Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
காரை துர்க்கா / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் காரணமாக, கணவரை இழந்த பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு, அடிமைகளாகக் கடத்தப்படுகின்றனர் என, ரொய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த செய்திச் சேவையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விதவைகள், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் 2011 ஆம் ஆண்டில் 300 பேர் வரையில் மாத்திரமே இவ்வாறாகப் பதிவாகியுள்ளனர் என்று மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்கள் மௌனம் பெற்று, அதன் பின்னரான எட்டு வருட காலப்பகுதியில், வடக்கு, கிழக்கில் பலவாறான தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அதில், தீ என எரியும் ஒன்றாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் புனர்வாழ்வு உள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுமார் தொண்ணூறு ஆயிரம் பெண்கள் வரையில், கணவரை இழந்த பெண்களாக வாழ்கின்றனர்.
அத்துடன், இதற்கு மேலதிகமாக யுத்தம் மற்றும் பிற காரணங்களால், கணவரைப் பிரிந்து அல்லது சட்ட ரீதியாக விவாகரத்துப் பெற்ற பெண்கள் எனக் கணிசமானவர்கள் உள்ளனர். இவர்களும் பெண் தலைமைத்துவக் குடும்பம் என்ற வகுதிக்குள் அடங்குவர்.
போருக்கு முற்பட்ட காலங்களில், இயற்கையான காரணங்களால் கணவன் இறக்க நேரிடும். அவ்வேளையில் கூட, மனைவியின் வயது சராசரியாக 60 முதல் 65 வயது வரை இருக்கும். இக்காலகட்டத்தில், பிள்ளைகள் திருமணம் புரிந்து இருப்பார்கள். அவர்கள் பிள்ளைச் செல்வங்களைப் (பேரப்பிள்ளைகள்) பெற்றிருப்பார்கள். ஆகவே, அந்தக் குறித்த பெண், தனது கணவனது இறப்புத் துயரைப் பகர, பலர் கூட இருப்பார்கள்.
ஆனால், கொடும் யுத்தத்தில், கணவனை இழந்த நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களே, ஆயிரக்கணக்கில் எம் சமூகத்தில் உள்ளனர். ஆகவே, இயற்கைக்கு முற்றிலும் எதிரான நிலையில், கணவன் சரிந்து விழும் போது அல்லது பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படும்போது, அவளும் மனதளவில் சரிந்து போகின்றாள்.
இதையடுத்து, குடும்பம் என்ற பெரு விருட்சத்தைச் சுமக்க வேண்டிய அல்லது தாங்க வேண்டிய பெரும் பொறுப்பு அவளைச் சாருகின்றது. சற்றேனும் எதிர்பார்க்காத சூழலில் ஏற்படும் குடும்பச்சுமை, பொருளாதாரச் சுமை, பாதுகாப்பற்ற தன்மை, எதிர் கூற முடியாத எதிர்காலம் மற்றும் இதர காரணங்கள், அவளை உடல், உள ரீதியாக, ஆரோக்கியமற்ற நிலைக்குக் கொண்டு செல்கின்றன. சில வேளைகளில் இதன் நீட்சி, தற்கொலை வரை கொண்டு செல்லும்; சென்றுமுள்ளது.
இதற்கிடையில் நாதியற்றவர்களாக வாழும் இவர்களைக் குறி வைத்து, தனியார் நிதி நிறுவனங்கள் பல போட்டிபோட்டு வழங்கும் கடனில், சிக்கிச் சிதறிய பலரது சோகக் கதைகள் உள்ளன.
‘பனையால் விழுந்தவனை மாடு மிதித்தது போல’ தனியார் நிதி நிறுவனங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை மூளைச் சலவை செய்து, தங்களது பொருட்களையோ அல்லது கடனையோ இவர்களுக்கு வழங்கி விடுகின்றனர்.
உண்மையாகவே, என்ன நோக்கத்துக்காகக் கடன் பெறுகின்றனர், அதை மீளச் செலுத்தும் வலு உள்ளதா? போன்ற எவ்வித பரிசீலனைகளையும் செய்யாது தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.
இந்நிலையில், கடன் தவணைப்பணத்தைக் கட்ட, மீளக் கடன் பெற்று, அதன் பின், கைவசம் உள்ள தங்க நகைகளையும் அடகு அல்லது விற்று, கடனில் முற்றாக மூழ்கியவர்கள் ஏராளம்.
சில சந்தர்ப்பங்களில், பாலியல் இம்சைகளுக்கும் தொந்தரவுகளுக்கும் உள்ளாகியும் உள்ளனர். நுன் கடன் திட்டத்தினால், கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்தம் சராசரியாக, 30 - 35 பேர் வரையில், தற்கொலைக்கு முயற்சி செய்வதாக, அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தங்களது பொருளாதார நிலையை உயர்த்த, பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர் என்பது ஆபத்தானதும் ஆரோக்கியமற்றதுமான அறிகுறியாகும். இது, உள்ளூரில் அவர்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்த ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதன் வெளிப்பாடாகும். மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவர்கள், பெரும்பாலும் வீட்டுப் பணிப்பெண்களாகவே செல்கின்றனர். அதற்கான ஊதியம், சராசரியாக 40,000 ரூபாய்க்கும் 50,000 ரூபாய்க்கும் இடைப்பட்டதாக அமைகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பான வேலைச்சூழல், இருப்பிடம் என்பது கேள்விக்குறியான விடயங்களாகும்.
தனது குடும்ப முன்னேற்றம் தொடர்பாகப் பல கனவுகளுடன் செல்லும் பெண்கள், அங்கு உயிர் இழப்பதும், அடி காயங்களுடன் நாடு திரும்புவதும், நாம் அனைவரும் அறிந்து கொண்டிருக்கும் உண்மைகள். இத்தகைய கொடூரங்களையும் கொடுமைகளையும் அறிந்தும் தெரிந்தும், இவர்கள் அந்த நாடுகளுக்குச் செல்வது ஏன் என்று, நாம் அனைவரும் பலமாகச் சிந்திக்க வேண்டி உள்ளது.
ஆகவே, உள்ளூரில் தனது, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் நன்கு பாதுகாப்பான, பழக்கப்பட்ட சூழலில் வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களது வாழ்வை அர்த்தமாக்க அரசியல்வாதிகள் எனக் கூறிக்கொள்வோர் தவறிவிட்டனர்.
வெறுமனே வெற்றுக் கோசங்களுடன் மாகாண சபையில், தமக்குள் முட்டி மோதிக் கொள்ளும் அரசியல் பேசுவோர், தமது உடன்பிறப்புகளின் மேலான வாழ்வு தொடர்பில் என்ன செய்தனர்?
கொழும்பு அரசாங்கம், தமிழ் மக்களது நலன் மற்றும் மறுவாழ்வு தொடர்பில் என்ன செய்தது எனப் பட்டியல் செய்து விவாதிக்கின்றனர் நம்மவர்கள். வடக்கு மாகாண சபை தோற்றம் பெற்று 48 மாதங்களை அண்மிக்கின்றது.
நாட்டின் ஏனைய மாகாண சபைகளுக்கு முன் மாதிரியாக, வடக்கு மாகாண சபை பிரகாசிக்கும் என ஆருடம் கூறினார்கள். ஆனாலும், ஆளும் கட்சி உறுப்பினர்களே, அணி பிரித்து, களம் இறங்கி, பொறுப்பற்ற விளையாட்டு விளையாடும் விளையாட்டுத் திடலாகவே, வடக்கு மாகாண சபை உள்ளது.
பொதுவாக, நாம் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில், பாதிக்கு மேற்பட்ட பிரச்சினைகள், ஏதோ ஒரு வகையில், பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவையாகவே உள்ளன.
அதனாலேயே, பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், தமது பொருளாதாரத்தை ஈட்ட, மாற்று வழியின்றி, ஆயிரம் வலிகளுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர். நமது அரசியல்வாதிகள் அப்பேற்றபட்ட குடும்பங்களின் வாழ்வை உயர்த்த, இன்னமும் முயற்சி எடுக்கவில்லை.
அரசியல்வாதிகளிடத்தில் நம்பிக்கை இழந்தமையினாலேயே இவர்கள், இழப்பதற்கு இனி எதுவுமில்லை எனப் புறப்பட்டு விட்டார்கள். கணவனை இவர்கள் இழந்தாலும் தம் வீட்டோடும் மண்ணோடும் சமூகத்தோடும் சூழலோடும் கொண்ட உறவு உன்னதமானது; உயர்வானது. அதையும் உதறித்தள்ளி, மத்திய கிழக்குக்குச் செல்வது பெரும் துயர்; பெரும் கொடூரம்.
மேலும், ஏற்கெனவே கணவனைப் பறிகொடுத்து, ஆற்றொணாப் பிரிவுத்துயரில் இருக்கும் இவர்கள் புதிய வெளிநாட்டுச் சூழல், புதிய சமுதாயம், புதிய மொழி மற்றும் நடைமுறைகளுக்குத் தம்மைப் புதிதாக, முழுமையான முறையில் மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அத்துடன் அப்பாவின் நிரந்தர இழப்பை ஈடுசெய்ய முடியாமல் தவிக்கும் பிள்ளைகள், அம்மாவின் தற்காலிகப் பிரிவைத் தாங்குவது கூடப் பெரும் கடினமான ஒன்றே.
ஒருவர் ஒரு மோசமான விபத்தில் சிக்கி, அவரை வைத்தியசாலையில் சேர்க்கும் வரையான, இடைப்பட்ட காலத்தை ‘பொற்காலம்’ எனலாம். ஏனெனில், அது அவரது வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட காலம். அதேபோல, ஒரு பிள்ளையின் பதின்ம வயது (13 தொடக்கம் 19 வரை) பொற்காலம். ஏனெனில், ஒரு பிள்ளையின் கால் தடங்கள் சரியான பாதைக்கும் பிழையான பாதைக்கும் இடையில் பயணிக்கும் பருவம் இதுவாகும்.
ஆகவே, அவ்வேளையில் அந்தக் குறித்த பிள்ளை, அம்மாவின் அரவணைப்பு, கண்டிப்பு, பாசம், நேசம் அனைத்தையும் அடகு வைக்கின்றான்(ள்). அத்துடன், சுற்றியுள்ள உறவுகள் அம்மாவுக்கு அடுத்த படியே. எனவே, அந்தச் சிறுவனுக்கு அல்லது சிறுமிக்கு, தாய்ப் பசுவை பிரிந்த கன்றின் நிலை. இந்நிலை நாம் எதிர்பார்க்கும் அடுத்த தலைமுறையை உருவாக்காது.
தனது பிள்ளை, பூமிப்பந்தில், சிறந்த மானிடனாக வாழ வேண்டும் என எண்ணியே, தன் வாழ்வை உருக்குகின்றாள் ஒருதாய். இந்நிலையில், தாயின் கவனிப்பு இல்லாத, ஆதரவு இல்லாத பிள்ளை, தனது வாழ்வைச் சிதைத்து, பல உளம் சார்ந்த தாக்கங்களுடன் உலாவரும் நிலை தோன்றலாம்.
ஆகவே, இறுதியில் இவனும் வளர்ந்து, வாளுடன் வலம் வரும் வேளை, யாரை யார் குற்றம் கூறுவது? அவனது பிழையா? அவளது (தாய்) பிழையா? இவனை இவ்வாறு உருமாற்றிய சமூகத்தின் பிழையா?
ஆகவே, குறிகாட்டிகள் சொல்வது யாதெனில், மக்களோடு மக்களாக நம் அரசியல்வாதிகள் இல்லை. இத்தகைய சமுதாயப் பிரச்சினைகளுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி இட உழைக்க முடியாதவர்கள், எவ்வாறு அரசியல் விடிவுக்காக உழைக்கப் போகின்றார்கள்?
எனவே, பெண்களை வலுவூட்டி, மானிடத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றாக ஒருமித்து, உற்சாகமாக உயர்வாக உழைப்போம்.
‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான்’
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
35 minute ago
2 hours ago
4 hours ago