Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Administrator / 2017 மே 02 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அதிரதன்
மாற்றங்களே வாழ்க்கையாகிப்போன இந்த நாட்களில் ஜனாதிபதியென்ன, பிரதமரென்ன, முதலமைச்சரென்ன என்பதுதான் கிழக்கில் போராட்டங்களை நடத்தி வருகின்ற பட்டதாரிகளின் நிலைப்பாடாகும்.
ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் 29 ஆம் திகதி மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியை, 71 நாட்களைத்தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் சிலர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். “வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த மாதம் (மே 2017 ) வெளியிடப்படும் என்பதுடன், இன்னும் மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவையில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எனவே, நீங்கள் வீதியில் இருக்க வேண்டாம்” எனவும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.
இந்த உறுதி மொழிக்கு முன்னர், கடந்த மாத ஆரம்பத்தில் கிழக்குக்கு விஜயம் செய்த பிரதமரின் ஆலோசகர் அடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினரும் இரண்டு மாதங்களுக்குள் உங்களுக்குரிய நியமனங்களுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற தகவலைக்கூறி, நீங்கள் வீடுகளுக்குச் சென்று குடும்பத்துடன் இருங்கள் என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருந்தனர். இருப்பினும் அதன்பின்னரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
ஊடகங்களுக்கான காட்சிப் பொருளாக, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் அமைந்து விட்டிருக்கிறபோதும், அதனை விளங்கிக்கொள்ளாதவர்களாகவும் மிகவும் உறுதியாகவும் தங்களது போராட்டங்களைத் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றனர்.
கிழக்கின் பட்டதாரிகள் விவகாரத்தைப் பார்க்கையில், ‘வேண்டாப் பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம்’ போலாகி விட்டது.
ஏப்ரல் 24ஆம் திகதி திருகோணமலையில் கிழக்கு மாகாண சபைக்கு முன்னால், கிழக்கு மாகாணத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படவேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவொன்று ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பொலிஸார் அந்த உத்தரவைக் காண்பிக்க முயற்சித்தவேளை, போராட்டக்காரர்களால் பறித்தெடுக்கப்பட்டுக் கசக்கி, கிழித்தெறியப்பட்டது. இந்த விவகாரம் ஒரு நாட்டின் நீதித்துறையை அவமதித்து, உதாசீனம் செய்த செயற்பாடாகும்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது முக்கியமானதொரு விடயப் பரப்பாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கையில் அதற்கான அழுத்தங்களைக் கொடுக்கின்றதான வேலைகள் தேவை என்பதற்காக, எல்லாம் முடிந்து விட்டது என்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது, நல்லதொரு உதாரணமாக திருகோணமலையில் நீதிமன்ற உத்தரவு கிழித்தெறியப்பட்ட விவகாரம் பார்க்கப்படுகிறது.
வீதியில் இறங்கிப் போராடுவதும், எதிர்ப்பு வார்த்தைகளைப் பற்றிச்சிந்திப்பதும் மிகப்பெரியளவானதொரு எதிர்ப்பு நடவடிக்கையாகப் பார்க்கப்பட்ட காலங்களைத் தாண்டிவந்த இலங்கையின் வரலாற்றில் நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமையானது பாரதூரமானதொன்றாகவே இருக்கிறது.
கல்வி கற்பதானது அறிவு வளர்ச்சிக்காகவேயாகும் என்ற அடிப்படையை மறந்து பட்டதாரிகள் சவப்பெட்டிகளை தூக்கிச் செல்வதும் காட்சிப்படுத்துவதும், ஒரு புகைப்படத்தினையே எரிப்பதற்கு யோசிக்கின்ற மனிதத்தன்மை பாரம்பரியமாக இருந்து வருகையில் பல வருடங்களாக சிரமப்பட்டுப் பெற்ற பட்டத்தின் பிரதியை எரிப்பதும் மிகவும் பரிகாசமாகவே பார்க்கப்பட்டது. பலரது வேண்டுகோள்கள் கருத்துகளின் பின்னர் சவப்பெட்டி காட்சிப்படுத்துவது இல்லாமல் போனது நல்லவிடயமே.
இந்த நிலையில், ஏப்ரல் 25 இல் நடைபெற்ற நீதிமன்றக் கட்டளை அவமதிப்பில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரிய சட்டத்தரணிகள், திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக 28ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகள், திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த கட்டளை அடங்கிய ஆவணத்தை, பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொண்டதுடன் அதனைக் கிழித்து, காலால் மிதித்தமையைக் கண்டிப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.
இவ்வார்ப்பாட்டத்தினால் போக்குவரத்துக்கு தடையேற்படலாம் என்று கருதிய திருகோணமலை பொலிஸார், ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு வழங்குமாறு நீதிமன்றைக் கோரினர். அக்கோரிக்கையை விசாரித்த திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, அமைதியான முறையிலும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாத வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு, ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்குபவர்களுக்கு கட்டளை பிறப்பித்தார். இதனையே, போராட்டக்காரர்கள் கிழித்து காலால் போட்டு மிதித்தனர்.
இது நீதிமன்றக் கட்டளையை அவமதிக்கும் செயற்பாடு; அக்கட்டளையை உதாசீனம் செய்தமையானது உடனடியாக நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் இது, காலம்கடந்ததனால், அந்த நீதிமன்றக்கட்டளையை போராட்டக்காரர்களிடம் கொடுத்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமளவுக்கு மாறிப்போனதுதான் வியப்பானது.
கிழக்கு மாகாணம், கடந்த 30 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, பல்வேறு இடர்பாடுகளுடன் கற்கைகளை மேற்கொண்டு தங்களின் பட்டப்படிப்புகளை இந்தப் பட்டதாரி மாணவர்கள் நிறைவு செய்துள்ளனர். இவர்கள் அரச நியமனங்களில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனப் பலமுறை வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, அரசியல்வாதிகள் அடங்கலாகப் பலதரப்பட்ட மட்டங்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
2016 ஆம் வருடம், பிரதமர் கூட, பட்டதாரிகள் தங்களின் பட்டப்படிப்பினை முடித்த அதே வருடமே அவர்கள் அரச நியமனங்களில் இணைக்கப்படுவர் எனப் பகிரங்கமாகக் கூறினார். அத்துடன் பட்டதாரிகளின் வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளுக்கான இடைவெளிகளைக் கண்டறிந்து அதனை அறிக்கையிடுமாறு ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்ததுடன் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் பட்டதாரிகள் சங்கத்திடமும் உறுதியளித்திருந்தார். ஆனாலும் அது கூட நடைபெற்றிருக்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 2012ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் 2,500 பட்டதாரிகள் மாவட்டத்தின் அரச சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டனர். 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டம்பெற்ற பட்டதாரிகள் தங்களுக்கான அரசவேலைக்காகப் போராடுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் 1,500 வரையான பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். இந்த வருடத்திலும் வேந்தரில்லாமை காரணமாக நடைபெறாதிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 12ஆவது பட்டமளிப்பிலும் 1600 பேர் வெளியேறவிருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற சிந்தனை தலைதூக்கியது. என்றாலும், நாட்டை வழி நடத்த வேண்டிய புத்திஜீவிகளாக தம்மை இறுமாந்து கொள்ள வேண்டிய பட்டதாரிகள், ஏன் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற கேள்வியும் பலருக்கு எழாமலில்லை.
நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான பிரச்சினைகளை அறிந்து தீர்க்கத் தாமதிக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு வன்முறைக் கலாசாரம் தோன்றலாம். படித்த இளைஞர், யுவதிகளின் ஆளுமைகள் முழுக்க நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்; மாறாகும் பட்சத்தில் வன்முறையாகும் என்பது யதார்த்தம்.
எது எவ்வாறானாலும் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புக்காக போராடி வருகின்ற 4,500 பட்டதாரிகள், தங்களை ஒரு தொழில்சார் திறமையில் இறுமாப்புள்ளவர்களாக மாற்றிக் கொள்வதும் நாட்டின் எதிர்காலத்துக்குத் தேவையானதாகும். அதே போன்று எதிர்காலத்தில் கல்வியைத் தொடரும் எல்லோரும் தொழில்சார் வல்லுநர்களாக வளர்ச்சி பெறுவதற்கான திட்டமிடல்கள் கட்டாயம் அவசியமாகும்.
ஆனாலும் கிழக்கு முதலமைச்சர் கொழும்புக்கு அழைத்துச் செல்ல, “சிலர் வாருங்கள்” என்று அழைத்தவேளை, மறுத்த பட்டதாரிகள், மட்டக்களப்பின் ஓட்டமாவடிக்கு வந்த ஜனாதிபதியை அங்கு சென்றேனும் சந்தித்திருக்கிறார்கள். சந்திப்பின் பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றம் இப்போதைய போராட்டங்களை முடித்துவைக்கும் என்று நம்புவோமாக!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
46 minute ago
57 minute ago
2 hours ago