2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பரிஸ் ஒப்பந்தம்: ஏன், எதற்கு, எப்படி?

Gopikrishna Kanagalingam   / 2017 ஜூன் 11 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிஸ் ஒப்பந்தம் என அழைக்கப்படும், காலநிலை மாற்றம் சம்பந்தமான முக்கியமான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் அறிவித்தார். பல்வேறு வகையான அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, பரிஸ் ஒப்பந்தத்தின் எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்புவது ஒருபக்கமிருக்க, பூமியின் எதிர்காலம் பற்றியும் கேள்விகளை எழுப்பிவிட்டுச் சென்றிருக்கிறது.  

மனிதர்களின் நடவடிக்கைகள் காரணமாக, பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதோடு, பூமியின் காலநிலையில், பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது, கடந்த சில தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் தெரிவித்துவரும் விடயமாகும்.   

காலநிலை மாற்றத்தில் முக்கியமான விடயமாக, பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றம் காணப்படுகிறது. பச்சைவீட்டு வாயுக்கள், சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சி, பின்னர் வெளியிடக்கூடிய தன்மையைக் கொண்ட வாயுக்கள் ஆகும். இந்த வாயுக்களின் இந்தச் செயற்பாடு காரணமாக, பச்சைவீட்டு விளைவு எனக் கூறப்படும் நிலைமை உருவாகிறது. இது தான், பூமியில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சினையாக உள்ளது.  

பச்சைவீட்டு வாயுக்களாக காபனீர் ஒக்சைட், மெதேன், நைத்திரஸ் ஒக்சைட், ஓசோன், குளோரோ புளோரோ காபன்கள் உள்ளிட்டவை கருதப்படுகின்றன. 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் விளைவாக அதிகரித்த தொழிற்சாலைகள், இந்த வாயுக்கள், மிக அதிகமான அளவில், பூமியில் வெளியிடப்படுவதை ஏற்படுத்தின.  

இந்த நிலையில், இவ்வாறு பச்சைவீட்டு வாயுக்கள் தொடர்ந்து வெளியேற்றப்படுவது, ஆரோக்கியமானது அல்ல என்பது, தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த ஒன்றாகும். ஏனென்றால், அண்மைய பல ஆண்டுகளாக, பூமியின் சராசரி வெப்பநிலை, ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது. பூமியின் வரலாற்றில், அதிக வெப்பமான முதல் 12 ஆண்டுகளும், 1998ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பின்னைய ஆண்டுகளாக உள்ளன.

2014ஆம் ஆண்டுதான், உலகின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்தது. அதை, 2015ஆம் ஆண்டு முந்தியது. பின்னர், 2016ஆம் ஆண்டு, 2015ஆம் ஆண்டை முந்தியது. இந்த ஆண்டு, 2016ஆம் ஆண்டை முந்துமென எதிர்பார்க்கப்படுகிறது.  

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு, எந்த நிலையில் காணப்படுகிறது என்பதை, மேற்படி சராசரி வெப்பநிலைத் தரவுகள், தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன. இதனால்தான், இதுகுறித்து ஏதாவது செய்ய வேண்டுமென்ற முனைப்பு உருவானது. அதன் விளைவாகத் தான், 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி, உலக நாட்டுத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, இணக்கமொன்றுக்கு வந்தனர். அந்த இணக்கப்பாடுதான், பரிஸ் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.  

இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகத் தான், ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளில், பொதுவாகத் தலைமைப் பதவியை ஏற்று, முன்னின்று செயற்படக்கூடிய நாடான ஐ.அமெரிக்காவின் இந்த முடிவு, அதிர்ச்சிகரமானது என்றாலும், ஓரளவு எதிர்பார்க்கப்பட்டது என்றே கூறலாம்.  

ஜனாதிபதி ட்ரம்ப், காலநிலை மாற்றம் என்பதில் நம்பிக்கை கொண்டவரா என்பதே சந்தேகமாக உள்ளது. இதற்கு முன்னர் பல தடவைகள், காலநிலை மாற்றம் என்ற கருப்பொருளையே, போலி என அவர் அழைத்துவந்தார். காலநிலை மாற்றம் என்பது, சீனாவின் உற்பத்திகளுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுக்க உருவாக்கப்பட்ட ஒன்று என்பது, அவரது கருத்தாக இருந்தது.  

பிரசாரக் காலத்திலும், காலநிலை மாற்றத்தை ஏற்க மறுத்த அவர், நிலக்கரிப் பாவனை குறைக்கப்பட்டு, வேறு தூய்மையான சக்தி வகைகள் மீது கவனஞ்செலுத்தப்பட்டதால், தங்களது தொழில்களை இழந்தோரை நோக்கி, தனது பிரசாரத்தை முன்னெடுத்திருந்தார்.

ஜனாதிபதியானதும், பல்வேறு இடங்களில், சூழல் பாதுகாப்புக் காரணங்களுக்காக, முன்னைய ஒபாமா நிர்வாகத்தால் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை, ஜனாதிபதி ட்ரம்ப் நீக்கினார்.  

உலகிலுள்ள 97 தொடக்கம் 98 சதவீதமான விஞ்ஞானிகள், உண்மையானது என்பதோடு, மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என உறுதிப்படுத்தும், காலநிலை மாற்றத்தை, யாரும் நம்புகிறார்களா, இல்லையா என்பது, கேள்வியே கிடையாது. காலநிலை மாற்றமென்பது உண்மையானது. அதை, நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன, அதன் பாதிப்புகள், ஏற்படுமென்பது யதார்த்தமானது. ஒன்று என்ற இலக்கத்தோடு, ஒன்று என்ற மற்றோர் இலக்கத்தைச் சேர்க்கும் போது, இரண்டு என்ற பதில் பெறப்படும் என்பதை, எவரும் நம்ப வேண்டிய தேவை கிடையாது. அதேபோல் தான் காலநிலை மாற்றமும்.  

ஆனால், ஜனாதிபதி ட்ரம்பைப் போலவே, காலநிலை மாற்றத்தை நம்பாதவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள், இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்காக, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த, புரிதல்களற்ற கருத்துகளையே கூறுகின்றனர். எனவே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்துகளை ஆராய்வது பொருத்தமானது.  

இது சம்பந்தமான உரையில் அவர், பரிஸ் ஒப்பந்தமென்பது, என்ன செய்ய வேண்டுமென்பதைக் கட்டாயப்படுத்தும் ஒப்பந்தமன்று என்று தெரிவித்தார். அது உண்மையானது. ஆனால் அதே வாக்கியத்தில், ஐ.அமெரிக்காவுக்கு நிதியியல், பொருளாதார பிரதிகூலங்களை, இந்த ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.  

பரிஸ் ஒப்பந்தமென்பது, பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக, அனைத்து நாடுகளும் உறுதியளிக்கும் ஒப்பந்தம் தான்.

ஆனால், எந்த அளவுக்குக் குறைக்கவுள்ளனர் என்பதை, அந்தந்த நாடுகளே தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னர், அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறித்த இலக்குகளை அடைய முடியவில்லை என்றால், பரிஸ் ஒப்பந்தத்தால் எந்தவிதத் தண்டமோ அல்லது விசாரணைகளோ மேற்கொள்ளப்படாது. வெறுமனே, அந்த நாடுகளைப் பெயரிட்டு, வெளிப்படுத்துதல் மாத்திரமே நடைபெறும். எனவே, எந்த நாட்டுக்கும், இது பிரதிகூலமானது கிடையாது.  

ஒப்பந்தத்தின்படி, தனது பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை, அதிகரிக்கப் போவதாக, ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார். ஆனால், காலநிலை மாற்றத்துக்கு எதிரான மிகப்பெரிய சக்தியாக, சீனாவே மாறியிருக்கிறது. அதேபோல், இந்தியாவும், தனது நிலக்கரி மின்நிலையங்களை அதிகரிக்கப் போவதாக அவர் கூறினார். அதுவும் தவறானது. இந்த இரு நாடுகளும், காலநிலை மாற்றத்துக்கு எதிராக, தங்களால் செய்யக்கூடியவற்றைச் செய்துகொண்டிருக்கின்றன.   

ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பாவிலும் நிலக்கரி மின்நிலையங்களை அனுமதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம், நிலக்கரித் தொழிலை அழிப்பதற்கு மாறாக, ஐ.அமெரிக்காவிலிருந்து ஏனைய நாடுகளுக்கு அத்தொழில் வாய்ப்புகளை ஏற்றுமதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இது, முற்றிலும் தவறான புரிதலாகும். 

ஏற்கெனவே சொல்லப்பட்டதன்படி, எவ்வளவு தூரத்துக்கு நிலக்கரியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பது, அந்தந்த நாடுகளுக்கு உரியது. ஆகவே, ஒப்பந்தத்தின்படி, ஏனைய நாடுகளுக்கு அனுகூலம், ஐ.அமெரிக்காவுக்குப் பிரதிகூலம் என்பது, முற்றிலும் தவறான புரிதல் அல்லது முழுமையான பொய்.  

தனதுரையில் அவர், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதன் காரணமாக, தொழில் இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், தரவுகள் அடிப்படையில், இது தவறானது.

ஐ. அமெரிக்க சக்தித் திணைக்களத்தின் தரவுகளின்படி, தூய சக்தித் துறையில், 3 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். மேலதிகமாக, சூரியசக்தி, காற்றுசக்தி மின்உற்பத்தி தொடர்பான துறைகளில், 470,000 பேர் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கை, ஐ.அமெரிக்காவின் நிலக்கரித் தொழிற்றுறையில் பணியாற்றுவோரை விட, சுமார் 3 மடங்கு அதிகமாகும். எனவே, காலநிலை மாற்றத்துக்கெதிராகப் போராடுவது என்பது, பொருளாதார ரீதியாக எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, புதிய தொழில்களை, அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  

ஐ.அமெரிக்காவின் இந்த வெளியேற்றம், பரிஸ் ஒப்பந்தத்தை ஆட்டங்காணச் செய்திருக்கிறது என்பது உண்மையானது. உலகில், அதிக பச்சைவீட்டு வாயுக்களை வெளியேற்றும் இரண்டு நாடுகளில் ஒன்றான ஐ.அமெரிக்கா (மற்றையது சீனா), இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுமானால், காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடுவதென்பது கடினமாக மாறிப் போகும். ஆனால், பரிஸ் ஒப்பந்தத்தில் காணப்படும் சிறப்பான அம்சமாக, நாட்டின் மத்திய அரசாங்கங்கள், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறினாலும், மாநில அரசாங்கங்கள், இதனை நடைமுறைப்படுத்த முடியும்.  

இதன்படி, பல மாநிலங்களின் அரசாங்கங்கள், பரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. அப்பிள், அமெஸோன், மைக்ரோசொப்ட் உள்ளிட்ட ஏராளமான பெரிய நிறுவனங்கள், பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டை, இன்னும் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளன.  

இவை, வரவேற்கத்தக்க செயற்பாடுகளாக அமைந்திருக்கின்றன. ஏனென்றால், இலங்கை போன்ற சிறிய நாடுகள், ஏனைய நாடுகளின் செயற்பாடுகளால் பாதிப்படைகின்றன. இந்த ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்கா விலகுவதோடு, அதன் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாது விடின், சிறிய நாடுகளுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படும். இலங்கையின் ஒரு பக்கத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட, வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில், வரட்சியான நிலைமை காணப்பட்டமை, காலநிலை மாற்றமானது, இலங்கையை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை வெளிப்படுத்தியிருந்தது.  

எனவே, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு ஐ.அமெரிக்கா எடுத்த துரதிர்ஷ்டவசமான முடிவு, உலக அரங்கில், சீனாவின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது. அதைத் தவிர, பரிஸ் ஒப்பந்தத்தின் பெறுமதியை, கொஞ்சம் குறைத்திருக்கிறது. ஆனால், பல மாநிலங்களும் நிறுவனங்களும், இந்த ஒப்பந்தத்தின்படி செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளமை, ஓரளவு நிம்மதி தரும் ஒரு விடயமாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X