (பெண்ணை) அடக்குமுறைக்குட்படுத்தும் போது, உரிமைகளை மறுக்கும் போது, அங்கு கவனம் தேவைப்படுவது, அடக்கப்படும் பிரிவு தொடர்பானதேயன்றி, அடக்கும் பிரிவு தொடர்பாகவன்று. இதற்கான சிறந்த உதாரணமாக, அமெரிக்காவில் கறுப்பின மக்களை, வெள்ளையின மக்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்ததைத் தொடர்ந்து, கறுப்பின மக்களின் உரிமைக்கான போராட்டங்களே முன்வைக்கப்பட்டன.
கறுப்பின மக்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மாத்திரமே, அங்கு சமவுரிமை ஏற்படும். மாறாக, சமவுரிமைக்காகப் போரிடுவதென்பது, கறுப்பின மக்களுக்கும் வெள்ளையின மக்களுக்கும் பிரச்சினைகள் இருப்பது போன்ற நிலை ஏற்படும். இந்த நிலைமையை, இலங்கை விவகாரத்திலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
1956ஆம் ஆண்டிலிருந்து, அடக்குமுறையைச் சந்தித்த இனம், தமிழினம். இலங்கையில், இரு இனங்களும் சமமாக மதிக்கப்படும் நிலை உருவாக வேண்டுமென்ற போதிலும், தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படின் மாத்திரமே, அந்தச் சமநிலை உருவாகும். ஆகவே, இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது, தமிழ் மக்களை மையப்படுத்தியே காணப்பட வேண்டும்.
இவ்வாறு, பெண்ணியம் என்ற சொல்லின் மீதோ அல்லது அதன் அர்த்தப்படுத்தல் மீதோ, எந்தவிதமான குழப்பங்களும் கிடையாது. பெண்ணியம் என்ற பெயரில், சிறு பிரிவினர், ஆண் வெறுப்பில் ஈடுபட்டார்களா என்றால், ஆம் என்பது தான் பதில். ஆனால், சிறு பிரிவினருக்காக ஒட்டுமொத்த இயக்கமுமே தவறாக நோக்கப்பட வேண்டுமா என்றால், நிச்சயமாக இல்லை. விடுதலைப் போராட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக, விடுதலைப் போராட்டங்களே தவறாகிப் போய்விடாது.
ஆகவே, வெறுமனே பெண்கள் தினத்துக்கான வாழ்த்துகளோடு நிறுத்தாமல், ஆண்டு முழுவதுமே, பெண்களின் உரிமைக்காகப் போராட வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. பெண்களின் உரிமைகளுக்காகப் போரிடுவதற்கு, பெண்ணியவாதிகளாக எம்மை வெளிப்படுத்துவதே, இலகுவானதும் சிறப்பானதுமான வழியாகும். ஆண், பெண் என்ற பேதமின்றி, அனைவருமே பெண்ணியத்தின் மீது கவனத்தைச் செலுத்தினால், இன்னும் சில ஆண்டுகளில், பெண்கள் தினமென்பது, பெண்களின் உரிமைக்கான கோரிக்கையாக அல்லாது, கொண்டாட்டத்துக்கான தினமாக மாறிப் போகும்.
எதற்காக ஆண்கள் போராட வேண்டுமென்ற கேள்வியும், பெண்ணியமென்பது, பெண்களுக்கானது என்ற தவறான புரிதலும் காணப்படுகிறது. ஆனால், விலங்குரிமையென்பது விலங்குகள் போரிடுவதன்று. மாறாக, விலங்குகளுக்கானவை. பெண்ணியமென்பது, பெண்களுக்கானது, பெண்களால் மாத்திரம் செய்யப்பட வேண்டியதன்று. மாறாக, பெண்களுக்கான உரிமைகளை மறுக்கும் பிரிவான ஆண் பிரிவிலிருந்து, அவர்களின் உரிமைகளை மீட்பதற்கான போராட்டத்தில் பங்குபெறுவதென்பது, உரிமைகளை விரைவாக மீட்பதற்கே வழிகோலும்.
ஆகவே, பெண்ணியவாதியென அடுத்த முறை யாராவது கதைக்கும் போது, நீங்களும் பெண்ணியவாதியாக இருக்க முயலுங்கள். பெண்ணியவாதியென உங்களை அடையாளப்படுத்தாமலும், பெண்ணுரிமைக்காகப் போராடலாம். ஆனால், தோல் சம்பந்தமான வியாதிகளைக் குணப்படுத்தும் வைத்தியர் என்று அழைப்பதும் டேர்மடோலொஜிஸ்ட் என அழைப்பதும் ஒன்று தான் என்பது தான் ஞாபகப்படுத்தப்பட வேண்டிய விடயம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago