Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் 2009இல் முடிவுக்கு
கொண்டுவரப்பட்போது, ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ இருந்தார். அவருடன்
அவருடைய சகோதரர் கோட்டபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து.
யுத்தத்தை முடித்து வைத்தார். பின், அவருடைய ஆட்சி சில வருடங்களில்
ரணில், சந்திரிகா, மங்கள சமரவீர, கரு ஜயசூரிய உள்ளிட்ட பட்டாளத்தின்
முயற்சியால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக்கப்பட்டு நல்லாட்சி
அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
அந்த அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமரானார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நிபந்தனையற்ற ஆதரவினை அரசுக்கு வழங்கிக் கொண்டிருந்தது.
அவ்வேளையில், தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
அதன் பின்னர் உருவான அரசியல் சூழல் ரணிலை பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது. ஆனாலும்,அதற்கெதிராக நீதிமன்றம் சென்று
மீண்டும் ரணில் பிரதமரானார். பின்னர்நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆசனங்களால் வென்று ஆட்சியையும் கைப்பற்றியது. அவ்வேளையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக கோட்டபாய அறிவித்தார்.
கோட்டபாய மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடைமுறைக் காரணங்கள் பலவற்றால் உருவான பொருளாதாரப் பிரச்சினைகளால் அவரது ஆட்சி இல்லாமல் போனது. ரணில் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார்.
இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்த இலங்கை அரசியலில் 2024 செப்டெம்பரில்
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையற்ற ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத ஒரு விடயமாகவும் இது பதிவானது.
அவ்வாறு அவர் தெரிவான பின்னர் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஏனைய கட்சியினர் பெரும்பான்மையற்ற ஜனாதிபதியாகவே அனுர தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். நாம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று எண்ணிக்
கொண்டனர். ஆனால், நடைபெற்றதோ வேறு விதமாக இருந்தது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையான ஆசனங்களுடன் ஆட்சிக்கு வந்தது, எல்லோரும் போட்டு வைத்திருந்த கணக்குகளும் பிழைத்துப் போயின, அதிலொன்றுதான் ஆட்சிக்கு பங்காளியாவது.
அதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது.இப்போது நடைபெற்று வருகின்ற
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்செயற்பாடுகளானவை முன்னாள் அரசியல்வாதிகள் பலர் தங்களுக்கெதிரான என்ன விசாரணை வரப்போகிறது.
எப்போது நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாகியிருக்கிறது.
இந்த அச்சம் ஏதோ ஒருவகையில் அவர்களது அரசியலை திறம்படச் செய்வதற்கும் தடையாகவே அமைந்திருக்கிறது. சில விடயங்கள் நடைபெறுவது நல்லதற்காகவே என்பது பாரம்பரியமாக நினைவுபடுத்தப்படுகின்ற விடயமாகும் அது இலங்கை அரசியலிலும் நடைபெறுகின்றன போலும். அந்தவகையில், பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச வெளியேறி தனியாக ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டார். அது ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என தோல்விகளையே அவருக்குக் கொடுத்தது.
பிளவு காரணமாக தற்போது மக்கள் விடுதலைமுன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி நடத்துகிறது. அது நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது.
அதனை நல்லதென்றே பெரும்பாலானோர் சொல்கின்றனர். அத்தோடு, மக்கள் விடுதலை முன்னணியினரின் அரசியலை அனைவரும் அறிந்து கொள்வதற்கான நல்லவாய்ப்பையும் கொடுத்திருக்கிறது. ஆயுதக் கிளர்ச்சி மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ள 70களிலிருந்து முயற்சித்த மக்கள்
விடுதலை முன்னணி 80களின் இறுதியில் கொடூரமாக அடக்கப்பட்டு இல்லாமல் போனது. அப்போதிலிருந்து அவர்கள் மேற்கொண்ட அரசியல் முயற்சியின் காரணமாக தற்போது நாட்டைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அவர்களுடைய ஆட்சி அரசியல் முன்னைய ஆட்சிகள் பழிவாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், முன்னைய ஆட்சிக் காலங்களில் தவறான அரசியல் செய்தவர்கள், ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு பாதகமானதாக மாறியிருக்கிறது.
அதன் ஒருபடியே கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் ரணில் விக்ரமசிங்க பொது நிதியை சொந்த விடயத்துக்காக தவறாகப் பாவித்தமைக்கான கைதும், சிறையடைப்பும், பிணை விடுவிப்பும். இந்தக் கைதின் நல்ல விடயம் அல்லது எல்லாமே நல்லதற்கே என்பதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றமையாகும்.
இந்த அழைப்பு வெறும் அழைப்பல்ல. அவர் மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவதற்கும் தலைவராக அறிவிக்கப்படுவதற்குமானதாகும். இலங்கையின் ஆரம்பகால தேசிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அழிவு நிலைக்குச் செல்லும் நிலை தலைமைப் பதவி பிரச்சினைகளாலேயே ஏற்பட்டது.
அந்தக் கட்சியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பினை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது நல்ல விடயமே. யார் எதனை சொன்னாலும் கற்றுக்கொண்ட பாடங்களே எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றது என்ற வகையில் சஜித்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகியிருந்த காலங்கள் அவருக்கு அனுபவத்தினைக் கொடுத்திருக்கும் என்று நம்புவோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாசவை ரணிலுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வாய்ப்பினை சஜித் சரியாகப் பயன்படுத்தவில்லை. அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் சில வேளைகளில் அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என்பது சிலரது கருத்தாகும்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பெரும்பான்மை பெறாத ஜனாதிபதியாகவே ஆட்சிக்கு வந்தார். சஜித்துடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஆட்சி
தற்போது ரணிலிடமோ, சஜித்திடமோ இருந்திருக்கலாம் என்பது அதன் பொருள்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சிகள், எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச அனைவரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணிலை நேரடியாகசென்று பார்வையிட்டதுடன் ஜனநாயகத்தைக்கு முரணாக இந்தக் கைதுநடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் கருத்துக்களையும் வெளியிட்டார்.
அத்துடன், ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டார். அதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலையாகி வீடு சென்றதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசவுக்கு நன்றி கூறி, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் படியும், கட்சியின் 79ஆவது மாநாட்டில் பங்கு பெறுமாறும் அழைப்பு
விடுத்தார்.
இது ரணில் கைதாகாமல் இருந்ததிருந்தால் இந் நிகழ்வு நடைபெற்றிருக்காது என்றும், இதற்காக எதிர்த்தரப்பினர் ஒருவகையில் தேசிய மக்கள் அரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றவகையிலான கருத்தும் உள்ளது. காகம் இருக்கப் பனம் பழம் விழுவது போல் அரசியலில் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்து விடுவதும் உண்டு. இதனை அனுர அரசாங்கம் கடந்து போவதைத் தவிர வேறுவழியில்லை என்றே
சொல்லலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் நீண்ட வரலாறு கொண்ட பாரம்பரியமான கட்சியான ஐக்கியத் தேசியக் கட்சியின் அரசியலைத் தூக்கி எறிந்துவிட முடியாத ஒரு சூழல் உருவாகியிருக்கின்ற இந்த வேளையில், அக்கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க அடுத்த தலைவரிடம் கட்சியைக் கொடுத்துவிட வேண்டியதும் தேவையானது என்பதால் அனுரவுக்கு நன்றி கூறவேண்டி பொறுப்பு சஜீத்துக்கும், ரணிலுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவருக்கும் உண்டு.
அரசியலில் தீடீர் திருப்பங்கள் எவ்வாறும் ஏற்படலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம் என்று கூறிக் கொண்டாலும் காலத்தைக் கற்றுக்கொள்ளுதல்
கட்டாயமானது. சஜித் இந்த வாய்ப்பினைப் பற்றிக்கொண்டு தந்தை வழியான ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்வதுடன் வழிநடத்தியும் செல்வார் என்று நம்புவோமாக!
எது எப்படியானாலும் தற்பொது இருப்பதனைவிடவும் வேறுவிதமான அரசியல்
மாற்றத்தை இலங்கை சந்திப்பதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்கும்
என்பதுமாத்திரம் நிச்சயமானது. அதற்கேற்ப இப்போதே எதிர்க்கட்சிகள் வியூகம்அமைத்துக் கொள்வதே முக்கியமானதாகும். இல்லையானால்
அது இன்னமும் காலத்தைக் கடத்தும். நல்லதே நடக்கவேண்டும்.
11 minute ago
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
2 hours ago
3 hours ago