2025 ஜூலை 31, வியாழக்கிழமை

புதிய அரசின் பொறுப்புக்கூறல்?

R.Tharaniya   / 2025 ஜூலை 22 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு அல்லது புதிய நெருக்கடியாக அமைய வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும்.

அது சாத்தியமாவதும் இவ்லாமல் போவதும் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையிலேயே தங்கியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின் காலம் முடிவடைய இருந்த நிலையில் கடந்த வருடத்தில் அத் தீர்மானம் ஒரு வருடகாலத்திற்கு நீடிக்கப்பட்டது. அது வருகிற செப்ரம்பரில் முடிவுக்கு வருகிறது. 

இந்த நிலையில், இவ்வருடத்தில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றினை பிரிட்டன் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டனுடைய உறுதியான நிலைப்பாடாக இருப்பதாகவே இப்போது வரையில் அறியமுடிகிறது.

கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேரணை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்படும் பொறுப்புக் கூறல் செயற்றிட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏதுக்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. 

மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுதல் என்பன ஒன்றுக்கொன்று சமாந்தரமோ, பொருத்தப்பாடோ இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதே நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வருகின்ற செப்டெம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்படும் பிரேரணைத் தீர்மானமானது இவற்றினை  உறுதிப்படுத்தும் வகையிலும் உரிய பிரேரணை தீர்மானங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படும் வகையிலும் இருப்பது அவசியமாகும். 

2022ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சாட்சியங்களைத் திரட்டும் பணியும் நீடிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மீண்டும் இதனை நீடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியானதுதான். அந்த ஒழுங்கில்தான் புதிய தீர்மானத்தின் கட்டாயம் மற்றும் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. சாட்சியங்களைத் திரட்டும் பணியை நாட்டுக்குள் மேற்கொள்வதற்கு இலங்கையின் கடந்த அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

என்ற வகையில் புதிய அரசாங்கத்திடமிருந்து இவ்வருடத்தில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பது தெரியாமலிருக்கிறது. ஏனெனில் கடந்த வருடத்தின் கால நீடிப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தது. 

அந்த வகையில்தான், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டிய அவசியம் காணப்படுகிறது.

அத்துடன், மனித உரிமைப் பேரவையின்  பிரேரணைத் தீர்மானங்களின் காலத்தை நீடித்தல், புதிய பிரேரணைகளைக் கொண்டுவருதல் மூலம் இலங்கைக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளத் தமிழர் தரப்பு முயன்று வருகிறது. 

முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்தம் ஓய்ந்து 16 வருடங்கள் கடந்த போதிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உரிய அக்கறையினை காண்பித்திருக்கவில்லை.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இதற்கான வலியுறுத்தல்களே இப்போது நடைபெற்று வருகின்றன என்பதுதான் உண்மை. 

2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது உள்ளக விசாரணைப் பொறிமுறை மூலம் பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. 

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டது. அப்போது, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி ஆசையினால் அது நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்தவகையில், நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பொறுப்புக்கூறல் விடயமானது கைகூடாமல் போனது. 

இருந்தாலும், காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கான செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

நம்பிக்கையீனம் காரணமாகத் தமிழ் மக்கள் இவற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், சர்வதேச விசாரணையையே பாதிக்கப்பட்ட மக்கள் கோரினர். ஆனால், உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்தமையினாலேயே தமிழ் தரப்பினர் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி வருகின்றனர்.

என்பதனை அரசாங்கம் உணர மறுப்பதே இந்த இடத்தில் சிக்கலாகும். இவ்வாறான சிக்கல்களுக்குள்தான் நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு வந்து புதிய அரசாங்கம் உருவானது.

ஆனால், 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து நல்லாட்சி காலத்தில் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்து அதன் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில்,  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் அதுவும் நின்று போனது. இருந்த போதிலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி வழங்கியிருந்தார்.

என்பதும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் புதிய அரசாங்கத்தால்  மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும். 
நாட்டில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கங்கள் கால இழுத்தடிப்புடனேயே நகர்த்தின, கடந்து போயிருக்கின்றன.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது வெறுமனே பொறுப்புக்கூறலுடன் முடிந்து போகின்ற விடயமல்ல என்பதும் வெறுமனே வாக்குறுதிகளால் இதனைச் சரி செய்துவிடலாம் என்று எண்ணுவதும் புத்திசாலித்தனமானதல்ல. சீரான முன்னேற்றத்துடன் அது முன்னெடுக்கப்படவேண்டும். 

அந்த வகையில்தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் மாத அமர்வில்,  இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை கொண்டுவரப்படவேண்டும். அதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உருவாகி வருகின்றன.

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வரை அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். 
பிரிட்டன் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணையானது பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணை அனுசரணை நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ளதாகவே இருக்கும்.

என்றவகையில், பலமானதொரு தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்பிடம் இருக்கிறது. அந்த ஒழுங்கில்தான், இப்போது ஆட்சியிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றது என்ற குற்றச்சாட்டு வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

அது தவிர்க்கப்படவேண்டுமாக இருந்தால், புதிய அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லாது போனால், நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் புதிய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை இழப்புக்கு அவர்களே காரணமாவார்கள். அத்துடன், அரசாங்கத்தின் மீது  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டமைக்கு அது சமமானதாகும்.

அதே நேரத்தில், இலங்கையின் அரசாங்கங்கள் பொறுப்புக் கூறல் விடயத்தில் உரிய அக்கறை காண்பிக்காமையினாலேயே தமிழ் தரப்பு இப்போதும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக நிறுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி வருகின்றமையை மீண்டுமொருமுறை நிரூபிப்பதாகவும் இருக்கும்.

எது எவ்வாறானாலும், மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் கொண்டுவரப்படும் பிரேரணையும், அதன் நிறைவேற்றமும் அதற்கு இலங்கை அரசாங்கம் காண்பிக்கும் பிரதிபலிப்பும்தான் இவற்றினைத் தீர்மானிக்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .