2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மறையாத ஜூலைக் கலவர வடு

R.Tharaniya   / 2025 ஜூலை 28 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன் 

இலங்கையில் இனப் படுகொலைக்கான ஏதுக்கள் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது முதல் காணப்பட்டிருந்ததாகக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

அதற்கான ஆதாரங்களாக சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற 1956 கலவரம், 1983 கறுப்பு ஜூலைக் கலவரம், தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்த கால வன்முறைகள், படுகொலைகள் மற்றும் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் போன்ற ஆதாரங்கள் பட்டியலிடப்படுகின்றன. 

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பூர்வ சாட்சிகள் காணப்பட்டாலும் அவற்றினை எந்தவித பொறுப்புக்கூறலுமின்றி, கடந்து செல்கின்ற நிலைப்பாட்டினையே இலங்கை நாட்டின் அரசாங்கங்கள் கொண்டிருக்கின்றன.

இதில் மாற்றத்தினை ஏற்படுத்திவிடலாம் என்று தமிழர் தரப்பு மேற்கொள்ளாத முயற்சியில்லை எனும் அளவிற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், ஆயுத யுத்தம் ஓய்ந்து 16 வருடங்களாகியும் அதற்கான வாய்ப்புக்கள் எதுவும் கனிந்ததாக இல்லை.

இதற்கு புதிதாக அமைந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கானதல்ல என்பதே காலம் உணர்த்தும் உண்மை. 

1983 ஜூலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற இராணுவத்தினர் மீதான தாக்குதலையடுத்து கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஆரம்பித்து நாடு பூராகவும் பரவி பெரும் கொடுமையை நடத்திமுடித்த கலவரமானது வெறுமனே கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.

அத்துடன், இந்தக் கலவரமானது தன்னிச்சையாக ஏற்பட்ட ஒரு கலவரம் அல்ல, மாறாக சிங்களப் பேரினவாத, அரசின் ஊக்குவிப்புடனேயே இனவெறியால் தூண்டப்பட்ட ஒரு இனப்படுகொலையாகவே பார்க்கவேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தாலும் இதுவரையில் ஜூலைப் படுகொலைக்கான சரியானதொரு நீதி கிடைக்காமை என்பது கவலையானது எனலாம்.

1983 ஜூலை 24 அன்று, அரசு படைகளின் ஆதரவுடன் சிங்களக் கும்பல்கள் தமிழ் மக்களுக்கு எதிராகத் தீவிரமான தீ வைத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் கொலை சொத்துக்களைச் சேதப்படுத்தல், கொள்ளையிடுதல் ஆகியவற்றைத் தொடங்கின.

அது ஒரு வார காலமும் தொடர்ந்தது. இக் கலவரத்தில், 3,000க்கும் அதிகமான தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் அத்கமானவர்கள் வீடுகளை இழந்தனர்.

53 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மேலும் பல மனித உரிமை அமைப்புகள் இக் கலவரம் தொடர்பான ஆவணப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளன.

அத்துடன், வெளிநாட்டு ஊடகங்களின் நிருபர்களின் புகைப்படங்கள் மற்றும் நேரடி ஒளிப்பதிவுகள் பல இதற்கான ஆதாரங்களாக உள்ளன.  
யூலைக் கலவரக் காலத்தில், அரசுப் படைகள் கலவரத்தினை நடத்திய கும்பல்களை வழிநடத்தின.

டெய்லி நியூஸ் போன்ற சிங்கள செய்தித்தாள்கள் தமிழர்களுக்கு எதிரான தூண்டுதலான பிரச்சாரத்தை மேற்கொண்டன.  பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகள் கலவரங்களில் தீவிர பங்கு வகித்தன

என்பவையெல்லாம் குற்றச்சாட்டுக்களாக இருக்கின்றன. இருந்தாலும் அதற்கான தண்டனையளிப்புகள், விசாரணைகள் போன்ற பலனைத் தரவில்லை என்பதே உண்மையாகும்.

இந்தக் கலவரமானது முழு தமிழ் மக்களையும் பயமுறுத்தவும் அழிக்கவும் என மேற்கொள்ளப்பட்ட  42 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இருந்தாலும், அதன் பிறகும், கறுப்பு ஜூலையின் வலி தமிழ் மக்களுடைய மனங்களிலிருந்து நீங்காதிருப்பதானது அக் கலவரத்தின் கொடூரத்தையே காட்டிநிற்கிறது. 

இக் கலவரம் குறித்து கருத்துப் பகர்கின்ற ஆய்வாளர்கள் இது வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயம் மட்டுமல்ல - இது முறையான அநீதிக்கு ஒரு உயிரோட்டமான சான்று மற்றும் நீடித்த பொறுப்புக்கூறலைக் கோரும் ஒரு அழைப்பு என்று குறிப்பிடுகின்றனர். 

கலவரங்களும், படுகொலைகளும் இனப்படுகொலையினை அடிப்படையாகக் கொண்டவை என்ற அடிப்படையில், 1948இல் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல், இலங்கை அரசு சட்டரீதியான மற்றும் கட்டமைப்பு ஒடுக்குமுறை மூலம் தமிழர்களை இலக்காக்கத் தொடங்கியது

என்று பலரும் கருத்துப் பகர்வதுண்டு. இதற்கான அரசியல் நடவடிக்கை 1948ல் உருவாக்கப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டம் மூலமாக இந்தியத் தமிழர்களின் குடியுரிமையை பறித்ததில் இருந்து தொடங்கியது. 

அதேநேரம், 1956, சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு சிங்களத்தை ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இலங்கை அரசு அறிவித்தது. அத்துடன், 1972 குடியரசு யாப்பில் பௌத்தம் இலங்கை அரசாங்கத்தின் பிரதான மதமாக அறிவிக்கப்பட்டது. இவற்றினை அரசியலமைப்பு ரீதியான செயற்பாடுகளாகச் சொல்லலாம்.

அதே நேரத்தில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை, கலவரங்கள் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை 1977 தொடக்கம் 1983 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம்  தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக சிந்திக்கத் தூண்டியது என்றே கூறலாம். அத்துடன் தமிழர்களை அடக்குவதற்கென்றே கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் குற்ப்பிடப்பட வேண்டும். 

சுதந்திர இலங்கையின் தொடக்க காலம் அகிம்சைப் போராட்டமாக இருந்த போதிலும், இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழர்கள் அமைதியான ஜனநாயகப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். அவை அரசினதும் பேரினவாதிகளாலும் வன்முறைகளால் நசுக்கப்பட்டன. அதுவே ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது எனலாம். 

பேரினவாதத் தரப்பின் வன்முறைகள் காரணமாகவும், ஒடுக்குமுறைகள் காரணமாகவும், நெருக்குதல்கள் காரணமாகவும் படிப்படியாகத் தமிழ் மக்களின் உளவியலில் ஏற்பட்ட மாற்றம் அவர்களையும் வன்முறைகளில் ஈடுபடத் தூண்டியதன் வெளிப்பாடு கொடுமைகளையே கொண்டுவந்தது.

ஆனால் தீர்வின்றியே அப்பயணம் தொடர்கிறது என்பது மாத்திரம் கவலைக்குரியது. இவ்வளவையும் கடந்த பின்னரும் அமைதியான சர்வதேசத்தின் பதில் இவற்றின் மீதான  செயலற்ற தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றன. அரசாங்கத்தின் சமாளிப்புகளையும் இராஜதந்திரத்தையும் நம்புகின்ற நிலைமை மோசமானதாகும்.

மிக மோசமான இனக் கலவரம், இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்து முடிந்து தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்ற போது ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகம் போன்றவை இந்த இனப்படுகொலைகளைக் குற்றங்களாக அங்கீகரிக்கத் தவறி வருவது ஒரு உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும்.

இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் காலங்கடத்தல்களையும், தட்டிக்கழித்தல்களையும் நம்பி ஏமாறுவது சர்வதேச நீதி சார் அமைப்புக்களுக்கு ஏற்றதா என்பது இந்த இடத்தில் கேள்விதான். 

இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதல் திம்பு பேச்சுமூலம் உள்ளே நுழைந்த இந்தியா, மாகாண சபை முறைமையை ஏற்படுத்தியதைத் தவிர, தமிழர்களைப் பாதுகாக்க எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்போது குற்றச்சாட்டாக வரத் தொடங்கியிருக்கிறது. 

இந்த நிலையில், இப்போது தமிழ் அரசியல் தரப்பினர் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதில் எந்தப் பயனுமில்லை என்பதே வெளிப்படை.

 அந்தவகையில்தான், தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை அழிக்க இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் தமிழர்களை ஒரு ஒருமிப்புக்கு கொண்டுவந்திருந்தது. வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் முன்னெப்போதையும் விட அதிக எண்ணிக்கையில் ஒன்றுபட்டிருந்தனர். 

ஆனால், இப்போதும் அது தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.இப்போதும் தமிழர் தங்களுடைய உரிமைகளை அடைந்து கொள்வதற்காக அரசுக்கெதிரான போராட்டங்கள், கவனஈர்ப்புகள், சர்வதேச எதிர்ப்புப் போராட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என நடத்திக் கொண்டே காலங்கடத்துவதைத் தவிர வேறில்லை என்றாகிப் போயிருக்கிறது. 

தமிழ்த் தேசிய உணர்வு வலிமையானது, உறுதியானது மற்றும் உலகளவில் இணைக்கப்பட்டது என்றெல்லாம் பிரச்சாரப்படுத்திக் கொண்டு  அநீதிக்கெதிரான போராட்டத்தைத் தொடர்கிறோம் என்று கொக்கரிப்பதில் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது என்ற கவலையே பலருக்குத் தொற்றியிருக்கிறது. 

கறுப்பு ஜூலை ஒரு நினைவை மட்டும் மீட்டுக் கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவுபடுத்திக் கொண்டு, படுகொலை நாட்களை நினைவுகூர்ந்து கொண்டு நகர்வதால் எத்தனை தலைமுறைகளைத் தமிழர்கள் அழித்துவிடப் போகிறார்களா என்பதுதான் இன்னமும் கேள்வியாக இருக்கிறது. 

இருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கான அங்கீகாரம் மற்றும் நீதிக்கான கோரிக்கைக்கான தீர்ப்பு நான்கு தசாப்தங்களுக்குப் பிறகும், வெறும் கோரிக்கைகளாகத்தான் இருந்து வருகின்றன என்றால் இது யாருடைய தவறு என்று ஆராய வேண்டும். இந்த ஆராய்தலைத் தமிழர்கள் செய்தல் வேண்டும். 

ஆனால், கறுப்பு ஜூலை இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட, கண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழர்கள் ஜூலை கலவரத்தின் வடுவையேனும் மறப்பார்களா என்பதுதான் நிலைமை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .