Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 14 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகம்மது தம்பி மரைக்கார்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கும், செயலாளர் ஹசன் அலி தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறி இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்போதைக்கு தீரும் என்கிற சாத்தியங்களும் இல்லை. ஹசன் அலி தரப்பை ஓரங்கட்டுவதற்கு ஹக்கீம் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறத் தவறியமையினை அடுத்து, ஹசன் அலியை சமரசத்துக்கு ஹக்கீம் அழைத்தார். ஹசன் அலியும் சென்றார். பேச்சுவார்த்தைகள் நடந்தன. 'தலைவரும் செயலாளரும் கட்டித் தழுவிவிட்டனர். இனி, இருவரும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை விடுவார்கள். அத்துடன் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கதையொன்றும் உலவியது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. முன்னரை விடவும் இப்போது பிரச்சினையின் தீவிரம் அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை நிலைவரமாகும்.
மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு வந்திருந்தார். அன்றிரவு அட்டப்பள்ளம் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில், மு.காங்கிரஸின்
உயர்பீடத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும், அம்பாறை மாவட்ட பிரமுகர்களை ஹக்கீம் சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் மு.கா தலைவர் ஹக்கீம் உரையாற்றியபோது, செயலாளர் ஹசன் அலி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார். வயதுக்கேற்ற பக்குவமில்லாமல், புறம் சொல்லித் திரிகின்ற இழிவான நிலைக்கு ஹசன் அலி வந்து விட்டதாக ஹக்கீம் கூறினார். ஹசன் அலியை வறுத்தெடுத்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் ஹசன் அலி கலந்து கொள்ளவில்லை.
மு.காங்கிரஸுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றினை, தனக்கு வழங்குமாறு ஹசன் அலி கேட்டார். ஹக்கீம் கொடுக்கவில்லை. இதனால், ஹக்கீமுடன் ஹசன் அலி முரண்பட்டார். இந்த முரண்பாடு, பின்னர் போராக மாறியது. தலைவரும் செயலாளரும் ஒருவரையொருவர் ஊடகங்களிலும், மேடைகளிலும் போட்டுத் தாக்கத் தொடங்கினார்கள். பிரச்சினை உச்சத்துக்குச் சென்றபோது, ஹசன் அலி வகிக்கும் செயலாளர் பதவியின் அதிகாரங்களைப் பறித்தெடுத்த ஹக்கீம், அவற்றினை கட்சிக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்பீட செயலாளரிடம் வழங்கினார்.
இதனால் ஹசன் அலியின் கோபம் இன்றும் அதிகரித்தது. ஹக்கீம் மீதான தனது போரினை மேலும் வலுப்படுத்தினார். இந்த நிலையில் ஹசன் அலிக்கு ஆதரவாக கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உள்ளிட்ட ஒரு குழு களத்தில் குதித்தது. இதனால், ஹசன் அலி இன்னும் பலமடைந்தார்.
நிலைமைகளைக் கவனித்த ஹக்கீம், ஹசனியுடன் சமரசமொன்றுக் செல்லத் தீர்மானித்தார். இதற்காக மத்தியஸ்தர் ஒருவரை ஏற்பாடு செய்தார். அவரின் முன்னிலையில் ஹசன் அலியுடன் ஹக்கீம் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சின் போது, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹசன் அலிக்கு உடனபடியாக வழங்குவதற்கு ஹக்கீம் சம்மதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கூடவே, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஹக்கீம் விருப்பம் தெரிவித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், செயலாளரிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை, இப்போது மீளளிக்க முடியாது என்றும், அடுத்த பேராளர் மாநாட்டின் போதுதான் வழங்க முடியும் என்றும் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். ஆனால், ஹசன் அலி இதற்கு இணங்கிப் போகவில்லை. முதலில் செயலாளர் பதவியின் அதிகாரங்களை வழங்குங்கள். பிறகு, மற்றவை பற்றிப் பேசலாம் என்கிற நிலைப்பாட்டினை ஹசன் அலி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் இன்னொரு கதையும் உள்ளது. ஹக்கீமுடன் சமரசமொன்றினை ஏற்படுத்திக் கொண்டு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், கூடவே அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு ஹசன் அலி வரவிருந்தாராம். இதனை அறிந்து கொண்ட தவிசாளர் பஷீர் சேகுதாவூத், ஹசன் அலியை அந்த முடிவுக்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டாராம்.
ஹக்கீமுக்கும் ஹசன் அலிக்குமிடையிலான பிரச்சினையின் போது, ஒரு கட்டத்தில் ஹசன் அலி சோர்ந்து போனார். இதன்போதுதான் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தின் நேரடியான ஆதரவு ஹசன் அலிக்குக் கிடைத்தது. ஹசன் அலிக்கு ஆதரவாக, மு.காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களுக்கு, தவிசாளர் பஷீர் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஊடகங்களிலும் வெளியானது. பஷீர் எழுதிய அந்தக் கடிதம் நிலைமையினை புரட்டிப் போட்டது. பஷீரின் கடிதம் ஹசன் அலிக்கு பெரும் பலத்தினைச் சேர்ந்தது. மு.கா தலைவர் ஹக்கீமை அந்தக் கடிதம் மௌனிக்கச் செய்தது. இதனால், மு.கா தவிசாளர்
பஷீர் சேகுதாவூத்தை அனுசரித்தே, ஹக்கீம் விவகாரத்தில் முடிவுகளை எடுக்கும் நிலைக்கு ஹசன் அலி தள்ளப்பட்டுள்ளார். ஹக்கீமுடனான பிரச்சினையில்,
பஷீருடைய விருப்பத்துக்கு மாறாக ஹசன் அலி முடிவுகள் எதனையும் எடுக்க மாட்டார்.
இதனால், ஹசன் அலியை விடவும், கட்சியின் தவிசாளர் பஷீர் மீதுதான் தலைவர் ஹக்கீம் அதீத கடுப்பில் உள்ளார். ஹசன் அலியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தடையாக, தவிசாளர்
பஷீர்தான் இருக்கின்றார் என்கிற முடிவுக்கு ஹக்கீம் வந்துள்ளார். நேற்று முன்தினம் அட்டப்பள்ளத்தில் நடைபெற்ற உயர்பீட உறுப்பினர்களுடனான சந்திப்பில், ஹசன் அலியை விடவும் தவிசாளர் பஷீர் தொடர்பிலேயே ஹக்கீம் தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் கூறினார்.
ஆக, மு.காங்கிரஸுக்குள் எழுந்துள்ள இந்த பிரச்சினையானது அவ்வளவு சீக்கிரத்தில் அடங்கிப்போகாது. அத்தனை இலகுவாகவும் முடிவுக்கு வராது.
இந்த நிலைவரம் நீடிப்பது கட்சிக்கு நல்லதல்ல என்பது கட்சியை நேசிப்பவர்களின் ஆதங்கமாகும். உள்ளூராட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஏற்கெனவே, கட்சி தொடர்பில் ஆயிரத்தெட்டு விமர்சங்கள் உள்ளன. இப்போது, ஹசன் அலி விவகாரமும் சேர்ந்துள்ளது. இந்த நிலைவரமானது கட்சியைப் பலவீனப்பபடுத்திவிடும். உள்ளூராட்சித் தேர்தலில், இதன் பிரதிபலனை கட்சி அனுபவிக்க நேரிடும் என்று ஆதரவாளர்கள் கவலை கொள்கின்றனர்.
இன்னொருபுறம், மு.காங்கிரஸுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், கட்சித் தலைவர் ஹக்கீம் இதுவரை நியாமான வகையில் பங்கீடு செய்து முடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுக்களும் அநேகமான பிரதேசங்களில் உள்ளன.
இவை அனைத்தும், அடுத்த தேர்தலில் மு.காவின் கழுத்தை நிச்சயம் இறுக்கும். சந்தோசமான முடிவுகளை அந்தத் தேர்தல்கள் மு.காவுக்குப் பெற்றுக்கொடுக்குமா என்பது சந்தேகமாகும்.
மு.காங்கிரஸின் உட்போர் ஒருபுறம் இவ்வாறு கட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் எதிராளிகள் பலம்பெற்று வருகின்றமையினையும் காணமுடிகிறது.
மு.காங்கிரஸின் இதயம் என்று வர்ணிக்கப்படுவது அம்பாறை மாவட்டமாகும். அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் பெறுகின்ற வெற்றி, தோல்விகளை வைத்தே, அந்தக் கட்சியின் பலம் கணிப்பிடப்படும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு நேரடி அரசியல் பகையாளியாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா இருக்கின்றார். கடந்த பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோல்லியடைந்தமையினால், அவரால் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுவந்த அச்சுறுத்தல்கள் கிட்டத்தட்ட இல்லாமல் போயின. முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைவதற்கு காரணங்கள் பல இருந்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதாவுல்லா ஆதரவு வழங்கியமையும், மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் அதாவுல்லா போட்டியிட்டமையும் அவரின் தோல்விக்குப் பிரதான காரணங்களாகும்.
அந்தவகையில், தனது தோல்விக்கான காரணங்களைப் புரிந்து கொண்ட அதாவுல்லா, அவற்றினைச் சரி செய்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டு வருகின்றமையினை அரசியல் அரங்கில் அவதானிக்க முடிகிறது. மட்டுமன்றி, அரசியல் ரீதியாக தனக்கு ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து மீள எழுவதற்கான செயற்பாடுகளையும் அவர் மேற்கொள்கின்றார். அதன் ஒரு கட்டமாக, தனது கட்சியான தேசிய காங்கிரஸின் தேசிய மாநாட்டினை அதாவுல்லா அண்மையில் நடத்தி முடித்திருந்தார். அந்த மாநாட்டில் மேற்கொண்ட சில தீர்மானங்களினூடாக, பெருந் தேசியக் கட்சிகளின் பார்வையினை தனது பக்கம் திருப்பவும் முயற்சித்திருந்தார்.
இப்போது, அடுத்த கட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா நகர்ந்துள்ளார். மஹிந்த ஆதரவைக் கைகழுவி விட்டு, மைத்திரியுடன் கைகோர்த்துள்ளார். தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் பங்காளியாக இணைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரியுடன் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
இவையெல்லாம் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு அரசியலில் புத்தெழுச்சியினை நிச்சயம் வழங்கும். எதிர்வரும் தேர்தல்களில் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறது. முஸ்லிம் காங்கிரஸைப்
போலவே, அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸும் இனி ஆளுங்கட்சிதான். இந்த நிலைவரமானது முஸ்லிம்
காங்கிரஸுக்கு கவலைதரும் செய்தியாகும். இத்தனை சீக்கிரத்தில் அதாவுல்லாவின் கட்சிக்கு இப்படியோர் அந்தஸ்துக் கிடைக்கும் என்று, யாரும் நினைக்கவில்லைதான்.
ஆக, கட்சிக்குள், ஹசன் அலியினால் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினையினை ஒருபுறம் எதிர்கொண்டவாறே, கட்சிக்கு வெளியில் அதாவுல்லா போன்றோரின் மீள் எழுச்சிகளையும் எதிர்கொள்வதென்பது முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய சிரமத்தை ஏற்படுத்தும். மலைக்கு மாடேற்றும் கதையினை அடுத்த தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் படிக்க நேரிடலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் அதிகமானவற்றுக்கு அதன் தலைவர்களின் பதவி ஆசைகளும், அவற்றினைக் குறிவைத்து நடத்தும் யுத்தங்களுமே காரணங்களாகும். இந்தப் பதவிச் சண்டைகளில், சமூக நலன் என்பது மருந்துக்கும் கிடையாது. ஆனால், சமூக நலனை முன்னிறுத்தியே, தாம் இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வதாக ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொள்கின்றார்கள்.
இந்த நிலைவரம் இப்படியே போகுமானால், அடுத்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயம் அடிவாங்கும். கடந்த பொதுத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸானது அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டமையினால்தான் மூன்று ஆசனங்களை வென்றெடுக்க முடிந்தது. இது எல்லோரும் அறிந்த உண்மையாகும். கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தால், சிலவேளை ஓர் ஆசனம் மட்டுமே கிடைத்திருக்கக் கூடும்.
எனவே, எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸுக்குள் நடந்து கொண்டிருக்கும் பதவிச் சண்டைகளுக்கு முடிவு காணப்படாது விட்டால், கட்சி கரையேறாது.
மு.காங்கிரஸின் உட்கட்சிப் போரானது, அதாவுல்லா போன்ற வெளியிலுள்ள எதிராளிகளுக்கு மகிழ்சியான விடயமாகும். உள்ளுக்குள் உடைந்து கிடக்கும் கட்சியொன்றினை வெளியில் சேதப்படுத்துவதென்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது.
போதாக்குறைக்கு, அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கடந்த பொதுத் தேர்தலில் அழுத்தமாகக் கால் பதித்திருக்கிறது. வெறும் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கடந்த பொதுத் தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாட்தின் கட்சி ஓர் ஆசனத்தை இழந்தது. ஆக, எதிர்வரும் தேர்தலொன்றில் ரிஷாட் பதியுதீனின் பலம் இன்னும் வலுக்கும். இதனால், மு.காங்கிரஸ் இன்னும் இழக்கும்.
ஹக்கீமும் - ஹசன் அலியும் பொருதிக் கொள்ளும் இந்தப் போரில், யார் வெல்வார், யார் தோற்பார் என்பதை அனுமானித்துச் சொல்ல முடியாது விட்டாலும், இந்த இருவரின் பதவிச் சண்டையினால் கட்சி தோற்று விடப்போகிறது என்பதை மட்டும் அறுதியிட்டுக் கூடலாம்.
கட்சியைப் பற்றி சிந்திக்காதவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago