2025 மே 14, புதன்கிழமை

மாடேறி மிதிக்கும் கதை

Administrator   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முகம்மது தம்பி மரைக்கார்   

வசதி வாய்ப்புகளோடு இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும், கண்ணீர்க் கதைகளும் உள்ளன. ஒரு கால கட்டத்தில் பணக்காரர்களாகவும் வாகனங்களோடும் இருந்தவர்கள், அனைத்தையும் இழந்து நிற்கின்றமையினைக் காண்பது கவலையளிக்கும் விடயமாகும்.இந்நிலைமை, தங்கள் சகாக்கள் சிலருக்கு ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றார் பஸ் உரிமையாளரான  எம்.எஸ். பைறூஸ். 

தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயற்பாட்டாளர்களில் பைறூஸ் முக்கியமானவர். பஸ் வண்டிகளை வைத்து, வாழ்க்கையினை இவர்கள் ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், தங்கள் வருமானத்துக்கான இந்தத் தொழில், இடையில் முடிந்து விடுமோ என்று இவர் அச்சப்படுகின்றார்கள்.   

தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து வாகரை ஊடாகத் திருகோணமலைக்குப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ் உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சினை இவற்றில் முக்கியமானதாகும். 

இந்த வழியினூடாக நாளாந்தம் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களுக்கு போதிய வருமானமில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் பாதையினூடாகப் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பொருட்டு, இன்னும் இரண்டு பஸ்களுக்குப் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், தங்களுக்கு மேலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தென்கிழக்குக் கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் விசனம் தெரிவிக்கின்றனர்.   

அம்பாறை மாவட்டத்திலிருந்து வாகரையூடாகத் திருகோணமலைக்கு தினமும், 21 தனியார் பஸ்களும், இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குச் சொந்தமான 14 பஸ்களும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும், ஒன்றிணைந்த சேவையொன்றினூடாகவே தமது தொழில் நடவடிக்கையினை மேற்கொள்கின்றன.   

ஒன்றிணைந்த சேவை என்பது, தனியாரும் இலங்கை போக்குவரத்து அதிகார சபையினரும் ஒற்றுமையோடு செயற்படுகின்றமையினைக் குறிக்கும். இவர்கள் தமக்குள் நேர அட்டவணை ஒன்றினைத் தயாரித்து, அதன்படி போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பிட்ட ஒரு பயணப் பாதையில், ஒரே நேரத்தில், பல பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடுகின்றமை இதனூடாகத் தடுக்கப்படுகின்றது. மேலும், ஒன்றிணைந்த சேவையில் 60 வீதம் தனியார் பஸ்களுக்கும் 40 வீதம் இலங்கை போக்குவரத்து அதிகார சபையினருக்குச் சொந்தமான பஸ்களுக்கும் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றினூடக, இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

அம்பாறை மாவட்டத்திலிருந்து வாகரையூடாகத் திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மேற்படி 35 பஸ்களும், அலுவலக வேளைகளில் 20 நிமிடங்களுக்கு ஒரு பஸ் எனும் அடிப்படையிலும், ஏனைய நேரங்களில் 30 நிமிட இடைவெளியிலும் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

ஆனாலும், இந்த வீதி வழியாகப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தமது பஸ்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை என்றும், சில நாட்களில் நட்டத்துடன் தொழில் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், தென்கிழக்குக் கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மௌலானா தெரிவிக்கின்றார்.   

இப்படியானதொரு நிலையில்தான், இந்த வீதியினூடாகப் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பொருட்டு, மேலும் இரண்டு பஸ்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் குளிரூட்டப்பட்டவையாகும். இவற்றுக்கான போக்குவரத்து அனுமதியினை கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வழங்கியுள்ளது. 

ஆனால், இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது நியாயமற்ற செயற்பாடாகும் என்று, எஸ்.ஏ. மௌலானா குற்றம் சாட்டுகின்றார்.   

கிழக்கு மாகாணத்தினுள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கான அனுமதியினை, கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வழங்குகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அமைச்சின் கீழ்தான், மேற்படி வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை செயற்படுகின்றது.

இந்த அதிகார சபையின் தலைவராக சமந்த பி. அபேவிக்ரம என்பவர் பதவி வகிக்கின்றார். அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் பிரத்தியேக செயலாளராகவும் இவர் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

“அம்பாறை மாவட்டத்திலிருந்து வாகரையூடாக திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் 35 பஸ்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் இரண்டு பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது, கண்மூடித்தனமான செயற்படாகும்.ஏற்கெனவே, எங்கள் தொழிலில் நட்டத்தினை எதிர்கொண்டு வருகின்றோம். இந்த நிலையில், மேலும் இரண்டு பஸ்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது, இந்தப் பாதை ஊடாகப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பஸ் உரிமையாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடாகும்” என்று, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் பைறூஸ் கூறுகின்றார்.   

இவ்விடயம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சரைத் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், சில தடவை சந்தித்துத் பேசியுள்ளனர். அத்தோடு, எழுத்து மூலமாகவும் தமது முறைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார்கள்.

அதேவேளை, கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சமந்த பி. அபேவிக்ரமவையும் பஸ் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், அவர்களிடமிருந்து தமக்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கவில்லை என்று பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றார்கள்.   

“முதலமைச்சரை நாங்கள் சந்தித்தபோது, மேலதிகமாக இரண்டு பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் சமந்த  அபேவிக்ரமவிடம் பேசியபோது, அவர் மிகவும் சர்வதிகாரத்துடன் எமக்குப் பதிலளித்தார். எனது விருப்பப்படி நான் யாருக்கும் அனுமதி வழங்குவேன், அது தொடர்பில் யாரிடமும் நான் கேட்கத் தேவையில்லை என்று அகங்காரமாகப் பதிலளித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் அவரின் நண்பராகவும் இருக்கின்றமையினால்தான் கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் சமந்த பி. அபேவிக்ரம இவ்வாறு நடந்து கொள்கின்றார்” என்று, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.   

“எங்கள் பாதையில் மேலதிகமாக இறக்கி விடப்பட்டுள்ள இரண்டு பஸ்களின் அனுமதியினையும் இரத்துச் செய்ய வேண்டும். அல்லது குளிரூட்டப்பட்ட பஸ்கள் இந்தப் பாதையில் ஓட வேண்டுமென்றால், அதற்கான அனுமதியை ஏற்கெனவே, தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எங்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும். அப்படியும் முடியாது விட்டால், எங்கள் நேர அட்டவணைக்குள் வராதவாறு, இந்த இரண்டு பஸ்களும் சேவையில் ஈடுபடும் வகையில் ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும் என்று, வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவரிடம் நாம் கூறினோம். ஆனால், எதற்கும் அவர் இணங்கவில்லை” என்கிறார் பைறூஸ்.   

“மேலதிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு பஸ்களும் அம்பாறை நகரத்திலிருந்து வாகரையூடாகத் திருகோணமலைக்கு பயணிகள் சேவையில் ஈடுபடுபட்டு வருகின்றன. இவற்றில் EPNC 5958 எனும் இலக்கத்தையுடைய பஸ் ஒன்று, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பழுதடைந்து விட்டது. இந்த நிலையில், பழுதடைந்த பஸ் வண்டிக்குப் பதிலாக, EPNC 6351 எனும் இலக்கத்தையுடைய வேறொரு பஸ்ஸினை சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு, எழுத்து மூலம் தற்காலிக அனுமதியொன்று வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் சமன் ஹேமதிலக்க என்பவர் இந்த அனுமதியினை வழங்கியுள்ளார். ஆனால், இவ்வாறு பதிலீடாக அனுமதி வ‌ழங்கப்பட்ட பஸ் வண்டிக்கு, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதி இல்லை. எனவே, அம்பாறை மாவட்ட முகாமையாளர் முறைகேடாகவே மேற்படி அனுமதியினை வழங்கியுள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது’ என்று, பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் மௌலானா சுட்டிக் காட்டினார்.   

இன்னொருபுறம், கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளரின் நியமனம் தொடர்பிலும் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. பி. சமன் ஹேமதிலக என்பவர் ஆரம்பத்தில், கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் போக்குவரத்து உத்தியோகத்தராகவே நியமிக்கப்பட்டார். ஆனாலும், அந்தப் பதவிக்கு உரிய தகைமைகளின்றி இவர் நியமிக்கப்பட்டதாக, கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வு விசாரணையொன்றின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், தகைமையற்றவர் எனக் கூறப்பட்ட மேற்படி நபரை, அவர் வகித்த பதவியை விடவும் உயர்ந்த பதவியொன்றுக்கு நியமித்துள்ளார்கள்" என்று, பஸ் உரிமயாளர் சங்கத்தின் செயற்பாட்டாளர் பைறூஸ் ஆவணங்களைக் காட்டி கூறுகின்றார்.   

‘அதாவது, போக்குவரத்து உத்தியோகத்தர் பதவியை வகிப்பதற்கான தகைமைகளே இல்லை எனக் கூறப்படும் ஒரு நபரை, அந்தப் பதவியை விடயும் உயந்ததொரு பதவிக்கு நியமித்திருக்கிறார்கள். இந்த அநீதியினையும் கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்தான் செய்துள்ளார். தான் முதலமைச்சரின் நண்பராகவும், பிரத்தியேகச் செயலாளராகவும் இருக்கின்றமையினால், இவ்வாறு, அவர் நினைத்தபடியெல்லாம் செயற்படுகின்றார்” என்றும் பைறூஸ் கவலை வெளியிட்டார்.   

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அநேகமான பகுதிகளில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்கள், ஒன்றிணைந்த சேவையின் கீழ்தான் செயற்படுகின்றன. இதனால், பஸ்களிடையே ஒன்றையொன்று முந்திக் கொண்டு ஓடும் நிலை குறைவாகவே உள்ளன.

ஒவ்வொரு பஸ் வண்டியும் தனக்கான நேரத்தில் பயணப்படுகின்றன. அவ்வாறான போக்குவரத்துப் பாதைகளில், விபத்துகளும் வெகுவாகக் குறைவடைந்துள்ளன. ஆனால், வாழைச்சேனை முதல் பொத்துவில் வரையில், பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்குள் ஒன்றிணைந்த சேவை ஏற்படுத்தப்படவில்லை.

அதனால், இந்தப் போக்குவரத்துப் பாதைகளில் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

வாழைச்சேனை முதல், பொத்துவில் வரையிலான போக்குவரத்துப் பாதைகள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளன. “எனவே, வாழைச்சேனை முதல் பொத்துவில் வரையில் பயணிக்கும் போக்குவரத்து பஸ்களை, ஒன்றிணைந்த சேவையொன்றின் கீழ் கொண்டு வரவேண்டும்” எனவும் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அநீதிகளை வெளிப்படுத்தும் வகையில், தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர்,

அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் அக்கரைப்பற்றில் நடத்தியிருந்தனர். தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நியாயம் வழங்குமாறு, கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பல தடவை கோரிக்கை விடுத்திருந்தபோதும், அவை தட்டிக் கழிக்கப்பட்டு விட்டதாகவும் அதனாலேயே இது தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பேசுவதற்கு தாங்கள் தீர்மானித்ததாகவும் அச் சங்கத்தினர் அதன்போது தெரிவித்தார்கள்.   

“பயணிகள் போக்குவரத்தில் தமது பஸ் வண்டிகளை ஈடுபடுத்தி வந்த எங்களுடைய நண்பர்களில் சிலர், இந்தத் தொழிலில் கடுமையான நட்டத்தினை எதிர்கொண்டார்கள். அதன் காரணமாக, தமது பஸ்களை விற்று விட்டு, இப்போது ஜீவனோபாயத்துக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே கடும் கஷ்டப்படுகின்றார்கள். இப்படியான நிலையில்தான் நாங்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். இந்தத் தொழிலினை ஆரம்பித்து விட்டோம் என்பதற்காகத்தான், அதனைத் தொடர்ந்து வருகின்றோம். எங்கள் பஸ்களுக்கான மாதந் குத்தகைப் பணத்தினை (லீசிங்) செலுத்துவதற்கே சிலவஇவ்வாறானதொரு நிலையில், எங்கள் பயணப் பாதையில் மேலதிகமாக இன்னுமின்னும் பஸ்களை இறக்கி விட்டு, அவை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியினையும் வழங்குவததென்பது நியாயமாகாது. இப்படிச் செய்வதென்பது, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைக்கு ஒப்பானதாகும்" என்று, பஸ் உரிமையாளர் பைறூஸ் உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகின்றார்.   

மரத்தால் விழுவதை விடவும், மாடேறி மிதிப்பதுதான் பல சமயங்களில் வேதனையானதாக இருக்கிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X