2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள்: இனநெருக்கடிக்குத் தீர்வு

மொஹமட் பாதுஷா   / 2017 ஜூன் 12 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மூவின மக்களோடும் தொடர்புபட்ட நீண்டகால விவகாரமான இனப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.   

ஆயுத ரீதியான மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது என்பதற்காகவோ, அதற்குப் பிறகு ஒருவித அமைதி நிலவுகின்றது என்பதற்காகவோ இனப்பிரச்சினை தீர்ந்து விட்டது என்று யாரும் கருதிவிட முடியாது.   

நல்லாட்சி என்ற அடைமொழியோடு ஆட்சிபீடமேறிய மைத்திரி - ரணில் அரசாங்கம், தமிழர்களுக்கு இனப் பிரச்சினைக்கான தீர்வுப் பொதி ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது.   

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பரந்துபட்டவையாக காணப்படுவதுடன், தமிழ் அரசியல்வாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் தம்முடைய நிலைப்பாட்டில், என்றுமே உறுதியாக இருக்கின்றனர்.   

அந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதில் ஒரு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்குத் தமிழர் தரப்பு கடுமையாகப் பிரயாசைப்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.   

சர்வதேசமும் வெளிச் சக்திகளுக்கும் இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. அந்த அடிப்படையிலேயே அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாகவும் வேறு பல ஏற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாகவும் தமிழ் மக்களை மையமாகக் கொண்ட தீர்வுப் பொதியை வழங்குவதற்கு, அரசாங்கம் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.   

ஆனால், கடந்த சில மாதங்களாக நாட்டில் இனவாதம் கையெடுத்தமை, ஆளும் கூட்டுக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட அதிகாரப் பனிப்போர், கூட்டு எதிரணியின் செயற்பாடுகள், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பற்றியோ, தீர்வுத் திட்டம் பற்றியோ பேசப்படுவது குறைவடைந்துள்ளது.சிலவேளைகளில், இனவாதம் மற்றும் கூட்டு எதிரணியின் நோக்கமும் அதுவாகக் கூட இருந்திருக்கலாம்.   

இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டம் என்று வரும்போது, அந்தத் தீர்வைக் கேட்பவர்கள் தமிழர்கள் என்றாலும் அது அவர்களுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல; மாறாக, அது முஸ்லிம்களையும் சிங்கள மக்களையும் உள்ளடக்கியது.   

இனவிடுதலைக்காகப் போராடியவர்கள் தமிழ் மக்களே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இப்போராட்டம் என்பது ஏனைய இனங்கள் மீது, குறிப்பாக முஸ்லிம்கள் மீது ஏற்படுத்திய பக்கவிளைவுகள் மிக மோசமானவை.   

அத்தோடு, தீர்வுத் திட்டத்தின் மையமாக உள்ள வடக்கு, கிழக்கில் அதிகமாக வாழ்கின்ற இரண்டாவது இனக் குழுமமாகவும் முஸ்லிம்கள் திகழ்கின்றனர். எனவே தீர்வுத் திட்டம் ஒன்று வழங்கப்படுமாயின் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மூவின மக்களையும் திருப்திப்படுத்துவதாக அது அமைந்தால் மட்டுமே, அது நிரந்தரத் தீர்வாக அமையும். அன்றேல், அதிலிருந்து இன்னுமொரு முரண்பாடு தோன்றும் அபாயமிருக்கின்றது.   

தமிழர்கள் கோருகின்ற தீர்வுத்திட்டத்தின் பிரதான அம்சமாக, இணைந்த வடக்கு -கிழக்குடனான தீர்வுகள் அமைகின்றன. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கின்ற விடயத்தை இலகுவாகச் செய்து விடலாம் என்று கருதினார்களோ என்று நினைக்குமளவுக்கே அவர்கள் வெளியிட்ட கருத்துகள் அமைந்திருந்தன.   

இது முஸ்லிம் மக்களைப் கிலிகொள்ளச் செய்தது. பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இது விடயத்தில் கடைப்பிடித்த ஒருவித நழுவல் போக்கு, இதோ ரவூப் ஹக்கீம், வடக்கு - கிழக்கை இணைக்கச் சம்மதித்து விட்டார் என்று பரவலாக விமர்சிக்கப்படுவதற்கு காரணமாகியது.   

கிழக்கைத் தம்மோடு இணைப்பதால் தமிழர்களுக்கு ஏற்படும் அனுகூலத்தின் அளவுக்கு, வடக்கோடு சேர்வதால் முஸ்லிம்களுக்கு பெரிய நன்மைகள் எதுவும் இல்லை என்ற அடிப்படையில், இவ்விணைப்புக்குப் பலமான எதிர்ப்புக் குரல்கள் கிழக்கில் இருந்து எழுந்தன.   

இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ ஏன் சில வேளைகளில் மு.கா தலைமையோ கூட எதிர்பார்த்திருக்க மாட்டாது என்றும் சொல்லலாம். அதையும் மீறி, இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதென்றால், தனி முஸ்லிம் மாகாணம், தென்கிழக்கு அலகு உருவாக வேண்டும் என்றும், இரு சமஷ்டி அலகுகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் இன்னும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.   

எனவே, இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பல பேச்சுவார்த்தை தொடர்பான ஆவணங்களில் முஸ்லிம்களை சிறுகுழுக்கள் எனக் குறிப்பிட்டுவிட்டுப் போனது போன்று, இம்முறை செய்வது சற்று சிரமமானது என்பதையும் கிழக்குக்கு வெளியில் உள்ள மு.கா தலைவர் மட்டுமன்றி, கிழக்கில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒப்புதலும் இதற்கு அவசியம் என்ற நிதர்சனத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்வதற்கு அவ்வளவு காலம் எடுக்கவில்லை.   

இந்த நிலைமையைப் பெருந்தேசியவாதம், தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது என்பது வேறு கதை. சிங்களக் கடும்போக்கு அரசியல்வாதிகள், தீர்வுத்திட்டத்துக்கு எதிராக முன்வைத்த கருத்துகள், அதனால் ஆட்சியில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட அதிர்வு, கிழக்கு முஸ்லிம்களின் எதிர்ப்பலை என்பவற்றின் அடிப்படையில், தீர்வு வழங்கும் செயற்பாடுகளின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக உணரப்படுகின்றது.   

எவ்வாறிருப்பினும், இந்த நிலைமை ஏற்பட்ட பிறகு, முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்று தமிழர் தரப்பு பகிரங்கமாகக் கேட்குமளவுக்கு ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தீர்வுத்திட்டமோ, அதன்கீழ் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான உத்தேச திட்டமோ முன்வைக்கப்பட்டால், அதில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் என்ன என்பதைச் சரியாக, முறையாக, ஒருமித்த குரலில் முன்வைப்பதற்கு முஸ்லிம் கட்சிகளோ அரசியல்வாதிகளோ கூட்டாகத் தயார் இல்லை.   

அவரவர் தமது அரசியல் பிழைப்புப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். சமூகத்தின் இலக்கை அடைவதைக் காட்டிலும் அரசியல் எதிராளிகளை வீழ்த்துவதற்காகவே அவர்களுடைய அரசியல் மூளை அதிகமதிகம் பயன்படுத்தப்படுகின்றது.   

இவ்வாறு, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளுக்கொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்ற நிலையில், எது சரி எது பிழை எனச் சாதாரண மக்கள் குழம்பிப் போய், தம்முடைய எதிர்கால இருப்புப் பற்றி அச்சமடைந்திருக்கின்ற சூழலில், முஸ்லிம் சமூகத்தின் உள்ளே இருக்கும் சிவில் சமூகத்தினர், படித்தோர், புத்திஜீவிகள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகள் மிக மந்தமான நிலையிலேயே உள்ளன.   

பெரும்பாலும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய தொழில்வாண்மையாளர்கள் இந்த மக்களை விழிப்பூட்டுவதிலும் மக்களுக்காகத் தேவையேற்படின் அரசியல்வாதிகளை எதிர்த்துப் பேசுவதற்கும் தயங்குகின்றனர்.   

‘நமக்கு ஏன் இந்த வீண்வம்பு’ என்று ஒதுங்கி இருக்கின்றனர். அரசியல் என்பது சாக்கடை என்று கூறிக்கூறியே விலகிச் செல்கின்ற இவர்கள், இது சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதை வசதியாக மறந்து விடுவதுண்டு.   

அதையும் மீறி இலங்கையில், பல சிவில் அமைப்புகள் தேசிய ரீதியாகவும் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கவுன்சில், சூறா சபை,ஆர்.ஆர்,ரி அமைப்பு உள்ளடங்கலாகத் தேசிய மட்டத்தில் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.   

இவற்றுள் பிற்காலத்தில் உருவான ஆர்.ஆர்.ரி அமைப்பின் செயற்பாடுகள் முஸ்லிம்களின் சிவில் பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதைக் காண முடிகின்றது. இதுதவிர தேசிய சமத்துவப் பேரவை, முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு, சிவில் அமைப்புகளின் சம்மேளனம் போன்ற வேறுபல அமைப்புகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.   

‘சும்மா இருப்போரை விடச் செயற்படுவோர் மேல்’ என்ற அடிப்படையில், இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்கு உரியன.  

இந்நிலையிலேயே கிழக்கில் இருந்து, ‘கிழக்கு மக்கள் அவையம்’ என்று ஓர் அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, இனப்பிரச்சினைக்கானத் தீர்வு போன்றவை முன்வைக்கப்படவுள்ள ஒரு சூழலில் இவ்வவயம் உருவாகியுள்ளது.   

அண்மையில், அக்கரைப்பற்றில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த அமைப்பு, அதற்குப் பின்னர் காத்தான்குடியிலும் இறக்காமத்திலும் அமர்வுகளை நடாத்தியுள்ளது. 

கிழக்கு மக்கள் அவயம் இனப் பிரச்சினைத் தீர்வு மற்றும் சிவில் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என அதன் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.   

இந்த அமைப்புக்குப் பக்கபலமாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா இருக்கின்றார். அதாவுல்லா பற்றி நமக்குத் தெரியும். அபிவிருத்தி அரசியலில் சிறந்த சேவைகளை ஆற்றிய அவர், உரிமை அரசியலைக் கவனத்தில் எடுக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இனவாதம் தலைவிரித்தாடிய போது, மௌனியாக இருந்ததாகவும் அவர் மீது ஒரு விமர்சனம் இருக்கின்றது.  

இதே விடயங்களே, அவரால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனதற்கும் பிரதான பங்களிப்புச் செய்திருக்கலாம். இவ்வாறு, பிரதிநிதித்துவ அதிகாரத்தை இழந்திருந்த அதாவுல்லா, கிழக்கு மக்கள் அவயத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றார் என்பதால், இது அவரது சொந்த அரசியலுக்கான முயற்சியா என்றும் சிலர் கேட்கின்றனர்.  

விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களையே பகிரங்கமாக எதிர்த்த அதாவுல்லா, மஹிந்தவுக்கு நன்றிக்கடன் செலுத்துதல் என்ற கோதாவில் எடுத்த நிலைப்பாடு, குறித்த அதிருப்திகள் இருந்தாலும், கிழக்கின் அரசியல் என்று வரும்போது, அதற்காகக்குரல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் என்பதை மறுப்பதற்கில்லை.  

ஆனாலும், அவரது பார்வைக் கோணம் மாறுபட்டதாக இருக்கும். பல வருடங்களுக்கு முன்னரே, வடகிழக்கு மாகாணத்தைப் பிரிக்கச் சொல்லி பாதயாத்திரை நடாத்தியதுடன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தும் வந்தார். இப்போது கிழக்கு, வடக்குடன் இணைக்கப்படப் போகின்றது என்று பேசப்பட்ட போது, சுதந்திரக் கிழக்கு என்ற பெயரில் அவ்விணைப்புக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார். 

இன்று, நாடாளுமன்றத்தைப் போலவே, கிழக்கு மக்கள் அமையத்திலும் அவர் பதவியில் இல்லை. என்றாலும் அதற்குப் பின்னால் அவர் இருப்பார் என்றால்..... அவ்வமைப்பில் அவரது மேற்சொன்ன நிலைப்பாடுகளின் செல்வாக்கும் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.   

அந்த வகையில், வடக்கு, கிழக்கை இணைப்பது என்றாலோ அல்லது இணையாத வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டு ஒரு தீர்வுத்திட்டமோ, வரைவோ முன்வைக்கப்படுவது என்றாலோ அதுபற்றிக் கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களுடனும் அவர்களுடைய மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்ற அடிப்படை நிபந்தனையை கிழக்கு மக்கள் அவயம் வலியுறுத்தும்.   

அத்தோடு கிழக்கு முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தாத எந்தத் தீர்வையும் அவயம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அவயத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.   

ஆனால், இனப் பிரச்சினைத் தீர்வு முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக கிழக்கில் உள்ள சிவில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.அதற்காகத் தற்போது மாகாணத்துக்கு இருக்கின்ற அதிகாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இதனது நிலைப்பாடாக இருக்கின்றது.  

காணிப் பிரச்சினைகள், எல்லைப் பிரச்சினைகள், தொல்பொருள் விவகாரங்கள் உள்ளடங்கலாகச் சிவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தீர்வுத்திட்டத்தை மட்டும் முன்வைப்பதால் பிரச்சினை தீர்ந்துவிடாது என்று கிழக்கு மக்கள் அவயம் கருதுகின்றது. 

அதாவது இனப் பிரச்சினைக்கான தீர்வு முழுமைபெற வேண்டுமாயின், சிவில் விவகாரங்களில் ஒரு சமரசம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதாகும்.   

அந்த வகையில், கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள சிவில் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் பணியை இவ்வமைப்பு ஆரம்பித்துள்ளது. இறக்காமம் பிரதேசத்தில் ஏனைய அரசியல்வாதிகளையும் உள்ளடக்கியதாக நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில், 19 பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

எவ்வாறிருப்பினும்,கிழக்கு விடயத்தில், இனப் பிரச்சினைத் தீர்வையும் சிவில் விவகாரங்களையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளாது, இவ்விரண்டையும் இவ்வமைப்பு தனித்தனியாகக் கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

கிழக்கு மக்கள் அவயம் என்பது ஓர் அமைப்பு மட்டுமே. இதுபோல எத்தனையோ சிவில் அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சில அமைப்புகள் பெயரளவில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், இவ்வாறு யாராவது முன்வந்து ஏதாவது அமைப்பை ஆரம்பித்தால், அதற்கு கிடைக்கின்ற மக்கள் ஆதரவு மிகக் குறைவாகும். 

இதனால் யாருக்கு நலன் இருக்கின்றது? இதற்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்பதை விட இவ்வமைப்புகளைப் பயன்படுத்தி மக்களுக்கு என்ன அனுகூலத்தை பெற முடியும் என்று சிந்திப்போர் மிகக் குறைவாகவே உள்ளனர்.   

குறிப்பாக, முஸ்லிம் புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், படித்தோர், சமூகநலன் விரும்பிகள் பகிரங்கமாக அரசியல்வாதிகளுக்கு எதிராகவோ அரசாங்கத்துக்கு எதிராகவோ பேசுவவதை விரும்பாத, அஞ்சுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.   
இந்நிலைமை தமிழ்ச் சமூகத்தில் இல்லை.

அவர்கள் எல்லா அடிப்படைகளிலும் எல்லா தரப்பினரும் மக்களுக்காகப் பேசுவதற்கு முன்னிற்கின்றனர். ஆனால், முஸ்லிம் சமூகத்தில் மேற்சொன்ன தரப்பினர் முகநூலில் ‘லைக்’ போடுவதாலும், ‘வட்ஸ்அப்’பில் குறுப் நடாத்துவதாலும் சமூகத்தின் அபிலாஷைகள் வெல்லப்பட்டுவிடும் என்று நினைக்கின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். அரசியல்வாதிகள் வழிதவறுகின்றபோது, அவர்களை அடித்துத் திருத்துமளவுக்கு துணிச்சல் பெற்றதாக சிவில் செயற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X