2025 மே 17, சனிக்கிழமை

பயங்கரவாதம் குறித்து பயங்காட்டும் இனவாதம்

Thipaan   / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

சிங்களத் தீவின் காவல் பிராணி போல தன்னைக் காட்டிக் கொள்ளும் இனவாதம், எப்போதும் உற்றுநோக்கிக் கொண்டே இருக்கின்றது. வானிலை அவதான நிலையத்தின் அறிக்கை போல, 'இதோ அடிப்படைவாதிகள் உருவாகிவிட்டார்கள், அதோ பயங்கரவாதிகள் நாட்டை அழிக்கப் போகின்றார்கள்' என்று அச்சமூட்டி, எச்சரிக்கை செய்யும் வேலைகளை அவர்களே பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள். ஒருவேளை, இடியுடன் கூடிய மழைபெய்யும் என்ற எதிர்வுகூறல்கள் எல்லாமே மெய்யானாலும், இனவாதிகளின் முன்னறிவிப்புக்கள் இயல்பாக இடம்பெறுவது கிடையாது. எனவே, முன்னறிவிப்பை மெய்ப்பிப்பதற்காக சில திட்டங்கள் திட்டப்பட்டாலும், வியப்படையத் தேவையில்லை. 

அந்த வகையில், இலங்கையில் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதற்கும் சமயங்களின் நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்குவதற்கும் பெயர்போன அமைப்பான பொது பல சேனா, அண்மையில் முக்கியமான இரு கருத்துக்களை வெளியிட்டுள்ளது. ஒன்று, தமிழ்க் கைதிகளின் விடுதலை பற்றியது. இரண்டாவது, பிரான்ஸின்

பரிஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் பற்றியது. பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், ஊடகவியலாளர்களைக் கொழும்பில்  சந்தித்த போதே இக்கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

'நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்காது பாதுகாப்பதே ஆட்சியாளர்களின் கடமையாகும். ஆனால், அதற்கு இடமளிக்கப்பட்டு வருகின்றது. பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காகக் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதனால் எதிர்காலத்தில் நாடு, பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிசெய்து இப்பிரச்சினையை தீர்க்காது விட்டால், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்' என்று தேரர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 'இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் உள்ளது. கிழக்கிலும் வேறு சில இடங்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை போன்ற வஹாபிஸக்

கொள்கை காணப்படுகின்றது. அத்துடன், பரிஸ் தாக்குதலுக்கு இலங்கையில், முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளார்கள். நாட்டின் புலனாய்வுப் பிரிவு செயலிழந்துள்ளது. இப்படியே போனால், இன்னும் ஒரு வருடத்துக்குள், கிழக்கு மாகாணத்தில் அல்லது கொழும்பில், பரிஸ் நகரில் இடம்பெற்றது போன்றதொரு தாக்குதல் இடம்பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது' என்று எச்சரிக்கை செய்திருக்கின்றார்.

நடுநிலைப் போக்குள்ள, மாதுலுவாவே சோபித தேரரின் இழப்புக்காக, சிறுபான்மை இனங்கள் துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், ஞானசாரர் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை கவனிப்புக்குரியது. இவ்விரண்டு கருத்துக்களும், இலங்கையில் வாழும் இரு சிறுபான்மை இனங்களிதும் மனதிலும் அதேபோல், சிங்கள கடும்போக்காளர்களின் மனங்களிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துமென்ற ஞானம் எதுவும் இன்றியே, நடுநிலைப்போக்குக்கு அப்பாற்பட்டவராக கடந்த காலங்களில் அறியப்பட்ட மேற்படி தேரர், இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, தமது நீண்டகால இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, இரண்டு சிறிய விடயங்களை பெருப்பித்துக் காண்பிப்பதற்கு, இனவாதம் மீள முயற்சி செய்கின்றது என்பதே உண்மையாகும். ஆனாலும், இக்கருத்துக்கள் புறந்தள்ளப்படக் கூடியவை அல்ல. பரிசீலனைக்குரியவை. ஏதாவது ஒரு நோயறிகுறி தென்படுகின்ற போது, அது என்ன நோயாக இருக்காது என்று உறுதிசெய்வதற்கு ஒவ்வொரு நோயாக 'வெளியகற்றும்' (நுஒஉடரனந) நடைமுறைகள் இடம்பெறுவது மாதிரி, இதுவிடயத்திலும் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

முதலாது விடயம், தமிழ் அரசியல் கைதிகள் பற்றியது. சிறையில் இருக்கின்ற பெருங்குற்றம் புரிந்த மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்ட எல்லா தமிழ்க் கைதிகளையும் ஒரேநாளில் விடுதலை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது. இறைமையுள்ள ஒரு நாட்டின் சட்ட முறைமை அதற்கு இடமளிக்காது. அதுமட்டுமன்றி சிங்கள மக்களிடையே தற்போதைய ஆட்சியாளர்கள் பற்றிய பிழையான தோற்றப்பாடு ஒன்றும் அதனால் தோற்றுவிக்கப்படும். தமிழ் மக்களுக்கும் இது தெரியும். எனவேதான், உப்புச்சப்பற்ற, நிருபிக்கப்படாத காரணங்களுக்காக வெறுமனே தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலைக்கே, அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றார்கள்.

இவ்வாறானவர்கள் விடுதலை செய்யப்படுவதால், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்றோ, நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் என்றோ கூறுவதற்கு முன்னர் சில விடயங்களை யோசிக்க வேண்டியிருக்கின்றது. அதாவது, விடுதலைப் புலிகளின் முக்கிய புள்ளிகளாக இருந்த குமரன் பத்மநாதனும் விநாயகமூர்த்தி முரளிதரனும் வெளியில் இருக்கின்றார்கள். சிவனேசதுரை சந்திரகாந்தனும் வெளியில் இருந்தார். முக்கியமான புள்ளிகள் எல்லோரையும் வெளியில் வைத்துவிட்டு அல்லது கொன்றொழித்துவிட்டு, புலிகளுக்குச் சாப்பாடு கொண்டு போனவன், புலி வரும் தெருவில் கடைபோட்டிருந்தவன் என்ற குற்றச்சாட்டுக்களில், அடிமட்ட ஆதரவாளர்களைக் கைது செய்து வைப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது என்று தமிழ் மக்கள் கேட்கின்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். அதேபோன்று, பிள்ளையானும் கருணாவும் கே.பி.யும் மேலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஏனைய தப்பிவந்த புலி உறுப்பினர்களும் வெளியில் இருந்த போது ஏற்படாத பிரச்சினையா, இப்போது அப்பாவிக் கைதிகளை வெளியில் விடுவதால் வந்து விடப் போகின்றது என்ற கேள்வியும் உள்ளது.

கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு சூத்திரத்தை அரசாங்கம் வைத்துள்ளது. அவர்கள் சரியாக வடிகட்டப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு புனர்வாழ்வு திட்டத்தை ஒத்த செயலமர்வுகளை நடாத்துவது தொடர்பிலும் அரசாங்கம் சிந்திப்பதாக தெரிகின்றது. இவ்வாறிருக்கையில், இவர்களை வெளியில் விட்டால் பிரச்சினை வரும், பயங்கரவாதம் மீளத் தோற்றம் பெறும் என்று கூறுவது, நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைமதிப்பீடு செய்வதற்கு ஒப்பானதாகலாம்.

அதேவேளை, இப்போது ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலகக் கோருகின்ற பொது பல சேனா அமைப்பு, இதற்கு முன்னர் பயங்கரவாதம் நாட்டில் வியாபித்திருந்த வேளையிலும், யுத்தத்தால் நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருந்த வேளையிலும், இனவாதத்தால் ஓர் இனக்கலவரம் மூளும் நிலை ஏற்பட்ட போதும், அப்போதிருந்த ஜனாதிபதிகளை, பிரதமர்களை பதவி விலகுமாறு கோரவில்லை. ஆனால் பொதுவாக 'நல்ல-ஆட்சி' என்று மக்களால் கருதப்படுகின்ற தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியையும் பிரதமரையும் இந்தச் சிறிய காரணத்துக்காகப் பதவிவிலகுமாறு கோருவதன் நோக்கம் யாரும் அறியாத இரகசியமல்ல.

பொது பல சேனாவின் ஞானசார தேரர் கூறியுள்ள இரண்டாவது கருத்து? மிகவும் பாரதூரமானதும் முக்கியமானதும் ஆகும். பரிஸ் நகரில் ஏற்பட்டது போன்ற ஒரு தாக்குதல் இலங்கையில் இடம்பெறும் என்று உறுதியாக கூறியுள்ள அவர், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவியில் இருந்தபோது இந்த அமைப்பின் இனவாதச் செயற்பாடுகள் உச்ச நிலையில் இருந்தன. ஆனால், இவர்களுக்குத் திரைமறைவு ஆதரவை வழங்கிக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டதால் பொது பல சேனா, ராவண பலய போன்ற அமைப்புக்கள், அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. தமது நிலைப்பாட்டைச் நியாயப்படுத்துவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்த இவ்வமைப்புக்களுக்கு பரிஸ் நகர தாக்குதல், வாய்க்குக் கிடைத்த அவலாகியுள்ளது.

 முஸ்லிம் அடிப்படைவாதம் இந்நாட்டில் இருக்கின்றது என்ற தமது கருத்தை மீள வலியுறுத்தி, அதன்மூலம் மீண்டும் அமைதியின்மையை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் மீண்டும் ஒருமுறை மீன் பிடிக்க முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது.

சில விடயங்களை, சிங்கள கடும்போக்கு சக்திகளும் ஏனைய இனங்களைச் சேர்ந்த மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையான முஸ்லிம்கள் ஒருபோதும், தீவிரவாதத்துக்கோ பயங்கரவாதத்துக்கோ ஆதரவானவர்களல்லர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வரையறுத்துள்ள இஸ்லாம் மார்க்கம், உயிர்களைக் கொல்வதை அனுமதிக்கும் எனக் கூறுவது முட்டாள்தனமாகும். உலகின் பல பாகங்களிலும் இயங்குகின்ற ஆயுத இயக்கங்கள், முஸ்லிம்களின் பெயர்களைத் தாங்கி இருப்பதால், உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள், பயங்கரவாதிகள் என்றோ இஸ்லாமிய மார்க்கம் அதை வலியுறுத்துகின்றது என்றோ கணிப்பது, அபாண்டமானது.

 ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது இஸ்லாமிய பெயர் தாங்கிய இயக்கமாக இருந்தாலும், மார்க்கம் சொன்னபடி அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதில் முஸ்லிம்களுக்கே உடன்பாடில்லை. ஞானசார தேரர் சொல்வது போல், கொடூரச் செயல்களை செய்யும் போது 'அல்லாஹூஅக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற வார்த்தைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அதற்காக அது இறைவனின் வழிகாட்டல் என்றோ இஸ்லாம் மார்க்கத்தின் கடமை என்றோ அர்த்தப்படாது. இவ்வாறான ஆயுத இயக்கங்களைத் தீனிபோட்டு வளர்ப்பதும், தமது எதிரிநாடுகளை அழிப்பதற்கு மறைமுகத் திட்டங்களைத் தீட்டுவதும், எந்தெந்த நாடுகள் என்பதை உலகறியும். கள்வனைப் பிடிக்கப் போனால், பல பொலிஸ்காரர்களின் முகமூடிகள் கிழியும்;.

ஆனால், ஒரு விடயத்தை இங்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது. அதுவென்னவென்றால், பரிஸ் நகரில் இடம்பெற்றது மோசமான தாக்குதலே. பிரான்ஸ் அரசாங்கத்தின் மீது கொண்ட கோபத்துக்காக, அந்நாட்டில் அப்பாவி மக்களை கொல்வது நியாயமற்றது என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. ஆயினும், இலங்கையில் மூவின மக்களும் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களில் காஷ்மீரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும், காஸாவிலும், பொஸ்னியாவிலும், ஈராக்கிலும், லிபியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட போதும் அதற்கெதிராகக் குரல்கொடுக்காத இனவாதச் சக்திகள், இன்று பரிஸ் தாக்குதலுக்கு இரங்கல்

பா வடிப்பது, எந்த சமூகத்தைக் குறிவைத்து என்பது தௌ;ளத் தெளிவாக புரிகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக இது விடயத்தில் முஸ்லிம்கள், மிக அவதானத்துடன் இருக்க வேண்டும். சிங்களவர்களைப் பெரும்பான்மையாகவும் தமிழர்களை பிரதான சிறுபான்மையாகவும் கொண்ட நாடொன்றில், தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தங்களது சமயத்தின் உண்மையான வழிகாட்டல் என்னவென்பதை, பிற சமூகத்தவருக்கு முஸ்லிம்கள் வெளிக்காட்ட வேண்டும். குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் குறித்து இலங்கையில் உள்ள பல அமைப்புக்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்த போதும், முஸ்லிம்கள் பகிரங்கமாக இதனை எதிர்க்கவில்லை என்ற ஒரு தோற்றப்பாட்டை, கடும்போக்காளர்கள் தோற்றுவித்துள்ளனர். எனவே, பலஸ்தீனத்திலோ, பரிஸிலோ எங்கு அப்பாவிகள் பலியெடுக்கப்பட்டாலும் ஒரே விதத்திலான எதிர்ப்புக்காட்டலை முஸ்லிம்கள் மேற்கொள்வது நல்லது.

மறுபுறத்தில், நல்லாட்சி ஒன்று தன்பாட்டில் போய்க்கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில் பொது பல சேனா போன்ற சக்திகள் கைதிகள் விடுதலை தொடர்பிலும் ஐ.எஸ். தாக்குதல் குறித்தும் வெளியிடும் கருத்துக்களை அரசாங்கம், மிகக் கவனமாகக் கையாள வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள், இலங்கையில் இருக்கின்றார்கள் என உறுதியாக கூறும் இவர்கள், இன்னும் ஒரு வருடத்துக்குள் தாக்குதல் நிச்சயம் இடம்பெறும் என்றும் கூறுகின்றனர். ஒருவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் இடம்பெறவில்லை என்றால் கூட, தாமாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அப்பழியைப் போட்டுவிட்டு தமது நோக்கங்களை அடைந்து கொள்ள இனவாதம் முனைகின்றதா என்ற கோணத்தில், புலனாய்வுத்திறன் கொண்ட மூளைகள் கடுமையாக சிந்திக்க வேண்டியிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .