Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 01 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
கடந்த நான்கைந்து நாட்களுக்குள், முஸ்லிம்களின் சமூக வலைத்தளங்களை இரண்டு புகைப்படங்கள் நிரப்பியிருந்தன. ஒன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வில்பத்து விவகாரம் தொடர்பாக தேரர் ஒருவருடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகின்ற புகைப்படம். மற்றையது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஒரு குழந்தையுடன் பொழுதைக் கழிக்கும் புகைப்படமாகும்.
'அமைச்சர் ரிஷாட் முஸ்லிம் சமூகத்துக்காக மாற்றுமத மதகுருவுடன் தொலைக்காட்சியில் விவாதம் புரிந்து கொண்டிருக்கின்ற சமகாலத்தில், முஸ்லிம்களின் தேசிய தலைவர் என்று சொல்லப்படும் அமைச்சர் ஹக்கீம் அது பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் தனது பேரப்பிள்ளையுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பதாக' சிலர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, இவ்விரு போட்டோக்களையும் மாத்திரம் வைத்துக் கொண்டு 'இவர்களில் யார் உண்;மையான முஸ்லிம் தலைவர்?' என்ற கருத்துக் கணிப்புக்களையும் மேற்கொண்டிருந்தனர்.
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபற்றியதை உலக சாதனை போன்று சிலர் காண்பிக்க முனைவதானது, ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்மானம் வெளியாகிய போது மு.கா. தலைவர் ஹக்கீமின் கடிதத்துக்கு பலன் கிடைத்து விட்டதாக, அவரது 'கோயாபல்ஸ்கள்' எழுதிக் கொண்டிருந்ததை நினைவுபடுத்துகின்றது.
இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்கள் என்றே சொல்ல வேண்டும். எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும், தம்முடைய எதிர்த்தரப்பு அரசியல்வாதியை விமர்சிக்கும் பண்பைக் கொண்டவர்களாகவே தமது பெரும்பாலான ஆதரவாளர்களை வளர்த்து விட்டிருக்கின்றார்கள். எனவே ஆதரவாளர்களும் விசிறிகளும் பல சந்தர்ப்பங்களில் தம்முடைய பக்குவப்படா தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றனர். ஹக்கீமோ ரிஷாட்டோ, ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தாம் செய்ய வேண்டிய ஏதாவது கடமையைச் செய்து விட்டால், அவருடைய விசிறிகள், அதை நான்கு மடங்கால் பெருக்கி, பெருப்பித்து ஒரு பெரிய இமாலய சாதனை போல் காண்பிக்க முனைவது எப்போதும் நடப்பதுதான்.
முஸ்லிம் தலைவர்களின் கொளதிறன் (கெப்பாசிற்றி) என்ன, என்னென்ன விடயங்களுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்? எதற்காக விமர்சிக்க வேண்டும் என்பதை அந்த குறிப்பிட்ட கட்சியின் உண்மையான போராளிகளுக்கும் புத்தியுள்ள ஆதரவாளனுக்கும் நன்றாக விளங்குகின்றது. அதனால் தமது தலைவன் தவறிழைக்கின்ற போது எதிர்ப்பக்கம் இருந்து வரும் விமர்சனத்தை நடுநிலையாக நின்று ஏற்றுக் கொள்கின்றான். ஆனால், கட்சித்லைவர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரியும் விசிறிகளுக்கும் தீவிர பக்தன்களுக்கும் இந்த பண்பு கிடையவே கிடையாது. அவர்கள் தம்முடைய தலைவர்கள் செய்வது எல்லாம் நூற்றுக்கு நூறுவீதம் சரியென காண்பார்கள். தலைவர் என்னதான் கள்ளவேலை பார்த்தாலும் அதற்காக அவரை யாரும் விமர்சிக்க கூடாது என்ற மனப்பாங்குடன் இருப்பார்கள்.
இவ்வாறான பேர் வழிகள்தான், மேற்படி புகைப்படங்களை ஒப்பீட்டாய்வுக்கு உட்படுத்தி இருக்கின்றார்கள். அமைச்சர் ரிஷாட்டின் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை, மு.கா. தலைவர் ஹக்கீமின் தனிப்பட்ட புகைப்படம் ஒன்றுடன் ஒப்பீட்டு விமர்சனங்களை முன்வைப்பது உண்மையில் வேலையற்றவர்களின் வேலை என்றே சொல்ல வேண்டும். இரண்டு புகைப்படங்களை வைத்துக் கொண்டு இரண்டு அரசியல்வாதிகளை மதிப்பீடு செய்வது என்பது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக இருக்குமென்று தெரியவில்லை.
பல முஸ்லிம் தலைவர்கள் மக்களிடம் காட்டுகின்ற முகத்துக்கும், அவர்களது தனிப்பட்ட சுயரூபத்துக்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றது. ஆயினும், எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று உள்ளது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தமது குடும்பத்தில் தன்னுடைய வகிபாகத்தை அவர் மறந்து செயற்பட முடியாது. தமது குடும்பத்திடம் அன்பு செலுத்தாதவன், அவர்களை கவனிக்காத ஒருவன் எப்படி ஒரு சமூகத்தை நேசிப்பவனாக, அதில் அன்பு செலுத்துபவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது. எந்த முஸ்லிம் தலைவர்களும் முற்றும் துறந்த துறவிகள் அல்ல. அரசியலுக்காக முழுநேரத்தையும் செலவிடும் தனிக்கட்டைகளும் அல்லர். அவர்கள் எல்லோருமே குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள். அவர்களுடைய வங்கிக்க கணக்குகளை மக்களின் பணத்தால் நிரப்புகின்றார்கள், போலிப் பெயரில் சொத்துக்களை வாங்கிப் போடுகின்றார்கள்.
உலக வரலாற்றில் அரசியல் பிரபலங்களின் வாழ்க்கையும் இவ்வாறுதான் இருந்திருக்கின்றது. எதிரிப்படைகள் தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த வேளையிலும், உலகில் மிகப் பெரிய வன்கொடுமைக்கார சர்வாதிகாரியாக கருதப்படும் அடோல்ப் ஹிட்லர், தனது காதலியின் மடியில் படுத்துக் கொண்டு கவிதை சொல்லிக் கொண்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பில் கிளின்டன் ஆபிரிக்காவுக்கு அமெரிக்க படைகளை அனுப்பிவிட்டும், இஸ்ரேல்-பலஸ்தீன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த நடுநிலை வகித்துக் கொண்டும் ஏககாலத்தில், வெள்ளை மாளிகைப் பணியாளரான மோனிகா லிவின்ஸ்கியின் கட்டுக்குள் கிடந்தார். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் தன்னுடைய குடும்பத்தினருடன் ஒரு சாதாரண குடும்பத் தலைவன் போன்று பொழுது போக்குகின்றார்.
உள்நாட்டு அனுபவத்தைப் பொறுத்தமட்டில் - வடக்கில் விடுதலைப் புலிகளுடன் பாரிய மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி பிள்ளைகளுடனான உலகத்தில் மிக ஆடம்பரமாக சங்கமித்திருந்தார். அதே சந்தர்ப்பத்தில், மிகவுன்னத போராளியென குறிப்பிடக்கூடிய புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எங்கோ ஒரு மறைவிடத்தில் ஏதோ ஒரு அடிப்படையில் மனைவி, பிள்ளைகளுடன் சாதாரண மனிதனைப் போன்று வாழ்ந்திருக்கின்றார். இதுதான் யதார்த்தம். இப்பேற்பட்ட பெரும் பிரபலங்களுக்கே இந்நிலைமை என்றால், நமது அரசியல்வாதிகள் எம்மாத்திரம்?!
எனவே, ரிஷாட் பதியுதீன், வில்பத்து விவகாரத்தில் சிக்குண்டு, அங்குள்ள மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில், கிடைக்கப் பெற்ற ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஹக்கீமை விமர்சிக்க வேண்டியதில்லை. ஒருவேளை ஹக்கீம் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் ரிஷாட் தனது சொந்த வேலை ஒன்றில் லயித்து இருந்திருக்கலாம். இது மிகமிக சகஜமானது. இதை வைத்துக் கொண்டு விமர்சனங்களையும் கபடத்தனமான கருத்துக்களையும் முன்வைப்பதானது ஒரு தந்தை, பாட்டன், குடும்பத் தலைவன் என்ற பொதுவான உணர்வுகளை கூரிய நகங்கள் கொண்டு கீறுவதற்கு ஒப்பானதாகும்.
ஆனால், இந்தக் கருத்து மோதலானது, இவ்விரு புகைப்படங்களுக்கும் அப்பாலான சில மனப் பதிவுகளை நிறுவிக்காட்டியுள்ளது. அது என்னவென்றால், தேசிய தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் ஹக்கீம் பற்றியும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பற்றியும் மக்களிடம் முன்னர் காணப்பட்ட பழைய மதிப்பீடுகள் மாற்றமடைந்து செல்வதையும், தாய்க்; கட்சி ஒன்றின் தலைவர் செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் இருக்கின்ற போது, புதிதாகக் கட்சி ஆரம்பித்த ஒருவர் துணிகர செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதும் மக்களிடையே கடுமையான அவதானத்தைப் பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை.
இந்த நாட்டில் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் கட்சி ஒன்று கிடையாது. அதனால் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி அல்லது ஏக தலைமை என்று யாரும் இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல் பெரும்பகுதியை முஸ்லிம் காங்கிரஸ் நிரப்புகின்றது. எனவே, இந்நாட்டில் எப்பாகத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுகின்ற போது, அது பற்றி பேச வேண்டிய தலையாய கடப்பாடு, மு.கா. தலைவருக்கும் அதன் எம்.பி.க்களுக்கும் இருக்கின்றது. ஏனெனில் மு.கா. என்பது மக்களின் சொத்து. அதை வைத்துக் கொண்டுதான் ஹக்கீம் உள்ளிட்ட எல்லோரும் இன்று அரசியல் அடையாளத்தை பெற்றிருக்கின்றார்கள். எனவே, கட்சிக்கு சொந்தக்காரர்களான மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு மு.கா. கட்சிக்காரர்களே முன்னிற்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய நல்லெண்ணமும் அது தொடர்பில் மக்கள் வைத்துள்ள விசுவாசமும் ஸ்தாபக தலைவர் அஷ்ர‡பினால் ஏற்பட்டதாகும். இதில் தற்போதைய தலைவரின் பங்கு மிகச் சொற்பமானதே. எவ்வாறிருப்பினும் அக்கட்சியின் தலைவர் என்ற வகையில், முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் முன்னுக்கு நிற்பவராக ரவூப் ஹக்கீமே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்பணியை அவர் எந்தளவுக்கு செய்திருக்கின்றார் என்பது ஆய்வுக்குரியது. அஷ்ர‡ப் என்ற பெரியதொரு ஆளுமை வகித்த தலைமைப் பதவியில் ஹக்கீம் அமர்ந்த போது அவரும் மறைந்த தலைவர் போன்று இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்த்து பல வருடங்களுக்கு முன்னாலேயே ஏமாந்து போயினர். ஆனால், அப்போதிருந்த நிலையில் ஹக்கீமுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு வேறு அரசியல்வாதிகள் இருக்கவில்லை. ஆனால், இந்நிலைமை இப்போது மெல்ல மெல்ல மாறி வருவதாக தெரிகின்றது.
ஹக்கீம், தலைவருக்கான நல்ல பண்புகளில் அதிகமானவற்றைக் கொண்டிருக்கின்றார். ஆனால், ஏதோவொரு குறை மக்களிடத்தில் இருக்கவே செய்கின்றது. குறிப்பாக மக்களுக்காக பேசுவதற்கு அவர் நல்லநேரம் பார்ப்பவர் போல தென்படுகின்றார். யாருக்கும் நோகாமல் நொங்கு எடுக்க வேண்டும் என்பதற்காக, பல முக்கிய விடயங்களில் அவர் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக போராளிகளே குறைப்பட்டுக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது. அதற்காக மு.கா. தலைவர் எதுவும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. அவர் மிகக் கவனமாக அரசியல் செய்து வருகின்றார். இந்த சமூகத்துக்காக பல காரியங்களை செய்திருக்கின்றார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் மக்கள் அவரிடமிருந்து இன்னும் நிறை எதிர்பார்க்கின்றனர். அதனை அவர் செய்யாவிட்டால், அவ்வாறு செய்கின்ற ஒருவன் நிழல் தலைவனாகி விடுவான் என்பதே உலக நடைமுறை.
மஹிந்த ஆட்சியில் தனது கட்சியை இணைத்துக் கொண்டு இரண்டறக் கலந்திருந்த மு.கா. தலைவர், இனவாத செயற்பாடுகள் தொடர்பான தனது பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதற்கு நீண்டகாலம் எடுத்துக் கொண்டார். ஜனாதிபதித் தேர்தலின் போது, அக் கூட்டணியில் இருந்து வலுக்கட்டாயமாகவே அவரை பிரித்தெடுக்க வேண்டிய நிலையும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில், மேடைகளில் பேசப்படுகின்ற பல விடயங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தலைவருக்கு உண்மையில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை என்று கட்சி உயர்பீட உறுப்பினர்கள் தமக்கிடையே பேசிக் கொள்கின்றனர். குறிப்பாக கல்முனை (கரையோர) மாவட்டத்தை பெற்றுக் கொடுத்தால், தனது தனிப்பட்ட அரசியல் படுத்துவிடும். கலப்பு முறையிலான அடுத்த தேர்தலில், சிங்கள மக்கள் வாழும் மத்திய மலைநாட்டில் தமது வெற்றியை உறுதிப்படுத்துவது பெரும் பாடாகிவிடும் என்று அவர் பயப்படுவதாக, அவர்கள் கருதுகின்றனர். எனவே, இதுபோல எல்லா விடயங்களிலும், யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் ஹக்கீம் இருப்பதாகவும் அதனாலேயே மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ந்து வருவதாகவும் ஒரு ஊகம் இருக்கின்றது.
முக்கியமாக, வில்பத்து விவகாரத்தில் மு.கா. தலைவர் எதுவும் பேசாமல் இருக்கின்றார். இது வடபுல மக்களின் பிரச்சினை என்பதால் ரிஷாட் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருக்கின்றாரா? என்று கேட்டால், 'இல்லையில்லை, தலைவரும் குரல் கொடுத்தால் இனவாதிகள் இதனை பெரிய பிரச்சினையாக ஆக்கி விடுவார்கள். எனவேதான் அமைதிகாக்கின்றார்' என்று ஒரு பதிலை சிலர் முன்வைக்கின்றனர். அது உண்மையாக இருந்தாலும், ஆகக் குறைந்தபட்சம் 'வில்பத்து பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்' என்றாவது கூறவில்லை என்பது, புதிராகவே இருக்கின்றது.
தீகவாபி காணி அபகரிப்புப் பிரச்சினை ஏற்பட்ட போது, மறைந்த தலைவர் அஷ்ர‡ப், சோம தேரருடன் விவாதமொன்றில் ஈடுபட்டார். அப்படிப் பார்த்தால் அமைச்சர் ஹக்கீமே வில்பத்து விவகாரத்தையும் கையாண்டிருக்கலாம். ஆனால், அமைச்சர் ரிஷாட் அதனைச் செய்திருக்கின்றார். சூடுமிதித்த மாடு வைக்கோல் தின்றிருக்கலாம் என்பது போல, இதில் ரிஷாட்டுக்கு சுயநலன்களும் கொஞ்சம் இருக்கலாம். ஆனால் இது 90 சதவீதம் சமூக நலன் சார்ந்தது என்பதால் மு.கா. வுக்கு இது விடயத்தில் பாரிய பொறுப்பிருக்கின்றது. ஆனால், அதை அக்கட்சி சரியாக நிறைவேற்றவில்லை.
அதுமட்டுமல்ல, இப்படியான ஒரு சிக்கலுக்குள் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்றும் மத்ரஸாக்களை சோதனையிட வேண்டும் என்றும் இனவாதிகள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் போது, மதரீதியான அடக்கு முறைகள் எல்லாம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று மு.கா. தலைவர் கூறியுள்ளதாக ஒரு செய்தியை வாசித்தேன். இது ஒன்றில் காமடியாக இருக்க வேண்டும். அன்றில் மேல் குறிப்பிட்ட சந்தேகத்தை உண்மையாக்குவதாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் எல்லா முஸ்லிம்களினதும் ஏக தலைவர்கள் என்று இப்போது யாருமில்லை. ஆனால், நாம் எவ்வாறான பொறுப்புக்களை நிறைவேற்றினால் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக இருக்கலாம் என்பதைச் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago