2025 மே 15, வியாழக்கிழமை

புள்ளடிக்குக் காத்திருக்கும் கங்காரு

Thipaan   / 2016 ஜூன் 14 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

ஸ்திரமற்ற அரசியல்சூழல் என்பது, இன்றைய திகதியில் நாடுகளுக்கு இடையிலான தொற்றுநோய் என்று கூறலாம். எங்குமே, அரசியல் நிம்மதியென்பது பற்றாக்குறையாகவே காணப்படுகிறது. இன்றிருக்கும் அரசாங்கம், நாளை நிலைக்கும் என்ற உறுதியில்லை. இன்று ஆளும் ஜனாதிபதியோ, பிரதமரோ, நாளை காலையில் பதவியிலிருப்பர் என்று உத்தரவாதம் இல்லை. 'ஆட்டுவிப்பார் யாரொருவர் ஆடாதோரா கண்ணா'என்பதுபோல, அரசியல் என்பது இப்போதெல்லாம் முழுமையாகவே திரைமறைவிலிருந்து ஆட்டுவிக்கும் வஞ்சக நாடாகமாகிவிட்டது.

இந்த ஈடாட்டத்தின் ஓர் அங்கமாக, அவுஸ்திரேலியா, கடந்த மூன்று வருடங்களாக அரசியல் ஸ்திரமற்ற நிலையில் அகப்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறது. அந்த ஈடாட்டம், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரதூரமான விளைவுகளை எதையும் தோற்றுவிக்காவிடினும், எந்நேரமும் தேர்தல் - எந்நேரமும் ஒரு குழப்பம் என்று, முன்போடு ஒப்பிடுகையில் ஒரு கரடுமுரடான பாதையில்தான், கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து பயணித்துக்கொண்டிருக்கிறது. அவுஸ்திரேலியா, கடந்த மூன்று வருடங்களில் நான்கு பிரதமர்களைக் கண்டுவிட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், ஆட்சிபீடம்போகும் பிரதமர், கடந்த மூன்று வருடங்களில் ஐந்தாவது ஆள்.

சரி, தற்போது இடம்பெற்றிருக்கும் இந்தத் தேர்தலின் பின்னணி என்ன என்று பார்ப்போம். கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் கட்சி, நேச அணிகளைச் சேர்த்துக்கொண்டு, பிரதமர் டொணி அபோட் தலைமையில் ஆட்சியமைத்தது. நாள் போகப்போக, லிபரலின் ஆட்சிக்கு ஆணை வழங்கிய அவுஸ்திரேலிய மக்களால், டொணி அபோட்டின் தலைமைத்துவத்தை ஜீரணிக்கமுடியவில்லை. அதேபோல, டொணி அபோட்டும் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்குள் சிக்கித் தவித்தார். அந்தச் சர்ச்சைகள் எல்லாம் பாரிய பிரச்சினைக்குரியவையாக இல்லாதபோதிலும், அவுஸ்திரேலிய மக்கள் எதிர்பார்த்த தலைவராக அவரால் ஆட்சிபுரிய முடியவில்லை. இதனை மக்களின் முன்பாக தோலுரித்துக்காட்ட ஆரம்பித்த ஊடகங்கள், ஒரு கட்டத்தில் தொட்டதற்கெல்லாம் டொணி அபோட்டை கோமாளியாகக் காண்பிப்பதிலேயே குறியாக இருந்தன.

ஏதாவதோர் அறிக்கை வெளிவந்தால், அதனை வாசிக்காமலேயே அது குறித்து ஊடகங்களுக்குச் செவ்வி கொடுத்துவிட்டு, ஊடகங்கள் முன்னுக்கு பின் முரணாக கேள்வி கேட்கும்போது மாட்டிக்கொள்வார். உலகத் தலைவர்களுடனான சந்திப்புக்களின்போது, சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகளை விட்டு தேவையில்லாத பிரச்சினைகளை விலைக்கு வாங்குவார். எந்த விடயத்திலும் ஓர் ஆழமான புரிதல் இல்லாமல், சகட்டுமேனிக்கு மொக்குத்தனமாகப் பேசுவார். ஆளுமை மிக்க தலைவரிடம் இருக்கவேண்டிய பண்புகளைக் காட்டிலும் குசும்புத்தனங்களே அதிகம் வெளித்தெரிந்தன.

இப்படியே போனால், இவரால் லிபரல் கட்சிக்கும் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று பதறிய கட்சியின் மத்தியகுழு, இவரை மாற்றிவிட்டு, இன்னொருவரை உடனடியாகப் பிரதமராக நியமிப்பது என்று முடிவெடுத்தது. டொனி அபோட்டோ, பதவியை துறக்கமாட்டேன் என்று அடம்பிடித்தார். ஆனாலும் 2015 இல் கட்சி மட்டத்தில் வாக்கெடுப்பை நடத்தி அபோட்டை தோற்கடித்துவிட்டு, புதிய பிரதமரை கொண்டுவந்தார்கள் லிபரல் கட்சியினர்.

புதிதாக வந்த மல்கம் டேண்புல், கட்சிமட்டத்தில் பயங்கர செல்வாக்கு மிக்கவர். சொந்த உழைப்பில் முன்னேறி, அவுஸ்திரேலியாவின் முக்கிய செல்வந்தர்கள் பட்டியலில் உள்ளவர். பாரம்பரியமாகவே அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர். பழகுவதற்கு இனிமையானவர். லிபரல் என்ற வலதுசாரித் தத்துவத்திலேயே இடதுசாரிப்போக்கை கடைப்பிடிப்பவர். அதாவது, நிறவெறிபிடித்தவராகவோ, கடுமையான கொள்கைகளை முன்வைத்துவிட்டு முரண்டுபிடிக்கும் 'ட்ரம்ப்' பாணி அரசியல்வாதியாகவோ அவர் என்றைக்கும் காணப்பட்டதில்லை. எதையும் நிதானமாக அணுகக்கூடிய மனிதராகக் காணப்பட்டார். அதனால், எதிர்க்கட்சி வரிசையிலும் அவருக்கு சாதுவான ஆதரவு காணப்பட்டது. அப்படிப்பட்ட ஒருவரை லிபரல் முன்னிறுத்தியது லேபர் கட்சிக்குக்கூட மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

பதவியேற்ற மல்கம் டேண்புல்லின் ஆட்சி நன்றாகத்தான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தப் பதவிக்காலத்தைப் பயன்படுத்தி, தொழிற்சங்கங்களின் கொட்டத்தை அடக்கி நாட்டில் தீவிர இடதுசாரிப்போக்கினை கட்டுப்படுத்தவேண்டும் என்று லிபரல் தனது தனி ஆவர்த்தனத்தை ஆரம்பித்தது. இதன் ஊடாக எதிர்க்கட்சியான லேபரின் முதுகெலும்பாகக் காணப்படும் தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை அடக்கிவிடுவதற்கு லிபரல் திட்டமிட்டது.

அதற்காகச் சில சட்டமூலங்களை நாடாளுமன்றில் நிறைவேற்றிவிட்டு, செனெட் சபையின் அங்கிகாரத்தை பெறுவதற்காக அனுப்பிவைத்தது.

இந்த இடத்தில், அவுஸ்திரேலிய நாடாளுமன்ற முறையை சற்று விளங்கிக்கொள்ளுதல் அவசியம்.

அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள ஆட்சிமுறை, பிரித்தானியாவில் உள்ளது போன்ற வெஸ்மினிஸ்டர் ஆட்சிமுறையாகும். கீழ்சபை, அதாவது மத்திய நாடாளுமன்றம். பின்னர் மாநிலங்கள் தோறும் செனட் சபைகளின் ஆட்சிமுறை. இதன்பிரகாரம், கீழ் சபையில் 150 பேரும் நாடு பூராகவுமுள்ள 8 மாநிலங்களிலும் 76 செனட்டர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

முக்கியமன சட்ட மூலங்கள் அல்லது சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கு கீழ் சபையில் வாக்கெடுப்பு மூலம் அங்கிகரிக்கப்பட்ட பின்னர், செனெட் சபைகளுக்கு அனுப்பப்படும். அங்கு அந்தச் சட்ட மூலங்கள் அங்கிகரிக்கப்பட்டால் மாத்திரமே, அவை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்படும்.

கீழ்சபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலம், செனெட் சபைகளால் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கிடப்பில் போடப்பட்டாலோ, அந்தச் சட்ட மூலத்தை மீளப்பெற்று, வேண்டுமானால் சில திருத்தங்களைச் செய்துவிட்டு, மீண்டும் கீழ் சபையில் வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றியதன் பின்னர், இரண்டாம் தடவையும் செனெட் சபைகளுக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

இரண்டாம் தடவையும் அந்த சட்ட மூலம் மீது செனட் உறுப்பினர்கள் எந்த தீர்மானமும் அறிவிக்காவிட்டால், கீழ் சபையையும் நாடுபூராகவும் உள்ள செனெட் சபைகளையும் கலைத்துவிட்டு, தேர்தலை அறிவிக்குமாறு ஆளுநர் நாயகத்தை கோரும் உரிமை பிரதமருக்கு உண்டு. இவ்வாறு இரண்டு சபைகளும் கலைக்கப்பட்டு நடத்தப்படும் இரட்டைத் தேர்தல் முறை என்பது நாட்டில் அபூர்வமாக நடைபெறும் ஒன்றாகும். அவுஸ்திரேலியாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற பின்னர், (ஏறத்தாழ 30 வருடங்களுக்கு பின்னர்) தற்போது நடைபெறுகிறது.

அதற்கு முக்கிய காரணம், மேற்குறிப்பிட்டதுபோல லிபரல் தலைமையிலான கூட்டணி அரசினால் தொழிற்சங்கங்களின் ஏகபோக உரிமைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன், கட்டடங்கள் மற்றும் நிர்மாணத்துறை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் ஒன்று நாடளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு, இரண்டு தடவைகள் செனெட் சபைகளுக்கு அனுப்பப்பட்டபோதும் அந்த சட்டமூலங்கள் மீது செனெட் சபைகள் எந்த தீர்மானமும் வெளியிடாமையாகும். இவை எல்லாவற்றுக்கும் மிகமுக்கியமான இன்னொரு காரணம்;, மத்திய நாடாளுமன்றத்தில் லிபரல் ஆட்சியில் இருந்தாலும் மாநிலங்கள் ரீதியாக உள்ள செனெட் சபைகள் யாவும் லேபரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

ஆகவே, மத்திக்கும் மாநிலத்துக்கும் இடையில் இரண்டு முனைகளிலுள்ள கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற இழுபறியினால் முழுநாடுமே எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாம் திகதி மாபெரும் தேர்தலுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுக்கு வந்தபின்னர், இரண்டு அவைகளையும் ஒன்றாகக் கூட்டி, 226 உறுப்பினர்களின் முன்னிலையில் குறிப்பிட்ட சட்டமூலத்தை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்களிப்பில், அரைவாசிக்கு மேற்பட்ட வாக்குகளை - 114 வாக்குகள் - பெற்றாலே அந்தச் சட்டமூலம் வெற்றிபெறுவதற்கு போதுமானது.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த ஸ்திரமற்ற தன்மையை நீக்கி, நேர்சீராக்குவதற்கு இந்தத் தேர்தலே சரியான வழி என்றும் தொழிற்சங்கங்களின் பணயக்கைதியாக அரசாங்கம் ஒருபோதும் செயற்படமுடியாது என்றும் பிரதமர் தலைமையிலான லிபரல்; கட்சி சூளுரைத்திருத்திருக்கிறது. அத்துடன் தாம் இம்முறை தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று அவர்கள் அடித்துக்கூறியுள்ளனர்.

எங்கேயோ ஆரம்பித்த தேர்தல் விவகாரம், தற்போது அனைத்து விடயங்களையும் இழுத்து சந்திக்குக் கொண்டுவந்திருக்கிறது.

இரண்டு கட்சிகளும், தாம் முன்வைத்திருக்கும் அகதிகள் கொள்கை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி போன்ற துறைகளுக்கான நிதியொதுக்கீடுகள், இவ்வளவுகாலமும் பலவீனமான முறையில் கடைப்பிடித்த கொள்கைகள், தேவையில்லாது செலவுசெய்த நிதிகள் என்று ஏகப்பட்ட விடயங்களை ஆளுக்காள் போட்டிக்கு விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

மூன்றாம் தரப்பான பசுமைக் (கிறீன்) கட்சியானது இவ்விரண்டு பிரதான கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பாரிய அரசியல் மாற்றம் ஒன்றின் ஊடாகவே இந்தப் பெரும்பான்மை கட்சிகளின் ஏகபோக அதிகாரங்களை ஒழிக்கலாம் என்று பிரசாரம் செய்துவருகின்றது.

இம்முறை தேர்தலின் மிகமுக்கிய அம்சம், பசுமைக் கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகப் கொண்ட சமந்தா ரட்ணம், நாடாளுமன்ற ஆசனத்துக்கான போட்டியில் குதித்திருக்கின்றார்.

இந்த தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு என்ன, இவ்வளவு காலமும் தமிழ்மக்களின் பங்களிப்பு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது, போன்ற தமிழ்மக்களின் கோணத்தில் ஆராயும் கட்டுரையை அடுத்த வாரம் பார்க்கலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .