Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மார்ச் 09 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றத் தேர்தலொன்று நெருங்கி வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்ளும் தமது நிலையைப் பலப்படுத்திக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், வேறு கட்சிகளை உருவாக்கினாலோ அல்லது அவற்றுடன் இணைந்து செயற்பட்டாலோ, கட்சியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவர் என, ஸ்ரீல.சு.கவின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அண்மையில் விடுத்த எச்சரிக்கையை அதற்கு ஓர் உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.
அதை விட, ஜனாதிபதியே நேரடியாக எடுத்த ஒரு நடவடிக்கை, அவர் கட்சிக்குள் களையெடுக்க முன்வந்துள்ளார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. கடந்த வாரம் அவர், ஸ்ரீல.சு.கவிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சில தொகுதி அமைப்பாளர்களை நீக்கிவிட்டு, தமது நெருங்கிய ஆதரவாளர்களை அப்பதவிகளுக்கு நியமித்தார். இது, கட்சிக்குள் இருக்கும் ஏனைய மஹிந்த ஆதரவாளர்களுக்கும் கடுமையான செய்தியொன்றை அனுப்பியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஜனாதிபதி, தம்மைப் பற்றிச் சிந்திப்பவராக இருந்தால், இது ஒரு வருடத்துக்கு முன்னரே அவர் எடுத்திருக்க வேண்டியதொரு நடவடிக்கையாகும். அவர் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், ஸ்ரீல.சு.கவிலும் ஐ.மு.சு.கூவிலும் உள்ள பல தலைவர்கள் நடு நடுங்கியிருந்தனர். இதற்கு முன்னர் இருந்த நிறைவேற்று ஜனாதிபதிகள், தமது அரசியல் எதிரிகள் விடயத்தில், குறிப்பாக தமது கட்சியிலேயே இருந்த மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் விடயத்தில் செயற்பட்ட முறையினால், அவர்கள் அவ்வாறு பயந்து இருந்திருக்கலாம்.
அதனால் தான், தமது குழு, கட்சிக்குள் பெரும்பான்மையாக இருந்தும் மைத்திரிபாலவுக்கு கட்சியின் தலைவர் பதவியை அப்போது வழங்க அவர்கள் முற்பட்டனர். தமது மனைவிக்கும் மகனுக்கும் எதிராகப் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதிருக்கவே, மைத்திரிபாலவுக்கு ஸ்ரீல.சு.க தலைமைப் பதவியை வழங்க மஹிந்த ராஜபக்ஷ உடன்பட்டார் எனக் கூறப்படுகிறது.
மைத்திரிபால, ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த உடனேயே, விரைவாகக் கட்சிக்குள் தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தால், அதனை இலகுவாகச் செய்திருக்க முடியும். அதற்காக அவர், கட்சியில் தமக்கு எதிரானவர்களை நீக்கிவிட்டு, தமது ஆதரவாளர்களைத் தொகுதி அமைப்பாளர்களாகவும் செயற்குழு உறுப்பினர்களாகவும் செயலாளர்களாகவும் நியமித்திருந்தால், அதற்கு எதிராகப் பலத்த குரல் எழுந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவ்வாறான கடுமையான நடவடிக்கைகளுக்கே நாடு பழகியிருந்தது.
அவ்வாறு செய்திருந்தால், சிலவேளை ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் துரிதமாகியிருக்கலாம். ஏனெனில், அந்த விடயத்தில் இழுத்தடித்த சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் ஜனாதிபதிக்குப் பயந்து செயற்பட்டிருப்பார்கள்.
ஆனால், மைத்திரிபால அவ்வாறு செய்யவில்லை. அவர், தாம் பதவிக்கு வந்ததன் பின்னரும் தமக்கு எதிரான ஸ்ரீல.சு.கவின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவையும் ஐ.ம.சு.கூ பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவையும் அதே பதவிகளில் இருக்க இடமளித்தார். மஹிந்தவின் கையாட்களான அதிகாரிகளையும் அவர்களது பதவிகளிலேயே இருக்க இடமளித்தார். எனவே தான், ஜனாதிபதித் தேர்தலில் அடைந்த தோல்வியினால் நன்றாக மனமுடைந்திருந்த மஹிந்தவும் அவரது கையாட்களும் மறுபிறவியெடுக்க முயற்சித்தனர். அநுர பிரியதர்ஷனவும் சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதிக்கு எதிராக பகிரங்கமாகவே மஹிந்தவுடன் கூட்டு சேர்ந்து செயற்படலாயினர்.
ஜனாதிபதி, இப்போது பிரம்பைக் கையிலெடுக்கவே மீண்டும் அவர்களில் சிலர் அச்சம் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது. அநுர பிரியதர்ஷனவும் சுசில் பிரேமஜயந்தவும் ஜனாதிபதியின் முன் நல்ல பிள்ளைகளாக முயற்சிக்கின்றார்கள். ஜனாதிபதி ஆரம்பத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்காததனால் மேற்குறிப்பிட்டதைப் போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்ட போதிலும், அவர் கடும்போக்கைக் கையாளாததால், சர்வதேச ரீதியில் ஜனநாயகவாதி என்ற நல்ல பெயரைப் பெற்றுக் கொண்டார்.
மைத்திரிபால ஜனாதிபதியான உடன், ஸ்ரீ.ல.சு.க விடயத்திலும் ஐ.ம.சு.கூ. விடயத்திலும் மிதவாதப் போக்கை கடைப்பிடித்தமை அவ்விரண்டு கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் வளரக் காரணமாகியது. அதாவது, இந்த மிதவாதப் போக்கினால் அவ்விரு கட்சிகளுக்குள்ளும் மஹிந்தவின் கையாட்களின் கை ஓரளவுக்கு ஓங்கியது. குறிப்பாக மைத்திரிபால, மஹிந்தவுக்கு தாம் தலைமை தாங்கும் கட்சியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தமை மஹிந்தவின் ஆட்களின் தைரியத்தை அதிகரித்தது. இது, அவ்விரு கட்சிகளுக்குள்ளும் நிலையான மஹிந்த அணியொன்று வளரும் நிலைக்கு இட்டுச் சென்றது.
அதேவேளை, மஹிந்தவுடன் நெருங்கியிருக்கும் தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச போன்றோர்களின் சிறிய கட்சிகளும் மஹிந்த பலம் பெறுவதற்கு முக்கிய காரணமாகின. மைத்திரிபால பதவிக்கு வந்தது முதல் ஐ.ம.சு.கூவுடன் இணைந்திருந்த இச்சிறிய கட்சிகளைப் புறக்கணித்து வருகிறார். அக்கட்சிகளுக்கு இது தமது இருப்பை அழிக்கும் செயலாகவே தென்பட்டது. ஏனெனில், அக்கட்சிகளுக்கு தனியாகப் போட்டியிட்டு எந்தவொரு மாவட்டத்திலும் ஓர் ஆசனத்தையேனும் வெற்றி பெற முடியாது. அக்கட்சிகள் இரு பிரதான கட்சிகளில் ஒன்றில் தொற்றியே தமது இருப்பைக் காத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவேதான் அக்கட்சிகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து சில நாட்களிலேயே 'மஹிந்தவோடு எழுந்திருப்போம்' என்ற கோஷத்தை முன்வைத்து மஹிந்தவின் ஆதரவாளர்களை ஊக்குவிக்க முற்பட்டன.
மறுபுறத்தில், மஹிந்தவுக்கும் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாத நிலை உருவாகியது. அரசாங்கம் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் எதிராக ஊழல் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தமையே இதற்குக் காரணமாகும். இந்த நிலையை எதிர்நோக்கத் தமக்கு ஓரளவுக்காவது அரசியல் பலம் இருக்க வேண்டும் என அவர் கருதுகிறார். எனவே அவர், மீண்டும் அரசியலில் குதிக்க முடிவு செய்தார்.
ஆரம்பத்தில் அவர், ஸ்ரீ.ல.சு.கவுக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முயற்சி செய்தார். அதன்மூலம் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டால், ஜனாதிபதிக்கு சவாலாக அமையலாம் என அவர் கருதினார். ஆனால், மைத்திரிபாலவின் மறைந்திருந்து தாக்கும் அரசியல் 'கெரில்லா தாக்குதல்' களால், அவரது அனைத்து முயற்சிகளும் வீணாகின. எனவே, தொடர்ந்தும் ஸ்ரீ.ல.சு.கவுக்குள் அவரால் பெரிதாக எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதனால் தான், அவர் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக, அவரது ஆதரவாளர்கள் அண்மையில் கூறிக் கொண்டு திரிந்தனர். ஆனால், இப்போது அவர்கள் அத்திட்டத்தைக் கைவிட்டு, மஹிந்தவை ஆதரிக்கும் ஆறு சிறிய கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜக் கட்சி ஆகியவற்றில் ஒன்றின் சின்னத்தில், எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
இது, ஸ்ரீல.சு.கவுக்குள்ளும் ஐ.ம.சு.கூவுக்குள்ளும் பிளவு உறுதியாகிவிட்டதையே காட்டுகிறது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியே இலாபமடையப் போகிறது. எனவே, தற்போதைய நிலையில், மஹிந்த அணி பலம் பெறுவதை ஐ.தே.க. விரும்பும்.
ஸ்ரீல.சு.க தலைவரான ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் இந்த விடயம் விளங்காமலில்லை. ஆனால், ஸ்ரீல.சு.கவின் உட்பூசல்களைத் தவிர்த்து, ஐக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவென இதற்கு மேல் விட்டுக் கொடுக்க அவர் தயார் இல்லைப் போல்தான் தெரிகிறது. இதற்கு மேல் விட்டுக் கொடுத்தால், மஹிந்த அணியை ஸ்ரீல.சு.கவுக்குள் அதிகாரத்தையே கைப்பற்றிக் கொள்ளும். அது பிரதமர் என்ற நிலையிலாவது மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரவே உதவும்.
மைத்திரிபால அதனை எவ்வகையிலும் விரும்ப மாட்டார். ஒரு போதும் தோல்வியுறச் செய்ய முடியாதவராகக் கருதப்பட்ட மஹிந்தவை, எவருமே நினைக்காத ஒரு நேரத்தில் வீழ்த்திவிட்ட தம்மை மஹிந்த ஒருபோதும் விட்டுவிடமாட்டார் என்பது அவருக்குத் தெரியும். ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடைந்திருந்தால், தேர்தல் முடிவடைந்தவுடன் தாம் ஆறடி நிலத்துக்குள் தான் இருந்திருப்போம் என அவர் பல முறை கூறியிருக்கிறார்.
எனவே, மஹிந்த அணியினருக்கு இதனை விட்டுக் கொடுக்காமல், ஸ்ரீ.ல.சு.கவை தமது கட்டுப்பாட்டுக்குள் பூரணமாகக் கொண்டு வந்து, தமக்குக் கீழ் பலப்படுத்துவதே அவரது நோக்கமாக இருக்கிறது போலும். அதற்காகத் தான் அவர், மஹிந்தவின் ஆதரவாளர்களான தொகுதி அமைப்பாளர்களை நீக்கிவிட்டு தமது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார்.
ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த அணியை வளர்த்தது ஸ்ரீ.ல.சு.கவை மேலும் பிளவுபடுத்தி, வரப் போகும் தேரதல்களின் போது, தாம் சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளத் திட்டமிட்டு செயற்படுவதாகவே தெரிகிறது.
அண்மையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களையும் இந்த நிலையிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும். மஹிந்தவின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்தில் தம்மைத் தனிக் குழுவாக அங்கிகரிக்க வேண்டும் என சில காலமாகக் கோரி வருகிறார்கள். ஆனால், மஹிந்தவின் குழு சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட குழுவல்ல என்ற அடிப்படையில், சபாநாயகர் கரு ஜயசூரிய அதனை நிராகரித்து வருகிறார். எனினும், அக்குழுவிலுள்ள சிறிய கட்சிகளின் தலைவர்களைக் கட்சித் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் முன் வரிசை ஆசனங்களை வழங்க சபாநாயகர் கடந்த மாதம் இணக்கம் தெரிவித்தார்.
இது, மஹிந்தவின் அணி பெற்ற வெற்றியாகக் கருதப்பட்ட போதிலும், அதன் விளைவு அந்த அணி உட்பட ஸ்ரீல.சு.கவுக்கு பாதகமாகவே அமையும். ஏனெனில், அதனாலும் மஹிந்த அணியினர் தனியாக இயங்க மென்மேலும் தூண்டப்படுவர். அது, ஸ்ரீல.சு.கவுக்குள் பிளவை மேலும் உறுதிப்படுத்தும். எனவே, எதிர்காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
தூண்டுதலில், நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியைத் தனிக் குழுவாக சபாநாயகர் அங்கிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நாடாளுமன்றத்தில், மஹிந்த அணியினரைத் தனிக்குழுவாக சபாநாயகர் அங்கிகரித்தால், அடுத்த கட்டமாக அவ்வணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கோரலாம். ஏனெனில், அவ்வாறு அக்குழுவினர் தனிக் குழுவாக அங்கிகரிக்கப்பட்டால், அக்குழுவே நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய குழுவாகும். தற்போது எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படும்.
ஆனால், நல்லிணக்கத்துக்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசாங்கம், அதனால் சர்வதேச ரீதியாக நற்பெயரை சம்பாதித்து வருகிறது. அந்த வகையில், ஸ்ரீல.சு.கவை பலவீனப்படுத்துவதற்காக மஹிந்த அணியை பலம்பெறச் செய்து வந்தாலும் சம்பந்தனிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்கும் நிலைக்கு ரணில் போக மாட்டார் என ஊகிக்கலாம்.
மொத்தத்தில், இதுபோன்ற நடவடிக்கைகளினால், எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீல.சு.க படுதோல்வியடைந்தாலும், சிறிய கட்சிகள் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளும். இறுதியில், ஐ.தே.க.வினதும் அச்சிறிய கட்சிகளினதும் நோக்கங்களே நிறைவேறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago