2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வருடம் நடைபெறுமா?

R.Tharaniya   / 2025 ஜூலை 09 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவை நடந்துள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக மேலோங்கி வருகிறது.

தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, தென் பகுதியில் சில அரசியல்வாதிகளும் இந்தக் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். எனினும் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளினதும் தென் பகுதி அரசியல்வாதிகளினதும் கோரிக்கை ஒன்றெனக் கூற முடியாது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கும் போது அவற்றின் அடிப்படை நோக்கம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அரசில் அதிகாரத்தைப் பரவலாக்குவதாகவே இருந்தது.

எனினும், தமிழ் பகுதிகளுக்கு அதிகாரம் பரவலாக்கப்படும்போது, அதற்கு எதிராகத் தென் பகுதி மக்களிடமிருந்து எழக்கூடியஎதிர்ப்பைசமாளிப்பதற்காகவே நாட்டில் ஏனைய பகுதிகளிலும் மாகாண சபைகளை உருவாக்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார்.

எனவே, இப்போது மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை விடுக்கும் அரசியல்வாதிகளின் நோக்கங்களிலும் வேறுபாடுகளை எதிர்ப்பார்க்கத் தான் வேண்டும். தென் பகுதி அரசியல்வாதிகளுக்கு மாகாண சபையானது பணம் சம்பாதிப்பதற்கான அதிகாரத்தைப் பெறும் ஒரு வழி மட்டுமேயாகும்.

கடந்த காலத்தில் பாராளுமன்ற அளவில் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் இடமாகவே மாகாண சபைகள் கருதப்பட்டன. தற்போதைய நிலையில், அவர்கள் மாகாண சபைத் தேர்தல்களை தம்மை பலப்படுத்திக் கொள்ளும் ஓர் உத்தியாகவே கருதுகின்றனர்.

வடக்கு, கிழக்கில் அரசியல்வாதிகள் எவரிடத்திலும் இவ்வாறான நோக்கங்கள் இல்லை என்று கூற முடியாது. ஆயினும், மாகாண சபைகள் விடயத்தில் அவர்களில் பலரிடம் ஓ​​ர் அரசியல் நோக்கமும் இருக்கிறது.

அதாவது, போதுமானதாக இல்லாவிட்டாலும் மாகாண சபைகளானது ஓரளவுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஓர் அரசியல் பொறிமுறையாகும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றதோர் கருத்தும் பலரிடம் இருக்கிறது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது 1980களில் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

குறிப்பாக 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் பின் இந்தியா தமது உயர் மட்ட அதிகாரிகளான கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் ரொமேஷ் பண்டாரி போன்றவர்கள் மூலம் இந்த விடயத்தை ஏற்குமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தது.

இறுதியில் இந்தியா, இலங்கைக்கு தமது படைப் பலத்தையும் காட்டியே இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்கு இலங்கையை இணங்கச் செய்தது. அந்த வகையில், இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை அரசாங்கங்கள் எதையாவது செய்திருந்தால் அது மாகாண சபைகளை உருவாக்கியமை மட்டுமேயாகும்.

ஆயினும், அது இலங்கை அரசாங்கத்தின் மீது திணிக்கப்பட்டதொன்றேயல்லாமல், இலங்கையின் தலைவர்கள் அதனை விரும்பி செய்ததொன்றல்ல. தம்மில் சிலருக்குப் பயன்படும் என்பதற்காக அவர்கள் மாகாண சபை முறையை அதன் பின்னர் நடத்தி வந்தார்களேயல்லாமல் அதிகார பரவலாக்கல் தொடர்பான தமிழர்களின் கோரிக்கையை மதித்து அவர்கள் அம்முறையை நடத்தி வரவும் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அக்காலத்தில் ஆயுதம் ஏந்தி அரச படைகளுக்கு எதிராகப் போரிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு அமைப்புக்களும் மாகாண சபை முறையை எதிர்த்த காரணத்தால் ஐ.தே.க. தலைவர்கள் அக்காலத்தில் உயிர் அச்சுறுத்தல்களையும் சந்தித்தனர்.

ஆயினும், பின்னர் அக்கட்சியின் தலைவர்களும் தமிழர்களுக்கு மாகாண சபைகளின் அளவிலாவது அதிகாரம் பரவலாக்கப்படுவதை முக்கியமானதாகக் கருதவில்லை.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத தற்போதைய நிலை அதற்குச் சிறந்த உதாரணமாகும். 2017ஆம் ஆண்டு அப்போதைய ஐ.தே.க. அரசாங்கம் எடுத்த நடவடிக்கையொன்றே அத்தேர்தல்களை இது வரை தடுத்து வந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க எப்போதும் தேர்தல்களைச் சந்திக்கப் பயந்தார். 2015ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆதரவில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன், அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் ஒருவர் மட்டுமே பிரதமராக நியமிக்கப்பட முடியும் ஆயினும் ஐ.தே.கவுக்கு சுமார் 70 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் நிலையிலேயே அதன் தலைவரான ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். 

அன்று ஜனாதிபதரித் தேர்தலை அடுத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தியிருந்தால் ஐ.தே.கவின் பெரும்பான்மை மிகவும் அதிகரித்திருக்கும். ஆனால் ரணில் தாமதித்தே அத்தேர்தலை நடத்தினார்.

அதேபோல் அவர் மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்களை நடத்தவும் தயங்கினார். அதற்காக அவர் தேர்தல் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

இந்த தாமதத்தின் காரணமாகவே பதவிக்கு வந்த மூன்றாண்டுகளில் 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்டஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க. படுதோல்வியடைந்தது.

 மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடும் நோக்கில் அவர் 2017ஆம் ஆண்டு அத்தேர்தல்களுக்கும் கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான சட்ட மூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தனிச் சட்டமாக சமர்ப்பித்தால் அதனை உயர் நீதிமன்றத்தில் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்பதால் அவர் அதனை மற்றொரு தேர்தல் சட்டத் திருத்தம் ஒன்றுடன் இணைத்தே சமர்ப்பிக்கச் செய்தார். அது நிறைவேறியது.

அதன் பின்னர் கலப்பு தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளில் தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்காக எல்லை நிர்ணய சபையொன்று நியமிக்கப்பட்டு அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தக் கட்டம் வந்த போது, அவ்வறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சராவது (பைசசர் முஸ்தபா) அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

அவ்வாறு அவ்வறிக்கை பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் சட்டப்படி பிரதமரின் தலைமையிலான ஒரு குழு இரண்டு மாதங்களுக்குள் திருத்த அறிக்கையொன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ரணில் விகரமசிங்கவே பிரதமராக இருந்தார். ஆனால், அவர் 2019ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகும் வரை திருத்த அறிக்கையொன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எல்லை நிர்ணயம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படாது தேர்தலை நடத்தவும் முடியாது.

2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கும் கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட போதே தேர்தலை ஒத்திப் போடவே ரணில் அத்திருத்தத்தைக் கொண்டு வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறின.

அவர் பதவி விலகும் வரை திருத்தப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து, பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்‌ஷவவின் அரசாங்கமோ ரணில் விக்ரசிங்கவின் அரசாங்கமோ இந்தச் சட்டச் சிக்கலைத் தீர்த்து மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்வரவில்லை.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஒன்றில் எல்லை நிர்ணய அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், அல்லது கலப்பு தேர்தல் முறையை இரத்துச் செய்து முன்னர் போல் விகிதாசார முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். அதற்காக மற்றொரு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த நிலையில், பழைய விகிதாசா முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அதாவது ரணிலின் ஆட்சிக் காலத்தில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் தனி நபர் சட்டமூலம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சிறியதோர் திருத்தத்துடன், அதே ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றமும் அதனை அங்கீகரித்தது. ஆனால், எந்தவொரு பிரதான கட்சியும் அதனை நிறைவேற்றி மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதைக் கருத்திற்கொள்ளவில்லை.

எனவே, தான் இன்று வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் இருக்கிறது. இறுதியாக 2014ஆம் ஆண்டே மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

மாகாண சபைகள் இனப் பிறசிக்கைக்குத் தீர்வாகும் என்று தாம் நம்புவதில்லை என்றாலும் தமிழ் மக்கள் மாகாண சபைகள் தமது உரிமை என்று கருதுவதால் தாம் அச்சபைகளை இரத்துச் செய்வதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பல முறை கூறியுள்ளனர்.

விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த டிசெம்பர் மாதம் தமிழரசுக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது கூறியிருந்தார்.  

ஆயினும், ஆறு மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் மூன்று தேர்தல்கள் நடைபெற்று இருப்பதால் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருடம் நடைபெறாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த ஏப்ரல் மாதம் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் பெற்றதைப் பார்க்கிலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் குறைவாக வாக்குளை பெற்றிருக்கும் நிலையில், சிலவேளை அக்கட்சி தற்போது மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடவும் விரும்பலாம்.       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X