2025 ஜூலை 19, சனிக்கிழமை

புதிதாக எதுவும் இல்லாத புதிய அரசமைப்பு

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்றம், அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டதன் பின்னர், அதன் கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை, அக்குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.   

இந்த இடைக்கால அறிக்கையில், அரசாங்கத்தின் தன்மை, விவரிக்கப்பட்டுள்ள விதம், ஒரு வகையில் விசித்திரமானது. மற்றொரு வகையில், அதை ஆக்கியவர்கள் நாட்டின் சமூகங்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த ‘படும் பாட்டை’ எடுத்துக் காட்டுகிறது. அரசின் தன்மை அதில் இவ்வாறுதான் விவரிக்கப்பட்டுள்ளது.  

‘இலங்கையானது அரசமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அமுலாக்கும் மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களைக் கொண்ட ‘ஏக்கீய ராஜ்ஜிய’ ஒருமித்த நாடாகும்; சுதந்திரமானதும் இறைமையானதும் சுயாதீனமானதுமான குடியரசாகும்.’   
அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ ஒருமித்த நாடு என்றே அரசின் தன்மை விவரிக்கப்பட்டுள்ளதேயல்லாமல் ஆங்கில பதமொன்று அதற்காக பாவிக்கப்படவில்லை.   

சிங்கள மொழியிலுள்ள அறிக்கையிலும், சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்குமான இந்த இரு பதங்களும் பாவிக்கப்பட்டுள்ளன. எனவேதான் இந்த விவரிப்பு விசித்திரமானது என ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.  

ஒற்றையாட்சியாக இது வரை கருதப்படும் இலங்கை அரசின் தன்மையை விவரிக்க, இது வரை சிங்கள மொழியில் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்ற பதமே பாவிக்கப்பட்டது. அது இந்த அறிக்கையிலும் மாற்றப்படவில்லை. ஆங்கிலத்தில், இதுவரை அரசின் தன்மையை விவரிக்க ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற பதம் பாவிக்கப்பட்டது. அந்தப் பதம் இந்த அறிக்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.   

தமிழில் இது வரை இலங்கை அரசின் தன்மை ‘ஒற்றை ஆட்சி’யாகவே விவரிக்கப்பட்டது. அந்தப் பதம் இந்த இடைக்கால அறிக்கையில் மாற்றப்பட்டு ‘ஒருமித்த நாடு’ என்ற புதிய பதம் பாவிக்கப்பட்டது.  

ஆங்கில ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற பதம் ஏன் நீக்கப்பட்டுள்ளது என்பதற்கு காரணமும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தென் பகுதி மக்கள் சமஷ்டி என்ற பதத்தைக் கண்டு பயப்படுவதோடு, வடபகுதி மக்கள் ஒற்றையாட்சி என்ற பதத்தைக் கண்டு பயப்படுவதாக அரசமைப்புச் சபையை நிறுவுவதற்கான பிரேரணை மீது உரையாற்றும் போது, ஜனாதிபதி கூறினார். அரசமைப்பு என்பது மக்கள் பயப்பட வேண்டிய ஆவணம் ஒன்றல்ல.  

‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற ஆங்கிலப் பதத்தின் இலக்கிய வரைவிலக்கணம் மாற்றங்களை எதிர்நோக்கி வந்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில், இப்போது வட அயர்லாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்ல முடியும். எனவே, ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற ஆங்கில பதம் இலங்கைக்குப் பொருத்தமானது அல்ல.’  
இந்த விளக்கமானது வடக்கிலும் தெற்கிலும் உள்ள தீவிர போக்குடையவர்களை சமாளிப்பதற்காகவே அரசின் தன்மையை விளக்கும் விடயத்தில் பதங்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையே காட்டுகிறது.  

 சிங்கள தீவிரவாதிகள் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்ற பதம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதனால் அவர்களைச் சமாளிப்பதற்காக அந்தப் பதம் மாற்றப்படாமல் அவ்வாறே வைக்கப்பட்டுள்ளது.   

‘ஒற்றை ஆட்சி’ என்ற பதத்தை தீவிர போக்குடைய தமிழர்கள் வெறுப்பதனாலும், சமஷ்டி என்ற பதத்தை அவர்கள் வலியுறுத்தி வருவதனாலும், அவர்களைச் சமாளிப்பதற்காக ‘ஒற்றை ஆட்சி’ என்பதற்குப் பதிலாக, ‘ஒருமித்த நாடு’ என்ற பதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   

இதை வேண்டுமென்றால் ‘ஒன்றாக இருக்கும்’ என்றும் ‘ஒன்றாகிவிட்ட’ என்றும் அர்த்தம் கொள்ளலாம். அதாவது தமிழர்கள் அதை வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்ளலாம்; அல்லது நிராகரிக்கலாம்.   

அது அவரவரது அரசியல் நிலைப்பாட்டின் தீவிரத்தைப் பொறுத்ததாகும். ஒத்துப் போக வழிகளைத் தேடுவோருக்கு, அது ‘ஒன்றாகிவிட்ட’ அல்லது ‘சுமாரான சமஷ்டியாக’ தென்படலாம்.   

ஒத்துப் போகத் தேவையில்லை என்று சிந்திப்போருக்கு அந்தப் பதம் ‘ஒன்றாக இருக்கும்’ அல்லது ‘ஒற்றை ஆட்சி’யாகவே தென்படலாம்.   

பொதுவாகப் பார்க்கும்போது, இதுவரை தமிழர்களிடமிருந்து ‘ஒருமித்த நாடு’ என்ற இந்தப் புதிய பதத்துக்குப் பாரியளவில் எதிர்ப்புகள் எழவில்லை. வட மாகாண முதலமைச்சர் 
சி.வி.விக்னேஸ்வரன் அதை நிராகரித்துள்ளார்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ‘ஒருமித்த நாடு’ என்பதும் பெரிய விடயம்தான் என்று கூறியிருக்கிறார்.  

அதேவேளை, ஒருமித்த என்ற தமிழ்ச் சொல்லைக் கொண்டு, அரசின் தன்மையை விவரிப்பதைச் சிங்கள தேசியவாதிகளும் இனவாதிகளும் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.   
அது ஒற்றை ஆட்சியைக் குறிக்கவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர். இல்லை அது ஏறத்தாழ ஒற்றை ஆட்சியையே குறிக்கின்றது என்று கூற அரச தலைவர்கள் பலவாறு முயற்சி செய்து வருகின்றனர்.  

 புதிய அரசமைப்பு விடயத்தில் முக்கிய பங்காற்றி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, கடந்த ஞாயிற்றுக் கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றில் அதனைத்தான் செய்தார். அது எவ்வித மாற்றமுமின்றி தமிழ் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.   

இதில் விசித்திரமான விடயம் என்னவென்றால், தமிழில் ‘ஒருமித்த’ என்பது ஒற்றை ஆட்சியைக் குறிக்கவில்லை என்று அரசாங்கம் தமிழர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டியுள்ளதோடு, அது ஒற்றை ஆட்சியேதான் என்று சிங்களவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டியுள்ளது.  

 அவ்வாறு தமிழர்களைச் சமாளிக்கப் போகும் போது, அந்தச் செய்தி சிங்களவர்களையும் சென்றடைகிறது. சிங்களவர்களைச் சமாளிக்கப் போகும் போது, அச்செய்தி தமிழர்களைச் சென்றடைகிறது.   

எவ்வாறாயினும் ஒருமித்த நாடு என்பதும், பெரிய விடயம்தான் என்று கூறிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன், அக் கருத்தைத் தமிழர்களை ஏற்றுக் கொள்ளச் செய்தால், அதேபோல் அரசாங்கம் அதைச் சிங்களவர் ஏற்றுக் கொள்ளச் செய்தால், இனங்களுக்கிடையே இந்த விடயத்தில் ‘ஒருமித்த கருத்தை’ ஏற்படுத்த, இந்த இடைக்கால அறிக்கையைத் தயாரித்தவர்கள் எடுத்த முயற்சி வெற்றியளித்ததாகக் கொள்ள முடியும். முஸ்லிம்கள், அரசின் தன்மையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.  

இங்குள்ள முக்கிய விடயமும் இரு இனங்களிலும் பலர் கருத்தில் கொள்ளாத விடயமும் என்னவென்றால், தமிழிலோ, சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலே எந்தப் பதத்தைக் கொண்டு, இலங்கை அரசின் தன்மையை விவரித்தாலும் நாட்டின் நிர்வாக அமைப்பு பௌதிக ரீதியில் மாறப் போவதில்லை என்பதே.   

எந்தப் பதத்தைக் கொண்டு அரசின் தன்மையை விவரித்தாலும், நாடு தற்போது போலவே, மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களைக் கொண்ட சுதந்திரமானதும் இறைமையானதும் சுயாதீனமானதுமான குடியரசாகவே இருக்கும்.   

அந்த அமைப்பே, உண்மையில் அரசின் தன்மை என்றழைக்கப்படுகிறது. அது மாறப் போவதில்லை; அதன் பெயர் மாறினால் மாறும். பௌதிக ரீதியிலான இலங்கையின் இந்த நிர்வாக அமைப்புக்குத் தமிழர்களோ சிங்களவர்களோ அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.   

சொற்களைப் பற்றித்தான் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த அமைப்பைத் தமிழர்களும் சிங்களவர்களும் ஏற்றுக் கொள்வார்களாக இருந்தால், சொற்களையும் பதங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டுதானே, இரு சாராரும் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்? சொற்களுக்காகவும் பதங்களுக்காவும் சண்டையிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?   
அது ஒருபுறம் இருக்க, முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றி, அதன்கீழ், பல தலைப்புகளில் பல விடயங்களை ஆராய, ஆறு உப குழுக்களையும் நியமித்து, அவற்றின் கருத்துகளைப் பரிசீலித்து, புதிய அரசமைப்பொன்றுக்கான ஆலோசனைகளை வழங்க வழிநடத்தும் குழுவொன்றையும் நியமித்து இருந்தாலும் அந்த வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையைப் பார்த்தால், அதை அடிப்படையாகக் கொண்டு, ‘புதிய அரசமைப்பு’ ஒன்று அமையப் போவதில்லை என்றே தெரிகிறது. ஏனெனில், அந்த அறிக்கை தற்போதைய அரசமைப்பில் உள்ள சகல முக்கிய அம்சங்களையும் தொடர வேண்டும் என்றே கூறுகிறது.  

அதாவது, அதிகாரப் பரவலாக்கல் முறை மாறப்போவதில்லை. ஏனெனில், இரு பிரதான கட்சிகளும் அம்முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியும் அம்முறையை மாற்ற வேண்டும் எனத் தற்போது கூறுவதாகத் தெரியவில்லை. 

ஏற்கெனவே கூறியதுபோல், அரசின் தன்மையை விவரிக்க எந்தப் பதத்தைப் பாவித்தாலும், அரசின் தன்மை தற்போதையதாகவே இருக்கும். அதாவது ‘இலங்கையானது அரசமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அமுலாக்கும் மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களைக் கொண்ட’ குடியரசாகவே இருக்கும்.  
ஏனைய மதங்களுக்கு வேற்றுமை காட்டுவதைத் தடுக்கும் வாசகமொன்று சேர்க்கப்படுமேயானால் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதைத் தாம் எதிர்க்கவில்லை எனத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் கூறி வருவதன் காரணமாக, பௌத்த மதத்துக்குத் தொடர்ந்தும் முன்னுரிமை வழங்கப்படும் என அரசாங்கம் கூறி வருகிறது.  

 நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பாக, அறிக்கையில் எந்தவொரு ஆலோசனையும் முன்வைக்கப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் எனக் கூறிப் பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அந்த முறை தொடர வேண்டும் எனக் கூறுவதாக மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும், அம் முறை தொடரும் என்றே கருத முடிகிறது.  

நடைமுறையில் தற்போது கொழும்பு மாநகரமே நாட்டின் தலைநகரமாக இருக்கிறது. கொழும்பு தலைநகரமாக இருக்கும் என்றே பிரதமர் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எதிர்க்காலத்தில் அந்த எண்ணிக்கை 233 ஆக அதிகரிக்க வேண்டும் என அறிக்கை கூறுகிறது.    

மாகாண இணைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் உள்ள கருத்துகளைப் பொதுவாகக் குறிப்பிடுவதைத் தவிர, அந்த விடயம் தொடர்பாக அறிக்கை வேறு எதையும் கூறவில்லை. மாகாண இணைப்புக்கும் வாய்ப்பு இருக்காது என்றே தற்போதைய நிலையில் ஊகிக்க முடியும்.   

எனவே, அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை, அடிப்படையாகக் கொண்டு ‘புதிய’ அரசமைப்பொன்று தயாரிக்கப்பட்டால் அது எவ்வகையிலும் ‘புதிய’ அரசமைப்பாகப் போவதில்லை.   

இங்கு காணப்படும் முக்கியமானதொரு விடயம் என்னவென்றால், அரசமைப்பு விடயத்தில் முக்கியமாகக் கருதப்படும் ஏறத்தாழ சகல விடயங்களும் இன ரீதியாக முக்கியமானவையாக இருப்பதே.  

 வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், இது இன உணர்வுகளைத் தொடும் விடயங்களை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையாகும். அதிகாரப் பரவலாக்கல், மாகாண இணைப்பு, ஒற்றை ஆட்சி மற்றும் சமஷ்டி முறை, இரண்டாம் சபை (செனட் சபை) ஒன்றை நிறுவுதல் மற்றும் பௌத்த மதத்துக்கான இடம் ஆகியனவே முக்கிய விடயங்களாக இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளன.   

எனவே, அரசமைப்புத் தயாரிப்பு என்றால் இனங்களுக்கிடையிலான உறவைச் சீர்படுத்துவதா என்று எவர் கேட்டாலும் அது பொருத்தமான கேள்வியாகவே இருக்கும்.  
புதிய அரசமைப்புக்கு அடிப்படையாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை விமர்சிப்போரும் ஆதரவு தெரிவிப்போரும் அதில் உள்ள இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களை கருத்தில் கொண்டே ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.   

நிறைவேற்று ஜனாதிபதி முறை, நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மற்றும் தேசிய தலைநகரம் போன்ற விடயங்களும் இதில் ஆராயப்பட்டு இருந்தாலும், அவற்றுக்கு இன உணர்வுகளைத் தொடும் விடயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. 

அவை இனப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட விடயங்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூற முடியும். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மட்டும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை வைத்துக் கொண்டு ஜனநாயகச் சீர்திருத்தங்களை மேற்கோள்ள முடியாது என்றும், அதனால் அந்த விடயத்தை அடிப்படையாகக்  கொண்டே, தாம் அரசமைப்புத் தயாரிப்புக்கு ஆதரவு வழங்கப்போவதாக் கூறியிருக்கிறார்.  

‘புதிய’ அரசமைப்பின் மூலம் அரசாங்கம் சமஷ்டி முறையைக் கொண்டு வரப்போகிறது என்று சிங்கள மக்களைக் குழப்பும் தொழிலின் தலைமையை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவே ஏற்றிருக்கிறார்.   

ஒற்றை ஆட்சி என்ற பதத்தை மும்மொழிகளிலும் முற்றாக நீக்கிவிட்டு இலங்கையானது பிராந்தியங்களின் ஒன்றியம் என 1995 ஆம் ஆண்டு ‘பக்கேஜ்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட தமது அரசமைப்பில் குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் ஒற்றையாட்சி இல்லாமல் போகப் போகிறது எனக் கூச்சலிடுகிறார்.தமிழர் விடுதலைக் கூட்டணியின், அப்போதைய தலைவர்களில் ஒருவரான கலாநிதி நீலன் திருச்செல்வத்துடன் இணைந்தே, பீரிஸ் அந்த நகலை வரைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  

மறுபுறத்தில் இந்தப் ‘புதிய’ அரசமைப்பின் மூலம், தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று கூறுவதில் தமிழர்களில் வட மாகாண முதலமைச்சர் 
சி.வி. விக்னேஸ்வரன் முன்னணியில் இருக்கிறார் போலும். இரு சாராரும்,     தத்தமது சமூகங்கள் சிந்திய இரத்தத்தையும் சம்பந்தப்படுத்தி உணர்வுகளைத் தூண்டுகிறார்கள்.  

 27,000 இராணுவ வீரர்கள் சிந்திய இரத்தம் இந்த அரசமைப்பின் மூலம் வீணாகப் போகிறது என வீரவன்ச கூறுகிறார். தமது மக்கள் 70 ஆண்டுகளாக நடத்தி வரும் போராட்டம் வீணாகப் போகிறது என விக்னேஸ்வரன் கூறியிருந்தார். 

உணர்வுகளைத் தூண்டுவது இலேசான விடயம். ஆனால் தாம் தமது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை; மற்றவரே வளைந்து கொடுக்க வேண்டும், இறங்கி வர வேண்டும் என இரு சாராரும் நினைத்தால் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒருபோதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X