2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பிடியை தளர்த்துகிறது ஐ.நா. மனித உரிமை பேரவை

R.Tharaniya   / 2025 ஜூலை 02 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கடந்த வாரம் மேற்கொண்ட இலங்கை விஜயத்தை அடுத்து இலங்கையின் போர் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் நிலைப்பாட்டில் தளர்வு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல் விடயங்களைக் கையாள்வதற்காக உள்நாட்டு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அது சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையாளர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டு ஜூன் 26ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கூறியமையே இதற்குக் காரணமாகும்.

சில ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில இணையத்தளங்கள் அவர் வழமை போல் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச பொறிமுறையொன்றையே வலியுறுத்தினார் என்று குறிப்பிட்டு இருந்த போதிலும், மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் மனித உரிமை ஆணையாளர் ஆற்றிய உரையைப் கூர்ந்து கவனித்தால் சற்று குழப்பமாகவே இருக்கிறது.

அவர் அதில் இந்த பொறிமுறை சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டுமா அல்லது உள்ளக பொறிமுறையாக இருக்க வேண்டுமா என்பதை பற்றி நேரடியாக எதனையும் கூறவில்லை. அதுவே அவரது உரை குழப்பமாக இருக்கக் காரணமாகியது.

‘நம்பகமான மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வென்ற உள்ளக பொறுப்புக் கூறல் பொறிமுறைகளை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது. எனவே, தான் இலங்கையர்கள் சர்வதேச மட்டத்திலான உதவிகள் மூலம் நீதிக்காக வெளியாட்களை நாடினார்கள்.

இறுதியில் அது அரசின் பொறப்பாவதோடு இந்நடைமுறையானது தேசிய ரீதியில் உரித்தானதாகவும் சர்வதேச ரீதியில் ஏற்கப்பட்டு உதவி செய்யப்படக் கூடியதாகவும் அமைய வேண்டும்” என்று அவர் தமது உரையில் கூறியிருக்கிறார்.

உரையின் இந்தப் பகுதிக்கு அவர் உள்ளக பொறிமுறையொன்று வேண்டும் என்றார் என்றும் சர்வதேச பொறிமுறையொன்றையே வலியுறுத்தினார் என்றும் எவரும் தாம் விரும்பியவாறு விளக்கமளிக்க முடியும். ஆயினும் அதில வரும் ‘இறுதியில் அது அரசின் பொறப்பாவதோடு இந்நடைமுறையானது தேசிய ரீதியில் உரித்தானதாகவும் சர்வதேச ரீதியில் ஏற்கப்பட்டு உதவி செய்யப்படக் கூடியதாகவும் அமைய வேண்டும். என்று கூறும்போது அது உள்ளக பொறிமுறையையே குறிக்கிறது என்று தெரிகிறது.

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது முதல் பதவிக்கு வந்த அரசாங்கங்களில் 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ராஜபக்‌ஷக்களின் அரசாங்கங்களைப் போல, ஐ.நா. மனித உரிமை பேரவையுடன் முரண்பட விரும்பவில்லை.

எனவே, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் போலவே தற்போதும் மனித உரிமை பேரவையும் இலங்கை விடயத்தில் சற்று நெகிழ்வான போக்கை கடைப்பிடிப்பதாக தெரிகிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று 9 மாதங்களிலேயே தற்போதைய மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதேபோல, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று 13 மாதங்களில் அப்போதைய மனித உரிமை ஆணையாளர் செய்த் ராத் அல் ஹூசைன் இலங்கைக்கு வந்தார்.

அவரும் பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச பொறிமுறையொன்று வேண்டும் என்ற மனித உரிமை பேரவையின் அது வரையிலான நிலைப்பாட்டிலிருந்து 
மாறி கருத்து தெரிவித்தார்.

தமது விஜயத்தின் இறுதியில் அறிக்கையொன்றை வெளியிட்ட அல் ஹூசைன் இலங்கையின் நீதித்துறையானது மிகவும் அரசியல் மயமான, நடுநிலையற்ற நம்பிக்கை வைக்க முடியாத ஒன்று என்று அவ்வறிக்கையில் ஓரிடத்தில் கூறிவிட்டுப் பொறுப்புக் கூறல் பொறிமுறையைப் பற்றி தீர்மானிப்பது இலங்கை அரசாங்கத்தின் இறைமையோடிணைந்த உரிமை என்றும் கூறினார்.

போர் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்யும் பொறிமுறையைப் பற்றி தமது அலுவலகம் எதைப் பரிந்துரை செய்ததாலும் அதைப்பற்றி எந்தத் தீர்மானத்தை எடுப்பது என்பது இலங்கையின் இறைமையும் உரிமையுமாகும் என்று மற்றொரு இடத்திலும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போதைய ஆணையாளர் பொறுப்புக் கூறல் விடயத்தைப் பற்றி குறிப்பிடும் போது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆதாரங்களை திரட்ட தமது அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வாதாரங்களை இலங்கையிலோ ஏனைய நாடுகளிலோ நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சாட்சியாக வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

அதன் மூலமும் அவர் இலங்கையில் உள்ளக பொறிமுறையொன்றின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரிபால - ரணில் விகரமசிங்க அரசாங்கம் முன்னைய மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தைப் போல, தமிழ் மக்களின் விடயங்களில் கடும் போக்கை கடைப்பிடிக்கவில்லை.

அவ்வரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கியது. புலம் பெயர் அமைப்புக்களின் மாநாடொன்றை இலங்கையில் நடத்தவும் அப்போதைய வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர விருப்பம் தெரிவித்திருந்தார்.

இலங்கை விடயத்தில் 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை 
வழங்கியது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இலங்கையினதும் பொதுநலவாய நாடுகளினதும் நீதிபதிகளைக் கொண்ட கலப்பு பொறிமுறையொன்றை அமைக்கவும் அவ்வரசாங்கம் விருப்பம் தெரிவித்தது.

போரின் போது, உயிர் நீத்தவர்களை நினைவு கூர மஹிந்தவின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன.பின்னர் கலப்பு பொறிமுறையை தாம் விரும்பவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த நிலையிலேயே அப்போதைய மனித உரிமை ஆணையாளர் அல் ஹூசைனின் இலங்கைகான விஜயம் இடம்பெற்றது.

எனினும், மைத்திரிபாலவின் கருத்தைப் பெரிதுபடுத்தாமல் அல் ஹூசைன் பொறுப்புக் கூறலுக்கான நெறிமுறையைத் தீர்மானிப்பது இலங்கையின் உரிமையாகும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

அனுரகுமாரவின் அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரும் தமிழர் விடயத்திலான அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. அவ்வரசாங்கமும் போர் காலத்தில் தெற்கிலும் வடக்கிலும் மூடப்பட்டு இருந்த பல வீதிகளை மக்கள் போக்குவரத்துக்குத் திறந்துவிட்டது.

போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர இம்முறை தடையேதும் இருக்கவில்லை. படுகொலை செய்யப்பட்ட பலர் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் செம்மணிக்குச் செல்ல தமக்கு இடமளிக்கப்பட்டதாக மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேர்க் கூறினார்.

அதேவேளை, அண்மையில் ஜனாதிபதி தெரிவித்த சில கருத்துக்களையும் அவர் வரவேற்றார். மே மாதம் 19ஆம் திகதி அரசாங்கம் வருடாந்தம் நடத்தும் போர் வீரர் தினத்தில் கலந்து கொள்வதில் ஜனாதிபதி அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. பின்னர் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதிலும், அவர் தமது உரையின் போது, போர் வெற்றியைப் பாராட்டாது நல்லிணக்கத்தை வலியுறுத்தினார். பல பெரும்பான்மை தலைவர்கள் அதனை விமர்சித்தனர். வோல்கர் டேர்க் அதனைத் தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். 

எனினும், கடந்த ஒக்டோபர் மாதம் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை அனுரகுமாரவின் புதிய அரசாங்கம் நிராகரித்தது. இந்நிலையிலும், இலங்கைக்கு உள்ளக பொறிமுறையொன்று வேண்டும் என்றே வோல்கர் டேர்க் கடந்த வாரம் கூறினார். முன்னர் குறிப்பிடப்பட்ட சாதகமான விடயங்கள் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

புவி அரசியலில் ஏற்படும் மாற்றங்களோடு தமது நலன்களில் ஏற்படும் மாற்றங்களுக்கிணங்க இந்திய அரசாங்கம் படிப்படியாக இலங்கை தமிழர்களைக் கைவிடுவதைப் போல, ஐ.நா. மனித உரிமை பேரவையும் இலங்கை அரசாங்கம் தொடர்பாக தளர்வுப் போக்கை கடைப்பிடிக்க முற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் அத்தோடு எழுகிறது.

ஒரு வகையில், காசாவில் இடம்பெறும் இனப்படுகொலைகளையும் இனச் சுத்திகரிப்பையும் கைகட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கும் மனித உரிமை பேரவைக்கும் மனித உரிமை ஆணையாளருக்கும் மனித உரிமை விடயத்தில் ஏனைய நாடுகள் மீது நெருக்குதலைக் கொடுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் ஏதாவது ஒரு நாட்டுக்கு எதிராக ஏதாவது கடும் நடவடிக்கையை எடுத்தால் அந்நாடுகள் உத்தியோபபூர்வமாகவோ உத்தியோக பற்றற்ற முறையிலோ காசாவைக் காட்டி மனித உரிமை பேரவையின் நடவடிக்கைக்கு சவால் விடுக்கக் கூடும்.

ஏற்கெனவே இலங்கையில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் இலங்கை விடயத்தில் நடவடிக்கை எடுக்க மனித உரிமை பேரவைக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கையில் பொறுப்புக் கூறல் விடயத்தில் உள்ளக பொறிமுறையை ஏற்று மனித உரிமை பேரவை தமது பிடியைத் தளர்த்தினாலும், இது வரை அப்பேரவை மேற்கொண்ட நடவடிக்கைகள் மீளப்பெறப்படுவதில்லை.

ஏற்கெனவே இலங்கையில் மனித உரிமைகளை மீறிய படைத்தரப்பினர் மற்றும் புலிகள் அமைப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தேவையான சாட்சிகளைப் பேரவை திரட்டி ஒரு காப்பகத்தில் சேகரித்து வருகிறது. மனித உரிமை மீறிய சிலருக்கு எதிராக சில நாடுகள் விசா தடை மற்றும் சிறை தண்டனை போன்ற நடவடிக்கைகளை எடுத்தும் இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .