2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 ஜூன் 20 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு.   

இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது.   

தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை ஆவார். அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கின்றார். அத்தோடு, கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என்கிற நிலையை எடுத்துவிட்ட, தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார். ‘முதலமைச்சர்’ என்கிற கனவை அடைவதற்கு, இந்தத் தகுதிகள் மாத்திரம் போதுமா? என்கிற கேள்வி, மாவையையும் அவரைச் சார்ந்தவர்களையும் அண்மைய நாள்களாகத் துரத்திக் கொண்டிருக்கின்றது.   

கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இழந்த வாய்ப்பை, இந்தத் தடவை, எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதுதான், மாவையின் தற்போதைய கணக்கு.   

ஆனால், அவரின் எதிர்பார்ப்பும் கணக்கும் உண்மையிலேயே அவருக்குச் சாதகமாக இருக்கின்றதா என்றால், பெரியளவில் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கின்றது.   

தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த போதிலும், கூட்டமைப்பின் முடிவுகளை இறுதி செய்யும் குழுவுக்குள் மாவை இல்லை என்பதுதான், அவரின் மிகப்பெரிய பலவீனம். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களிலும் சம்பந்தனுக்குப் பிறகு, அவருக்குத்தான் பிரதான இடம் வழங்கப்படுகின்றது.   

ஆனாலும், அவர் தனக்குரிய அதிகாரங்களை என்றைக்குமே பிரயோகித்தவர் அல்ல; அதற்கு அவர் பழக்கப்படவும் இல்லை; அனைத்துத் தருணங்களிலும் மற்றவர்கள் எடுக்கும் முடிவுக்குத் தலையாட்டும் நபராகவே, இருந்து வந்திருக்கிறார்.ஆரம்பம் முதல், கட்சியொன்றின் ‘பெரும் பிரசாரகர்’ என்கிற நிலையைத் தாண்டி, அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டதில்லை.   

தேர்தல் மேடைகளில், அன்றைக்கு எப்படி முழங்கினாரோ, இன்றைக்கும் அதைச் செய்யவே விரும்புகிறார். ஆனால், அதற்கும் அவரின் உடல்நிலை தற்போது பெரியளவில் ஒத்துழைப்பதில்லை.   

ஒரு கட்சியின் தலைவராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது தீர்மானம் மிக்க நபராக தன்னை எவ்வாறு நிலைநிறுத்த வேண்டும் என்பதை மாவை இதுவரை கற்றுக்கொள்ளவில்லை.  அவருக்குப் பின்னர், குறிப்பாக பத்து வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம், கட்சிக்குள் தீர்மானிக்கும் சக்திகளாக உருவாகிவிட்டனர். ஆனாலும், மாவையிடம் முதலமைச்சர் கனவு, ஒட்டிக்கொண்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.   

அதில், முதலாவது தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் அதிகாரப் போட்டி; இரண்டாவது, விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள்.   

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவையே என்கிற நிலையை உருவாக்கும் எண்ணத்தில் சேர்ந்திருப்பவர்களில், சிறிதரனும், ஈ.சரவணபவனும் முக்கியமானவர்கள்.    

தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் அதிகாரப் போட்டி என்பது, இன்று நேற்று எழுந்தது அல்ல. மாவைக்குப் பிறகு யார்? என்கிற கேள்வி என்று ஆரம்பித்ததோ, அன்றே அந்தப் போட்டியும் ஆரம்பித்துவிட்டது.  

 எம்.ஏ. சுமந்திரனும் சிவஞானம் சிறிதரனும் ஒரே கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள். சுமந்திரன், இராஜதந்திர அரசியலைத் தேர்தெடுத்த போது, சிறிதரன் வாக்கு அரசியலில் கவனம் செலுத்தினார்.  

ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் நீடிப்பதற்கு, இராஜதந்திர அரசியல் மாத்திரம் போதாது, வாக்கு அரசியலிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்கிற நிலையை உணர்ந்த போது, சுமந்திரன் வடக்கில் அதிக நேரத்தைச் செலவிட ஆரம்பித்தார்; யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெறவும் செய்தார். 

இது, சுமந்திரனை நோக்கி அதிகாரத் திரட்சியொன்றை உருவாக்கியது. இதனால், கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களும் சுமந்திரனை நோக்கி வந்தார்கள்.   

அத்தோடு, சுமந்திரனுக்கு சம்பந்தனின் ஆதரவு எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் ‘முடிவெடுக்கும் தலைமை’ என்கிற நிலைக்குள் அடையாளம் பெறுபவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே.   

கட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை சுமந்திரன் அடைந்துவிட்ட பின்னர், அவரோடு சில விடயங்களிலாவது இணக்கமாகச் சென்று காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று சிறிதரன் நம்பினார்.   

அத்தோடு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பு அடைந்த தோல்வி, பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது. இதனால், தங்களது இடங்களைத் தக்க வைக்கத் தேவையான அனைத்தையும் செய்தார்கள்.   

குறிப்பாக, தோல்விக்கான பழியை ஒருவர் மீது இறக்கிவிட்டுத் தப்பிக்கவும் நினைத்தார்கள். அதன்போக்கில், சுமந்திரனை பலியாடாக மாற்றுவது சார்ந்து சிந்தித்தார்கள். அதற்கான முயற்சியையும் எடுத்தார்கள்.   

ஆனால், அது, பெரியளவில் வெற்றிபெறவில்லை. இவ்வாறான சூழல், சுமந்திரன் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாத தரப்புகளை ஒன்றாக்கியது.   

தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சில வாரத்துக்கு முன்னர் ஆரம்பமாகின. அதில், அதிகளவு ஆர்வம் காட்டியது சரவணபவன். குறிப்பாக, மாவையின் மகனை முன்னிறுத்திக் கொண்டு இளைஞர் மாநாட்டைக் கூட்டி விடயங்களைச் சாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.  

அப்படியான சந்தர்ப்பத்தில், தமிழரசுக் கட்சியே பத்திரிகையொன்றை ஆரம்பித்து நடத்த எத்தனிக்கின்றமைக்கு, சுமந்திரனே கரணமாக இருக்கின்றார் என்பதுவும் சரவணபவனின் கோபம்.    

விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் இன்றைக்குத் தீர்க்க முடியாத கட்டத்தை அடைந்துவிட்டன. அது, சம்பந்தனையும் விக்னேஸ்வரனையும் சமரச முயற்சிகளுக்கு அழைக்கும் தரப்புகளையே களைத்துப் போகச் செய்துவிட்டன.  

 அவர்கள் இருவரையும் தாண்டிய அதிகாரம் பெற்ற தரப்புகள் தலையிட்டாலே ஒழிய, மீண்டும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் ஆக முடியாது. அவ்வாறான நிலையில், இலகுவாக மேல் தெரியும் நபராக மாவை வருகின்றார்.   

ஆனால், விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு ஆளுமையுள்ள வேட்பாளராக மாவையால் நிற்க முடியுமா என்றால், இல்லை என்பதே பதிலாக வரும். ஏனெனில், கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்தியை விக்னேஸ்வரனை முன்னிறுத்தித் திரட்ட வேண்டும் என்பது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்ற தரப்புகளின் எண்ணம்.   

மாவையை மூத்த தலைவர் என்கிற அடிப்படையிலேயே மக்கள் கருதி வாக்களித்து வந்திருக்கின்றார்கள். அவரது கருத்துகள் ஊடகங்களைத் தாண்டி மக்களிடம் கவனம் பெற்றதில்லை.   

அவ்வாறான நிலையில், விக்னேஸ்வரன் என்கிற ஆளுமைக்கு முன்னால், மாவையை நிறுத்துவது சந்தேகமே?

 விக்னேஸ்வரன் சிறந்த முதலமைச்சரா? என்றால், அதற்கும் ‘ஆம்’ என்று உடனடியாகப் பதிலளிக்க முடியாதுதான். ஆனால், அவருக்குக் கூட்டமைப்பு மீதான அதிருப்தியையும் தமிழ்த் தேசிய அரசியலில் கோலொச்சி வரும் எதிர்ப்பு அரசியல் வடிவத்தையும் தற்போதைக்கு கையாளத் தெரியும் என்கிற விடயம் கவனம் பெறுகின்றது.  அவ்வாறான நிலையில், மாவையை முதலமைச்சர் வேட்பாளராக்கும் கட்டத்துக்கு சம்பந்தன் வருவது அவ்வளவு இலகுவானதல்ல.   

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தின் போது கூட, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற விடயம் குறித்து, சம்பந்தன் பேசியிருக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், அவரது மனதில், மாவைக்கான இடம் இருக்கின்றதா என்ற சந்தேகத்தைத்தான் தோற்றுவித்திருக்கிறது.    

அத்தோடு, உட்கட்சிச் சண்டைகளின் போக்கில் எல்லாம், தன்னுடைய முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவுக்கான நிலையை சம்பந்தன் பேணுவதில்லை.   

அவ்வாறான நிலையில், கட்சி முக்கியஸ்தர்களின் எவ்வாறான அழுத்தத்தைத் தாண்டியும் முடிவெடுக்கும் வல்லமையும், அதனைக் கட்சியையும் பங்காளிக் கட்சிகளையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் உத்தியும் அவருக்கு தெரியும்.   

அப்படியான நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவை என்கிற உரையாடலை, சம்பந்தன் கவனத்திலேயே எடுப்பதற்கு வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியனவே. மாவையின் கனவு அவ்வளவு இலகுவில் நனவாகுமா என்பது கேள்விக்குறியே?


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X