2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மனித உரிமைகள் – 2018

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதி அன்று சர்வதேச சமூகத்தால் அனுசரிக்கப்படுகிறது. இது 1948ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. மனித உரிமைகள் தினத்தின் முறையான ஆரம்பம் 1950 முதல், பொதுச் சபை 423 (V ) தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், அனைத்து நாடுகளையும்  ஆர்வமுள்ள அமைப்புகளையும் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதியை மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தது. பொதுச் சபை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டபோது, 48 நாடுகள் ஆதரவாகவும், எட்டு வாக்களிப்புகளில் பங்குபற்றாமலும், குறித்த தினம் "அனைத்து மக்களுக்கும் அனைத்து நாடுகளுக்கும் மனித உரிமை மேம்பாட்டுக்கான" நாளாக அறிவிக்கப்பட்டது.

 

எது எவ்வாறாயினும், இன்று ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை நிலைமை அரசியல்மயப்பட்டே இருக்கின்றது என்பதுடன் தொடர்ச்சியாக சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், எவ்வளவு தூரம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமையை பாதுகாப்பதில் இன்னும் தொடர்ச்சியாக செயற்படவேண்டும் என்பதை காட்டுவதாகவே உள்ளது.

 

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில், ஐக்கிய நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி நிக்கி ஹேலி மனித உரிமைகள் பேரவையை ஒரு "பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை அமைப்பு" என்றும், குறித்த மனித உரிமை பேரவை "இஸ்ரேல் மீது முடிவில்லாத விரோதத்தை" காட்டுகின்றது என்றும், ஐக்கிய  அமெரிக்க இராஜங்கச் செயலர் மைக் பொம்பயோ  குறித்த மனித உரிமைகள் சபையை "மனித உரிமை மீறல்களின் பாதுகாவலர்" என்றும் கூறி ஐக்கிய அமெரிக்கா மனித உரிமை சபையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்குக்கு - குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா மீதான சர்வதேச மனித உரிமை தொடர்பான எதிர்பார்ப்புக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்த முடிவாகவே பார்க்கப்படவேண்டியதாகும்.

 

இது தவிரவும் பல அரசியல் நடப்புக்களை சர்வதேச மனித உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் எண்ணத்தை தகர்க்கும் விடையங்களாகவே அமைகின்றது.

 

குறிப்பாக, ஹொங் கொங்கில் தொடர்ந்து நடைபெறும் போராட்டமும், சீனாவின் அடக்குமுறையும் மனித உரிமைகள் தொடர்பாக ஹொங் கொங்கில் சர்வதேசம் தலையிட வேண்டிய அவசியத்தை காட்டுவதாக உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, இம்மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட ஹொங் கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சட்டம், ஐக்கிய அமெரிக்க சட்டத்தின் கீழ் ஹொங் கொங்கின் நிலையை விசாரிக்க சட்ட தத்துவத்தை வழங்குகின்றது. அதன் ஒரு படியாக, இச்சட்டம், ஹொங் கொங்கில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது.

குறித்த சட்டத்தின் பிரகாரம், (1) ஹொங் கொங் சீனாவுக்கு திரும்புவது தொடர்பாக பிரித்தானியா மற்றும் சீனா இடையேயான ஒப்பந்தம், மற்றும் (2) மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை ஹொங் கொங்கில் நடைமுறைப்படுத்தல் மற்றும் அவ்வுரிமைகள் சார்பாக ஹொங் கொங் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கின்றதா என மதிப்பீடு செய்யும் பணியையும் குறித்த சட்டம் ஐக்கிய அமெரிக்க இராஜாங்க அமைச்சகத்தை வேண்டுகின்றது.

 

எது எவ்வாறாக இருந்தபோதிலும், குறித்த சட்டமானது சீன அரசாங்கத்தின் இறைமையை கேள்விக்குட்படுத்துவதாகவும், ஹொங் கொங் சீனாவின் ஒரு பகுதி என்ற அடிப்படையை எதிர்ப்பதாகவும் இருப்பதாக சீனா கோபம் வெளியிட்டுள்ளது. அதன் படி, சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் "இது தொடர்பில் அமெரிக்காவுக்கு உறுதியுடன் பதிலடி கொடுக்க" தயாராக இருப்பதாக எச்சரித்ததோடு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அமெரிக்க சட்டத்தை இருதரப்பு உறவை சேதப்படுத்தும் "ஒரு பைத்தியக்காரதனம்" என்று விவரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மறுபுறத்தில் வெனிசுவேலாவை பொறுத்தவரை, அது மனித உரிமை மீறல்கள் ஒரு இருப்பிடமாகாவே மாறியுள்ளது. அதனை தொடர்ந்து சிலி மற்றும் பொலிவியாவின் மனித உரிமை நிலைமைகளும் மோசமடைந்தே உள்ளது. சிலி மீதான சர்வதேச மன்னிப்புச் சபையின் அண்மைய அறிக்கை, பாதுகாப்புப் படையினர் கடந்த ஒரு மாதமாக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பரவலான மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறியுள்ளமை; மேலும், முன்னாள் ஜனாதிபதி இவோ மோரலஸ் இனப்படுகொலை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமையும் பொலிவியாவின் மனித உரிமை வெகுவாகவே மீறப்பட்டுள்ளமையை காட்டுகின்றது.

 

இதற்கிடையில், மியான்மரை சர்வதேச நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல காம்பியா எடுத்த முடிவு ஆழ்ந்த ஆர்வத்துடன் பின்பற்றப்படுகிறது. மியான்மாருக்கான ஐக்கிய நாடுகளின் சுயாதீன புலனாய்வு பொறிமுறை (“மியான்மர் பொறிமுறை”) மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மியான்மர் பொறிமுறையின் தலைவர் நிக்கோலஸ் கொம்ஜியான் தலைமையில், காம்பியா இந்த விஷயத்தை சர்வதேச நீதிமன்றுக்கு எடுத்துச் சென்றது. மியன்மார் இனப்படுகொலை குற்றத்தைத் தடுக்கும் மற்றும் தண்டிப்பதற்கான விண்ணப்பம் தொடர்பான வழக்கு தொடர்பாக உலக நீதிமன்றம், அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை பொது விசாரணைகளை நடாத்த இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மறுமுனையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் பிளவுபட்டுள்ளது என்பது இஸ்ரேலிய குடியேற்றங்களின் நிலை தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம் மூலம் தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்புச் சபையின் கடந்த புதன்கிழமை கூட்டத்துக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து ஐரோப்பிய நட்பு நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் போலந்து - ஒரு கூட்டு அறிக்கையில் இஸ்ரேலின் “அனைத்து குடியேற்ற நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது” என்று மீண்டும் வலியுறுத்தியிருந்தன. இதனை நேரடியாகவே மறுதலித்த ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், இன்னமும் 1984ஆம் ஆண்டு தீர்வு திட்டத்தின் கீழ் இஸ்ரேலை வைத்து பார்க்க முடியாது என கூறியிருந்தமை, இஸ்ரேல், கஸா மாறும் இதர பலஸ்தீனிய நகரங்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான மனித உரிமை மீறல்களை ஒருவாறாக நியாயப்படுத்தும் செயலாக அமைகின்றது என கவலை வெளியிடுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

 

இது தவிர சிரியா, யேமன் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தொடர்ந்து இடம்பெறும் சிவில் மற்றும் சர்வதேச யுத்தங்கள், தீவிரவாத தாக்குதல்கள், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஒருபாலின சமூகம் மீதான ஒடுக்குமுறை, கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகள் மற்றும் பாகுபாடுகள் ஆகியவை இன்னமும் சர்வதேச மட்டத்தில் தொடர்ச்சியாக பல நிலைகளில் மனித உரிமைகள் மீறப்படுவதையே காட்டுகின்றன.

 

இவ்வற்றின் மத்தியிலேயே 2019 ஆம் ஆண்டின் மனித உரிமை தினம் சர்வதேச மட்டத்தில் கொண்டாடப்பட - அல்லது நினைவுகூரப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .