Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Administrator / 2017 ஏப்ரல் 07 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மொஹமட் பாதுஷா
இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மை இனத்தவராக காணப்படுவதோடு தேசிய ரீதியான சனத்தொகையின் அடிப்படையில் மூன்றாவது பெரிய இனக் குழுமமாக இருக்கின்றனர். நாட்டின் எல்லாப் பாகங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலேயே முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்கின்றனர். கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலேயே முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அதிகளவான தேர்தல் தொகுதிகளும் காணப்படுகின்றன.
ஆகவே, முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம் மிகவும் இன்றியமையாத பிராந்தியமாகும். தமிழர்களுக்கு வடமாகாணம் எப்படியோ சிங்கள மக்களுக்கு தென்மாகாணம் அல்லது தென்பகுதி எந்தளவுக்கு முக்கியமானதோ அந்தளவுக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கின் அரசியலும் இன்னபிற விடயங்களும் முக்கியமானவையாகும்.
இன்னும் தெளிவாகச் சொன்னால், வடக்கு, கிழக்கு மாகாணங்களும் அதிலும் பிரதானமாக கிழக்கு மாகாணமானது வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லிம்களின் அரசியலிலும் இருப்பிலும் மறைமுகமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றது. வடக்கில் தமிழர்களின் அரசியலும் போக்குகளும் தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கம் செலுத்துவதாக இருக்கும். வடக்கில் சிங்களவர்கள் மீதுதாக்குதல் ஏதாவது மேற்கொள்ளப்படுமாயின் அதன் எதிர்வினையை கொழும்பில் ஒரு முட்டுச்சந்தில் எதிர்பார்க்க முடியும்.
அதேபோன்று, கிழக்கில் ஒரு புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஓர் இடத்தை முஸ்லிம்கள் தமது பூர்வீகம் என நியாயமாக உரிமை கொண்டாடும் போது, அது தென்னிலங்கை கடும்போக்கு சக்திகளிடையே பாதகமான எதிரொலி ஒன்றை ஏற்படுத்தக் கூடும். வடக்கில் தமிழர்களுக்கு அதிகாரமிருப்பதும், கிழக்கில் முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இருப்பதும் வடக்கு, கிழக்குக்கு வெளியிலான சிறுபான்மை மக்களுக்கும் இன்றியமையாததாக காணப்படுகின்றது. எனவேதான்,தமிழர்களும் முஸ்லிம்களும் குறைந்தபட்சம் வடக்கையும் கிழக்கையுமாவது தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கு பிரயாசைப்படுகின்றனர் என்றால் மிகையில்லை.
எவ்வாறிருப்பினும், வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களுக்கு என்று வித்தியாசமான அரசியல் கலாசாரமும் போக்கும் இருக்கின்றது. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தனித்துவ அடையாள அரசியல் அடையாளத்துக்குள் தம்மை உட்புகுத்தியிருக்கின்றார்கள் என்று சொன்னால், அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் பெரும்பாலும் தனித்துவஅடையாளஅரசியலுக்குள் இல்லை என்றே கூற வேண்டும். அதனைப் பிரத்தியேகஅரசியல் எனக் கூறலாம்.
இந்த அரசியல் என்பது பெருந்தேசியக் கட்சிகளைச் சார்ந்திருக்கின்ற அதேவேளை, ஒவ்வொரு பிரதேசங்களிலும் இதனது பண்பு மாறாதிருக்கின்றது. வடக்கு, கிழக்கைப் போல, கொழும்பிலும் தென்பகுதியிலும் மலைநாட்டிலும் வடமேல் மற்றும் வடமத்திய மாகாணத்திலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் அரசியல் பற்றி, சாராம்சமான தனியொரு நிலைப்பாட்டை எடுப்பது சற்றுச் சிரமமாகும். ஏனெனில், அவர்கள் வாழும் சூழல், அரசியல் பின்புலம், அபிலாஷைகள் வேறுபடுகின்றன.
ஆனாலும், இலங்கையில் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவீதமான முஸ்லிம்களே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாக ஒரு தகவல் கூறுகின்றது. அதாவது, கொழும்பு, கண்டி, குருணாகல், களுத்துறை, புத்தளம், கம்பஹா உள்ளிட்ட மேலும் பல வெளிமாவட்டங்களில் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் ஐதாக வாழ்கின்றனர். அந்த வகையில் வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் அரசியல், இருப்பு, அவர்களுடைய அபிலாஷை மற்றும் எதிர்காலம் குறித்தும் சமகாலத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. அம்மக்கள், முஸ்லிம் கட்சிகளுக்கு கொத்தாக வாக்களிக்கவில்லை என்பதாலோ, அன்றேல் அவர்களுடைய தேவைப்பாடுகளும் நிலைப்பாடுகளும் மாறுபடுகின்றன என்பதற்காகவோ வடக்கையும் கிழக்கையும் விட எண்ணிக்கையில் அதிகமாககக் காணப்படும் முஸ்லிம்களின் விருப்பு வெறுப்புக்களை புறக்கணித்துவிட முடியாது.
வடக்கு, கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் எப்போதுமே பெரும்பான்மைக் கட்சிகளுடனேயே பெரும்பாலும் ஒன்றித்துப் போயிருக்கின்றனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கோ வேறு முஸ்லிம் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களுக்கோ சிறிதளவு வாக்குகளை அளிக்கின்றனர் என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலுமே அவர்களது அரசியல் பெரிதும் தங்கியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
வடக்கு,கிழக்கில் உருவான முஸ்லிம் கட்சிகள் அதற்கு வெளியிலும் கிளை பரப்பியிருக்கின்ற போதிலும் இதுவரை முஸ்லிம்கள் கணிசமாக வாழும் வெளிமாவட்டங்களில் முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களித்துக் கிழக்கைப் போன்று, குறிப்பிடத்தக்க அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் பெற முடியாது போயிருக்கின்றது என்பது மிக முக்கியமானது. முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் தமது ஆஸ்தான பெரும்பான்மைக் கட்சிகளின் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் தென்னிலங்கை முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருப்பதாகச் சொல்ல முடியும்.
வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளும் அதற்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் சிக்கல்களும் தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியவையே. இவ்விரண்டு நிலப்பரப்புக்களிலும் வாழும் மக்களுக்கு இடையே இடைவெட்டுப் போன்ற ஒத்த தன்மையுள்ள பிரச்சினைகளும் இருக்கின்றன. வேறுபட்ட தன்மையுள்ள பிரத்தியேக விவகாரங்களும் உள்ளன. கிழக்கில் இனவாதத்தை கையாள்வது போன்று தென்னிலங்கையில் கடும்போக்கு சக்திகளின் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது. இவ்வாறுதான் ஏனைய பல விடயங்களும் பொதுவாகத் தனித்தனி அணுகுமுறைகளை வேண்டி நிற்கின்றன.
வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் தமிழ், சிங்கள மக்களுடன் பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர். இந்தச் சூழலில் முஸ்லிம்கள் தங்களது மதம், உரிமை, இனத்துவ அடையாளம் என்பவற்றை கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலை உள்ளது; இதுதான் யதார்த்தமாகும். தங்களது தனித்துவ அடையாளங்களுக்காக பொங்கி எழுவதைக் காட்டிலும், பக்கத்து வீட்டில் வாழ்கின்ற பண்டாரவையும் முன்வீட்டில் உள்ள முத்துலிங்கத்தையும் பகைத்துக் கொண்டு தமது இருப்பைக் கேள்விக்குட்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் அம்முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அநியாயங்கள் நடைபெறுகின்றபோது, தலைநகர் போன்ற ஓரிரு இடங்களைத் தவிர முஸ்லிம்கள் வசிக்கும் பிரதேசங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்வைக்கப்படுவதில்லை என்றும் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு போராட்ட குணம் இல்லை என்றும் சிலர் சொல்வதுண்டு. இது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும். ஏனெனில், இவ்வாறு அந்த மக்கள் பொறுமை காப்பதற்கும் மேற்சொன்ன விடயங்களே பிரதான காரணமாகும்.
சமகாலத்தில், முன்னமே குறிப்பிட்டது போன்று, சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளோடும் தங்களைச் சுற்றி வாழ்கின்ற மூவின மக்களோடும் எவ்வித பாரபட்சமும் இல்லாத உறவைப் பேண வேண்டியிருக்கின்றது.
இந்த இலட்சணத்தோடே அவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்கின்றனர். தனித்துவம், தனிஅடையாளம், முஸ்லிம் கட்சி என்று பேசப் போனால் அவர்கள் நிம்மதியற்ற இருப்புக்குள் தள்ளப்பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கின்றது.
வடக்கு கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களுக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. காணிகளின் எல்லைப் பிரச்சினைகள், மத அனுஷ்டானம் தொடர்பானவை, இன,மத நெருக்குவாரங்கள், பொறுமையைச் சோதிக்கும் காரியங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் அனுமதிகளில் இனப்பாகுபாடு, கடும்போக்கு சக்திகளின் கட்டுக்கடங்காத் தன்மை, சிவில் பிரச்சினைகள் எனப் பல அன்றாடப் பிரச்சினைகளும் அபிலாஷைகளும் இருக்கின்றன.
மறுபுறத்தில், வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு அன்றாட பிரச்சினைகளுக்கு புறம்பாக உரிமைசார் அபிலாஷைகள் அதிகமுள்ளன. குறிப்பான, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம், இனப் பிரச்சினைத் தீர்வு, தேர்தல் முறைமை மாற்றம், தனித்துவ அடையாள அரசியலைப் பாதுகாத்தல், காணிப் பிரச்சினைகள், சிவில் விவகாரங்கள், நில ஆக்கிரமிப்புகள் என ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன.
இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் தென்னிலங்கை மற்றும் மலைநாட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகளவுக்கு சிவில் விவகாரங்களாக, அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கான தேவைப்பாடுகளாகவே இருக்கின்றன. எனவே, அதனை அவர்கள் அங்குள்ள அரசியலைப் பயன்படுத்தியே மிகவும் புத்திசாலித்தனமானதாக செய்து முடிக்க வேண்டியுள்ளது.
வெளியிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் தார்மீத ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும், தமது ஆஸ்தான பெருந்தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகளையும் அங்குள்ள ஏனைய இன மக்களையும் முன்னிலைப்படுத்துவது ஆரோக்கியமானதாக அமையும்.
ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிரச்சினைகள் சற்று பாரதூரமானவையும் உரிமையுடன் தொடர்புபட்டவையும் எனலாம். இதனைப் பெருந்தேசியக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து, ஜனநாயக ரீதியாகப் பெற்றுக் கொள்வதற்காக தனித்துவ அரசியலை இங்குள்ள முஸ்லிம்கள் பயன்படுத்த முடியும். முஸ்லிம் கட்சிகளதும் தனிஅடையாள அரசியலில் தோற்றம் பெற்ற அரசியல்வாதிகளினதும் வகிபாகம் இங்குதான் முக்கியமாகின்றது. அதேபோன்று, நாட்டின் பல பாகங்களிலும் சிறிய அளவில் வாழ்கின்ற மலே முஸ்லிம்கள் மற்றும் போரா, மேமன் போன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிற்சில விடயங்களில் சோனகர்களின் வாரிசுகளை விடவும் வேறுபட்ட அபிலாஷைகள் இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே, வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளும் அதற்கு வெளியில் உள்ள முஸ்லிம்களின் விவகாரங்களுக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகள், பண்பியல்புகளை நன்றாக கூர்ந்து அவதானித்து, அதற்கேற்றாற்போலான அரசியல் அணுகுமுறை ஒன்றை முஸ்லிம்கள் கையாள்வதே ஆரோக்கியமானதும் சாலப் பொருத்தமானதும் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago