Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 23 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டதால் மாத்திரம், ஈழத்தமிழர் அரசியலைப் பேசுவதற்கான தகுதியை இழந்துவிட்டோமா, எமக்கான அங்கிகாரத்தையும் பேசுவதற்கான தகுதியையும் பெறுவதற்கு, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் தாயகத்துக்குத் திரும்ப வேண்டுமா” என்கிற ஆதங்கத்தை, இந்தப் பத்தியாளரிடம், அவரின் வயதையொத்த புலம்பெயர் ஊடகத்துறை நண்பரொருவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தினார்.
கிட்டத்தட்ட அதேமாதிரியான ஆதங்கத்தை, சமூக ஊடகமொன்றில், கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும், அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த ஆதங்கங்களின் அடிப்படைகள் என்ன, இதனை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும், எப்படிக் கடக்க வேண்டும் என்று சிந்திப்பதில் இருந்துதான், தாயகத்துக்கும் புலம்பெயர் தேசங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைந்தல் பற்றிய உரையாடலை ஆரம்பிக்க முடியும்.
முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான தாயக - புலம்பெயர் உறவு என்பது, (ஆயுதப் போராட்டத்தின்) வெற்றிவாதம், பொருளாதார உதவிகள், திருமணம் என்கிற மூன்று கட்டங்களிலேயே தங்கியிருந்தன.
ஆனால், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான நாள்களில் தாயக - புலம்பெயர் உறவைப் பேணுவதில், அதிக பங்கை வகித்த ஆயுதப் போராட்டத்தின் வெற்றிவாதம் என்கிற விடயம், அரங்கிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. அது, அகற்றப்பட்டதும், அது சார் ஓர்மமும் பகுதியளவில் குறைந்துவிட்டது.
பொருளாதார உதவி, திருமணம் சார் உறவு என்பது இன்றளவும் நீடித்தாலும், தலைமுறை மாற்றத்தால், அதுவும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்துவிட்டது. தாயகத்துக்கான பொருளாதார உதவி என்பது, புலம்பெயர் முதல் தலைமுறையின் காலத்துடன் பெரும்பாலும் இல்லாமல் போய்விடும். திருமண உறவு, அடுத்த தலைமுறை வரை ஓரளவுக்குப் படர்ந்தாலும், அதுவும் பாதிக்குப் பாதி குறைந்துவிட்டது.
நிலத் தொடர்பற்ற சமூகமொன்றின் உறவு என்பது, வெற்றிவாதம், பொருளாதார உதவி, திருமணம் என்கிற விடயங்களில் மாத்திரம் தங்கியிருக்கும் போது, இவ்வாறான பின்னடைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். ஏனெனில், இந்தக் காரணிகளுக்குக் காலங்கள் கடந்து நிற்பதற்கான வலு மிகவும் குறைவு. அதைத்தான், தாயகத்துக்கும் புலம்பெயர் தேசங்களுக்குமான இடைவெளி பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.
எப்படி தாயைப் புறந்தள்ளிவிட்டு, தாய்மொழியைப் பற்றிப் பேச முடியாதோ, அதேபோலத்தான், தாயகத்தைப் புறந்தள்ளிவிட்டுத் தமிழ்த் தேசிய அரசியலைப் பேச முடியாது. தமிழ்த் தேசிய அரசியல் என்பது தாயகம் சார்ந்ததுதான்.
ஆனால், தமிழ்த் தேசியத்தின் விழுதுகள், புலம்பெயர் தேசங்கள் வரை படர்ந்திருக்கின்றன என்கிற உணர்நிலையை அதன், அடிப்படைகளோடு உணர்ந்து கொள்ளும் போதுதான், தாயக - புலம்பெயர் இடைவெளியைக் கடக்க முடியும்; அல்லது தொடர்பற்ற தன்மையை, மாற்ற முடியும்.
புலம்பெயர் தேசங்களிலுள்ள முதல் தலைமுறைக்கு, தாயக அரசியல் பிரதானமாக இருந்தாலும், அதன் அடுத்த தலைமுறைக்குத் தாயக அரசியல் என்பது, அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் வதியும் நாட்டின் அரசியல் அவர்களுக்குப் பிரதானமான ஒன்றாக மாறும். அது, வாழும் சூழல் சார்ந்தது; அதன் அடிப்படைகள் சார்ந்தது.
ஆனால், தலைமுறைகள் தாண்டியும், உறவை வலுப்படுத்த நினைக்கும் ஈழத் தமிழ்ச் சமூகம், அதற்கான ஏற்பாடுகளை, எந்தக் கட்டங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது தொடர்பில், பெரிதாக இதுவரை உரையாடியதில்லை.
புலம்பெயர் தேசங்களில் பேசப்பட்ட அரசியலுக்கும், தாயகத்தின் நடைமுறை அரசியலுக்கும் இடையிலேயே பெரிய இடைவெளி இருப்பதை, தாயகம் வந்து தங்கி நின்று, மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசிய, குறிப்பிட்டளவானவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தாயகத்திலுள்ள அரசியல், சமூக செயற்பாட்டுத் தரப்புகளால், புலம்பெயர் இளைய தலைமுறையைப் புரிந்து கொள்ளுதல், அவர்களுடனான உறவை எவ்வாறு பேணுவது என்கிற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. அதிக நேரங்களில், தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த முதல் தலைமுறையோடு, விடயங்களைப் பேசுவதோடு காலங்கள் கடத்தப்பட்டிருக்கின்றன.
80களிலும் 90களிலும் புலம்பெயர்ந்த தலைமுறைக்குத் தாயகம் குறித்து நேரடி உணர்வு, பற்று எப்போதுமே இருக்கும். அது, பிள்ளைக்கும் தாய்க்கும் இருக்கின்ற தொடர்பு போன்றது.
அதிலும் பெரும்பான்மையான புலம்பெயர் முதல் தலைமுறை தங்களை, தாங்கள் வதியும் நாட்டின் ஒரு குடிமகனாக பெரும்பாலும் உணர்வு ரீதியாகக் கருதியதில்லை. வீசா விடயங்களில் அதனை ஒரு சலுகையாகக் கண்டாலும், யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் மட்டக்களப்பும்தான் அவர்களின் தாயகம்.
ஆனால், அவர்களின் அடுத்த தலைமுறைக்குத் தாயகம் குறித்த உணர்வு என்பது, முதல் தலைமுறை அளவுக்கு இருக்க வேண்டியதில்லை. அந்தக் கட்டத்தில்தான், முதல் தலைமுறையுடனான உறவைப் பேணுவதிலும் பார்க்க, அடுத்த தலைமுறையுடனான தொடர்பைச் சமூக, அரசியல், தொழில்நுட்ப வழிகளில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
பொருளாதார உதவிகள் என்கிற கட்டம், நேரடி இரத்த உறவுகள் அளவிலானதாகவே பெரும்பாலும் தாயக - புலம்பெயர் சமூகங்களுக்கு இடையில் இதுவரை இருந்து வருகின்றன. அது, ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட கட்டத்தில் வளர்ச்சி பெறவில்லை.
ஆயுதப் போராட்ட காலத்தில், புலிகள் சார்ந்து ஒரு நிறுவனக் கட்டமைப்பு வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர், அந்தக் கட்டமைப்பு சிதைந்துபோய்விட்டது. அந்தக் கட்டமைப்பின் சிதைவு, சில தனிநபர்களின் பொருளாதாரத்தில் பெரும் செழிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அது, பெரியளவில் சமூகத்துக்குப் பங்களிக்கவில்லை.
நிலத் தொடர்பற்ற நிலையில், தங்களுக்கிடையில் உறவைப் பேண விரும்பும் சமூகம், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்கத் தவறும்போது, பொருளாதார உதவிகளுக்கான கட்டங்கள் மாத்திரமல்ல, அரசியல், சமூக தொடர்புகளுக்கான கட்டங்களும் விடுபட்டுப்போகவே செய்யும்.
தனிப்பட்ட பொருளாதார உதவிகள், சில குடும்பங்களைப் பொருளாதார சிக்கல்களிலிருந்து மீட்க உதவலாம். ஆனால், அது பொருளாதாரத் தோல்வியைச் சந்தித்திருக்கின்ற சமூகத்தை, ஒட்டுமொத்தமாக மீட்க உதவாது.
அப்படியான கட்டத்தில்தான், தலைமுறைகள் தாண்டியும் கூட்டுணர்வையும் கூட்டுழைப்பையும் கோருகின்ற நிறுவனக் கட்டமைப்புகளைப் பேண முடியும். கிறிஸ்தவ மதம், தன்னுடைய ஆளுமையை, கொலனித்துவக் காலத்திலிருந்து இன்றுவரை, நிறுவனக் கட்டமைப்புகளைக் கொண்டே வலுப்படுத்தி வந்திருக்கின்றது.
தாயக நிலப்பரப்பிலிருந்து காலத்துக்குக் காலம் துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள், தங்களுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்தியதும் மெல்ல மெல்லப் பலம்பெற்றதும், நிறுவனக் கட்டமைப்புகளின் வழியே ஆகும். (இஸ்ரேலின் உருவாக்கமும் அதன் பின்னாலுள்ள ஆக்கிரமிப்பு, அடாவடி அரசியலும் விமர்சனத்துக்குரியவை; கண்டிக்கப்பட வேண்டியவை)
எப்போதுமே ஆர்வக் கோளாறு மனநிலையில், யூதர்களோடு தங்களை ஒப்பிடும் தமிழ்த் தரப்பு, அவர்களின் வெற்றி எப்படி சாத்தியமானது என்று சிந்திப்பதிலிருந்து தம்மை மீள்பரிசீலனை செய்து கொள்ள முடியும்.
இன்றைய உலக மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப உலகில், நேரடி இரத்த உறவுகளுடனான நெருக்கமே, கேள்விக்குறியாகி வருகின்ற நிலையில், தலைமுறைகள் தாண்டிய தொடர்பை, இரத்த உறவைச் சொல்லிக் கொண்டு மாத்திரம் தக்கவைக்க முடியாது. அதற்குத்தான், நாளாந்தம் ஊடாடும் நிறுவன ரீதியான கட்டமைப்புகள் அவசியமாகின்றன.
அந்தக் கட்டமைப்புகள், சமூக பொருளாதார கட்டங்களில் ஆளுமை செலுத்தும் போது, தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல்களிலும், புலம்பெயர் தரப்பை ஆளுமை செலுத்தும் பங்காளியாக வைத்துக் கொள்ளும்.இல்லாதுபோனால், ‘எங்களைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கின்றது’ என்று தாயகத்திலுள்ளவர்களும், ‘புலம்பெயர்ந்துவிட்டதால் எமக்குத் தாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி இல்லையா’ என்று புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களும் ஆதங்கத்தைத் தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
அந்த நிலை மாற்றப்படாவிட்டல், இன்றைக்கு இருக்கின்ற இடைவெளி, இன்னும் இன்னும் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில், தொடர்புகள் முற்றாக அறுந்துபோகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
2 hours ago
3 hours ago