2025 மே 17, சனிக்கிழமை

புருண்டி: ஆபிரிக்காவின் சிரியா?

Thipaan   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

உலக ஆதிக்கத்துக்கான போட்டிக் களங்கள் காலத்துடன் மாறுவன. சில வேளைகளில், ஒரே நேரத்தில் பல களங்களில் ஆதிக்கச் சவால்கள் அரங்கேறுகின்றன. உலக அரசியல் போன்று, நாடுகளிடையிலான உறவும் நேர்கோட்டில் நிகழ்வதல்ல.

ஐரோப்பிய அகதிகள் நெருக்கடியும் சென்ற வாரப் பாரிஸ் தாக்குதல்களும் உலகத்தை, சிரிய நெருக்கடியை திரும்பிப்பார்க்கச் செய்துள்ளன. பாரிஸ் தாக்குதல்களையிட்டு வெளியான கண்டனக் குரல்களும்  மனிதாபிமானக் குரல்களும் சிரியாவில் நேட்டோ படைகளால் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கானோர் பலியானபோது மௌனித்திருந்ததை இங்கு நினைவுகூரல் தகும்.

1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் அரங்கேறியதையொத்த இன்னொரு இனப்படுகொலைக்கான அனைத்துச் சாத்தியங்களும் உருவாகியுள்ளன என்று மேற்குலக ஊடகங்கள் அபாயச் சங்கு ஊதும் நாடு புருண்டி. எனின், புருண்டியில் என்னதான் நடக்கிறது?

ஆபிரிக்காவின் பேரேரிப் பகுதியில், வடக்கில் ருவாண்டா, கிழக்கிலும் தெற்கிலும் தன்சானியா, மேற்கில் கொங்கோ ஜனநாயகக் குடியரசு என்பவற்றை எல்லைகளாகக் கொண்டு, நாற்புறமும் நிலத்தாற் சூழப்பட்ட கிழக்கு ஆபிரிக்க நாடான புருண்டி, பத்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. 19ஆம் நூற்றாண்டு முதல் பெல்ஜியத்தின் கொலனியாயிருந்து. 1962இல் சுதந்திரமடைந்த புருண்டியில் ஹூட்டு இனத்தவர்; பெரும்பான்மையோராயும் டுட்சி இனத்தவர் சிறுபான்மையோராயும் உள்ளனர்.

முதலாவது பிரதமராகத் தெரிவான ஹூட்டு இனத்தவரான பியே என்ஜென்டான்டும்வெ (Pierre Ngendandumwe)புருண்டியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய ருவாண்டா நாட்டு டுட்சி இனத்தவரால் 1965 ஜனவரியில் கொல்லப்பட்டார். அடுத்துத் தெரிவான பிரதமரான ஹூட்டு இனத்தவரான ஜோசெப் பமீனாவையும் (Joseph Bamina) அவரது அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களையும் 1965 டிசெம்பரில் நடந்த சதிப் புரட்சியின் போது டுட்சி இனத்தைச் சேர்ந்த படைவீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

அமெரிக்க-சோவியத் கெடுபிடிப்போர்க் காலத்தில், கொங்கோவில் நடந்த கிளர்ச்சிகட்குத் தளமாயிருந்த புருண்டி, ஆபிரிக்காவில் அமெரிக்க-சோவியத் ஆதிக்கப் போட்டியின் முக்கிய களமாயிற்று. சுதந்திரத்தை அடுத்த மூன்று தசாப்தங்களில் 250,000 புருண்டியர்கள் உள்நாட்டுப் போர்களில் மாண்டுள்ளனர்.

1993ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனநாயகமான தேர்தலில் வென்று ஜனாதிபதியான ஹூட்டு இனத்தவரான மெல்சியோர் என்டடாயே (Melchior Ndadaye) பதவியேற்ற சில மாதங்களில் டுட்சி இராணுவ வீரர்கள் மேற்கொண்ட சதிப்புரட்சியிற் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து வீச்சடைந்த புருண்டி உள்நாட்டு யுத்தத்தில் 300,000 புருண்டியர்கள் (பெரும்பான்மையானோர் பொதுமக்கள்) மாண்டார்கள்.

போரிடும் தரப்புகளுக்கிடையிலான அமைதி உடன்படிக்கை தன்சானியாவின் அரூஷா நகரில் தென்னாபிரிக்காவினதும் தன்சானியாவினதும் வசதிப்படுத்தலுடன் எட்டப்பட்டது. இது அரூஷா உடன்படிக்கை எனப்படுகிறது. அதன்படி சிறுபான்மையினருக்கு அரசியற் காப்புரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டன. அவை படிப்படியாக நான்கு ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்டன. 2005ஆம் ஆண்டு பியே குருண்சிஸா ஜனாதிபதிப் பதவியேற்றார்.      

இப்போது புருண்டியில் நடப்பவற்றின் காரணங்கள் பூகோள அரசியற்தன்மை கொண்டவை. தற்போதைய ஜனாதிபதியான

குருண்சிஸா மூன்றாந் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் அறிவித்த கையோடு, எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. புருண்டிய அரசியலமைப்பின்படி எவரும் இரு தடவைகட்கு மேல் மக்களால் தெரியப்பட்ட ஜனாதிபதியாகப் பதவிவகிக்க முடியாது. அரூஷா உடன்படிக்கையிலும் இது உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால், 2005ஆம் ஆண்டு

குருண்சிஸா நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே ஜனாதிபதியாகத் தெரிவானார். எனவே தான், இன்னொரு தடவை போட்டியிடலாம் என்பது ஜனாதிபதி குருண்சிஸாவின் வாதம். அது செல்லாது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து. புருண்டிய உயர் நீதிமன்றம் குருண்சிஸா சட்டரீதியாக இன்னொரு முறை போட்டியிடலாம் என அறிவித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் குருண்சிஸா தேர்தலில் நிற்பது சட்டவிரோதமானது என அறிவித்தன.

பிரான்ஸ் இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தது. அதையிட்டுக் கருத்துரைத்த ரஷ்யா 'ஒரு நாட்டின் அரசியல் யாப்புத் தொடர்பான அலுவல்களிற் பாதுகாப்புச் சபை தலையிட முடியாது' என அறிவித்துத் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தீர்மானத்தைச் செல்லாததாக்கியது. இப் பின்னணியில் மே மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி குருண்சிஸாவுக்கு எதிரான அரங்கேறிய இராணுவச் சதி 24 மணித்தியாலங்களுள் முறியடிக்கப்பட்டது.

அதையடுத்து, குருண்சிஸா தேர்தலில் போட்டியிட்டால் புருண்டிக்கு வழங்கிவரும் நிதி உதவிகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் அறிவித்தன. உலக வங்கியின் அறிக்கைப்படி உலகின் இரண்டாவது வறிய நாடு புருண்டி. ஆனால்,

குருண்சிஸா எதிர்ப்பை மீறி ஜூலையில் நடைபெற்ற தேர்தலிற் போட்டியிட்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகியிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அதை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்தார். ஆனால், புருண்டியைச் சூழவுள்ள ஆபிரிக்க நாடுகளில் நடப்பவை அவருடைய கண்களுக்குத் தெரியவில்லை.

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி ஜோசப் கபீலா, வாக்காளர் கணக்கெடுப்பு இன்னமும் முடியாததால் தேர்தல்களை நான்கு ஆண்டுகள் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளார். அதற்கெதிராகப் பேசினோர் வகைதொகையாகக் கொல்லப்பட்டுள்ளனர்;. அதன் அண்டை நாடான கொங்கோ குடியரசில் ஜனாதிபதி டெனிஸ் சசோ என்குவேசோ மூன்றாம் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவாக அனுமதி கோரிய பொதுசன வாக்கெடுப்பில் மிகக்குறைவானோரே வாக்களித்தபோதும் சர்வதேச சமூகம் அதை ஏற்றது. உகாண்டாவில் இப்போது தொடர்ச்சியாக முப்பதாம் வருடமாக ஜனாதிபதியாக இருக்கும் யொவேரி மொசெவேனி அடுத்தாண்டு நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

ருவாண்டாவின் ஜனாதிபதி போல் ககாமெ 2034ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக நிலைப்பதற்கான அனுமதியை நாடாளுமன்றத்திற் பெற முயல்கிறார். மேற்குலகின் கண்களுக்கு இவை ஜனநாயக மறுப்பாகத் தெரியவில்லை. புருண்டி மட்டும் தெரிவதற்குக் காரணம் உண்டு.

ரஷ்யாவும் சீனாவும் ஆபிரிக்காவில் தங்கள் பிரசன்னத்தைப் படிப்படியாக அதிகரித்துள்ளன. உலகம் பல்மையமானதாகியுள்ள பின்னணியில் ஆபிரிக்காவில், சீனாவினதும் ரஷ்யாவினதும் செல்வாக்கு அதிகரிப்பதில் வியப்பில்லை. ஆனால், அது மேற்குலக நலன்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவின் வளச் சுரண்டலுக்கும் பிராந்திய ஆதிக்கத்துக்கும் பெரும் சவாலானது.

இன்று புருண்டியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை மேற்குலக ஆதரவுடன் தோன்றி அரங்கேறுகிறது. அதற்கு அப் பிராந்தியத்தில் அமெரிக்க அடியாளாக உள்ள ருவாண்டா ஜனாதிபதியின் ஆதரவு இருக்கிறது. புருண்டியின் வட எல்லையிலேயே வன்முறை அதிகமான நடக்கிறது. அதற்கான தூண்டுதல்களை ருவாண்டாவே வழங்குகிறது. இப் பின்னணியில் அங்கு ஐ.நா மூலம் ஒரு சர்வதேசத் தலையீட்டுக்கு அமெரிக்கா முயல்கிறது. இதுவரை ஏறத்தாழ 100,000 புருண்டியர்கள் உள்நாட்டுப் போரை அஞ்சி அண்டை நாடுகட்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இப் பிரச்சனை இப்போது ஹூட்டு இனத்தவர்கட்கும் டுட்சி இனத்தவர்கட்குமான பிரச்சினையாகக் காட்டப்படுகிறது. ஹூட்டு இனத்தவரான குருண்சிஸாவின் அரசாங்கத்தில், பல டுட்சிகள் பதவி வகிக்கிறார்கள். ஜனாதிபதிக்கு எதிரான வன்முறையாளருள் ஹூட்டுக்களும் டுட்சிக்களும் இருக்கிறார்கள். புருண்டியில் திட்டமிட்டு உருவாக்கிய அமைதியின்மைக்கு இனத்துவ, பெரும்பான்மை எதிர் சிறுபான்மை என்ற காரணம் கற்பிக்கப்பட்டு ருவாண்டாவிற் போன்று இனப் படுகொலை நிகழும் என எச்சரிப்பதன் மூலம் சர்வதேசச் தலையீட்டுக்கு வழி அமைக்கப்படுகிறது.

இன்றைய ஆபிரிக்காவின் ஆதிக்கத்துக்கான யுத்தத்தில் புருண்டி ஒரு முக்கிய புள்ளி. பல்வேறுபட்ட பிராந்திய, வர்த்தக, பொருளாதார, அரசியற் காரணிகள் புருண்டியை ஆபிரிக்காவின் தவிர்க்கவியலாத மையமாக்கியுள்ளன. ஆபிரிக்க ஒன்றியத்தின் முக்கியமான பங்களிப்பாளனாக புருண்டி உள்ளது. ஐ.நா. அங்கிகாரத்துடன் சேமாலியாவில் நிலைகொண்டுள்ள ஆபிரிக்க ஒன்றிய அமைதி காக்கும் படைகளில் 5,000 பேர் சிறப்புப் பயிற்சி பெற்ற புருண்டிய இராணுவத்தினர். எனவே, ஆபிரிக்க ஒன்றியத்தின் அமைதி காப்புச் செயற்பாடு புருண்டிய இராணுவத்தின் தயவில் உள்ளது.

புருண்டி ஏராளமான இயற்கை கனிமவளங்களைக் கொண்டது. குறிப்பாக,  உலகில் 10ஆவது அதிக நிக்கல் தாதுப்பொருளைக் கொண்ட நாடு புருண்டி. சீனக் கம்பெனிகள் அவற்றை அகழ அனுமதி பெற்றுள்ளன. அதேவேளை, சீன உதவியுடன் விசாலிக்கப்படும் தன்சானியாவின் பக்கமோயோ துறைமுகம் கிழக்கு ஆபிரிக்காவின் அதிபெரிய துறைமுகமாக உருவெடுக்கிறது. திட்டமிட்டுள்ள புகையிரதப்பாதை புருண்டியை பக்கமோயோ துறைமுகத்துடன் இணைக்கிறது.

பேரேரிகளில் ஒன்றான டங்கனிக்கா ஏரியில் புருண்டியின் தலைநகரான புஜூம்புராவின் அமைவிடம் கனிம வளங்கள் நிறைந்த கிழக்குக் கொங்கோவுக்கான வாயிலாக உள்ளது. மேலும், புருண்டியைக் கட்டுப்படுத்துவதன்; மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளையும் அனைத்தையும் கட்டுப்படுத்த இயலும்.

மேற்சொன்ன காரணங்களால் இன்று புருண்டி தவிர்க்கவியலாமல் ஆபிரிக்க பூகோள அரசியலின் மையப்புள்ளியாயுள்ளது. அமெரிக்கா கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அரங்கேற்றிய 'நிறப்புரட்சி' களைப் போன்றோ மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் அரங்கேற்றிய 'அரபு வசந்தம்' போன்றோ ஒன்றை இன்று புருண்டியில் முயல்கிறது.

பொருளாதார முதலீடுகள் மூலமும் அரசாங்கங்களுக்கு வழங்குகின்ற கடன்களின் ஊடாகவும் சீனா ஆபிரிக்காவில் வலுவாகக் காலூன்றியுள்ளதோடு நட்புச் சக்திகளையும் வலுப்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஆபிரிக்காவில் சீன முதலீடுகள் 15 மடங்கு அதிகரித்துள்ளன. ரஷ்யா தனது எண்ணெய் மற்றும் ஆயுத விற்பனையூடு, ஆபிரிக்கக் கண்டத்தில் தன் ஆதிக்கத்தை மீள நிலைநிறுத்தி வருகிறது.

அமெரிக்கா, 2007ஆம் ஆண்டு ஆபிரிக்காவுக்கான சிறப்பு இராணுவப் பிரிவை (AFRICOM) நிறுவியது. அதிலிருந்து, ஆபிரிக்க நாடுகளின் உள்விடயங்களில் அதன் தலையீடு தவிர்க்கவியலாதாகியது. கடந்த பத்து ஆண்டுகளில் மாலி, ஐவரி கோஸ்ற், புக்கீனா பாசோ, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, கினி பீசோ, நைகர் ஆகிய ஆபிரிக்க நாடுகளில் நடந்த சதிப்புரட்சிகட்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கா காரணியாக இருந்திருக்கிறது.

ஆபிரிக்காவின் ஆதிக்கத்துக்கான அத்தியாயத்தில் ஒரு பக்கம் இப்போது புருண்டியில் புரட்டப்படுகிறது. சிரியா எவ்வாறு மத்திய கிழக்கின் எதிர்காலத்தைத் தீர்மானிக்குமோ, அவ்வாறு புருண்டி கிழக்கு ஆபிரிக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .