Janu / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர்
கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசாங்கம் அமைத்திருக்கிறது. முன்னைய அரசாங்கங்களின் காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பாகவே இதுவும் அமைந்திருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கூறிவடவும் முடியாது. அதே நேரத்தில் ஒரு இலக்கைக் கொண்டிருக்கின்ற தரப்புக்கு அவர்களது சிந்தனையைத் திசை திருப்பும் செயற்பாடாகவும் அமையலாம் என்றும் கூறலாம்.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது 2024ஆம் வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தாம் பெற்றுக் கொண்ட பெரும்பான்மையை கவனதில் கொண்டு உள்ளுராட்சித் தேர்தலை நடத்தினார். ஆனால் அத்தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உயர்ந்து வந்த ஆதரவு சற்று சரிந்திருந்தது. அந்தச் சரிவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்குக் காரணமாகும்.
அதன் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமலேயே நிழல் மாகாண சபையை தற்போதைய அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்பான முன் தயாரிப்பொன்று வெளியில் விடப்பட்டு அபிப்பிராயங்கள் திரட்டப்படுகின்றன. அரசியலமைப்பை புதிதாக உறுவாக்கவிருக்கிறோம் என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி இப்போது
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இதிலிருந்து வெளியில் சொல்லப்படுவதனைத் தவிரவும் வேறு ஒரு செயற்பாடு உள்ளே நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.
எதிர்ப்புகள் காணப்பட்டாலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்
சட்டம் தொடர்பான வரைபை வெளியிட்டதற்கு அரசாங்கத்துக்கு நற்சான்றுகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகள், முக்கியஸ்தர்கள் புதிய அரசியலமைப்பினுடைய விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கையில் ஏன் இவ்வாறானதொன்றை உருவாக்கிக் கொள்ள முனைகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இது ஒருபக்கமிருக்க ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா
இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கிறார். பிரபாகரன் சரணடைய முயற்சி
எடுக்கப்பட்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கருத்தொன்றை
கிளப்பிவிட்டிருக்கிறார். அதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்
புதல்வரும் தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச பதில் கருத்தையும் வெளியிட்டிருக்கிறார். பீல்ட் மார்சல் ஏன் இந்த நேரத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்பது தெரியாவிட்டாலும் இனவாதச் சிந்தனை, தென்பகுதி அரசியலில் ஒரு குழப்பமும் ஏற்பட இவருடைய கருத்து வழிகோலும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இந்த நிலையில்தான் மாகாண சபை தேர்தல் தொடர்பிலான அரசின் நிலைப்பாடும் அதனை இழுத்தடிப்பதற்கு அரசு முயல்வதும் வெளிப்பட்டிருக்கிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள ஒரு கட்சி ஒருவாரத்திலேயே அதற்கான சட்டச்சிக்கலைச் சீர் செய்யமுடியும். ஆனால் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்திருக்கிறது. இது
ஒரு ஏமாற்று வேலையே தவிர வேறொன்றுமில்லை.
இந்த குழுவை அமைப்பதற்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 06ஆம் திகதி
நடைபெற்றிருந்தது. எனினும், நீண்ட தாமதிப்புக்குப் பின்னரே குழு
உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் கூட்டம் நடைபெற்ற
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய
நிலையில், உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட தாமதம் கவலைக்குரியது என்று
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதானது சிறிய வட்டத்துக்குள் நடந்து முடிய வேண்டியதற்காக மேலும் பெரிய வட்டம் ஒன்றை உருவாக்கி மேலும் சிக்கலாக்கும் நடைமுறையே. மாகாண சபை முறைமையைப் பொறுத்தவரையில் முன்பிருந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் தங்களுக்குச் சாதகமான முறைமைகளை உருவாக்கி தமது ஆதிக்கத்தினை அதிகரித்துக் கொள்வதற்கே முனைந்திருக்கின்றன. அதே அடிப்படைச் சிந்தனையினையே இந்த தேசிய மக்கள்சக்தி அரசாங்கமும் கைக் கொள்கிறது எனலாம்.
தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் ஊடாக பல தசாப்தங்களாக போராடி வருகின்ற தமிழர்கள் பயன் பெற்றதனைவிடவும் ஏனைய மாகாணங்கள் பெற்றுக் கொண்டதே அதிகமாகும். 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன. 2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது.
ஆனால், அதன் பிறகு இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள்
நடைபெறவில்லை. தற்போது ஆளுனர்களின் ஆளுகைக்குள் இச் சபைகள் இயங்குகின்றன. அத்துடன் அங்குள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவு ரீதியாக பொறுப்பளிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் அனைத்து மாகாண சபைகளுக்குமான ஆளுனர்களையும் உடனடியாக நியமித்தார். அதற்கு எடுத்துக் கொண்ட அவசரம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் காணப்படவில்லைஎன்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு.
இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்
பொருட்டு 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக
13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது. அத்துடன்,
மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது. இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும்
உருவாக்கப்பட்டது. வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு
நாட்டைவிட்டு வெளியேறினார்.
2006இல் ஜே.வி. பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கதல் செய்த வழக்கினால்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகத் தேர்தல்கள்
நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவானது. பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே மக்களும் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். பழைய முறையிலானால் உடனடியாக நடத்திவிடலாம். ஆனால்
புதிய முறைறயிலாக இருந்தால் எல்லை நிர்ணயத் தீர்மானத்துக்கு முடிவு
வந்தாகவேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள
குழுவினரே முடிவைச்சொல்லியாக வேண்டும்.
முடிவுக்கு வரமுடியாமல் ஸ்தம்பித்துள்ள மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறையில் நடத்துமா, புதிய முறைமையில நடத்துமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்சியிலிருப்பவர்களை எதிர்த்து பழகிப்போன எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து ஆளும் கட்சியாக வந்த மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் காணப்படும் தாமதம் மேலும் அவர்களின் ஆதரவுக்கு சரிவைத் தேடிக் கொடுக்காததாக இருக்கவேண்டும்.
எது எவ்வாறானாலும், பழைய முறையிலா பழைய முறையலா என தீர்மானிக்கும் குழு
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுச் சரிவையும் கவனத்திலெடுத்து
தீர்மானத்திற்கு வரட்டும். தொடர்ந்தும் மாகாண சபை தேர்தல் தொடர்பில்
உரைநிகழ்த்தும் அரசியல் தரப்பினருடைய தொடர் முயற்சிக்கு வெற்றி
கிட்டட்டும். இந்தியாவின் தொடர் மௌனமுயற்சிக்கும் பலன் கிடைக்கட்டும்
என்று காத்திருப்போம். எதற்கும் மீண்டும் ஒரு காலங்கடத்தல்
நடைபெறாதிருக்கட்டும் என்று நம்பிக்கைகொள்வோம்.
எவ்வாறானாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய சுயநிர்ணயப் போராட்டத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையேனும் முழுமையாக நடைமுறைக்குவரும் காலம் உருவாதற்கான காலம் கனியட்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .