2025 மே 16, வெள்ளிக்கிழமை

மோடிக்குச் சவாலாக அமைந்துள்ள 'பல்கலைக்கழக அரசியல்'

Thipaan   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் 'மேக் இன் இந்தியா' பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், இங்குள்ள பல்கலைக்கழகங்களில் 'மாணவர்கள் அரசியல்' தலை தூக்கி தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதுவரை மாணவர் சங்கத் தேர்தலை மையமாக வைத்து மாணவர்களுக்குள் மோ தல் வெடித்தது. அடிதடிகள் உருவாகின. இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்று தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் போல் காரசாரமாக பிரசாரம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போது, 'தத்துவார்த்த ரீதியாக' பல்கலைக்கழகங்கள், அரசியல் மண்டபங்களாக மாறி வருகின்றன.

குறிப்பாக மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த நிலை வெகு வேகமாக பரவி வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. ஆதரவு பெற்ற 'அகில பாரதிய வித்யார்த்தை பரிஷத்துக்கும்', மற்ற இடது சாரி மற்றும் அம்பேத்கார் அமைப்புகளின் மாணவர் இயக்கங்களுக்கும் இந்த மோதல் படு வேகமாக பரவி வருகிறது.

இதன் தொடக்கம் முதலில்  சென்னையில்தான். இங்குள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 'அம்பேத்கார் பெரியார் படிப்பு மையம்' நடைபெற்று வந்தது. அந்த மையத்தின் மீது இந்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட 'அனாமதேயக் கடிதத்தின்' அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அதன் பொருட்டு அந்த 'அம்பேத்கார் பெரியார் படிப்பு மையத்தின்' அங்கிகாரம், சஸ்பென்ட் செய்யப்பட்டது.

இந்த சஸ்பென்ஷன்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்தவுடன் ஆரம்பித்த முதல் கல்வி நிலைய சர்ச்சை.

இந்த சஸ்பென்ஷனை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் போர்க்குரல் எழுப்பின. கடும் எதிர்ப்பு கிளம்பவே திடீரென்று ஐ.ஐ.டி. நிர்வாகமே மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் 'அம்பேத்கார் பெரியார் படிப்பு மையம்' செயல்பட அனுமதிக்கப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்ட பிறகு வெடித்த இரண்டாவது மத்திய பல்கலைக்கழக யுத்தம் 'ஹதராபாத் பல்கலைக்கழக' விவகாரம். இங்கு 'அம்பேத்கார் மாணவர்கள் சங்கம்' சார்பில் மும்பை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்கப்பட்டது.

ஹாஸ்டலில் இதற்கான நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அம்பேத்கார் மாணவர் சங்கத்தின் சார்பில் சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த ஐந்து மாணவர்களும்  விடுதியில் இருந்து நீக்கப்பட்டனர். மத்திய பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ரோகித் வெமுலா என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான். மாணவர் தற்கொலை ஹைதராபாத்தை கலக்கியது.

ஒட்டு மொத்த இந்தியாவிலும் ரோகித் தற்கொலை பெரும் பிரச்சினையாக மாறியது. இடது சாரி கட்சிகள், பா.ஜ.க.வுக்கு எதிரான மாநில கட்சிகள் எல்லாம் இந்த தற்கொலைக்கு கடும் கண்டனங்களை எழுப்பின. ரோகித் வெமுலாவின் தற்கொலை விவகாரத்திலும் 'யாகூப் மேமனுக்கு ஆதரவாக சில மாணவர்கள் செயல்படுகிறார்கள்' என்று பண்டாரு தத்தரேயா என்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அந்த இரு அமைச்சர்கள் மீதுமே குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். ரோகித் தலித் மாணவர் என்பதால் பா.ஜ.கவுக்கு எதிராக தலித் மக்களை திருப்புவதில் அனைத்துக் கட்சிகளுமே வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டன. ஏன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரோகித் வெமுலாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ரோகித் வெமுலா தற்கொலை, அகில இந்திய விவகாரமாக ஆனவுடன் அதுவரை அமைதி காத்த பிரதமர் நரேந்திரமோடி 'பாரத தாய், தன் மகனை இழந்து விட்டாள்' உருக்கமாக பேசினார். இந்நிலையில் ஹைதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர்தான் இந்த ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காரணம் என்ற ரீதியில் அவர் அப்பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட்டார்.

ஆகவே பா.ஜ.கவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் சென்னை ஐ.ஐ.டி. மாணவர் பிரச்சினையும் சரி, ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகில் வெமுலா தற்கொலை பிரச்சினையும் சரி, அரசியல் பிரசாரத்துக்கும் பெரிதும் உதவியது. குறிப்பாக அம்பேத்காரின் 125ஆவது பிறந்த தின விழா, அவர் உருவாக்கிய அரசியல் சட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் என்று 'தலித் மக்களின் பாதுகாவலனாக பா.ஜ.க. இருக்கிறது' என்ற இமேஜை பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கி வந்தார்.

அந்த இமேஜை இந்த 'சென்னை ஐ.ஐ.டி பிரச்சினை' 'ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா' உள்ளிட்ட விஷயங்களை திசை திருப்பி விட்டது. எதிர்கட்சிகளுக்கு கையில் கிடைத்த பிரசாரக் குண்டுகளாக இவை மாறி விட்டன. அந்த இரு பல்கலைக்கழக விவகாரங்கள் இரண்டையுமே 'தலித் விரோத கட்சி பா.ஜ.க' என்று சித்தரிக்க எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. குறிப்பாக காங்கிரஸ் அதை அந்த விதத்திலேயே கைப்பற்றி அரசியல் செய்தது.

இந்நிலையில்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம்- குறிப்பாக ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் கன்கையா கைது, இன்றைக்கு இந்திய அரசியலை குலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் பேரணி நடைபெற்றது என்றும், அதில் கன்கையா குமார் உள்ளிட்டோர் 'இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை' எழுப்பினார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதனால்தான் கன்கையா குமார் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 'இந்தியாவுக்கு எதிரான முழக்கம் போடுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்ட உத்தரவை டெல்லி பொலிஸ் ஆளுநர்; பஸ்ஸி நிறைவேற்றியிருக்கிறார்.

கன்கையாகுமாரை தேசத் துரோக வழக்கில் கைது செய்ததை ராகுல் காந்தி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் எச்சூரி போன்றோர் கண்டித்துள்ளார்கள். பிரபல வழக்கறிஞரும், முன்னாள் இந்திய அட்டார்னி ஜெனரலுமான சோலி சொராப்ஜி மாணவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கன்கயா குமார் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரையும், பத்திரிக்கையாளர்களையும் வழக்கறிஞர்கள் தாக்கிய விவகாரம் 'அகில இந்திய விவகாரமாக' மாறி விட்டது. உச்சநீதிமன்றமே கவலை தெரிவித்து தனியாக மூத்த வழக்கறிஞர்களை அனுப்பி 'நிலைமை பற்றி அறிக்கை தர' பணித்த சம்பவம் டெல்லியில் நடந்து விட்டது.

இப்போது கன்கையா குமாரின் ஜாமின் மனு நேரடியாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, 'அந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு' அனுப்பப்பட்டுள்ளது. 'பாட்டியாலா நீதிமன்றத்தில் கன்கையா குமாரின் ஜாமின் மனுவை தாக்கல் செய்து விவாதம் நடத்த முடியாத சூழல் உருவாகி விட்டது' என்ற வழக்கறிஞர்களின் எண்ணவோட்டத்திற்கு ஏற்றார்போல் இப்போது ஜாமின் மனு டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வந்து விட்டது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ மாணவர் கன்கையாகுமார் கைது 'தேசப்பற்று' பற்றி பேசுவது பா.ஜ.க. என்றும், 'தேச விரோத கருத்துக்களை ஆதரிப்பவர்' மற்றவர்கள் என்றும் ஒரு புதிய பிரசாரத்துக்கு வழி விட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மீதே இது போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. 'கன்கையாகுமாரை ஆதரிப்பதன் மூலம் ராகுல் காந்தியும் தேச விரோத செயலை புரிந்துள்ளார்' என்று ஒரு நீதிமன்றத்தில் மனுவே தொடுக்கப்பட்டு  விட்டது.

தேசப் பற்று என்பதை வைத்து இப்போது இந்தியாவில் மீண்டும் அரசியல் செய்யப்படுகிறது. வளர்ச்சி என்ற நோக்கத்தில் செயல்பட விரும்பிய பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 'தலித்கள் நலனுக்கு எதிரான அரசு' 'பல்கலைக்கழகங்களில் இந்துத்துவா அரசியல் செய்யும் அரசு' என்பது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கை கொடுத்து விட்டது.

பா.ஜ.க.வின் துணை அமைப்பான 'அகில பாரதிய வித்யார்தி பரிஷத்' என்ற மாணவர் அமைப்புக்கும், மற்ற மாணவர் அமைப்புகளுக்கும் இடையே இப்படி பல்கலைக்கழகங்களிலும், ஐ.ஐ.டி. நிறுவனங்களிலும் ஏற்படும் சர்ச்சை மத்திய அரசுக்கு தலைவலி . மத்திய அரசை வழி நடத்திச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க.வின் துணை அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் போன்ற கட்சிகளின் 'இந்துத்துவா' கோஷங்கள் அவருக்கு இன்னொரு பக்கம் பெரும் தலைவலி.

தத்துவார்த்த ரீதியில் பல்கலைக் கழகஙக்ளில் காலூன்றிக் கொள்ள இந்த மாணவ அமைப்புகள் அனைத்தும் நடத்தும் அரசியல் கூத்துகளால் 'மத்திய அரசு நிர்வாகத்துக்கு' சவால் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை தீட்டியும், அயல்நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை கவர்ந்தும் வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சவால்களும், சர்ச்சைகளும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எந்த விதத்தில் வலு சேர்க்கப் போகின்றன என்பதே இப்போது அனைத்து இந்திய குடிமகன்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே விடயம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .