Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 05 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
உள்ளூராட்சித் தேர்தல் அமைதிக் காலம் நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும், இறுதி நேரத்தில் கூட சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்கள் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
நாளை நடைபெற உள்ள தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக அரசியல் கட்சிகளால் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
அதில் மாற்றுக் கருத்து இல்லையானாலும், தேசிய கட்சிகள் முதல், பிராந்திய, பிரதேச, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் கூட மக்களை தம் பக்கம் ஈர்ப்பதற்காக ஏமாற்றும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
எப்படியானாலும், உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.
தையிட்டியில் இருந்து இன்னமும் விடுபடாதிருந்து கொண்டிருக்கையில் புதிதாக ஒரு பிரச்சினை வடக்கில் உருவாகியிருக்கிறது. வடமாராட்சி - மருதங்கேணியில் இருந்து முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வரை 6,000 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிக்கும் திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.
இது வடக்கில் மாத்திரமல்ல புலம்பெயர் தேசங்களிலும் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது. நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, மொழியுரிமை, கல்விப் பங்கீடு என ஆரம்பித்த விடயங்களிலேயே இனப் பிரச்சினை தோற்றம் பெற்றது. இப்போதும் அது தொடர்கிறது.
இலங்கையில் ஒவ்வொரு ஜனாதிபதியும் ஒவ்வொரு முகத்துடன் ஆட்சிக்கு வருவது தான் நடைபெறுகிறது. இனவாதமற்ற தோற்றத்துடன், இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தனியாகப் பிரச்சினைகள் இருக்கின்றன.
என்பதைச் சிங்கள பெரும்பான்மை அரசுகளும், அடிப்படைவாதிகளும் ஏற்றுக் கொள்ளத் தவறியே இருக்கின்றன. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் தொல்பொருள் செயலணி நிறுவினார்.
அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்னமும் வடக்குக் கிழக்கில் முடிவுக்கு வரவில்லை. அந்தக் குழு செயற்பாட்டில் இல்லையானாலும் இப்போதும் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் நெருக்குதல்கள் தொடர்ந்து வண்ணமிருக்கின்றன.
இந்த நிலையில், இப்போது இந்த அரசாங்கம் இவ்வாறானதொரு காணிகளைச் சுவீகரிக்கும் திட்டத்தை வெளியிட்டிருப்பது வடக்கு மக்களை மாத்திரமல்ல கிழக்கு மக்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது.
இவ்விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து குரல் கொடுத்து வருகின்றன என்பது பாராட்டத்தக்கது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் புலம்பெயர்வு, இடம் பெயர்வும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில், யுத்த மௌனிப்புக்குப் பின்னரும் பொருளாதாரக் காரணங்களால் பலரும் புலம் பெயர்ந்து வருகின்றனர். காணி சுவீகரிப்பு திட்டங்கள் இலங்கையில் காலத்துக்குக் காலம் நடைபெற்றிருந்தாலும் இப்போது வடக்கில் அறிவிக்கப்பட்டிருக்கும் காணிகளை உரிமை கோருங்கள் என்கிற அறிவிப்பும் ஒரு வகை சுவீகரிப்பாகவே பார்க்கப்படுகிறது.
இது நடைபெற்றால் பலவிதமான ஆபத்துக்கள் ஏற்படலாம். குறிப்பாக பொருளாதார, உற்பத்தி சார் காரணங்கள் காண்பிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறலாம்.
அது இனப் பரம்பலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.வடக்கிலிருந்து வெளியேறிய சிங்கள மக்களைக் குடியேற்றுதல், அவர்களுடைய காணிகளை அடையாளம் காணுதல் போன்றவற்றுக்கு எதிரான செயற்பாடுகள் போலவே இந்த காணி தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் .
வர்த்தமானியும் தமிழர்களுக்குள் செயற்பாட்டைச் செய்ய வேண்டும். அவ்வாறில்லை. ஆனால், மிகப் பெரும் ஆபத்து ஏற்படலாம்
என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
தமிழர்கள் வடக்கு- கிழக்கை தங்கள் பாரம்பரிய தாயகமாக வரித்துக் கொண்டு வாழுதலைத் தடுக்கும் வகையிலான வேலைப்பாடுகளைக் காலங்காலமாகத் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மையினர் மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
ஒரு தேசிய இனத்தின் வாழும் நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றைச் சிதைப்பதன் மூலம் அந்த இனத்தினை ஏதுமற்றவர்களாக ஆக்குதல் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்றிருக்கிறது.
மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி ஏதோ தமிழர்களுக்கு மீட்பைத் தரப்போவதாகத் தான் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வடக்கு கிழக்கு தமிழ்
மக்களில் பெரும்பாலானவர்கள் வாக்களித்தனர்.
சிங்கள மக்களது பார்வை வேறுவிதமாக இருந்தது.தேசிய மக்கள் சக்தியின் ஆறு மாத கால ஆட்சியில் நாட்டின் வடக்கு கிழக்கு மக்களது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
அவரது பேச்சுக்கள் எல்லாம் பொதுவானவைகளாகவே இருந்து வருகின்றன. தமிழ் மக்களுக்கு விசேடமான ஒரு பிரச்சினையும் இல்லை என்பது அவருடைய நிலைப்பாடு.
இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது. ஏனைய இனங்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்து விட்டுப் போகலாம். ஆனால் ஒரு தேசிய இனமாக இருக்க முடியாது என்பது இலங்கையில் எழுதப்படாததொரு விதியாகக் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த விதியில் ஆட்சி பீடத்துக்கு வரும் யாரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. என்பதற்கு அனுரகுமார திசாநாயக்கவும் விதிவிலக்கானவரல்ல.
ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமாக இருந்தால், அந்த தேசிய இனத்தின் வாழும் நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் ஆகியவற்றில் நெருக்குதல்களை, அழிப்புகளை மேற்கொண்டால் போதுமானது என்பது உலக
வரலாறுகளின் பாடமாக இருக்கிறது.
இது இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்பதற்கு நிலஆக்கிரமிப்புகள் சிறந்த உதாரணமாகும்.ஒரு தேசிய இனமாக வாழ்வதற்குத் தமிழர்கள் விரும்பினாலும், இலங்கையர்களாக வாழுங்கள் என்று சொல்லும் தேசிய மக்கள் சக்தி அதற்கு இடம் கொடுக்கப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதியானது.
நாட்டின் பல்வேறு சிக்கல்களுக்கு, நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் இனப் பிரச்சினையாக காரணம் என்பதும், அதற்கான தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும், அதை எவ்வாறு வழங்குவது என்பதனைப் பற்றி அரசாங்கம் சிந்திப்பதாக இல்லை. திட்டமிட்ட வகையில் வேலைப்பாடுகளை மேற்கொள்வதில் கவனங்கள் செலுத்தப்படுகின்றன.
கோட்பாட்டு அடிப்படையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்குத் தயாரில்லாத நிலையில் அரசியலமைப்புத் திருத்தம் என்ற பெயரில் விடுக்கப்பட்ட அறிவிப்பு இன்னும் எதையும் கொண்டு வரவில்லை.
முன்னரே பலரும் சொன்னது போல, அரசியலமைப்புத் திருத்தமானது 13ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்கள் கூடு உள்வாங்கப்படாத வெறுமனே ஒரு கண்துடைப்பானதொன்றாகவே இருக்கப் போகின்றது.
ஆனால், வாழும் நிலம், மொழி, கலாசாரம், பொருளாதாரம் ஆகிய நான்கு விடயங்களும் அற்றதாக வடக்கு கிழக்கு மக்களின் பாரம்பரிய விடயங்கள் மறைக்கப்பட்டதாகக் கொண்டுவரப்படும் தீர்வுகள் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தப் போவதில்லை என்பதற்கு அப்பால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
அவ்வாறானால், தொடர்ந்தும் இனப் பிரச்சினை தொடர்ந்த வண்ணமே இருக்க போகிறது என்பது மாத்திரமே உண்மையாகும். தற்போது நடைபெற்றிருக்கின்ற வர்த்தமானி வெளியீடானது, தற்போதைய ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் நல்லெண்ண செயற்பாடாக அல்லாமல் அவர்களுடைய உண்மை முகத்தை மக்களுக்கு காண்பிப்பதாகக்கொள்ள முடியும்.
வடக்கு கிழக்கைப் பாரம்பரிய தாயகமாக கொள்ளும் தமிழ் மக்கள் தங்களுடைய சுயநிர்ணய உரிமைக்காகத் தன்னாட்சியை எதிர்பார்த்தனர். அதற்காக மேற்கொண்ட சாத்வீகப் போராட்டங்கள் பயனற்றுப் போனமையானது ஆயுத யுத்தத்தைத் தோற்றுவித்தது.
அந்த ஆயுத யுத்தமானது பல்வேறு திசைகளிலும் சென்று 2019 மே 18 உடன் முள்ளிவாய்க்காலில் புதைந்து போனது.இப்போது மே 18 நெருங்கிக் கொண்டிருக்கையில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
வடக்கின் முக்கியமான பெரும் நிலப்பரப்பை இலக்கு வைத்து ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது. வெளிப்பூச்சுக்கு ஒரு முகமும் உள்ளே
மிகக் கோரமான ஒரு முகத்துடனும் செயல்படும் அரசாங்கமாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தன்னைப் பதிவு செய்வதாக இதனைக்கொள்ள முடியும்.
தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையை அங்கீகரிப்பதற்கோ, சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதற்கோ அதனை அங்கீகரிக்கும் ஆட்சிப் பொறி முறையை உருவாக்குவதற்கோ தயாரில்லாத இலங்கை அரசாங்கத்திடம் நாம் ஒருபோதும் தமிழ் மக்கள் நலன் சார் எதையும் எதிர்பார்க்க முடியாது
என்பதற்கு வர்த்தமானியை உதாரணமாகக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பத்தோடு பதினொன்று என்று திருப்திப்பட்டுக் கொள்வோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமைதிக் காலத்தை வர்த்தமானி அறிவித்தல் பற்றிச் சிந்திப்பதற்கும் பயன்படுத்துவோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago