Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 01 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரச படையினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றொரு வாக்குறுதியைத் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ.
அதுபோலவே, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 274 விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
மற்றொரு பக்கத்தில், கடந்தவாரம் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்து விட்டு வெளியே வந்த மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றதும், பிள்ளையான் விடுவிக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார்.
இந்த வாக்குறுதிகள், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக கூறப்பட்டிருந்தாலும், இதற்குப் பின்னால் இருக்கக் கூடிய அரசியலும் ஆபத்தும் சாதாரணமானவை அல்ல.
சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, நீண்ட போராட்டங்களை முன்னெடுத்தும், இன்றுவரை அதற்கான தீர்வு கிட்டாத நிலையிலேயே, தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் பலமுறை வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாலும், அவை நிறைவேற்றப்படவில்லை. அவற்றை நிறைவேற்றுவதற்குச் சிங்களப் பௌத்த மேலாதிக்க அதிகார வர்க்கம், தயாராக இருக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் கூறிய ஒரு தகவலின் படி, “சுமார் 100 வரையான அரசியல் கைதிகளே இப்போது, சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். அவர்கள், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவைக்கப்பட்டு இருக்கிறார்கள்” என்பதாகும்.
இவர்களின் விடுதலையில் பல சிக்கல்கள் இருப்பது உண்மை. இவர்களில் ஒரு பகுதியினர், நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள். மற்றொரு பகுதியினர், நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்கள். இன்னொரு பகுதியினர், இன்னமும் வழக்குத் தொடரப்படாதவர்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படாதவர்களில், நம்பகமான சாட்சியங்கள் இல்லாதவர்களை, அரசாங்கத்தால் விடுவிப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளவர்களை, அரசாங்கம் தன்னிச்சையாக விடுவிக்க முடியாது. அதனை நீதிமன்றங்கள் தான் செய்ய வேண்டும். அதுபோலவே, தண்டனையை அனுபவிப்பவர்களை, ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கலாம்.
இவர்களில் விடுவிக்கப்படக் கூடியவர்களைத் தவிர, ஏனையவர்களைப் பிணையில் விடுதலை செய்ய முடியும் என்று, பலமுறை யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும், தற்போதைய அரசாங்கமோ, ஜனாதிபதியோ அந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை.
அதேவேளை, ஒரு கட்டத்தில் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளையும் போர்க்கால மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவத்தினரையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கலாம் என்று யோசனை கூறியது. அந்த யோசனைத் தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ள வில்லை.
போர்க்குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தமது படையினரைக் காப்பாற்றுவதற்காக, தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் பகடைக்காய்களாகப் பயன்படுத்த முனைகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தது.
கோட்டாபய ராஜபக்ஷ வடக்குக்கு வந்து, முக்கியமான வாக்குறுதிகளை அளிக்கப் போகிறார் என, அவரது தரப்பில் உள்ளவர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் அவர் நிகழ்த்திய உரையில், சிறைகளில் உள்ள 274 முன்னாள் போராளிகளின் விடுதலை குறித்து மாத்திரமே, அவர் வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். இது தமிழ் மக்களால் வரவேற்கப்படக் கூடிய வாக்குறுதி என்பதில் சந்தேகமில்லை.
சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டு, சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமே ஆகாமல் போய் விடுமோ என்ற கவலையில் இருந்தவர்களுக்கு, இந்த வாக்குறுதி வயிற்றில் பாலை வார்த்தது போலவே இருக்கும்.
உண்மையில், கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவும் இணங்கிப் போயிருந்தால், தற்போதைய அரசாங்கம் கூட, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வந்திருக்கும்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்தால், அதைத் தெற்கில் இனவாதமாகப் பிரசாரம் செய்தவர்களே இன்று, அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்கிறார்கள்.
புலிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்; தமது உயிரை அர்ப்பணித்துப் போராடிய அரச படையினர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று சிங்கள மக்களிடம் பிரசாரங்களை முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் விடுதலை முயற்சிகளைக் குழப்பியதும், தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகள் தடைப்பட்டுப் போனதற்கும் மஹிந்த தரப்பே முக்கியமான காரணம்.
இப்போது, சிறைகளில் உள்ள படையினரை விடுவிக்க வேண்டுமானால், தமிழ் அரசியல் கைதிகளையும் அவர்கள் விடுவித்தாக வேண்டும் என்ற நிலை உள்ளதால் தான், முன்னாள் புலிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார் கோட்டா.
சிறைகளில் உள்ள முன்னாள் புலிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து, சட்டரீதியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த கோட்டாபய, எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று கூறவில்லை.
ஆனால், சிறைகளில் உள்ள அரச படையினர், எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் முன்னரே கூறியிருக்கிறார். வரும் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிந்து, மறுநாள் 17ஆம் திகதி காலை, அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
இம்முறை, ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவு, 18ஆம் திகதியே பெரும்பாலும் வெளியாகும் என்று தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது. அதற்குள்ளாக, 17ஆம் திகதி காலையிலேயே, சிறைகளில் உள்ள படையினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி, கோட்டாபயவால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சாத்தியமா என்பது, முக்கியமான கேள்வி.
ஏனென்றால், படையினர் எவரும் அரசியல் கைதிகளைப் போல, சிறை வைக்கப்பட்டிருக்கவில்லை. வழக்குகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் தான், சிறைகளில் இருக்கிறார்கள். அவர்களைச் சிறைகளில் வைக்க உத்தரவிட்டது நீதிமன்றங்களே.
எனவே, சட்டரீதியாக நீதிமன்றங்கள் தான் விடுவிக்க முடியுமே தவிர, ஜனாதிபதியாகப் பதவியேற்கும் ஒருவர், தனது அதிகாரங்களைக் கொண்டு, அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது. அவ்வாறு அவர் விடுவிக்கப்பட்டால், அது நீதித்துறையின் மீதான தலையீடாக, சட்டத்துக்கு விரோதமான செயலாகப் பார்க்கப்படும்.
எனவே, கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், வரும் 17ஆம் திகதி சிறைகளில் உள்ள படையினரை விடுவிக்கும் வாக்குறுதியை, எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
கோட்டாபய மாத்திரமன்றி, மஹிந்தவும் கூட, இதேபோன்ற வாக்குறுதி ஒன்றை, மட்டக்களப்புச் சிறைச்சாலை வாயிலில் வைத்துக் கொடுத்திருக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதும், மட்டக்களப்புச் சிறையில் உள்ள பிள்ளையான் விடுவிக்கப்படுவார் என்று, அவர் உறுதியளித்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலேயே, பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் தான், அவரைத் தடுத்து வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
அந்த வழக்கின் தன்மை, நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்பனவற்றைப் பற்றி, எந்தக் கவலையும் இல்லாமல், பிள்ளையானை விடுவிப்பதாக, மஹிந்த வாக்குறுதி கொடுக்கிறார் என்றால், நீதித்துறையின் சுயாதீனமும் சுதந்திரமும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது என்பதே பொருள்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், நீதித்துறை சுதந்திரம் இருக்கவேயில்லை; அரசியல் செல்வாக்கில் நீதித்துறையின் உயர் பதவிகளைப் பெற்றவர்கள், அரசியல் சார்புடைய தீர்ப்புகளை அளித்தனர்; முடிவுகளை எடுத்தனர். ஜனாதிபதி செயலகம் போன்ற அரச செயலகங்களில் இருந்து பறந்த உத்தரவுகளை, நீதிமன்றங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தன. அந்த நிலைமையை மாற்றியது தற்போதைய அரசாங்கம் தான்.
இப்போது, நீதித்துறை சுதந்திரம், முழு அளிவில் இருக்கிறது என்று கூற முடியாவிடினும், கணிசமானளவு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது; இதைச் சர்வதேச அமைப்புகளும் கூட ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், நீதித்துறையின் நிலை என்னவாகுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கும் வகையில் தான், கோட்டா- மஹிந்தவின் வாக்குறுதிகள் அமைந்திருக்கின்றன.
இங்கு, அரசியல் கைதிகளின் விடுதலையில் உள்ள நியாயப்பாட்டையும் அரச படையினரை விடுவிப்பதில் அவர்களுக்கு உள்ள அக்கறையையும், ஒரே தராசில் வைத்து எடைபோட முடியாது.
அரசியல் கைதிகளின் விடுதலை என்ற போர்வையைக் கொண்டு, குற்றச்சாட்டப்பட்டுள்ள படையினரைக் காப்பாற்றுவதே, இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகத் தெரிகிறது.
அதற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட நீதித்துறை சுதந்திரம், பலி கொடுக்கப்பட்டாலும் கூட ஆச்சரியப்பட முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago