2025 மே 17, சனிக்கிழமை

பலமுனை நகர்வு தேவை

Thipaan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை நம்பி, கடந்த மாதம் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியிருந்த அரசியல் கைதிகள் கடந்த 8ஆம் திகதி மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்களின் போராட்டம் இந்தப் பத்தி எழுதப்படும் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பத்தி வெளிவரும் போதும், அது தொடர்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகம்.

ஏனென்றால், அதற்கிடையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்குச் சாதகமான எந்த நகர்விலும் அரசாங்கம் ஈடுபடுவதற்கான சாத்தியங்களோ வாய்ப்புகளோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஏற்கெனவே கடந்த மாதம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஆறு நாட்களின் பின்னர் தான் ஜனாதிபதியின் தரப்பில் இருந்து வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அந்த வாக்குறுதி கடந்த 7ஆம் திகதியுடன் முடிந்து போன நிலையில் தான் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

பொதுமன்னிப்பைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக பிணையில் விடுவிப்பதாக, அரசாங்கம் கூறியிருக்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம், அரசியல் கைதிகளின் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி - பிளவுபடுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இப்போதைக்கு அரசாங்கம், முதற்கட்டமாக 31 பேரையும், அடுத்து 32 பேரையும் மட்டும் பிணையில் விடுவிப்பதாக கூறியிருக்கிறது.

எஞ்சியோரில், தண்டனை விதிக்கப்பட்ட, மேல் முறையீடு செய்யப்பட்ட 60 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பினால் மட்டும் வெளிவரக்கூடிய நிலையில் இருக்கின்றனர்.

ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அமைச்சரவை உபகுழு முடிவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நகர்வுகள் அனைத்தும், அரசியல் சைகதிகள் விவகாரத்தில் அவசரமான முடிவுகள் எதையும் எடுக்கத் தயாரில்லை என்பதையே புலப்படுத்துகின்றன.

ஆனால், அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கம் கூறுவது போன்று கைதிகளோ அல்லது தமிழ்க்கட்சிகளோ திடீர் காலக்கெடு ஒன்றை கொடுத்தோ, நிறைவேற்ற முடியாத காலக்கெடு ஒன்றைக் கொடுத்தோ போராட்டத்தை நடத்தவில்லை.

அரசாங்கம் பதவிக்கு வந்து 11 மாதங்களின் பின்னர் தான், அரசியல் கைதிகள் போராட்டத்தை நடத்துகின்றனர்.

இதுவரையில் இந்த அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவு தான் இது.

சிறைகளில் உள்ள பெரும்பாலான அரசியல் கைதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பெறப்பட்ட குற்றஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது முறையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தான் நீண்டகாலமாக இவர்களின் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன.

இவ்வாறு இழுத்தடிக்கப்படுவதால், தேவையின்றி சிறைகளில் கழிக்க வேண்டிய அவலத்தை அரசியல் கைதிகள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் முறைகேடுகள், மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் விசாரணைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை ஏதும் நடத்தப்படாமல் காத்திருக்க வைக்கப்பட்டார்.

7 மணித்தியாலங்கள் விசாரணையின்றி காத்திருக்க வைக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வெளியே வந்த அவர், தன் மீது உளவியல் போர் நடத்தப்படுவதாகவும் நேரம் வீணடிக்கப்பட்டதாகவும் கொதித்தார்.

7 மணித்தியாலங்கள் காத்திருக்க முடியாத அரசியல் தலைவர்கள் உள்ள இந்த நாட்டில், 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் மனோநிலை எவ்வாறு இருக்கும் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மீண்டும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்துக்கு கூடிய விரைவில் தீர்வு காண்பதற்கு தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அரசியல் கைதிகள் ஒரு பக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனர். மற்றொரு பக்கத்தில் அவர்களின் உறவினர்களும் போராட்டங்களை நடத்துகின்றனர். அரசியல் தலைமைகளும் வேறொரு பக்கத்தில் முயற்சிகளை முன்னெடுக்கின்றன.

இந்த மும்முனைப் போராட்டம் தனியாகவோ, கூட்டாகவோ நடத்தப்பட்டும் தீர்வு ஏதும் எட்டப்படாத நிலையில் தான், அடுத்த கட்டம் குறித்துச் சிந்திக்க வேண்டிய நிலையில் தமிழர் தரப்பு உள்ளது.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம், அவர்களின் உறவினர்களின் போராட்டங்கள், தமிழ் அரசியல் தலைமைகளின் முயற்சிகள் எல்லாமே, இந்த விவகாரத்தில் அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

அரசாங்கத்தின் மீது முறையாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தால், அரசியல் கைதிகளின், பொதுமன்னிப்பு அல்லது பிணை விவகாரத்தில் இந்தளவுக்கு இழுபறிப் போக்கை அரசாங்கம் காண்பித்திருக்காது.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக, அரசாங்கம் தான் கொடுத்த வாக்குறுதிகளை மீறுகிறது என்றால், இந்த விடயத்தில், அரசாங்கம் போதிய அக்கறையற்று இருக்கிறது என்று தான் அர்த்தம்.

ஜனாதிபதியுடன், அமைச்சர்களுடன் நடத்தப்படும் பேச்சுக்கள், தொலைபேசி உரையாடல்கள், கடிதங்கள், அறிக்கைகள் எல்லாமே, எருமை மாட்டின் மீது மழை பெய்த கதையாகவே இருக்கிறது.

இந்தக் கட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முயற்சியை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது அது ஒன்று தான் எஞ்சியிருக்கின்ற ஒரே வழியாக இருக்கும்.

ஜனநாயக வெளியில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கான உச்ச வழிமுறை மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது தான்.

அதனைச் செய்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் எந்தளவுக்கு விருப்புடன் இருக்கின்றன, அத்தகைய போராட்டத்துக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் எந்தளவுக்கு தயாராக இருக்கின்றனர் என்பன முக்கியமாகத் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கின்ற ஒரு கட்சியாகவே இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டுள்ள கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் முரண்டு பிடித்து, முட்டிக் கொள்வதற்கு விரும்பவில்லை.

இரா.சம்பந்தனின் அணுகுமுறை தொலைநோக்குடன் கூடிய ஒன்றாக இருந்தாலும், மக்களின் முக்கியமான பிரச்சினை விடயத்தில், அவரது பொறுமை தமிழ்மக்களால் அவ்வளவு ரசிக்கப்படாது என்பதே உண்மை.

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளைப் பார்வையிடச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனிடம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, குழுக்களின் பிரதித் தலைவர் பதவிகளை அடகு வைத்தாவது, தமது பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருமாறு அரசியல் கைதிகள் கேட்டிருந்தனர்.

பதவி விலகி அல்லது பதவி விலகுவதாக மிரட்டி காரியத்தை சாதிக்க வேண்டுடும் என்பதே இதன் அர்த்தம்.

அத்தகைய ஒரு முடிவு பற்றிச் சிந்திப்பதற்கான தருணம் இதுவல்ல.

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரச்சினை என்பது. முக்கியமானது. முதன்மையானது. ஆனால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் விடயமல்ல.

இந்த விடயத்துக்கு உச்சபலத்தைப் பிரயோகித்தால், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமது பலமோ பலவீனமோ வெளிப்பட்டு விடும் என்று சம்பந்தன் கருதக்கூடும்.

பறவையைச் சுடுவதற்கு துப்பாக்கி தான் தேவையே தவிர, ஏவுகணை அல்ல. பொருத்தமற்ற ஆயுதத்தை தெரிவு செய்வது, தோல்வியையே தரும்.

அதைவிட, அரசாங்கத்துடன் முரண்டு பிடித்து மோதல் போக்கை வளர்த்துக் கொள்வது, அரசியல் தீர்வு முயற்சிகளை பிற்போடக் கூடும் என்றும் அவர் கருதலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் கைவிடும் நிலை ஒன்று ஏற்பட்டால், அதனைப் பறிப்பதற்கு மகிந்த அணியும் தயாராக இருக்கிறது.

இத்தகைய பல விடயங்களை கூட்டமைப்புத் தலைமை ஆராய வேண்டிய நிலையில் உள்ளது.

அரசாங்கத்துடன் அதிகம் முரண்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, மக்கள் போராட்டத்தை தீவிரமாக ஒழுங்கமைக்க கூட்டமைப்பு தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இன்று வடக்கு. கிழக்கு தழுவிய ஒரு போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ளதாயினும், அது பல்வேறு அழுத்தங்களின் பேரில் தான் சாத்தியமாயிற்று.

அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ளாமல் காரியம் சாதிக்க நினைக்கும் கூட்டமைப்புத் தலைமையின் எண்ணம் சரியோ, தவறோ, இப்போதைய நிலையில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக உள்ள ஒரே வழி மக்கள் போராட்டம் தான் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மும்முனை நகர்வுகள் வெற்றிபெறத் தவறியுள்ளதாலும், அரசாங்கத்தின் அழுங்குப் பிடியினாலும் தான், இன்று வடக்குகிழக்கு ஒரு முழு அடைப்பு போராட்டத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கிறது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எதிர்கொள்ளும் முதல் பெரிய முழு அடைப்பு போராட்டமாக இது அமையும் என்று எதிர்பார்க்கிறது.

இது ஒரு வகையில் நல்லாட்சியின் தோல்வியை அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறக்கூடும்.

இது தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இல்லை, அரசாங்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கி விட்டனர் என்ற செய்தியையும் உலகிற்கு கொடுக்கலாம்.

ஆனால், இத்தகைய தவிர்க்க முடியாத நிலையை உருவாக்கி விட்டதற்கான பொறுப்பை அரசாங்கமே சுமக்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .