2025 மே 17, சனிக்கிழமை

பொதுப் போக்குவரத்து வேதனைகள்

Thipaan   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கையில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக, மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனடிப்படையில், வர்த்தக, நிதி நிறுவனங்கள், வாகனமொன்றின் பெறுமதியின் 70 சதவீதத்துக்கும் அதிகமானளவுக்கு வாடகைக் கொள்வனவுக்கான கடன் வழங்குவதைத் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

அதேபோல், அதிகரித்துள்ள வாகனங்களின் இறக்குமதி காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள சென்மதி நிலுவையைக் கருத்திற்கொண்டும் அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவருவதைக் கருத்திற் கொண்டும், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு போன்ற நகரப் பகுதிகளில் தினமும் பயணிப்பவர்களுக்கு, இலங்கையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் பற்றிய அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். அலுவலக நேரத்தில் பயணம் செய்யும் போது, சில கிலோ மீற்றர்களைத் தாண்டுவதற்கே, ஏறத்தாழ ஒரு மணித்தியாலமெடுக்கும் நிலை காணப்படுகிறது.

அத்தோடு, கொழும்பின் வளியில் பொதுவாகக் காணப்படும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக, காலை நேரப் பயணமென்பது இலகுவானதாக அமைந்து விடுவதில்லை. அதன் காரணமாக, அந்த நாளுக்குரிய வேலையாற்றலில் நிச்சயமான தாக்கமேற்படும்.

நகரப் பகுதிகளில் காணப்படும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமானது. காலை அல்லது மாலை நேரத்தில் வீதியில் நின்று அவதானிக்கும் போது, வீதியால் பயணிக்கும் பெரும்பாலான கார்களிலும் முச்சக்கர வண்டிகளிலும், தனியொருவரே பயணித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். இலங்கையில் மாத்திரமன்றி, ஏனைய நாடுகளும் இவ்வாறான நிலைமையை எதிர்நோக்கி வருகின்றன என்பது உண்மையானது. அதற்காக, 'பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்' என, பல பிரசார இயக்கங்களும் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையிலும் கூட, சழயன.டம என்ற பயனர்களுக்குப் பரிச்சயமான இணையத்தளமொன்று, 'உயச pழழடiபெ' என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. குறித்த வீதியொன்றில் பயணிக்கும் நபர்கள் ஒன்றாக இணைந்து, ஒரே காரில் பயணிப்பதுடன், காரில் பயணிக்கும் ஏனையோர், அந்தக் காரின் உரிமையாளர்களுக்கு சிறியதொரு பணத்தை வழங்குவதாக அந்த நடைமுறை காணப்படுகிறது.

ஆனால், இவையெல்லாம் போக்குவரத்து நெரிசலை அவ்வாறே குறைத்துவிட்டதாக இல்லை. பிரதான வீதிகளில், பாடசாலை, அலுவலக ஆரம்ப மற்றும் நிறைவுறும் நேரங்களில் பயணிப்பதென்பது, இப்போதும் கடினமானது. அதுவும், அண்மைக்காலமாக இது மேலும் மேலும் கடினமாகி வருகின்றதென்பது தான் உண்மையானது.

சிறிய ரக கார்களின் உற்பத்தியும் இறக்குமதியும், இவ்வாறான போக்குவரத்து நெரிசல்களில் முக்கிய பங்கை வகிக்கின்றன. பெரிய கார்களை விட, சிறிய கார்கள் எடுத்துக்கொள்ளும் இட அளவு குறைவானது என்பதால், சிறிய கார்களுக்கு அனுகூலம் இருக்கின்ற போதிலும், சிறிய கார்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவானது என்பதால், அதை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதனால், சிறிய ரக கார்கள், இறுதியில் வரமாக அன்றி சாபமாகவே அமைந்து விடுகின்றன.

இதன்போது கேள்வியொன்று எழலாம், கார்களைப் பணக்கார வர்க்கத்தினருக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்காகவா, 'சிறிய ரக மலிவான கார்கள் பொருத்தமற்றவை' என்ற கருத்து எழுகின்றது என்று. இல்லை.

கொலம்பியாவைச் சேர்ந்த முன்னாள் மேயரொருவர் தெரிவித்த கருத்து, மேற்படி வினாவுக்கு மிகவும் பொருத்தமானது. 'அபிவிருத்தியடைந்த நாடென்பது, ஏழைகளும் கார்களைக் கொண்டிருக்கும் இடமல்ல. பணக்கார மக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் இடம் தான் அபிவிருத்தியடைந்த நாடு' என்பது அவரது கருத்தின் சாராம்சம்.

இது தான் யதார்த்தமானது. அனைவருமே கார்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விட, அனைவருமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டுமென எதிர்பார்ப்பது தான் பொருத்தமானது.

ஆனால், இலங்கையிலுள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகள், சௌகரியமான பயணத்துக்கு வித்திடுகின்றனவா என்றால், இலகுவான பதில்: இல்லவே இல்லை. இங்கு, பொதுப் போக்குவரத்துச் சேவைகளென்றால், புகையிரதங்களும், அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளும் அடங்குகின்றன. பொதுமக்களுடன் கதைக்கத் தெரியாத பஸ் நடத்துநர்கள், வீதி விதிகளைப் பின்பற்றாத வாகன ஓட்டுநர்கள் என, பொதுப் போக்குவரத்தென்பது சவாலானதாகவே காணப்படுகிறது.

காலையிலும் மாலையிலும், 48 பேர் அமரக்கூடிய பஸ்களில், கொலைக்களத்துக்கு எடுத்துச் செல்லப்படும் ஆடு, மாடுகளைப் போல், அடைத்துச் செல்லப்படும்போது, சௌகரியமான பயணமென்பது துளிக்கும் சாத்தியமற்றது. அதுவும், பஸ் பயணமென்பது ஏதோ, பஸ் நடத்துநர்கள் எமக்கான இலவசச் சேவையொன்றை வழங்குவது போல பயணிகள், மரியாதையின்றி நடத்தப்படுவதும் வழக்கமானது.

மிகுதிப் பணம் பற்றிக் கதைக்கவே தேவையில்லை. இவ்வாறான மோசமான அனுபவங்களைத் தரும் பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணம் செய்யுமாறு மக்களைக் கோருவதென்பது, உண்மையிலேயே இரக்கமற்ற செயற்பாடென்றே சொல்ல முடியும்.

வெளிநாடுகளிலுள்ள அமைச்சர்களும் பிரதமர்களும் ஜனாதிபதிகளும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் போது எமக்கு ஏற்படும் அங்கலாய்ப்பு என்பது, 'இதில் பயணம் செய்தாலாவது, இதன் கஷ்டத்தை அவர்கள் உணர்வார்கள்' என்பது போன்றது தான். சாதாரண மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளென்பன, போக்குவரத்து நெரிசலுள்ள நேரத்தில் சென்றால் மாத்திரமே உணரக்கூடியது. தனது காரைச் சூழ 5, 6 பாதுகாப்பு வாகனங்களுடன், வீதியின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு செல்லும் அரசியல்வாதிகளால், பொதுமக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகள் ஒருபோதும் உணரப்பட முடியாது.

(ஒருவகையில், இலங்கை அரசியல்வாதிகள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யாமையும் நன்மையானது தான். அவர்களது பரிவாரங்களோடு அவர்கள் பஸ்ஸொன்றில் பயணம் செய்தால், அதில் வேறொருவரும் பயணம் செய்ய முடியாது போகும்.)

இவ்வாறான சூழ்நிலையில், கணிசமான ஊதியம் பெறும் ஊழியரொருவர், தனக்கெனச் சொந்தமான வாகனமொன்றை வாங்க வேண்டுமென எதிர்பார்ப்பது யதார்த்தமானது. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கப் போகிறோம் என்றால், ஆகக்குறைந்தது சொந்த வாகனத்தில் கால்களை நீட்டிக்கொண்டு இருக்க முடிந்தால், அதாவது சற்று சௌகரியமானது.

ஆக, பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல், அதற்கான மாற்று வியூகங்களைப் பற்றிச் சிந்திக்காமல், வெறுமனே கார்களை வாங்குவதை மாத்திரம் கட்டுப்படுத்த முயல்வதென்பது, நன்மைக்குப் பதிலாக கஷ்டங்களையே ஏற்படுத்தும். குறிப்பாக, கார்களுக்குப் பதிலாக மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பல்வேறுபட்ட ஆய்வுகளின் போது, போக்குவரத்து நெரிசல்களைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த மாற்று வழியாக, சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் கூட எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அத்தோடு, பணக்காரரல்லாத அல்லது மத்தியவர்க்க சமூகத்தினரே, இவ்வாறு வாடகைக் கொள்வனவில் அதிகளவில் தங்கியிருக்கின்றனர், குறிப்பாக, அதிகபட்சமான வாடகைக் கொள்வனவுப் பெறுமதியைப் பெற முயற்சிக்கின்றனர். அத்தோடு, சிறிய, மத்தியதர வியாபார நிலையங்களும் இதே நிலையையே கொண்டிருக்கின்றன.

புதிதாகத் தொழிலை ஆரம்பிக்கும் சிறியரக வியாபாரியொருவரின் தேவைக்காக வாகனமொன்றைப் பெறுவதற்கு, வாடகைக் கொள்வனவு முறை அவசியமானது. எனவே, கட்டுப்பாடுகள் மூலமாக, வாகனக் கொள்வனவைக் கட்டுப்படுத்த முயல்வதென்பது, உண்மையில் அதைத் தேவையாகக் கொண்டவர்களுக்குப் பாதிப்பாகவே அமையுமென்பது யதார்த்தம்.

குறுகியகால, உடனடி எதிர்வினையான நடவடிக்கைகளை விட, நன்கு திட்டமிடப்பட்ட நீண்டகால நடவடிக்கைகளே நாட்டின் தேவையாக உள்ளது என்பதை, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால், சிறப்பானதாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .