Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2016 டிசெம்பர் 28 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தால், விரைவில் நிறைவேற்றப்படவிருக்கும் அபிவிருத்தி (விசேட விதிமுறைகள்) சட்டமூலம், நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அது, மாகாண சபைகளின் அதிகாரங்களுடன் சம்பந்தப்படுவதனால், அச்சபைகளின் அங்கிகாரத்துக்கு அது விடப்பட்டுள்ளது. ஆனால், வட மாகாண சபை உள்ளிட்ட, இதுவரை அதனை ஆராய்ந்த சகல மாகாண சபைகளும் நிராகரித்துள்ளன.
அதிகாரப் பரவலாக்கலைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, மாகாண சபைகளின் அதிகாரங்களையும் பறித்து, நாட்டை மேலும் மையப்படுத்துவதாகவும் மாகாண சபைகளின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் இந்தச் சட்டத்தின் மூலம் நிறுவப்படும் நிறுவனங்கள் தமதாக்கிக் கொள்வதாகவும், மாகாண முதலமைச்சர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தச் சட்டத்தின் படி, முழு நாட்டினதும் பொருளாதார அபிவிருத்தி, இச்சட்டத்தின் பிரகாரம் நிறுவப்படும் சில நிறுவனங்களின் பொறுப்பாகிறது.
அந்நிறுவனங்கள், இரண்டு அமைச்சர்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சருமே அந்த இரு அமைச்சர்களாவர்.
எனவே தான் இந்தச் சட்டத்தின் படி, இந்த அமைச்சுப் பொறுப்பக்களை வகிக்கும் பிரதமரும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் இரண்டு சூப்பர் அமைச்சர்களாக உருவாகப் போகிறார்கள் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்தச் சட்டத்தின் படி, புதிதாக 10 நிறுவனங்கள் அமைக்கப்படும். கொள்கை அபிவிருத்தி அலுவலகம் (Policy Development Office), அபிவிருத்தி நிறுவனம் (Agency for Development), பொது அலுவல்கள் சபை (General Affairs Council), கிராமிய நவீனமயப்படுத்தல் சபை (Board on Rural Modernization), ஐந்து பிராந்திய அபிவிருத்திச் சபைகள் (Regional Development Boards) மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான நிறுவனம் (Agency for International Trade) ஆகியனவே, அந்த பத்து நிறுவனங்களாகும்.
இவற்றில், சர்வதேச வர்த்தகத்துக்கான நிறுவனம் மட்டுமே, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சரின் கீழ் இயங்கும்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருக்கு உதவியாகவே, கொள்கை அபிவிருத்தி அலுவலகம் (Policy Development Office) நிறுவப்படும்.
தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அந்த அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட எந்தவொரு விடயம் தொடர்பாகவும், தேசிய கொள்கை மற்றும் தேசிய கொள்கைத் திட்டம் ஒன்றுக்கான நகல் ஆலோசனைகளைத் திட்டமிடுதலும் வரைதலும், அபிவிருத்தி செய்தலும் இந்த அலுவலகத்தின் கடமைகளாகும்.
அக்கொள்கைகளை அமுலாக்குதலை ஒருங்கிணைத்தலும் அவற்றின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தலும் அமுலாக்கலுக்கு உதவுவதும், அதற்குரிய பணிகளில் மேலும் சிலவாகும். அரச மற்றும் மாகாண சபை நிறுவனங்களின் செயற்றிறன் தொடர்பாக, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட மாகாண முதலமைச்சருக்கு தகவல்களை வழங்குதல் மற்றுமொரு பொறுப்பாகும்.
இதன்போது, உலக அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை ஆராய்ந்து, தேசிய கொள்கைகளை இந்த அலுவலகம் மீளாய்வு செய்யும்.
தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக, அமைச்சர், சம்பந்தப்பட்ட மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி, சம்பந்தப்பட்ட மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தி வலயங்களைப் பிரகடனப்படுத்துவார்.
இதுவரை அமுலில் இருந்த, 1956ஆம் ஆண்டு தேசிய திட்டமிடல் குழுச் சட்டம் இரத்துச் செய்யப்படும்.
அபிவிருத்திக்கான நிறுவனம் (Agency for Development) என்ற பெயரில், புதிய நிறுவனம் ஒன்று நிறுவப்படும்.
மேற்குறிப்பிடப்பட்டவாறு தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கைகளின் பிரகாரம், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தலும் விஸ்தரித்தலும் மேம்படுத்தலும், அந்த நிறுவனத்தின் பொறுப்புக்களில் ஒன்றாகும்.
அது, தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக அபிவிருத்தித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் தயாரித்து, அமைச்சரின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கும். கிராம நவீனமயப்படுத்தலுக்கான அவ்வாறான திட்டங்கள், இச்சட்டத்தின் கீழ் நிறுவப்படும் பிராந்திய அபிவிருத்திச் சபைகளுக்கே சமர்ப்பிக்கப்படும்.
அத்திட்டங்களை அமுலாக்குவதற்காக, இந்நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உதவி வழங்கும்.
அவ்வாறான திட்டங்கள், மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட துறையொன்றைச் சார்ந்தவையாக இருந்தால், அது தொடர்பாக அபிவிருத்திக்கான நிறுவனம் சம்பந்தப்பட்ட முதலமைச்சருடன் கலந்துரையாடும்.
பொருளாதார அபிவிருத்தி வலயங்கள் தொடர்பான அதிகாரங்களைச் செயற்படுத்தும் உரிமை, அபிவிருத்தி நிறுவனத்துக்கு இருக்கிறது.
அந்த வலயத்துக்குள் தொழில்களை ஆரம்பிக்க விரும்பும் தொழிலதிபர்கள், அதற்கான அனுமதியை அபிவிருத்தி நிறுவனத்திடமே பெற வேண்டும். முதலீட்டாளர்களைப் பதிவு செய்யும் உரிமையும் இந்த அபிவிருத்தி நிறுவனத்திடமே வழங்கப்படும்.
முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்களின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக, அந்நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் இந்த அபிவிருத்தி நிறுவனம் பணிப்புரைகளை வழங்கும்.
அதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம், இலங்கை துறைமுக அதிகார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு, தேசிய கொள்கைத் திட்டத்தை அமுலாக்குவது தொடர்பாக பணிப்புரை வழங்கும் அதிகாரமும் இந்த அபிவிருத்தி நிறுவனத்துக்கு இருக்கிறது.
முதலீட்டுச் சபை மற்றும் சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் ஆகியன, அபிவிருத்தி நிறுவனத்தின் அனுமதியை பெற்றே பொருளாதார அபிவிருத்தி வலயங்களில் தொழிற்பட முடியும்.
காணி (பகிர்வுக் கட்டுப்பாடு) சட்டம், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது.
அபிவிருத்தி மூலோபாயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட எட்டுப் பேர் கொண்ட பொது அலுவல்கள் சபை என்ற பெயரில் ஒரு நிறுவனம் நிறுவப்படும். தற்போது மலிக் சமரவிக்கிரமவே அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சராக இருக்கிறார்.
மேற்படி அபிவிருத்தி நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இந்தச் சபையே செயற்படும். அபிவிருத்தி நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமது பணிகள் தொடர்பாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருக்கு (ரணில் விக்கிரமசிங்கவுக்கு) அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அமைச்சர், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.
கிராமிய நவீனமயப்படுத்தல் சபை என்ற பெயரில் சபையொன்று நிறுவப்படும்.
ஜனாதிபதி, பிரதமர், நிதி, கிராமிய பொருளாதாரம், காணி, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் வர்த்தகம், கைத்தொழில், விவசாயம், கடற்றொழில், பெருந்தோட்டத்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், அமைச்சருடன் கலந்தாலோசித்து, ஜனாதிபதி நியமிக்கும் ஏழு உறுப்பினர்கள், மேற்படி அபிவிருத்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் விவசாயம் கடற்றொழில், சிறு கைத்தொழில் ஆகிய துறைகளில் உயர் தொழில்நுட்ப பணிப்பாளர்கள் ஆகியோரே இந்தச் சபையின் உறுப்பினர்களாவர்.
இந்தச் சபை, அபிவிருத்தி நிறுவனத்துக்கு வழிகாட்டல்களை வழங்கும். அதேவேளை, இச்சபை அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் ஆகியவற்றின் அமுலாக்கலை மேற்பார்வை செய்து மதிப்பீடு செய்யும்.
இச்சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஐந்து பிராந்திய அபிவிருத்திச் சபைகள் நிறுவப்படும். தெற்கு அபிவிருத்திச் சபை, வயம்ப (வட மேல்) அபிவிருத்திச் சபை, மத்திய அபிவிருத்திச் சபை, கிழக்கு அபிவிருத்திச் சபை மற்றும் வட அபிவிருத்திச் சபை ஆகியனவையே அந்த ஐந்து பிராந்திய அபிவிருத்திச் சபைகளாகும்.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள், தெற்கு அபிவிருத்திச் சபைக்குரிய மாவட்டங்களாகும். புத்தளம், குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் வயம்ப சபைக்குரிய மாவட்டங்களாகும்.
தற்போது, மத்திய மாகாணத்துக்குரிய மாவட்டங்களான மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்குப் புறம்பாக, பதுளை மாவட்டமும் மத்திய பிராந்தித்தில் அடங்கும். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய ஐந்து மாவட்டங்கள், கிழக்கு பிராந்தியத்தின் மாவட்டங்களாகும். யாழப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் வட பிராந்தியமாக அமையும்.
மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களும் எந்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரே (தற்போது பிரதமரே) இச்சபைகளின் தலைவரை நியமிப்பார்.
சம்பந்தப்பட்ட மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களும் அவற்றில் அங்கம் வகிப்பர். வட பிராந்திய அபிவிருத்திச் சபையின் அங்கத்தவராக மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவரும் கடமையாற்றுவார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரே, அந்தந்தப் பிராந்திய அபிவிருத்திக்குப் பொறுப்பாக இருப்பார்.
அரசாங்கத்தினதும் மாகாண சபைகளினதும் பிரதேச ரீதியிலான அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்து, அவற்றை மேற்பார்வை செய்தலும் அபிவிருத்தி நிறுவனத்தின் முடிவுகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய, தனியார் துறை முதலீட்டுத் திட்டங்களை அமுலாக்கலும் இப்பிராந்திய அபிவிருத்திச் சபைகளின் பெறுப்புக்களாகும்.
அரசாங்கத்துடனும் மாகாண நிர்வாகங்களுடனும் கலந்துரையாடி, இச்சபைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும்.
தேசிய கொள்கை மற்றும் தேசிய இலக்குகளுக்கு அந்த மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஒத்திசைவாக இருப்பதை உறுதிப்படுத்துவதே இந்தக் கலந்துரையாடல்களின் நோக்கமாகும்.
மாவட்ட திட்டங்களை ஒருங்கிணைத்து, இச்சபைகள் மூன்று வருட பிராந்திய அபிவிருத்தி பாரிய திட்டமொன்றை (three year Regional Development Master Plan)சமர்ப்பிக்கும்.
சம்பந்தப்பட்ட முதலமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின், இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கும்.
அதேவேளை, பிராந்திய அபிவிருத்திச் சபைகள் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்குமான வருடாந்த அபிவிருத்தித் திட்டமொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும். அமைச்சரவை அவற்றை சம்பந்தப்பட்ட மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடி அங்கிகரிக்கும்.
வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகளுக்காக, புதிதாக சர்வதேச வர்த்தகத்துக்கான நிறுவனம் (Agency for International Trade) என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்படும்.
இந்த நிறுவனம், அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சரின் கீழ் இயங்கும். தற்போது அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சராக மலிக் சமரவிக்கிரமவே கடமையாற்றுகிறார். முதலீட்டுச் சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் அதிகாரங்களை இந்த நிறுவனம் கைப்பற்றிக் கொள்ளும். வர்த்தகத் திணைக்களமும் இந்த நிறுவனத்தின் ஆலோசனைகளின் படியே செயற்படும்.
நகர அபிவிருத்தி அதிகார சபை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேயிலைச் சபை ஆகியன, இச்சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும்.
இச்சட்டத்தின் கீழ் நிறுவப்படும் நிறுவனங்கள் மற்றும் சபைகளுக்கு எதிராகவோ அவற்றின் அதிகாரிகளுக்கு எதிராகவோ வழக்குத் தொடர முடியாது.
இச்சட்ட மூலத்தை ஆராயும் போது, நாட்டில் மாகாண சபைகள் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்துக்கும் இல்லாத அதிகாரம், இச்சட்டத்தின் கீழ் நிறுவப்படும் நிறுவனங்களுக்கும் அதன் மூலம் இரண்டு அமைச்சர்களுக்கும் கிடைக்கப் போகிறது என்பது தெளிவாகிறது. முழு நாட்டினதும் பொருளாதாரம் மையப்படுத்தப்பட்டு, இரண்டு அமைச்சர்களின் கட்டுப்பாட்டுக்குள் போகிறது. எனவே தான் முதலமைச்சர்கள் இச்சட்டத்தை எதிர்க்கின்றனர்.
அதேவேளை, இச்சட்டத்தின் கீழ் நிறுவப்படும் நிறுவனங்கள் மற்றும் சபைகளுக்கு எதிராகவோ, அவற்றின் அதிகாரிகளுக்கு எதிராகவோ வழக்குத் தொடர முடியாது என்பதால், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் அதிகாரம் மேலும் வலுப்பெறுகிறது.
வெளிநாட்டு மூதலீட்டாளர்களுக்கு, அரசாங்கம் காணி விற்பனை செய்யப் போகிறது போலும். எனவே தான், காணி (பகிர்வுக் கட்டுப்பாடு) சட்டம் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களை கட்டுப்படுத்தாது என்று, இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோன்ற சம்பவங்களின் போது சட்டப் பிரச்சினை எழாமல் இருப்பதற்காகவே மேற்கண்டவாறு எவருக்கும் வழக்குத் தொடர முடியாது என இச்சட்டம் கூறுகிறது.
ஒரு வகையில், இவ்வாறு அதிகாரம் குவிக்கப்படுவது புதிய விடயமும் அல்ல. 1978 ஆம் ஆண்டு, இந்நாட்டில் தாராள பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தும் போது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இவ்வாறே நாட்டின் சகல துறைகளினதும் அதிகாரங்களை மையப்படுத்தி அவற்றைத் தம் கையில் குவித்துக் கொண்டார்.
அதற்காகத் தான், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறையை அவர் அறிமுகப்படுத்தினார்.
தாராள பொருளாதாரக் கொள்கை மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய இடமளிக்கப்பட்டது. அவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன.
சுதந்திர வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், இவை நாட்டு மக்களைச் சுரண்டும் வழி முறைகள் என்ற சித்தாந்தம், அக்காலத்தில் வலுப்பெற்றிருந்தது. எனவே அந்தப் புதிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எண்ணிய ஜனாதிபதி ஜயவர்தன, அதற்கமையவே சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிறைவேற்று ஜனாதிபதியை அறிமுகப்படுத்தினார். அது போன்றதோர் நிலைமையையே அரசாங்கம் உருவாக்கப் போகிறது போலும்.
இப்போதும், எதிர்ப்புக்களைச் சமாளிப்பதற்காகவே, இச்சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களுக்கோ அல்லது நபர்களுக்கொ எதிராக வழக்குத் தொடர முடியாது என இச்சட்டம் கூறுகிறது.
சட்டத்தினால் இல்லாவிட்டாலும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பசில் ராஜபக்ஷவும் சகல துறைகளையும் தமது பிடிக்குள் எடுத்து சர்வாதிகாரியாக செயற்பட்டார்.
ஆனால், அதனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படவில்லை. மாறாக அவரும் மேலும் சிலரும் கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
23 minute ago
33 minute ago