Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க) அதிகார பூர்வ பொதுக் குழுக் கூட்டம் புத்தாண்டுக்கு முதல் நாள், சென்னையில் உள்ள திருவான்மியூரில் தடபுடலாக நடைபெற்று முடிந்திருக்கிறது. சாலையோரங்களில் வைக்கப்பட்ட விளம்பரத் தட்டிகளும், விளம்பரங்களும் கண்ணைப் பறிக்கும் விதத்தில் அமைந்திருந்ததை விட, அது ஒரு மெகா திருவிழா போல் எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க தொண்டர்களின் கூட்டமாக தென்பட்டது. இராணுவக் கட்டுப்பாடு போல், பொதுக்குழுவுக்குள் வெளியாட்கள் யாரும் போக முடியாத படி ஆங்காங்கே பொலிஸார் நிறுத்தப்பட்டு, தனியாக சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு கூட்டம் படு விமர்சையாக நடந்து முடிந்தது.
இந்த பொதுக்குழுவில், முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட ஆறு பேர் உரையாற்றினார்கள். வரவேற்புரையை வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் நிகழ்த்தினார்.
தீர்மானங்களை அமைச்சர் வளர்மதி வாசித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது, அதற்காக உயிர்நீத்த 263 பேருக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானத்தை மட்டும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே வாசித்தார். பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றுள், ' ஏழை, எளிய தமிழக மீனவர்கள் தங்களது அன்றாட வாழ்வை நிம்மதியாக நடத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை' என்றும், 'இலங்கை அரசோடு, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி அளவில் உயர்நிலை பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும்' வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பன்ருட்டி ராமச்சந்திரன், 'வேலை காலி இல்லை என்று முன்பெல்லாம் நிறுவனங்களில், அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருக்கும். அப்படி ஏதோ முதல்வர் பதவி காலியில்லை என்று தமிழக மக்கள், ஏற்கெனவே அறிவித்தல் பலகை வைத்து விட்டார்கள். இப்போது அம்மா முதல்வராக இருக்கிறார். 2016 சட்டமன்ற தேர்தலிலும் அவர்தான் முதல்வராக தொடரப்போகிறார்.' என்று பேசினார்.
மற்றவர்கள் எல்லாம் பொதுவாகப் பேசினாலும், பன்ருட்டி ராமச்சந்திரன் பேச்சை முதலமைச்சர் ஜெயலலிதா உன்னிப்பாக கவனித்தார். இறுதியில் சிறப்புரையாற்றிய அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 'வரும் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு எனக்கு நீங்கள் முழு அதிகாரம் அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தேர்தல் களத்தில் வெற்றி பெற நாம் பல்வேறு உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்.
எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக நாம் உத்திகளை வகுக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய உத்தி என்று எதுவும் கிடையாது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன். நாம் வருகின்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்' என்று பிரகடனம் செய்திருக்கிறார்.
இந்தப் பேச்சு அ.தி.மு.கவின் கூட்டணி நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு முடிவில் நடைபெற்ற இந்த பொதுக்குழு, 2016ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளது. அதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சில் எதிரொலித்தது. ஐந்து வருட ஆட்சியை முடித்து, ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது அ.தி.மு.க. அதற்கான ஏற்பாடுகளில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்போதே இறங்கி விட்டார்.
அரசு ரீதியாக 'மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி' போன்ற இலவசப் பொருள்களை, ஏறக்குறைய 8,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வழங்கியுள்ளார். இப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப் போகிறார். இந்த வரிசையில் இப்போது கட்சி ரீதியாக 'கூட்டணி' பற்றி வியூகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அ.தி.மு.கவைப் பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஒரேயொரு முறைதான் ஜெயலலிதா தலைமையில் தனித்துப் போட்டியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, 37 இடங்களில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. மற்றபடி இதுவரை சட்டமன்ற தேர்தலில் அவர் தனியாக போட்டியிட்டதில்லை. கூட்டணி வைத்துத்தான் களம் கண்டிருக்கிறார்.
அரசியலில் குதித்து, முதன் முதலாக 1991ஆம் ஆண்டு இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது, காங்கிரஸுடன் கூட்டணி. பின்னர், 1996இல் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி. 2001 சட்டமன்றத் தேர்தலில் 'மெகா கூட்டணி'. அதாவது மூப்பனார், வைகோ, டொக்டர் ராமதாஸ், இரு கம்யூனிஸ்டுகள் என்று அனைவரையும் சேர்த்து 'மெகா கூட்டணி'. 2006 சட்டமன்றத் தேர்தலில் வைகோ, திருமாவளவன் ஆகியோருடன் கூட்டணி. மீண்டும் 2011 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் கூட்டணி வைத்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஆகவே, அ.தி.மு.க தேர்தல் வரலாற்றில், ஜெயலலிதா பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற 1989 சட்டமன்றத் தேர்தலை தவிர, மற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலுமே கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டுள்ளார். 1989இல் கூட, எம்.ஜி.ஆர் மறைவினால் அ.தி.மு.கவே 'ஜானகி அணி' 'ஜெயலலிதா அணி' என்று பிளவு பட்டு நின்றதால், அவரால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியவில்லை.
அந்த வகையில் 2016 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு இப்போது அ.தி.மு.க கதவை திறந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் 'விஜயகாந்த் தி.மு.க. அணியில் இடம்பெற வேண்டும்' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான பின்னர் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில், 'சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி' என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. தற்போதைக்கு அ.தி.மு.க கூட்டணி வேண்டும் என்று திரைமறைவில் அடம்பிடித்துக் கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சி. ஆனாலும் பிரதமர் நரேந்திரமோடிக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் அரசியல் கூட்டணி அமைக்கும் விதத்தில் ஏதோ ஒரு விஷயத்தில் நெருடல் நீடிக்கிறது.
'அ.தி.மு.கவுடன் கூட்டணி என்பது கற்பனையானது' என்று தமிழக அளவில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் சொன்னாலும், 2019ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இப்போதே அ.தி.மு.கவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அகில இந்திய பா.ஜ.க. விரும்புகிறது.
அதனால்தான் மழை வெள்ளத்தை பிரதமரே நேரில் வந்து பார்வையிட்டார். நிதி வேண்டும் என்றதும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியே வந்து முதலமைச்சரை சந்தித்தார். இப்படி மத்திய அமைச்சர்கள் அனைவரும் சென்னை நோக்கி படையெடுப்பதற்கு காரணம் வருகின்ற சட்டமன்ற தேர்தல். அந்தச் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற ஆசை.
இப்போது ஜெயலலிதா அறிவித்துள்ள 'சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி' என்பது மேலிட பா.ஜ.க. தலைவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இதை முன்னெடுத்துச் சென்று அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் மேலிட பா.ஜ.க. தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் 'சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி' பற்றி முடிவு என்று ஜெயலலிதா அறிவித்ததில் பா.ஜ.க. கூட்டணி மட்டும் அவர் மனதில் இல்லை. இப்போது தி.மு.க. எந்த உருப்படியான கட்சிகளின் கூட்டணியும் இல்லாமல் நிற்கிறது. இந்த நேரத்தில் அ.தி.மு.க பொதுக்குழுவில் தனித்தே போட்டி என்று அறிவித்தால் விஜயகாந்த் தவிர உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க.வை நோக்கிச் சென்று கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகலாம்.
ஏன் பா.ஜ.க.வை கூட தி.மு.க. கூட்டணிக்கு முயற்சிக்கலாம். அது மட்டுமின்றி இவ்வளவு சீக்கிரமே தனித்துப் போட்டி என்று அறிவித்தால் பா.ஜ.க. தலைமையில் உள்ள மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய வெள்ள நிவாரண நிதிகள் வருவதில் தாமதம் ஏற்படலாம். 25 ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்ட, மிகப்பெரிய நெருக்கடியில் தமிழக அரசு இருக்கிறது.
இந்த நேரத்தில் மத்திய அரசு நிதி கிடைக்கவில்லை என்றாலோ, மிகக் குறைவாக கிடைத்தாலோ, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே மோசமான பெயரை எடுக்க வேண்டிய நிலை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து விடலாம். ஆகவே, இவற்றை தவிர்க்கவே 'சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி' என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
தமிழகத்தில் ஏற்கெனவே 'மக்கள் நலக் கூட்டணி' 'பாட்டாளி மக்கள் கட்சி' ஆகியவை இரு அணிகளாக களத்தில் நிற்கின்றன. இரு கட்சிகளுமே தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, டொக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஸ்டைல் விளம்பர யுக்திகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
வைகோவின் அணி, ஜனவரி 22 ஆம் திகதிக்கு மேல் பிரசாரத்தில் இறங்குகிறது. தி.மு.க. ஏற்கெனவே 'நமக்கு நாமே' பிரசாரத்தில் 215 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் செய்து முடித்து விட்டது. பீஹார் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் டிசெம்பர் மாதத்தில் மத்திய அமைச்சர்கள் எல்லாம் தமிழக தேர்தல் களத்துக்கு வருவார்கள் என்று அறிவித்த பா.ஜ.க., இப்போது அ.தி.மு.கவின் சமிக்ஞைக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் 'சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி' என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு தமிழக அரசியலில் கூட்டணி அத்தியாயத்தில் புதிய விடியலை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago