2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாதகமானதா வடமராட்சி கிழக்கு நன்னீர்த் திட்டம்?

Thipaan   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

கடல் நீரை நன்னீராக்குவதென்பது, கனவுத் திட்டம் போன்றது. உலகில், மூன்றிலிரெண்டு பகுதிக்கும் அதிகமாகக் கடல் நீர் காணப்படும் நிலையில், அதை நன்னீராக்க முடியுமானால், உலகிலுள்ள நீர்ப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நினைக்கையில், அதை இன்னும் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை எனக் கேள்வியெழுப்பத் தோன்றுகிறது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி, 'எப்போதாவது நாங்கள், பாரியளவில், குறைவான விலையில், உப்பு நீரிலிருந்து நன்னீரைப் பெற முடியுமானால், மனிதத்துக்குச் செய்யப்பட்ட மாபெரும் சேவையாக அது இருக்குமென்பதோடு, ஏனைய எல்லா விஞ்ஞான அடைவுகளையும் அது சிறியதாக்கிவிடும்' எனத் தெரிவித்திருந்தார். அவர் இதை, 1962ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார். இப்போது 2015ஆம் ஆண்டு முடிவடையப் போகின்ற போதிலும், அவரது கனவுஃஎதிர்பார்ப்பு, இன்னமும் நிறைவேறியிருக்கவில்லை.

இந்நிலையில் தான், யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கில், கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அது எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் தான், அந்தத் திட்டம் எவ்வளவு பொருத்தமானது என்பதையும் அதன் சாதக, பாதங்களையும் ஆராயவேண்டிய தேவையேற்பட்டிருக்கிறது.

வடமராட்சி கிழக்குப் பகுதியென்பது, மணற்காடு, குடத்தனை, குடத்தனை வடக்கு, பொற்பதி, அம்பன், நாகர்கோயில் கிழக்கு, நாகர்கோயில் மேற்கு, நாகர்கோயில் தெற்கு, செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், பொக்கறுப்பு, சுண்டிக்குளம் ஆகிய 18 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதியாகும். இங்குள்ள 44 கிராமங்களில், ஏறத்தாழ 6,000 குடும்பங்களில் 16,000 பேர் வசிப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள குடும்பங்களில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மீன்பிடியை அல்லது அதனோடு தொடர்புடைய வேலைகளை நம்பி வாழுகின்றன.

இந்தப் பிரதேசத்தில் தான், கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, வடமாகாண சபை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் திட்டம், வருடக்கணக்காகத் திட்டத்தில் காணப்பட்ட போதிலும், மக்களிடம் காணப்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, தேர்தல் காலத்தில், தள்ளிவைக்கப்பட்டிருந்தது அல்லது கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர், அங்கு சென்ற அதிகாரிகள் சிலர், கடல் நீரின் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் மக்கள், அதற்கான எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வடமாகாணசபை, எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபடுவதில்லை என, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தொடக்கம் இந்த அரசாங்கம் வரையிலும், புலம்பெயர் மக்கள் தொடக்கம் உள்ளூர் மக்கள் வரையிலும் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், ஏதோவொரு திட்டத்தை ஆரம்பிக்க எடுத்துள்ள முயற்சியைப் பாராட்டலாமென்றால், அதன் பின்னாலுள்ள விளைவுகளைப் பார்க்கும் போது, இதன் பின்னால், வேறேதும் காரணிகள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியாது.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையில், கடல் நீர் அதிகமாகக் கிடைக்கும்போது, அதை எதற்காக நன்னீராக்குவதற்கு முயலக்கூடாது என்ற சந்தேகம் காணப்படலாம்.

கடல் நீரை நன்னீராக்குதல், அல்லது அதன் தொழில்நுட்பப் பெயரான உப்பகற்றல் என்பது, கடல் நீரிலிருந்து உப்புக்களையும் தாதுக்களையும் வேறுபடுத்திப் பிரித்து, நன்னீரைப் பெற்றுக் கொள்ளும் செயன்முறையாகும். இது, மனித நுகர்தலுக்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசுபடுதல் அதிகரித்துவரும் நிலையில், மாற்று வளங்களைத் தேட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான பதிலாக, இந்த உப்பகற்றல் செயன்முறை, சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தச் செயன்முறை, மிகவும் அதிகபட்சமான செலவுகளைக் கொண்ட செயன்முறையாகும். இது தொடர்பான எதிர்ப்புகளை வெளியிட்ட மக்களிடம், 'இதற்கு நிதியளிக்க, இலங்கை அரசாங்கம் சம்மதித்துள்ளது. பிறகெதற்குக் கவலைப்படுகிறீர்கள்' என, அரசியல்வாதியொருவர் கேட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கை அரசாங்கமென்பது, தனியார் நிறுவனமொன்றல்ல என்பதையும், வடமராட்சி கிழக்கு மக்கள் உட்பட, இலங்கை மக்கள் வழங்கும் வரிப்பணத்தின் மூலம் தான், இவ்வாறான திட்டங்களுக்கு நிதியளிக்கப்படும் என்பதையும் அறியாமலிருந்தாரா அல்லது, அதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு மக்களுக்குத் தெளிவில்லையென நினைத்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

அடுத்ததாக, இந்த உப்பகற்றல் செயன்முறையில், கழிவாகக் கிடைக்கப்போகும் கழிவுகளை அகற்றுதலென்பது, மிகப்பெரிய சவாலாக அமையும். அதேபோல், மிக முக்கியமான சவாலாக, இத்திட்டத்திலிருந்து வெளியாகும் கழிவு நீர், கடலுக்குள் மீளச் செலுத்தப்படும் இந்தக் கழிவு நீர், அதிக வெப்பமுடையதாகக் காணப்படும். வெப்பத்தைத் தணிக்கும் செயன்முறைகள் காரணமாக, அதியுயர் வெப்பநிலையில் காணப்படாதென்றாலும், அங்குள்ள கடல் வளங்களைப் பாதிக்குமளவுக்கான வெப்பத்தைக் கொண்டிருக்கும். இதனால், இறால், நண்டு, கணவாய் போன்ற உயிரினங்களின் இனப்பெருக்கச் செயற்பாடு பாதிக்கப்பட, மீன்பிடியை நம்பியிருக்கும் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடுமையாகப் பாதிக்கப்படும். அவர்களுக்கான மாற்றுத் திட்டங்கள் என்ன?

அடுத்ததாக, இந்த உப்பகற்றல் முறைக்கு, அதிகமான சக்தி தேவைப்படும். இதற்கான மின் பயன்பாட்டுக்கு, தனியாக மின்சக்தி நிலையமொன்று உருவாக்கப்பட வேண்டிய தேவையிருக்க, சுன்னாகத்தில் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து, இன்னுமொரு மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்குமான வளங்களை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், சுன்னாகம் பிரச்சினைக்கான தீர்வல்ல, அதற்கான காரணமே இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

நீர்த்தட்டுப்பாட்டுக்கான இலகுவான தீர்வாக இதனை முன்வைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளில், இத்திட்டம் இன்னமும் எதற்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை வெளிப்படுத்துவார்களா? கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எதற்காக, நீரைச் சுத்தகரித்து, அப்பிரச்சினையை இலகுவாகத் தீர்த்திருக்கவில்லை.

(சிறிய நகரங்களில் அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை, பெரிதளவு வெற்றியையும் தந்திருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.) அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளே, இத்திட்டம், பாரிய செலவுடையது என்பதாலும், கழிவகற்றல் கடினமானது என்பதாலும், இதை நிராகரிக்கும் நிலையில், இலங்கை போன்ற நாட்டில், இத்திட்டத்தால் அதிகளவு நன்மைகள் கிடைக்கப்பெறுமா என்பது, இலகுவாக விடை கிடைக்கக்கூடிய கேள்வியே ஆகும்.

மாறாக, இலங்கையைப் பொறுத்தவரை, ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது, எங்களின் பயன்பாட்டுக்கு அவசியமான நீர், இந்நாட்டிலேயே கிடைக்கிறது. போதுமான (அல்லது அதிகமான) மழைவீழ்ச்சி, நிலத்தடி நீர், ஆறுகள், ஏரிகள், குளங்கள் என, தன்னிறைவான ஒரு நிலை இருக்கிறது. சில பிரதேசங்களில், தேவைக்கு அதிகமானது இருக்க, சில பிரதேசங்களில், குறைவானதாக இருந்தாலும், ஒட்டுமொத்த இலங்கையைப் பொறுத்தவரையில், போதுமான நீர் இருக்கிறது. ஆகவே, அதிகமாக நீர் காணப்படும் பிரதேசங்களிலிருந்து, நீர் பற்றாக்குறையான இடங்களுக்கு நீரைக் கொண்டு செல்லுதல், உப்பகற்றலோடு ஒப்பிடும்போது மிக இலாபமானதாகவும், சூழலுக்குத் தீங்கற்றதாகவும் அமையும்.

உப்பகற்றல் திட்டமானது, இயற்கையான நீர் வளத்தைக் கொண்டிராத, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்குப் பொருத்தமாமனதாக இருக்கும். அந்நாடுகளுக்கு, வேறு மார்க்கங்களில்லாமையால், இவ்வழியே இலகுவானதாதகக் காணப்படுகிறது.

அதற்காகத் தான், இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்து நீரைக் கொண்டுசெல்லும் செயற்றிட்டம் ஆராயப்பட்டது. அந்தத் திட்டத்தால், கிளிநொச்சி மக்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படாது என்பது, அதை முன்னெடுக்க முயன்ற அரசாங்கங்களாலும் அதிகாரிகளாலும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்ட பின்னரும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இரணைமடுத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கான பதிலையும், அத்திட்டம் தொடர்பான சுயாதீனமான அறிக்கையையும் வெளியிடுவதற்கு, ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?

இவையெல்லாவற்றையும் தாண்டி, உண்மையிலேயே இந்த உப்பகற்றல் திட்டம் மிகச் சிறப்பானது என்றால், அந்தக் காரணத்தை மக்களிடம் கொண்டுசென்று, தெளிவுபடுத்த வேண்டிய தேவை, இதை முன்னெடுக்கும் வடமாகாண சபைக்கு உள்ளது. ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளியிடும் மக்களின் எதிர்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு, அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்காது, இதை நிறைவேற்றத் தான் போகிறோம் என்றால், ஒன்றில், மக்களின் சேவைகளுக்கான தியாகிகளாக இருக்க வேண்டும், இல்லாவிடில், தேர்தல் தோல்விகளையும் தாண்டி, அவற்றையும் சரிசெய்யக்கூடிய வேறு நன்மைகள் கிடைக்க வேண்டும். தியாகிகளெல்லாம் இப்போது, தேர்தல் மேடைகளில் ஏறுவதில்லையென்பது, மக்களனைவரும் பொதுவாக நம்பும் கருத்து என்பதைத் தவிர, சொல்வதற்கு வெறெதுவும் கிடையாது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .