2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

பிசுபிசுக்கும் சர்வதேச நீதி கோரல்?

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முழுமையான மக்கள் ஆதரவு கிடைக்குமா? இல்லையா? என்பதை ஒரு புறம் வைத்துக் கொள்வோம்.

இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக ஒரு சில தரப்புகளும், ஆதரவு வழங்கமாட்டோம், வழங்கக் கூடாதுஎன்ற வகையில் மற்றொரு தரப்பும் என்று நிலைப்பாடு வெவ்வேறாக இருந்து கொண்டிருக்கிறது.

வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்த காலத்தில் காணாமல் ஆகப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும், அவர்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும் என்று தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அப் போராட்டங்களை நடத்திவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொருவராக மரணமாகிக் கொண்டு இருக்கின்றனர். இருந்தாலும் அப்போராட்டமானது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டுக்கு கடந்த மாதத்தில் விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரும் அவர்களைச் சந்தித்திருந்தார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள், அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சர்கள் காணாமலாக்கப்பட்டமை என்கிற விடயத்தினை ஏற்றுக்கொள்ளவே அஞ்சி அது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கும் தயங்கியிருந்தனர். அதனால் அவர்கள் அவ்விவகாரம் குறித்து பேசுவதேயில்லை. அல்லது அவ்வாறு ஒரு தரப்பு இல்லை என்றவாறாகவே கருத்துக்களை வெளியிட முயன்றிருந்தனர்.

இதற்கிடையில் தான், கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற, ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் எழுதிய ‘செம்மணி’ புத்தக வெளியீடு மற்றும் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் மனிதப் புதைகுழிகள் எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் வெளியிட்ட கருத்து கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

அவருடைய கருத்து முன்னைய அரசாங்கத்தின் கருத்தா, பெரும்பான்மை மக்களின் சிந்தனையா என்று எண்ணவும் தோன்றுகின்றது.
“இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும். எனவே, நாம் உள்ளகப் பொறிமுறையை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்பது அவரது கருத்தாகும்.

2018ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளராக இருந்த ஒருவருடைய கருத்து கவனிக்கப்படவேண்டியதே.

ஆனாலும், முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதும் அதற்கு நிதி ஒதுக்கியதாகக் கூறப்பட்டதையும் பின்னர் அவர் தன்முனைப்பில் மேற்கொண்ட வேலைகள் குறித்தும் வெளியிட்ட கருத்துக்கள் அந்த அலுவலகத்தின் அன்றைய, தற்போதைய நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருக்கிறது எனலாம்.

நீதியமைச்சின் கீழ் இயங்கும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் சுதந்திரமாகச் செயற்படமுடியாது என்பதும் அரசாங்கத்தின் வெறும் கண்துடைப்பான செயற்பாடே காணாமல் போனோர்பற்றிய அலுவலகம் என்பதும் இதிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. 

அதன்படி, தமிழ் மக்கள் இந்த அலுவலகத்தினை மறுத்தமைக்கான நல்லதொரு எடுத்துக்காட்டாகவும் இதனைக் கொள்ளலாம்.2015 ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியாவின் ஆதரவுடன், அமெரிக்காவால் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் தொடர்பில் நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதே அத்தீர்மானம்.

ஒருவகையில் முழுமையான உள்ளகப் பொறிமுறையே அது. நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமைக்கான ஆணைக்குழு, நீதிக்கான பொறிமுறை, இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகிய நான்கு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய 25 தீர்மானங்கள் இதில் அடங்கும்.

இந்த தீர்மானம் நல்லாட்சி எனப்படும் பிரதமர் ரணில் - ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறியது.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் நிலைமாறு கால நீதிச் செயற்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என அரசு நல்லெண்ண சமிக்ஞையைக் காண்பிக்கும் வகையிலான செயற்பாடுகளை ஆரம்பித்தது.

அதில் அரசினால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அலுவலகங்களில் சிறிதும் நம்பிக்கையில்லாமல் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சர்வதேச நீதியை எதிர்பார்த்துப் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச நீதிக்கு சாத்தியமில்லை என்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளர் கருத்துப் பகிர்வது உண்மையாகக்கூட இருக்கலாம்.

2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகையில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டபாய ராஜபக்‌ஷ 2019ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கையின் ஜனாதிபதியானதையடுத்து 2020ஆம் ஆண்டு பெப்ரவரியில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

நல்லாட்சி அரசு தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியமை பெரிய தவறு எனச்சுட்டிக்காட்டி, வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரணை செய்யமுடியாது என்றும் அரசாங்கம் தெரிவித்தது.  இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மிக முக்கியமானதாகவே உலகளவில் வாழும் தமிழர்களாலும் அங்குள்ள அமைப்புக்களாலும் பார்க்கப்பட்டாலும் அது புஸ்வானமாக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அவற்றின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இப்போதும் தொடர்வதாகப் பாசாங்கு காண்பிக்கப்படுகிறது. இவ்வருடத்தில், நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவைஅமர்விலும் இவ்விடயங்கள் அரசாங்கத்தால் பட்டியலிடப்படும். யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்த பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்படாத நிலையில்,

உறவுகள் எவ்வாறு அரசாங்கத்தை நம்புவது என்பதுதான் இந்த இடத்தில் சிக்கலானது. இந்தச் சிக்கலுக்குப் பதிலைச் சொல்ல வேண்டிய சாலிய பீரிஸ், போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு சர்வதேச நீதி சாத்தியமில்லை என்று கூறுவது வேறு போக்கிலேயே சிந்திக்கத் தூண்டுகிறது.

இருந்தாலும், வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலம் ஆக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்றனவா என்ற சந்தேகத்துடனேயே வாழும் தெற்கு வாசிகளுக்கு சாலிய பீரிசின் கருத்துக்கள் உண்மையான சில தெளிவுகளைக் கொடுக்கலாம்.

அத்துடன், அந்த உண்மையை அரசும், அரசு சாராத தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளும் நிலைகூட உருவாகலாம். ஆனால், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருப்பதாகவோ, காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் நடத்துவதைப் பற்றியே சிந்திக்காத, வெறுமனே கடந்து செல்ல முனைகையில், இவற்றைப் பற்றிப்பேசுவதால் பலன் கிடைக்குமா?
என்று சிந்திக்கவும் தோன்றுகிறது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தாபிக்கப்பட்டதும், நகர்த்தப்படுவதும் மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் அமர்வை நோக்கியதா என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது.

இன்னமும் ஐ.நா. சபையானது தமக்குரிய நீதியை வழங்கும் என்ற ஏக்கமான எதிர்பார்ப்புடனேயே இருந்து வருகின்ற தமிழ் மக்கள் ஓவ்வொரு வருடத்தினது மார்ச் மற்றும், செப்ரம்பர் மாதங்களில் தம்முடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொள்வது வழக்கமானது.

இப்போது, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் நடைபெற்றதா என்று கேட்குமளவிற்கு நிலைமை மாற்றமடைந்து விட்டது. இருந்தாலும்,  தொடரும் நம்மவர்களும் கூட கண்டுகொள்ளாத, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும் போராட்டம் யாரும் கவனத்திலேயே எடுக்கப்படாத ஒன்றாக மாறிவருவது கவலைக்குரியதே.

சாலிய பீரிஸ் கூறுவது போல், இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாக இருந்தாலும்,  ‘வலிந்து காணாமலாக்கப்படல்” என்ற வார்த்தையைக்கூட, பயன்படுத்தாமலிருக்கின்ற இந்த அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வழங்கமுடியுமா என்பது கேள்விக்கானதே.

எவ்வாறாயினும், நாட்டில் மீண்டும் இவ்வாறான காணாமல் போதல்கள் நடைபெறக் கூடாதானால், கடந்த காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படுவது கட்டாயமாகும். அதே நேரத்தில், அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு அது தீர்த்துவைக்கப்படவேண்டும் என்பதும் கட்டாயமானது.

இருந்தாலும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கோரிவரும் சர்வதேச நீதியின் அடிப்படையிலான வெளிப்படுத்தலே ஏற்றுக் கொள்ளக்கூடியதாயிருக்கும். 

ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுபோல் இன்றைய நிலையில், வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கும் நீதி கிடைக்காது போனால் அது அரசாங்கத்தின் தவறே.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X