2025 மே 14, புதன்கிழமை

முட்டைகளும் கூடைகளும்

Administrator   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முகம்மது தம்பி மரைக்கார்  

இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வயது குறைவானதாகும். சிங்களவர்களும் தமிழர்களும் தமக்கான தனித்துவ அரசியல் கட்சிகளை ஆரம்பித்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பின்னர்தான், முஸ்லிம்களுக்கென்று தனித்துவ அரசியல் கட்சியொன்று சாத்தியமானது.  

அப்படிச் சாத்தியமான தனித்துவ அரசியல் கட்சிக்குள் அடிக்கடி ஏற்பட்ட கலகங்களால், தனித்துவக் கட்சியில் உடைவுகள் ஏற்பட்டன. ஆனாலும், அந்த உடைவானது முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பினை ஏற்படுத்தியது.

இந்த நிலைவரமானது முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு நன்மையா, தீமையா என்கிற வாதப் பிரதிவாதங்கள் நீண்ட நாட்களாகவே இருக்கின்றன.  ‘உனது எல்லா முட்டைகளையும் ஒரு கூடையில் போடாதே’ (Don’t put all your eggs in one Basket) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. ஒரு கூடையில் இருக்கும் முட்டைகள் உடைந்து விட்டாலும், ஏனைய கூடைகளிலுள்ள முட்டைகளைக் காப்பாற்றி விடலாம் என்பது, இந்தப் பழமொழி சொல்லுகின்ற செய்தியாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு, “அரசியலில் முஸ்லிம்கள் தமது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக் கூடாது” என்று கல்விமானும், அரசியல்வாதியுமான ரி.பி. ஜாயா கூறியிருந்தார்.

முஸ்லிம் தனித்துவ அரசியலில் பல கட்சிகளின் இருப்பினையும் தேவைகளையும் வலியுறுத்துகின்றவர்கள் மேலேயுள்ள பழமொழியினை தமக்குச் சாதமாகக் கூறிக்கொள்வர். குறிப்பாக, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தொடர்ச்சியாக இந்தக் கருத்தினை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இன்னொருபுறம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று, அரசியல் அரங்கில் ‘முஸ்லிம் கூட்டமைப்பு’ ஒன்றினை உருவாக்க வேண்டுமென்கிற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அரசியலில் முஸ்லிம்கள் பிரிந்திருந்து கொண்டே, ஒற்றுமைப்படுவதற்கான தேவை இதனூடாக வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும், இது சாத்தியப்படுமா என்கிற கேள்விகளும் உள்ளன.

இருந்தபோதும், ஆயுதம் தூக்கி தங்களுக்குள்ளேயே சகோதரச் சண்டையில் ஈடுபட்ட தமிழர் இயக்கங்களே, அரசியலுக்குள் வந்த பின்னர் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பாக’ இணைந்து செயற்பட முடிந்திருக்கும் போது, ‘முஸ்லிம் கூட்டமைப்பு’ ஏன் சாத்தியமாகாது என்பது இன்னொரு பக்க வாதமாக உள்ளது.  

இலங்கை அரசியலில் இது மிக முக்கியமான கால கட்டமாகும். புதிய அரசியல் யாப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை போன்றவற்றினை அறிமுகப்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.   

இந்த நிலையில், முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்குள் ‘எரிமலைகள்’ தொடர்ச்சியாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வெடிப்புக்கள் விரைவில் அடங்கிவிடும் போல் தெரியவில்லை.  

அதனால், தமது உள்வீட்டு விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவை மு.காவுக்கு உள்ளது. இந்த நிலையில், புதிய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் முறைமை போன்ற விவகாரங்கள் மீது, முஸ்லிம் காங்கிரஸினால் முழுமையானதும் கூர்மையானதுமான கவனத்தினைக் குவிக்க முடியுமா என்கிற சந்தேகங்கள் வெளியில் உள்ளன.  

முஸ்லிம் காங்கிரஸுக்குச் சமாந்தரமாக முஸ்லிம் அரசியல் அரங்கில் இயங்கிக்கொண்டிருக்கும் தனித்துவ அரசியல் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை அடையாளப்படுத்த முடியும்.   

அந்தக் கட்சிக்கும் கணிசமானளவு நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், இந்தக் கட்சியும் உள்வீட்டுப் பிரச்சினையினை எதிர்கொண்டுள்ளது. இருந்தபோதும், அது பெரும் கொதிப்பாக இல்லை என்பது, அந்தக் கட்சிக்கு ஆறுதலான விடயமாகும்.   

எனவே, தேசிய அரசியலில் முயற்சிக்கப்படும் புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை பற்றிய விவகாரங்கள் தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது கவனத்தினை இரட்டிப்பாக்கிக் கொள்தல் அவசியமாகும்.   

புதிய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் முறைமை ஆகிய விவகாரங்களில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான் முஸ்லிம் சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.   

ஆனால், நிலைவரங்கள் அதனைச் சாத்தியப்படுத்துவதற்குச் சாதகமாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். முஸ்லிம் கட்சிகள் தமது அரசியலை வெற்றிகரமாகச் செய்வதற்கு, அதற்குரிய அரசியல் சாத்தியங்கள் அவசியமாகும். புதிய தேர்தல் முறைமையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைவடையும் என அஞ்சப்படுகிறது.   

உதாரணமாக, உள்ளுராட்சி தேர்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமை மூலம் சுமார் 68 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதேவேளை, 58 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட தெஹியத்தக்கண்டி பிரதேசத்துக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சம்மாந்துறையானது முஸ்லிம்களையும் தெஹியத்தக்கண்டி சிங்களவர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களாகும்.  

உத்தேச தேர்தல் முறையில் இப்படித்தான் அநேகமான முஸ்லிம் பிரதேசங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இவ்விடயம் குறித்து முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. முஸ்லிம் கட்சிகள் துண்டு துண்டாகப் பிரித்தெடுப்பதற்குக் கூட, ஓர் அப்பம் தேவையாக இருக்கிறது.  

 புதிய தேர்தல் முறைமையின் கீழ், தமது சமூகத்துக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை கணிசமாகப் பலிகொடுத்து விட்டு, பிறகு களத்தில் இறங்கி முஸ்லிம் கட்சிகள் குருட்டு அரசியல் செய்யக் கூடாது.  

முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பாக இணைந்து செயற்பட வேண்டும் என்பது நல்லதொரு கோரிக்கையாக இருந்தாலும், அந்த இணைவானது தேர்தல்களைக் குறி வைத்ததாக இருக்கக் கூடாது என்பதும் கணிசமானோரின் கருத்தாக இருக்கிறது.   

தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து நின்றாலும், சமூக விடயங்களில் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாகும். ஊவா மாகாணசபைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தமது சமூக விவகாரங்களில் ஒற்றுமைப்பட முடியாமல் போயுள்ளமையானது கவலை தருவதாகவே உள்ளது.  

முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதிலுள்ள இன்னுமொரு தடைக்கல், ‘யார் தலைவர்’ என்கிற பிரச்சினையாகும். முஸ்லிம் அரசியலிலுள்ள பெரும் காய்ச்சல், ‘தேசியத் தலைவர்’ என்கிற அடைமொழியாகும்.  

 ஒட்டு மொத்த முஸ்லிம்களின் தலைவர் என்பதை அர்த்தப்படுத்தியே, ‘தேசியத் தலைவர்’ என்கிற பதம், முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குள் பயன்படுத்தப்படுகிறது. இப்படியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘முஸ்லிம் கூட்டணி’ ஒன்று உருவாக்கப்படும் போது, அங்கேயும் தலைமைப் பதவியைக் கோரி நிற்பதற்குச் சாத்தியங்கள் உள்ளன.

இன்னுமொருவரின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவது, தமது ‘தேசியத் தலைவர்’ எனும் அடைமொழிக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தி விடுமோ என்று அவர்கள் நிச்சயம் அச்சப்படுவார்கள். 

வெட்கத்தை விட்டுச் சொன்னால், முஸ்லிம் அரசியலில் நல்ல பல விடயங்கள் நடக்காமல் போவதற்கு, மேற்சொன்னவை போன்ற மிகவும் அற்பமான காரணங்கள்தான் இடையூறுகளாக இருக்கின்றன.  

 இரண்டு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை ஒரு விழாவுக்கு அழைக்கும் போது, யாரின் பெயரை அழைப்பிதழின் மேலே இடுவது என்கிற குழுப்பத்தில், ஒரு வட்டத்தினை அச்சிட்டு அதற்குள் அதிதிகளின் பெயர்களை இட்டு நிரப்பிய சம்பவங்களெல்லாம் உள்ளன.   

மாற்று அரசியல் செய்கின்றவர்களை எதிராளிகளாகத்தான் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. தமது ஆதரவாளர்ளையும் அப்படித்தான் பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றன.   

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மூத்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பலரை தன்னுடன் அரவணைத்துக் கொண்டும் தனது கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டும் அரசியலைச் செய்தமையினை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

மூத்த முஸ்லிம் தலைவர்களை ‘சேர்’ என்றும் ‘காக்கா’ (மூத்த சகோதரர்களை கிழக்கு முஸ்லிம்கள் இப்படித்தான் அழைப்பார்கள்) என்றும் அழைத்து, அவர்களைக் கௌரவப்படுத்தினார்.  

இந்த விடயத்தில் அஷ்ரப்பிடம் எந்தவிதமான ‘ஈகோ’வும் இருக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான எம்.எம். முஸ்தபா, ஏ.ஆர். மன்சூர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. ஜலாத்தீன் போன்ற தலைவர்களை அஷ்ரப் இவ்வாறு கண்ணியப்படுத்தியிருந்தார்.   

அவர்களின் அனுபவங்களை முஸ்லிம் அரசியலுக்குப் பயன்படுத்தினார். இதனால், முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையும் பலமும் அப்போது மேலும் செறிவடைந்தது.  

அஷ்ரப் மேற்கொண்ட இந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்களாக தம்மைச் சொல்லிக் கொள்ளும் எவரும் முயற்சிக்கவில்லை.

முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் மூத்த அரசியல்வாதிகளைத் தமது கட்சிக்குள் எடுப்பதற்கு அநேகமான தலைவர்கள் அச்சப்படுகின்றார்கள். ‘முட்டுக்கு வைத்த கம்பு முளைத்து விடுமோ’ என்பது அவர்களின் அச்சத்துக்கான காரணமாக இருக்கின்றன.  

 மூத்த அரசியல்வாதிகளை கட்சிக்குள் எடுக்கப் போய், அதுவே தமது தலைவர் பதவிக்கு ஆபத்தாகப் போய்விடுமோ என்று இப்போதைய முஸ்லிம் கட்சித் தலைவர்கள் யோசிக்கின்றார்கள் என்பதை அவர்களின் கருத்துக்களும் நடத்தைகளும் நமக்கு உணர்த்துகின்றன.  

இதன் காரணமாக, முஸ்லிம் கட்சிகளுக்குள்ளிருந்த பல மூத்த அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றே தட்டிக்கழிக்கப்பட்டார்கள். இதற்கு நல்லதொரு உதாரணமாக செனட்டர் மசூர் மௌலானாவைக் குறிப்பிடலாம்.

அரசியலை ‘கரைத்துக் குடித்த’ அந்த மனிதர், நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று, அவரின் சமூகமும் மண்ணும் ஆசைப்பட்டது. தேசியப்பட்டியல் மூலமாக அவரை நாடாளுமன்றுக்கு அனுப்புவதற்கான சாத்தியம் பின்னாளில் அவர் இணைந்திருந்த கட்சிக்குள் இருந்தது.

ஆனாலும், அது நடக்கவில்லை. மசூர் மௌலானாவை பிரதி மேயர் பதவிக்கு மேல் உயர்த்திப் பார்ப்பதற்கு அவர் சார்ந்திருந்த கட்சி விரும்பியிருக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போதும் உள்ளது. 

முஸ்லிம் அரசியல் அரங்கில் புத்தி ஜீவிகளுக்கான இடங்களும் வழங்கப்படுவதில்லை என்பது இன்னுமொரு குறையாக உள்ளது. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சூழ இருக்கும் கூட்டங்கள்தான், புத்திஜீவிகளுக்கான இடைவெளிகளை அரசியல் கட்சிகளுக்குள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.  

 இந்தக் கூட்டத்தவர்கள்தான் முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளை அரசியல் கட்சிகளுக்குள் ஈர்ப்பதற்குத் தடையாகவும் உள்ளனர். உதாரணமாக, அரசியல் மற்றும் சமூக ஆய்வாளரான எம்.ஐ.எம். முஹியத்தீன் போன்ற புத்திஜீவிகளின் அறிவினையும் அனுபவங்களை முஸ்லிம் அரசியல் கட்சிகள் பயன்படுத்தத் தவறி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.   

முஸ்லிம்களுக்கான தனியான பிராந்திய அலகு பற்றிய சிந்தனையை முன்வைத்தவர் என, எம்.ஐ.எம். முஹியத்தீன் அறியப்படுகின்றார். புதிய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான விடயங்கள் குறித்து முஸ்லிம் சமூகம் சார்பில் பேசுவதற்கும், சிந்தனைகளை முன்வைப்பதற்கும் மிகப் பொருத்தமானவர்களில் எம்.ஐ.எம். முஹியத்தீனும் ஒருவராவார்.   
இவர் இதுவரை மேற்கொண்டுள்ள ஆய்வுகளும், எழுதியுள்ள நூல்களும் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைத்துள்ள சொத்துக்களாகும்.

ஆனால், அவற்றினை முஸ்லிம் மக்கள் மத்தியில் தாராளமாகக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளைக் கூட, முஸ்லிம் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளவில்லை. அப்படிச் செல்வதால், அரசியல் ரீதியாக அந்தக் கட்சிகளுக்கு எவ்வித நேரடி இலாபங்களும் இல்லை என்று, அக்கட்சிகளின் தலைவர்கள் நினைத்திருக்கக் கூடும்.  

எனவே, முஸ்லிம்களின் அரசியலை நெறிப்படுத்தப்பட வேண்டிய தேவைகள் உள்ளன. முஸ்லிம்களின் ‘முட்டைகள்’ ஒரே கூடைக்குள் போடப்பட வேண்டுமா, பிரித்துப் பிரித்து வைக்கப்பட வேண்டுமா என்கிற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைக்கு, பிரித்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் முட்டைகள், நல்ல கூடைகளுக்குள் வைக்கப்பட வேண்டும் என்பதிலாவது முஸ்லிம் சமூகம் கவனமாக இருக்க வேண்டும்.  
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X