2025 மே 17, சனிக்கிழமை

முஸ்லிம் அரசியலின் சிறுபிள்ளைத்தனங்கள்

Thipaan   / 2015 நவம்பர் 07 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

முஸ்லிம்களின் அரசியலானது,  அதிகப்படியான குத்துவெட்டுக்கள், குழிபறிப்புக்கள், வசைபாடல்கள், காட்டிக் கொடுப்புக்கள், மட்டம் தட்டுதல் என்பவற்றுக்கு மேலதிகமாக, பல்வேறு சிறுபிள்ளைத்தனங்களையும் கொண்டிருக்கின்றது. அரசியலில் அரிச்சுவடி பயில்வோர் மட்டுமன்றி, தாம் எல்லாம் தெரிந்த அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டிருப்போரும் கூட, அடிமட்டத் தொண்டர்கள் போல, கத்துக்குட்டி அரசியல்வாதிகளைப் போல நடந்து கொள்வதைப் பார்த்து, மக்கள் முகம்சுழித்த சம்பவங்கள் ஏராளம்.

அப்படியொரு சம்பவம் அண்மையில் நடந்தேறியது. சிறுபிள்ளைத்தனங்களுக்கு இது நல்லதோர் அண்மைக்கால உதாரணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தை பிரதியமைச்சர்

எம். எஸ். அமீர் அலியும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட்டும் இரண்டு மணித்தியால இடைவெளியில், தனித்தனியாக மாலையிட்டு அழைத்து வரப்பட்டு திரும்பத் திரும்ப ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர். இதே வகையான ஆய்வுகூடத்தை, காத்தான்குடியில் திறந்து வைப்பதிலும் பெரிய ரணகளம் ஆகிப்போனது. இவற்றையெல்லாம் பார்ப்பதற்கே பெரிய கேலிக் கூத்தாக இருந்தது.

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்டது உண்மையில், மஹிந்தோதய ஆய்வுகூடம். அதாவது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. இப்போது மஹிந்த ஆட்சியில் இல்லை என்பதால், விஞ்ஞான ஆய்வுகூடம் என்ற பெயரில் இதனைத் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இது ஒரு பாரிய செயற்றிட்டம் அல்ல. அப்பிரதேசத்தைச் சேர்ந்த வலயக் கல்விப் பணிப்பாளரே இதைத் திறந்;து வைத்திருக்கலாம். ஆனால், மாகாண சபைக்கு கீழுள்ள பாடசாலைகள் என்ற அடிப்படையில் முதலமைச்சர் இதனைத் திறந்து வைக்க வருகை தந்ததில் நியாயமிருப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

எவ்வாறிருப்பினும், ஒரு பிரதேசத்தில் ஏதேனும் ஒரு திறப்பு விழா நடாத்தப்படுகின்ற போது அவ்வூரைச் சேர்ந்த அரசியல்வாதியையும் விரும்பியோ விரும்பாமலோ அழைத்து வரும் ஒரு வழக்கம் இருக்கின்றது. அதேபோல், வெளியூரைச் சேர்ந்தவர் என்றாலும் மாகாணத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் என்ற அடிப்படையில் வேறு அரசியல்கட்சியைச் சேர்ந்த ஒருவர் அழைக்கப்படுமிடத்து, 'இல்லையில்லை நான்தான் பிரதம அதிதியாக சென்று திறந்து வைக்க வேண்டும்' என்று அடம்பிடிக்கும் பழக்கமும், பக்குவமான அரசியலில் இருப்பதில்லை. ஆனால், இவ்விரு வழமைகளும் இல்லாமல் போனதால், சிறுபிள்ளைத்தனம் வெளிப்பட வேண்டியதாயிற்று.

மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி என்றும் அவரது திட்டங்கள், ஓர் அரசாங்கத்தின் திட்டங்கள் என்றும் பார்க்காமல் அவரைத் தனியொரு ஆளுமையாக நோக்கினால், உண்மையில் இக்கட்டடத்தை திறந்து வைப்பதற்கான அருகதையை மேற்சொன்ன இருவரும் கொண்டிருக்கின்றார்களா என்பது பரிசீலனைக்குரியதாகும்.

ஏனெனில், இவர்கள் இருவருமே மஹிந்தவின் பார்வையில் துரோகிகள். பெரும் கஷ்டப்பட்டுக் கொடுத்த தேசியப் பட்டியலை எடுத்துக் கொண்டு, கடைசி நேரத்தில் பல்டி அடித்தவர்தான் அமீர் அலி. இது மஹிந்தவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தின் விசுவாசத்தை சந்தி சிரிக்க வைத்த ஒரு சம்பவமாகவும் அமைந்தது. அதேபோல், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பு முடியும் வரைக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி விட்டு, கடைசித் தருணத்தில் ஆதரவை விலக்கிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக நஸீர் அகமட் காணப்படுகின்றார்.

எனவே, இது யாரோ கட்டிய கட்டடம். இதனைத் திறப்பதற்கு நானா, நீயா போட்டி ஏற்பட்டமை, வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும். மாகாண சபையின் கீழ் இருக்கின்ற பாடசாலையின் கட்டடம் என்பதால், அமீர் அலி தனது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம். அல்லது அந்த ஊரைச் சேர்ந்த அமீர் அலி திறந்து வைக்கட்டும் என்று, நஸீர் அகமட் விட்டுக் கொடுத்திருக்கலாம்.

அவ்வாறும் இல்லையென்றால், இரண்டுபேரும் சேர்ந்து வந்து ரிப்பன் வெட்டியிருக்கலாம். ஆயினும், கௌரவமும் தாழ்வுச் சிக்கலும், முதலமைச்சரையும் பிரதியமைச்சரையும், கிராம சபை உறுப்பினரொருவரின் மட்டத்துக்குக் கீழிறங்கிச் செயலாற்றும் நிலைக்கு இட்டுச் சென்றிருந்தன.

'ஊரார் கோழியை அறுத்து, தமது பெயரில் தானம்' கொடுப்பதில் காட்டுகின்ற அக்கறையை, இந்தச் சமூகத்தின் பிற நலன்களில் இவ்வாறான அரசியல்வாதிகள் ஏன் காட்டுவதில்லை என்ற கேள்வி இவ்விடத்தில் உருவெடுக்கின்றது.

பள்ளிவாசல் படுகொலைகள், முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற தூசுதட்டப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, இவர்கள் இருவரும் இதுவரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள்? சரி, அதை விடுங்கள், கிழக்கில் இன்று வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் விடயத்தில் என்ன சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்குத் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் இன்னும் கிடப்பில் கிடக்கின்றன. காணிப் பிரச்சினைகள், எல்லை தொடர்பான முரண்பாடுகள், நீர்ப்பாசனம் மற்றும் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகள் என, ஆயிரத்தெட்டு விடயங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கரிமலையூற்று பள்ளிவாசல் விவகாரம், காணி அபகரிப்புப் பிரச்சினைகள் உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அம்பாறை மாவட்டத்திலும் இவ்வாறான முரண்பாடுகள், சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றையெல்லாம் தீர்த்து வைப்பதற்காக அமீர் அலி,

நஸீர் அஹமட் மற்றும் இவர்கள் போன்ற ஏனையோர், முண்டியடித்துக் கொண்டு ஓடி வருகின்றார்களா? இந்தச் சமூகத்துக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அதனைத் தீர்த்து வைப்பதற்காக இரண்டு பேரும் நான் முந்தி நீ முந்தி என ஓடி வருவதைக் காணக் கிடைப்பதில்லையே?

அதேபோல், அமீர் அலிக்கு கொடுக்கப்பட்ட பிரதியமைச்சு என்பது கல்குடா தொகுதிக்கானது மட்டுமல்ல. அதையும் தாண்டி அவர் செயற்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, அம்பாறை மாவட்டத்துக்;கு மக்கள் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்காத சந்தர்ப்பத்தில் 'அமீர் அலி  அம்பாறையையும் பார்த்துக் கொள்வார்' என்று கட்சித் தலைவர் ரிஷாட்; பதியுதீன் உறுதியளித்தார்.

ஆனால், தேர்தலுக்குப் பிற்பாடு அக்கட்சியின் செயற்பாட்டுத்தளம் முடங்கிக் கிடப்பது ஒருபுறமிருக்க, அமீர் அலி, ஓரிரு விஜயங்களைத் தவிர, அம்பாறை மாவட்டத்தில் பாரிய சாதனைகள் யாதொன்றையும் நிகழ்த்திக் காட்டவில்லை. இந்நிலைமையே ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவி என்பதும் வெறுமனே ரிப்பன் வெட்டுவதற்குப் போட்டி போடுகின்ற பதவியல்ல. அது, இப்பிராந்தியத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் ஒரு யுகாந்திர கனவு. கிழக்கு மாகாண சபையில் மு.கா.வுக்கு கிடைத்திருக்கின்ற முதலாவது மிகப் பெரிய அதிகாரம். முன்னாள் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த நஜீப் ஏ. மஜீத், திறம்படச் செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்திருந்த நிலையிலேயே, சுழற்சி முறை முதலமைச்சர் பதவி நஸீர் அகமட்டுக்கு வழங்கப்பட்டது.

தற்போதைய அரசியல் சூழலை வைத்துப் பார்க்கின்ற போது, அடுத்த முறை இந்தப் பதவி மு.கா.வுக்கு அல்லது ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே. இப்படியிருக்கையில், முதலமைச்சர் பதவிக்கான கடமைகளையும் இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களையும் முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதிலேயே முழு நேரக் கவனமும் இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு, அம்பாறை மாவட்டத்தில் செய்தது போல, யாரோ நிர்மாணித்த கட்டடங்களை, மேள தாளங்களுடன் சென்று திறந்து வைப்பது ஒப்பாகாது. எனவே, இன்னுமொரு முறை முதலமைச்சராகும் கனவு இருக்கின்ற ஒருவர், இரவுபகலாக மக்களுக்காக உழைக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக, யாரோ கட்டிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இவர்கள் இருவரும், பிள்ளைச்சண்டை போட்டுக் கொள்கின்றனர். தமிழர்களும் சிங்களவர்களும் இதைக் கேலிக்கண் கொண்டு பார்க்கின்றனர். இவ்வாறான நிகழ்வுகள், முஸ்லிம் அரசியலில் இதற்கு முன்னர் பல தடவைகள் நடந்திருக்கின்றன. முஸ்லிம் அரசியலின் சிறுபிள்ளைத் தனங்களின் வரிசையில் அமீர் அலியும் நஸீர் அகமட்டும் கடைசி உதாரணங்களே. இந்தப் பண்பியல்பின், மிகப் பிந்திய குறியீடுகள் மட்டுமே.

ஏனென்றால், பிள்ளைச்சண்டை பிடிக்கும் சிறுபிள்ளைத்தனங்கள் அரசியலின் கீழ் மட்டத்தில் மட்டுமல்ல மேல் மட்டங்களிலும் முன்னர் பல தடவைகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஓர் அரசியல்வாதி, அபிவிருத்தித் திட்டமொன்றைக் கொண்டு வருகின்ற போது, அதற்கு மாற்றுக் கட்சிக்காரர் தடை விதிப்பது, எதிர்க்கட்சி அரசியல்வாதியின் வேலைத் திட்டங்களை முடக்குவது, அவருக்குக் குழிபறிப்பது, மற்றையவரை விடத் தம்மை இந்த ஊர் கொண்டாட வேண்டுமென நினைப்பது என பிற்போக்கு அரசியலின் இலட்சணங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் சிறப்பியல்புகள் (?) எனலாம். இவர்கள்தான், ஊருக்குள் இருக்கும் இரண்டு கட்சித் தொண்டர்களை மோதவிட்டு, குடும்பங்களுக்கு இடையில் ஆண்டாண்டு காலப் பகையை வளர்த்து விடுகின்றவர்கள்.

ஒரு சிறிய கட்டடத் திறப்பு விழாவுக்காக, ஆளுக்காள் மோதிக் கொள்ளும் இவர்கள் போன்ற அரசியல்வாதிகள், முஸ்லிம்களை ஒன்றுபடச் சொல்லி கேட்பதற்கும் ஒற்றுமை பற்றி பேசுவதற்கும் என்ன அருகதையைக் கொண்டிருக்கின்றார்கள்? இவ்வாறானவர்கள், கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின், குறிப்பாக தமிழ் பேசுவோரின் பிரச்சினைகளை, எவ்வாறு தீர்த்து வைக்கப் போகின்றார்கள் என்பது நியாயமான சந்தேகம்தான்.

ஓர் இலகுவான காரியமான திறப்பு விழாவுக்கு ஓடோடி வருகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒரு சிலர், மக்களுக்கு பிரச்சினைகள் எழுகின்ற சந்தர்ப்பங்களில் கொழும்பில் முடங்கி விடுகின்றனர். சிலர் அறிக்கை விடுவதோடு, தமது கடமை முடிந்தது என்று நினைக்கின்றனர். இன்னும் சிலர், நிலைமைகளை பயன்படுத்தி தமது வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொள்கின்றனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் குர்ஆன், ஹதீஸ் என்று சொல்லிக் கொண்டும் தம்மை கை சுத்தமானவர்களாக காட்டிக் கொண்டும், இந்த சமூகத்தை பேய்க்காட்டிக் கொண்டு என்னென்ன செய்து கொண்டிருக்கின்றார்கள், எவ்வாறு பணம் உழைக்கின்றார்கள், யார் யாருடன் 'டீல்' பேசுகின்றார்கள் என்பதையும் பொதுத் தளத்தில் பேசாவிட்டாலும், மக்களுக்கு நன்கு தெரியும்.

அமைச்சு, முதலமைச்சு, பிரதியமைச்சு, எம்.பி. மற்றும் மாகாண சபைப் பதவிகள் என்பது யாரொருவரினதும் வீட்டுச் சொத்தல்ல. அது மக்களால் மக்களுக்காக வழங்கப்படுவது. அதைக் கொண்டு பெருமை அடிப்பதற்கும் கௌரவம் கொள்வதற்கும் ஒன்றுமில்லை என்பதை, அதிகாரமிழந்து வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்ற முன்னாள் அரசியல்வாதிகளைக் கேட்டால் விளக்கமாக சொல்வார்கள்.

எனவே, இப்பதவியில் மிக அர்ப்பணிப்புடன், பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்குச் சேவை செய்வதில் போட்டியிருக்க வேண்டுமே தவிர, ஒன்றுக்கும் உதவாத விடயங்களால் கௌரவம் குறைந்து விடும் என நினைக்கக் கூடாது. இந் நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நிறையப் பிரச்சினைகள், தீர்க்கப்படாதுள்ளன. அதனைப் பக்குவமான முறையில் அணுக வேண்டும் என்றே மக்கள் நினைக்கின்றனர்.

பராயமடையா பிள்ளைகள் படுக்கையை நனைத்துவிட்டு காலையில் எழும்பி பொய்க்காரணம் சொல்லி மழுப்புவது போல, சின்னப் பிள்ளைத்தனமான அரசியல் சரிப்பட்டு வராது. சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்று சொல்வார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .