2025 மே 17, சனிக்கிழமை

பரிஸ் - பெய்ரூட்: தேர்ந்தெடுக்கப்பட்ட கோபமா?

Thipaan   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகள் பரவியதோடு, மக்களின் அனுதாபங்களும் குவிந்திருந்தன. ஆனால், அவற்றைத் தவிர, 'ஏன் நீங்கள் லெபனானைப் பற்றிக் கதைக்கிறீர்களில்லை?' என்ற கேள்வியும் அதிகமாகவே எழுப்பப்பட்டிருந்தது. பரிஸ் மக்களின் உயிர் மாத்திரம் தான் பெறுமதியானதா, லெபனான் மக்களின் உயிர்கள் ஏன் பெறுமதியில்லை போன்று செயற்படுகிறீர்களா எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட, மறுநாளில் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல், குண்டுவெடிப்பில் குறைந்தது 132 பேர் கொல்லப்பட்டனர்.

இதில், பரிஸ் தாக்குதல்கள் மீதான கவனம் அதிகமாகத் திரும்பியிருந்ததோடு, பெய்ரூட் குண்டுத் தாக்குதல், ஓரளவுக்குப் புறக்கணிக்கப்பட்டததாக ஒரு பார்வை இருந்தது. இதில், பெய்ரூட்டை விட பலமடங்கு கவனத்தை பரிஸ் தாக்குதல்கள், ஊடகங்களில் பெற்றிருந்தனவென்பது உண்மையானது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், பெய்ரூட் தாக்குதலானது, முற்றுமுழுதாகப்

புறக்கணிக்கப்பட்டிருக்கப்படவில்லை.

'மேலைத்தேய ஊடகங்கள், பெய்ரூட் பற்றிக் கணக்கெடுக்கவில்லை, அதைப் பற்றி அறிக்கையிடவில்லை' என்ற குற்றச்சாட்டுப் பொய்யானது. பரிஸ் தாக்குதலுக்கு முன்பாகவே, பெய்ரூட் பற்றி சி.என்.என், நியூயோர்க் டைம்ஸ், பி.பி.சி, டெய்லி மெய்ல், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், தி எக்கனமிஸ்ட், த கார்டியன் போன்ற முன்னிலை மேலைத்தேய ஊடகங்களிலும் ஏராளமான தொலைக்காட்சிகளிலும் செய்தியிடப்பட்டிருந்தது.

பரிஸ் தாக்குதலளளவுக்கு இருந்ததா என்றால், இல்லை. இலங்கை ஊடகங்களும் கூட, பரிஸ் தாக்குதலளளவுக்கு, பெய்ரூட் தாக்குதல்களைப் பற்றிச் செய்தியிட்டிருக்கவில்லை. ஆனால், முற்றுமுழுதாகவே அவற்றைப் புறக்கணித்தன என்பது பொய்யானது.

ஊடகங்களின் இந்தப் 'பாகுபாடு' பற்றி, ஊடகங்களிடம் கருத்துக் கேட்டால் கிடைக்கக்கூடியது, ஒரே பதில் தான். 'பெய்ரூட்டை விட பரிஸ் தாக்குதல்களுக்கு அதிக கவனம் கிடைக்கிறது'. முன்பைய காலத்தைப் போன்றதல்லாது, ஊடகங்களினுடைய போக்கும் வாசகர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. கேள்விக்கேற்ற விநியோகம் (ளுரிpடல யனெ னநஅயனெ) தான் நடைபெறுகின்றது. மக்கள் எதை அதிகம் விரும்பி வாசிப்பார்களோ, கேட்பார்களோ, பார்ப்பார்களோ, அதை அதிகம் கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. இவற்றுக்கு நடுவே, ஊடக தர்மத்தின்படி, தெரிவிக்க வேண்டிய, ஆனால் மக்கள் விரும்பாத, செய்திகளையும் வழங்க வேண்டியிருக்கிறது. பெய்ரூட் தாக்குதல்களை விட பரிஸ் தாக்குதல்களுக்கு ஏன் அதிகக் கவனம்? பெய்ரூட் தாக்குதல்களை விட பரிஸ் தாக்குதல்களைப் பற்றி அறிய, மக்கள் விரும்புகிறார்கள்.

இதற்காக, ஊடகங்கள் சரியாகச் செயற்படுகின்றன, அவற்றின் மேல் தவறேயில்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், அது வேறான விவாதமொன்று. இந்தத் தலைப்புக்குள் அதை அடக்குவது முடியாததொன்று, ஒரு வகையில், பொருத்தமற்றதும் கூட.

சரி, ஊடகங்களை விட்டுவிட்டு, மக்கள் பக்கம் போனால், எதற்காக பரிஸ் தாக்குதல் மீது அதிக கவனம் காணப்பட்டது?

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கருணைக்கும் மதி இறுக்க ஆராய்ச்சிக்கும் கல்விக்குமான ஸ்டான்‡போர்ட் நிலையத்தின் பணிப்பாளரும் ஸ்டான்‡;போர்ட் பல்கலைக்கழக உளவியலாளருமான எம்மா செப்பலா, பரிஸ் - பெய்ரூட் இடையிலான வித்தியாசத்தை விளக்கினார். 'எங்களுக்கு அறிந்தவர்கள் பாதிக்கப்படும் போது, அல்லது எங்களோடு கிட்டத்தட்ட ஒன்றான இயல்புகளைக் கொண்டேரென நாம் நினைப்போர் பாதிக்கப்படும் போது, அவர்கள் மீதான பச்சாதாபம் அல்லது அனுதாபம், அதிகமாகக் காணப்படுவது இயற்கை' என அவர் வெளிப்படுத்தினார்.

மேலைத்தேய நாடுகளைப் பொறுத்தவரை, பிரான்ஸுக்கும் அவர்களுக்குமிடையிலான கலாசாரத் தொடர்புகள் அதிகமானவை. அவர்களுக்கிடையிலான வணிகத் தொடர்புகளும் அதிகமானவை. இதன் காரணமாக, பிரான்ஸ் பற்றி மேலைத்தேய நாட்டவர்கள் அதிக கவனஞ்செலுத்துவது இயற்கையானது. அப்போது, இலங்கை, இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளைச் சேர்ந்தோரும் கவனஞ்செலுத்துவது ஏன்?

இதற்கு, இதனோடு இணைக்கப்பட்டுள்ள வரைபடம், சிறப்பான விளக்கத்தைத் தர முடியும்.

அதில், நீல நிறத்திலிருப்பது, பரிஸ் என்ற வார்த்தை, இலங்கையிலிருந்து கூகிள் தேடலில் தேடப்பட்டமைக்கான வரைபு. கீழே, கிடைக்கோட்டோடு இணைந்து செல்லும் சிவப்பு நிறக்கோடு, பெய்ரூட் என்ற வார்த்தைக்கான தேடுதலின் வரைபு.

பிரான்ஸோடு நேரடியான கலாசார, வர்த்தகத் தொடர்புகள் காணப்படாத போதிலும், பரிஸுக்குச் செல்வதென்பது, இலங்கை போன்றவர்களின் விருப்புக்குரிய செயற்பாடு. ஈபிள் கோபுரத்தைப் பற்றிப் படித்திருக்கிறோம். அதற்கு ஒருநாளாவது செல்ல வேண்டுமென, எமக்கு நாமே சொல்லியிருப்போம். அந்த வகையில், பெய்ரூட்டோடு ஒப்பிடும் போது எமக்கு, பரிஸ் நெருக்கமானது. சிலவேளைகளில், பரிஸ் தாக்குதல் இடம்பெற்று அடுத்த நாள், இந்தியாவின் சென்னையில் இன்னொரு மோசமான தாக்குதல் இடம்பெற்றிருந்தால், அதைப் பற்றிய கவனம் அதிகமாக இருந்திருக்கும், ஏனென்றால், பரிஸை விட எமக்குச் சென்னை நெருக்கமானது.

சாதாரண பிரஜை ஒருவரால், உலகில் இடம்பெறும் அத்தனை தாக்குதல்களைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்பது யதார்த்தமானது. ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குதல்கள் மீது அதிக கவனத்தைச் செலுத்துவதென்பது, நேரத்தை முகாமை செய்வதற்கு அவசியமாகிறது. அதேபோல், தன்னுடைய வாழ்க்கையை குழப்ப மனநிலையின்றிக் கொண்டு செல்வதற்கும் அவசியமானது. அதற்காக, உயர்த்திக் குரலெழுப்பாமைக்காக, பெய்ரூட் தாக்குதல்களை ஆதரிக்கிறார்கள் அல்லது அதுபற்றிக் கணக்கெடுத்திருக்கவில்லை என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுவது ஆபத்தானது.

இன்னுமொரு முக்கியமான அம்சமாக, மீள் இடம்பெறுகை அல்லது மீடிறன் என்பதும் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியிருந்தது.

பரிஸைப் பொறுத்தவரை, உலகின் முன்னேற்றகரமான, அன்பான சமூகத்தைக் கொண்ட நாடொன்றின் தலைநகராகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய கருத்துக் கணிப்புகளின்படி, மேற்கு நாடுகளில் முஸ்லிம்கள், அதிக விருப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் காணப்பட்டது. உலகின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றான அங்கு, தாக்குதல்கள் இடம்பெறுவதென்பது அரிது. மாறாக லெபனானில், அண்மைக்கால சிவில் யுத்தம், வன்முறைகள் காரணமாக, அடிக்கடி இடம்பெறும் குண்டுவெடிப்புகள், தாக்குதல்கள் காரணமாக, இந்தத் தாக்குதலும் அவ்வாறானதொரு தாக்குதலே எனக் கடந்து செல்லக்கூடிய மனநிலை காணப்பட்டது.

அத்தோடு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட முறையும் கூட, பரிஸ் தாக்குதலை அதிகம் கவனிக்கும் ஒன்றாக மாற்றப் பணியிருந்தது. இசை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, ஒருவர் பின் ஒருவராக அழைத்துக் கொன்றமை, நிச்சயமாக, குண்டுவெடிப்பொன்றை விட மோசமானதொன்றாக மனம் எண்ணுகிறது. இரண்டிலும் நபர்கள் இறக்கத் தான் போகிறார்கள் என்ற போதிலும், ஒன்றை விட இன்னொன்றை மோசமானதாக எண்ணுவதென்பது யதார்த்தமானது.

போரில், குண்டு வீசப்பட்டு இறந்தோரை விட, தனித்து, பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோர் மீது எமக்கு, அதிகமான கவனம் திரும்புவதில்லையா?

இந்த விவகாரத்தில் அதிகமான விமர்சனத்தைச் சந்தித்திருந்தவர்களில் பேஸ்புக் நிறுவனத்தாரும் ஒருவர். பரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து, 'நான் பாதுகாப்பாக இருக்கிறேன்' என்ற வசதியை அத்தாக்குதலுக்காக இயக்கியிருந்த அந்நிறுவனம், அதன் பின்னர், 'பிரான்ஸ் மக்களுடன் இருக்கிறேன்' என்பதை வெளிப்படுத்த, புரொபல் படங்களில் பிரான்ஸ் கொடியைச் சேர்க்கும் வசதியை ஏற்படுத்தியிருந்தது.

பாதுகாப்பு வசதி, இதற்கு முன்னர் இயற்கை அனர்த்தங்களுக்காக மாத்திரமே காணப்பட, முதன்முறையாக, இயற்கை அனர்த்தமல்லாத ஒரு சம்பவத்துக்காக அதை இயக்கியதாகவும், இனிவரும் காலங்களில் தேவைப்படும் சந்தர்ப்பங்களில், ஏனைய சம்பவங்களுக்காகவும் அதை இயக்கவுள்ளதாக பேஸ்புக் விளக்கமளித்திருந்தது. ஆனால், பிரான்ஸ் கொடி பற்றி விளக்கமளித்திருக்கவில்லை. எதற்காக, லெபனான் கொடியை இணைக்கும் வசதி தரப்படவில்லை என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், அதற்கான பதில் இலகுவானது. பேஸ்புக் என்பது அமெரிக்காவிலிருந்து இயங்கும் இலாபத்தை நோக்காகக் கொண்ட நிறுவனமொன்று. அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏற்கெனவே சொல்லப்பட்டது போன்று, தங்களுக்கு அல்லது தங்களுடைய உணர்வுகளோடு நெருக்கமான பிரான்ஸ் மீதான தாக்குதல், பெரிதாகத் தெரிந்திருக்கிறது.

அத்தோடு, பிரான்ஸில் காணப்படும் பேஸ்புக் கணக்குகளின் எண்ணிக்கை 32,000,000க்கும் அதிகமானது. பரிஸில்

மாத்திரம் 8,400,000க்கும் அதிகம். லெபனானில் இருக்கும் மொத்தப் பயனர்களின் எண்ணிக்கை 2,600,000. ஆகவே, தனது வணிக நோக்கத்தில், தனக்கு முக்கியமானதொன்றை அதிகம் கவனமெடுக்க அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. அது, அந்நிறுவனத்தைப் பொறுத்தவரையிலான முடிவு. அதில், சரி பிழை பார்ப்பதென்பது, பொருத்தமற்றதாக அமையும்.

எனவே, எல்லா விடயங்களிலும் இருபக்க வாதங்களை ஆராய்ந்து பார்த்த பின்னர், கோபங்களை வெளிப்படுத்துவதென்பது, பொருத்தமானதாக அமையும். அனேகமாக எல்லோருமே ஒரு வகையில், பகுதிநேரமாகவே உலகம் பற்றிக் கோபப்படுவதற்குச் செலவழிக்கிறோம். மிகுதி நேரத்தில், எங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறதே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .