Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன், தனது பதவிக்காலத்தை முடிக்கும் தறுவாயில், அடுத்தமாதம் முதல்வாரத்தில் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் இந்த ஆண்டில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு இணங்கியிருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
எனவே பான் கீ மூனின் இந்தப் பயணம் ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரியதோ, எதிர்பாராத ஒன்றோ அல்ல.
அதேவேளை, ஐ.நா பொதுச்செயலாளருக்கும் இந்தப் பயணம் முன்னொரு போதும் பயணம் மேற்கொள்ளாத ஒரு நாட்டிற்கானது அல்ல‚ அவர் ஏற்கெனவே, 2009 ஆம் ஆண்டு, மே 25 ஆம் திகதியும், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாக, இலங்கை அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட, ஒருவார காலத்துக்குள் அந்தப் பயணம் இடம்பெற்றிருந்தது.
முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்ததை நம்பக் கூட முடியாதிருந்த - பெரும் மனிதாபிமான அவலம் ஒன்றுக்குள் சிக்கிப் போயிருந்த, இலட்சக்கணக்கான மக்கள், வவுனியாவில் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த சூழலில்தான் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அங்கு சென்றிருந்தார்.
வவுனியா முகாம்களில் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே மக்களுடன் செலவிட்ட அவர், இறுதிப்போர் நடந்த முல்லைத்தீவை வான்வழியாக வட்டமடித்துப் பார்த்து விட்டுச் சென்றிருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்கள் மனிதாபிமான நெருக்கடிக்குள் சிக்கியிருந்த ஒரு காலகட்டத்தில்தான் அவரது முதல் பயணம் அமைந்திருந்தது.
அந்தக் கட்டத்தில் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், போரின் போது மீறல்கள் இடம்பெற்றிருந்தன என்பது வெளியுலகத்துக்குத் தெரிய வந்திருந்தாலும், போர்க்குற்றங்கள் மற்றும் அவை சார்ந்த பொறுப்புக்கூறல் விடயங்கள் அதிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.
வன்னிக்குள் இருந்து வெளியேறி வந்த மூன்று இலட்சம் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளும், அவர்களின் மீள்குடியேற்றமும் தான் முக்கியமான தேவைகளாக இருந்தன.
ஆனாலும், அந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் நடத்திய பேச்சுக்களின் முடிவில், இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூற நடவடிக்கை எடுப்பதாக இணங்கப்பட்டிருந்தது.
அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான், ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் என்பனவற்றினால், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகப் பார்வையிட அரசாங்கம் அனுமதிக்கவில்லை. கண்ணிவெடிகளைக் காரணம் காட்டி, வன்னியில் போர் நடந்த பகுதிகளில் அவரது காலடி படாமலேயே வவுனியாவில் கொண்டு போய் இறக்கியது அரசாங்கம்.
ஆனாலும், வான்வழியாகப் பார்வையிட்ட அவரால், ஓரளவுக்கேனும் போரின் தாக்கத்தை உணரக் கூடியதாகவே இருந்திருக்கும். அதுவே, பொறுப்புக்கூறலை அவர் வலியுறுத்தக் காரணமாக இருந்திருக்கலாம்.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்தில், ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் போதிய கரிசனை கொள்ளவில்லை என்ற ஆதங்கம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இன்னமும் இருந்தாலும், 2009 மே மாதம் அவர் ஆரம்பித்து வைத்த பொறுப்புக்கூறல் பயணம்தான் இதுவரை ஜெனிவாவில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலாளருக்கு இப்போது முற்றிலும் வித்தியாசமான அனுபவமே கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
போரின் காயங்களும் வடுக்களும் புதிய கட்டடங்களாலும், வர்ணப்பூச்சுக்களாலும் மறைக்கப்பட்ட ஒரு சூழலில்தான் அவர் இலங்கைக்கு வரப்போகிறார்.
பொறுப்புக்கூறலுக்கும் அரசியல் தீர்வுக்கும் உத்தரவாதம் அளித்து விட்டு அவற்றைச் செயற்படுத்தாத மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும், சர்வதேச சமூகத்திடம் அளித்திருந்த வாக்குறுதிகளில் கொஞ்சமேனும் நிறைவேற்றும் உறுதியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இடையில் அவரால் வேறுபாட்டை நன்றாகவே உணர முடியும்.
ஆட்சி மாற்றத்தை மாத்திரமன்றி, அதன் ஆண்டு நிறைவைக் கூட நினைவில் வைத்து வாழ்த்துக் கூறிய ஐ.நா பொதுச்செயலாளருக்கு, இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியப்பைத் தரலாம்.
ஏனைய உலகத் தலைவர்களைப் போலவே அவரும், இலங்கை அரசாங்கத்தை வியந்து பாராட்டுவார். நல்லிணக்கப் பாதையில் மேற்கொள்ளப்படும் பயணத்துக்காக புகழ்ந்து பேசுவார். இலங்கையின் அரச தலைவர்களை முன்னுதாரணம் கொண்டவர்களாக எடுத்துக் கூறுவார். ஆனாலும், இவையெல்லாம் சிங்கள மக்களையோ, தமிழ் மக்களையோ திருப்திப்படுத்துவதாக இருக்கப் போவதில்லை.
சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை ஆதரிக்கிறார்கள் என்றில்லை. சிங்கள மக்களில் கணிசமானோர் அரசாங்கத்தின் நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளை ஆதரித்தாலும், அத்தகைய விடயங்களில் எந்தளவுக்கு பயணிக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் அவர்களிடம் காணப்படுகின்றன.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளைப் பழிவாங்கும் விடயமாக, போரில் ஈட்டிய வெற்றியை விட்டுக்கொடுக்கும் விடயமாக, படையினரைக் காட்டிக் கொடுக்கின்ற விடயமாகவே சிங்கள மக்களில் பலரும் பார்க்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
அவ்வாறான பார்வைக்கு, சிங்கள அரசியல்வாதிகளின் தவறான பிரசாரங்களும், சிங்கள ஊடகங்களினது கருத்துருவாக்கங்களும் கணிசமான தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன.
அதுபோலவே, தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை என்பதே உண்மை.
தமிழ் மக்கள் எதிர்பார்த்த சர்வதேச விசாரணை உள்ளிட்ட விடயங்கள் எல்லாமே, நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்ட நிலையில், வெறுமனே உள்நாட்டு விசாரணைதான் நடக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுவிட்ட நிலையில், தமிழ்மக்களால் இந்தப் பொறுப்புக்கூறல் பொறிமுறையையிட்டு எவ்வாறு திருப்தி கொள்ள முடியும்?
நல்லிணக்க முயற்சி என்று நினைத்துக் கொண்டு அரசாங்கம் தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கின்ற சூழலில், அந்த வட்டத்துக்கு வெளியில்தான் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத நிலையில்தான் அரசாங்கம் இருக்கிறது.
பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த விடயங்களாக இருந்தாலும், இரண்டையும் சமாந்தரமாக முன்னகர்த்தும் விடயத்தில் அரசாங்கம் நம்பகமான செயல்முறைகளை இதுவரையில் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவில்லை.
தமிழ் மக்களையோ, சிங்கள மக்களையோ திருப்திப்படுத்தக் கூடியதான அல்லது அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதான செயல்முறைகளை நோக்கி நகராத போதிலும், சர்வதேச சமூகத்தின் வரவேற்பைப் பெறுகின்ற அரசாங்கமாகவே இது செயற்படுகிறது. இதனை அரசாங்கத்தின் இராஜதந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் முரண்டு பிடித்துக் கொண்டு, எதையும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறிவந்தது. ஆனால் மைத்திரிபால சிறிசேன அரசாங்கமோ, சர்வதேச சமூகத்தை தனது கைக்குள் போட்டுக் கொண்டு, தான் நினைத்ததையே செய்கிறது. பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இப்போதைய அரசாங்கம் சில தெளிவான வரையறைகளை வைத்துக் கொண்டு, அதற்கு வெளியே சென்று விடாமல் பார்த்துக் கொள்கிறது.
இப்படியான ஒரு காலகட்டத்தில் ஐ.நா பொதுச்செயலாளர் கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, சிங்கள மக்கள் அவரைச் சந்தேகத்துடன் பார்க்கவும், தமிழ் மக்கள் அவரை ஏக்கத்துடன் பார்க்கவுமே வாய்ப்பிருக்கிறது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கையை இழுத்துச் சென்று விடுவாரோ என்ற பயம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது. சர்வதேச விசாரணை உள்ளிட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க மாட்டாரா என்ற ஏக்கம் தமிழ் மக்களுக்கு, இருக்கிறது. பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் வெறும் ஆறுதல் வார்த்தைகளை மட்டும்தான் கொடுப்பாராயின், தாம் கைவிடப்பட்டு விட்டோம் என்ற உணர்வைத்தான் அவர்களுக்கு ஏற்படுத்தும்.
பான் கீ மூன் தமது பதவிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற நிலையில் இலங்கை அரசுக்கான அழுத்தங்களை எவ்வாறு கொடுக்கப் போகிறார் என்பதில்தான், தமிழ் மக்கள் அவரை எதிர்காலத்தில் எவ்வாறு பார்க்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025