2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

புலிகள் நிகழ்த்திய காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலை

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில். காத்தான்குடிப் பள்ளிவாசல்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த  முஸ்லிம்களை மிலேச்சத்தனமாகப் புலிகள் கொன்று குவித்த சம்பவத்தின் 35ஆவது நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஆபத்து வருகின்றபோது மக்கள் ஒன்றுகூடுகின்ற, அடைக்கலம் தேடுகின்ற இடமாக எப்போதும் வணக்கஸ்தலங்கள் இருக்கின்றன. இறை நம்பிக்கையுள்ள 
மக்களின் கடைசிப் புகலிடமாகவும் இவை உள்ளன. இதில் எந்த மதக் குழுமத்தைச் சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்லர்.

கொழும்பிலும் வேறுபல இடங்களிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் 
நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மிக மிலேச்சத்தனமானது. 
இதனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை.இதனோடு சம்பந்தப்பட்டவர்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்காமைக்கும், இதுவரை 
அந்தக் கும்பலுக்காக வக்காலத்து வாங்காததற்கும் காரணம் இது இஸ்லாத்திற்கு விரோதமான, மனித குலத்திற்கு எதிரான செயல் என்பதனாலாகும்.

அது மட்டுமன்றி, ஒரு புனித நாளில் வழிபாட்டுத் தலங்களுக்குள் தாக்குதல் நடத்துவதற்கு முஸ்லிம் அடிப்படைவாத, பயங்கரவாத குழுவொன்று துணைபோனதை முஸ்லிம் சமூகத்தால் ஒருபோதும் 
ஜீரணிக்கவே முடியாது.

இறைவனின் சந்நிதியிலேயே பலியெடுக்கப்பட்ட மக்களின் வலி கொடியது. அது பெரும் பாவமாகும்.ஆனால், இந்த அனுபவத்தை முஸ்லிம்கள் 35 வருடங்களுக்கு முன்னரேயே பெற்று விட்டனர். காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அக்கரைப்பற்றிலும் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்று கூடியவர்களைத் துளியளவு கூட ஈவிரக்கமின்றி கொலை செய்ததை, எந்தப் போராட்ட கோட்பாட்டினாலும் நியாயப்படுத்தி விட முடியாது.

இதுபோல, தலதா மாளிகை போன்ற வழிபாட்டு இடங்களிலும் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதை நாமறிவோம். அப்படியென்றால், 90களில் இந்த மோசமான கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது விடுதலைப் புலிகளும் அவர்களுடன் சில திட்டங்களில் சேர்ந்த்தியங்கிய ஆயுதக் குழுக்களும் என்றுகூடச் சொல்லலாம்.

தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியால் நிலத்தால் மட்டுமன்றி அரசியல், சமூக ரீதியாகவும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல, இருந்த காலமொன்று உள்ளது, அப்போதிருந்த மூத்த தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் தனியான ஒரு இனக் குழுமம் என்ற அடையாளத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தனர் எனலாம்.

இருப்பினும், 80களின் நடுப்பகுதியில் பல தமிழ் ஆயுதக் குழுக்கள் அரசியல் கட்சிகளை மேவத் தொடங்கின. ஆயுதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கணிசமான தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் குறிப்பாக விடுதலைப் புலிகளுடன் ஒத்திசைவாகச் செயற்படத் தொடங்கினர்.

அப்போது முஸ்லிம்கள் தனிவழியில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் உருவானது இந்த தருணத்தில்தான். நிலைமை இப்படியிருக்கும் போது புலிகளும் இன்னும் ஒருசில தமிழ் ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நசுக்கத் தொடங்கின. 90களில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

தமிழ-முஸ்லிம் உறவில் முதல் கீறல் என்பது கிழக்கு மாகாணத்தில் புலிகள் நடத்திய பள்ளிவாசல் படுகொலைகளில் ஆரம்பித்தது. இரண்டாவது பெரிய உறவு முறிவு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதில் நடந்தேறியது. வரலாற்றை அறிந்த யாரும் இதனை மறுக்க முடியாது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் திகதி முஸ்லிம்கள் வழக்கமாக இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை அயற் கிராமங்களின் ஊடாக காத்தான்குடிக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் பள்ளிவாசல்களுக்குள் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெரியவர்களும் சிறுவர்களுமாக சுமார் 103 பேரை கொன்று குவித்து விட்டுப் போனார்கள். 

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், அதே பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் {ஹஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டி லும் தொழுகையி ல் ஈடுபட்டுக் கொண்டிரு ந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் அன்றைய தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

140 பேர் காயமடைந்தனர்.அன்று வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகைக்கான அதான் சொ ல்லப்பட்டதும் சிறி யவர், பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று கொண்டிருந்த போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத் தாக்குதலையும் நடத்தினர்.

இதன்போது, பலரின் உயிர்  அவ்விடத்திலேயே பிரிந்தது. புலிகள் பள்ளிவாசலினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம்  செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த  பலரும் பின்னர்தான் புரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் குற்றுயிராய்க் காணப்பட்டு பின்னர் மரணித்தனர்.

தொழுகைக்காக வந்த சிலரை உள்ளே அவசரமாகச் செல்லுங்கள் என பள்ளிக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அப்போது பலர் கூறினர். புலிகள் முஸ்லிம்களைப் போல அபாயக் குரல் எழுப்பி, சிறிய காயங்களுடன் கிட ந்தவர்கள் மற்றும் உயிர் த ப்பிக் கிடந்தவர்களையும் எழுப்பி அவர்களையும் தந்திரமாகக் கொன்றதாகவும் சொன்னார்கள்.

ஒரு சிறுன்மைச் சமூகத்தின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிய இயக்கம், தமக்குப் பக்கத்திலேயே வாழும் இன்னுமொரு சிறுபான்மைச் சமூகத்தை மிக கீழ்த்தரமான முறையில், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்ததை போல ஒரு பேரவலம் உலகில் வேறெங்கும் நடந்திருக்காது.

குருக்கள்மடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட சூடு ஆறுவதற்கிடையில் ஒரு மாதத்திற்குள்ளேயே இந்த கைங்கரியத்தைப் புலிகள் மேற்கொண்டனர். முஸ்லிம்களை அழித்தொழிக்கும் திட்டத்தில் புலிகள் எந்தளவுக்கு ஈடுபாடாக இருந்தார்கள் என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

அத்தோடு நிற்கவில்லை.இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 11ஆம் திகதி ஏறாவூர் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் 121 பேர் இதே பாணியில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே காலப் பகுதியில்தான், 
அக்கரைப்பற்று பள்ளிவாசலிலும் வேறு இடங்களிலும் புலிகள் தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர்.

ஆனாலும், அவர்களின் வெறி அடங்கியிருக்கவில்லை. 1990ஆம் ஆண்டு ஒக்டோபரில் வடக்கில் வாழையடி வாழையாக வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு இலட்சம் பேர் உடுத்திருந்த ஆடையோடு மட்டும் சில மணிநேரங்களில் அங்கிருந்து இதே புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

முஸ்லிம் சமூகம், தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கும் அரசியலுக்கும் செய்த 
பங்களிப்புக்களையும் வரலாற்று உண்மைகளையும் மறைத்து விட்டு, அற்ப காரணங்களுக்காகவும் முஸ்லிம்களை அடக்குவதற்காகவும் விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, இன்று ஜனநாயகம் பேசுகின்ற பல தமிழ் குழுக்கள் செய்த கடத்தல்கள், கப்பம்கோரல், அட்டூழியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 

இந்த விவகாரங்களை முஸ்லிம்கள் இறைவனிடம் பாரம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில பாதிக்கப்பட்ட குடும்பங்களும் செயற்பாட்டாளர்களும் சில முயற்சிகளைச் செய்தாலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதற்காக நீதி வேண்டிப் பேராராடவில்லை.

தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களுக்காகப் பேசிய, பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ‘முஸ்லிம்களுக்கும் ஏன் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் நடந்ததும் மீறல்தான். அதற்கும் விசாரணைகள் வேண்டும்' என்று கூறியதாக ஞாபகத்தில் இல்லை. இப்படியான ஒரு சூழலில்தான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம்.

எனவே, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கடத்தல், காணாமலாக்கபடுதல் சம்பங்கள் மற்றும் கிழக்கில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் படுகொலைகள் என, 30-35 வருடங்களாக 
நீதி நிலைநாட்டப்படாத விவகாரங்களுக்கும் நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

புலிகளில் தலைவர் பிரபாகரன், இவ்வாறான பெரிய அநியாயத்தை ‘ஒரு துன்பியல் நிகழ்வு' என்று ஒரே வசனத்தில் சொல்லி முடித்துக் கொண்டார். அவ்வாறே, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறி இந்த சம்பவங்களுக்கான நீதி விசாரணைகளை நடத்தாமல் விட முடியாது.

இந்தப் படுகொலைகளுக்கு யார் கட்டளையிட்டார்கள், யார் செய்தார்கள் என்ற உண்மை கண்டறியப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என்பது 
உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டும். புலிகள் அமைப்பில் மீதமாக 
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்போர் பொருத்தமானவர்களாக இருப்பார்களாயின் இதற்கு பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .