Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
மொஹமட் பாதுஷா / 2019 நவம்பர் 29 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனாதிபதி, தற்காலிக அரசாங்கம் ஆகியவற்றின் கீழ், ஆரம்பமாகியுள்ள இப் புதிய அரச நிர்வாகத்தில், முஸ்லிம் சமூகம் ஒரு வித்தியாசமான, இரண்டும்கெட்டான் மனநிலைக்குள் சிக்கியுள்ளது எனலாம்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த சிங்கள மக்களை விட, அவருக்கு வாக்குப்போட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தல் வெற்றியைப் பெருமிதமாகக் கொண்டாடுகின்ற சூழலில், சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்த பெரும்பான்மைச் சிங்கள மக்களை விட, முஸ்லிம்கள்தான் அதிகமான மனத்தாங்கலுக்கு உள்ளாகின்றமை, கால வினோதமன்றி வேறொன்றுமில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில், சிறுபான்மையினருக்குப் பங்கில்லை என்று கூறி, தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிலர் பிரித்துப் பார்க்கின்ற போக்கைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
ஆனால், நாம் கடந்த வாரப் பத்தியில் குறிப்பிட்டிருந்ததைத் போல, ராஜபக்ஷவுக்குச் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையானோர் வாக்களிக்கவில்லையே தவிர, கணிசமானோர் வாக்களித்துள்ளனர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட தமிழ் வாக்காளர்கள் என, எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் தமது ஆணையை வழங்கியிருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதியும் பிரதமரும் இப்போது சிறுபான்மையினங்களை நோக்கி, நேசக்கரங்களை நீட்டத் தொடங்கியிருக்கின்றனர். தமிழர்கள் நீண்டகாலமாக, ராஜபக்ஷக்களின் ஆட்சிக்குத் துணைநின்றவர்கள் அல்லர்; அத்துடன், எதிர்ப்பு அரசியல் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள்.
ஆனால், இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் மக்களும், வழமைக்கு மாறாக, இம்முறை தூர விலகி இருக்கின்றமையே ஆட்சியாளர்களுக்கு என்னவோ போல் இருக்கின்றது.
ஆதலால், ‘முஸ்லிம் சமூகத்தை இணைத்துக் கொண்டு செயற்பட, எமது அரசாங்கம் சித்தமாய் இருக்கின்றது’ என்பதை வெளிப்படுத்தும் பாங்கிலான அழைப்புகளைக் குறிப்பாக, ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.
இது வரவேற்கத்தக்க ஒரு முன்மாதிரியாகும். பெரும்பான்மைச் சிங்கள மக்களின், பெரும்பான்மை வாக்குகளாலேயே, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம் என்பதை, ராஜபக்ஷக்கள் தெளிவாக உணர்ந்திருந்தும், இத்தகைய அணுகுமுறைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில், வாக்களிக்காத மக்கள் பிரிவினரையும் அணைத்துக் கொண்டு, எல்லோருக்கும் பொதுவான ஜனாதிபதியாகச் செயற்பட கோட்டாபய ராஜபக்ஷவும் பொதுவான பிரதமராகப் பணியாற்ற மஹிந்த ராஜபக்ஷவும் முன்னிற்பார்கள் என்றால், அது நல்லதொரு முன்மாதிரியாகக் கருதப்படும்.
எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம் சமூகம் பெருமளவுக்குத் தமக்கு வாக்களிக்கவில்லையே என்ற ஓர் எண்ணம், குறை, மொட்டு அணிக்கு இருக்கும் என்பதைப் போலவே, கோட்டாபயவின் வெற்றியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்கெடுக்க முடியாமல் போனமையால், ஆட்சியிலும் முன்னரைப் போன்று, ஒரு பலம்மிக்க பங்காளியாக இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டதே என்ற மனக்கிடக்கை, முஸ்லிம் சமூகத்திலும் அநேகருக்கு ஏற்பட்டிருக்கின்றது எனலாம்.
இன்று பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள், தமக்குப் பெரிதாகப் பழக்கப்பட்டிராத எதிர்க்கட்சி அரசியலுக்குத் தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சிலர், அந்தப் பக்கம் ‘பல்டி’ அடிப்பதற்காக, ‘மதில் மேல் பூனை’யாக உலாவித் திரிவதாகவும் பேச்சடிபடுகின்றது. ஆனபோதும், அமைச்சராக, பிரதியமைச்சராக இருந்து, அமைச்சர்கள் உள்ள ஒரு கட்சியில் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து செயற்படுவதை விட, எதிர்க்கட்சி எம்.பியாகச் செயலாற்றுவது, பல்வேறு சவால்கள் நிறைந்ததாகும்.
இன்னும் ஐந்து, 10 வருடங்களுக்கான தமது அரசியல் பயணம், எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது இருக்கின்ற காலகட்டமாக, இக்காலகட்டம் காணப்படுகின்றமையால், அமைச்சுப் பதவியும் அதிகாரங்களும் இன்னபிற வரப்பிரசாதங்களும் கிடைக்காது என்ற கவலை, இப்போது பல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.
எதிர்க்கட்சி அரசியலைச் செய்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள், தம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும் என்பது வேறுவிடயம்.
இதேவேளை, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்குப் பொதுவாக ஒரு மனத்தாங்கல், இப்போது ஏற்பட்டிருக்கின்றது. இந்தத் தற்காலிக அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவோ, இராஜாங்க, பிரதி அமைச்சர்களாகவே முஸ்லிம்கள் யாருமே இடம்பிடிக்கவில்லை என்பது, இந்தச் சமூகத்தை, ஒருவித கவலை சூழ்ந்த மனவோட்டங்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றது. இதுவே இன்று, சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகவும் இடம்பிடித்திருக்கின்றது.
பெரும்பான்மையான முஸ்லிம்கள், இந்தத் தேர்தலில், சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்தனர் என்பது வெள்ளிடைமலை. ஆனால், அதையும் தாண்டிப் பல இலட்சம் பேர், மொட்டுச் சின்னத்துக்கு வாக்களித்திருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி, ஆகக் குறைந்தது இரு முஸ்லிம் கட்சிகளும் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், பைசர் முஸ்தபா, எம்.ரி. ஹசன்அலி, பஷீர் சேகுதாவூத், காதர் மஸ்தான், மயோன் முஸ்தபா போன்ற அரசியல்வாதிகளும் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்திருக்கின்றார்கள் என்பதை, யாராலும் மறுதலிக்க முடியாது.
இப்படியான சூழ்நிலையில், அண்மையில் தற்காலிக அமைச்சரவை நியமிக்கப்பட்டள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழர்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதும், முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருக்கும், அந்தப் பதவிகள் வழங்கப்படவில்லை.
பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய, இரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்காவது இராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சுக் கிடைக்கும் என்று திடமாக எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, பைசர் முஸ்தபாவுக்கு அன்றேல், காதர் மஸ்தானுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கலாம் என்று, முஸ்லிம் அரசியல் வட்டாரங்களில் பலரும் பேசிக் கொண்டனர்.
இருப்பினும், இப்போது 35 இராஜாங்க அமைச்சர்களும் மூன்று பிரதியமைச்சர்களும் நியமிக்கபட்டு விட்டனர். ஆனால், அதிலும் முஸ்லிம் எம்.பிகள் யாருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது, முஸ்லிம் சமூகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.
இது தொடர்பாகப் பலதரப்பட்ட கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கை பெற்ற சுதந்திரத்திலும் அதற்குப் பின்னரான இறைமையுள்ள ஆட்சியிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்துக்குப் பெரும் பங்கிருக்கின்றது. இதைப் பெரும்பான்மை அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டு, அதற்குரிய மதிப்பைக் கொடுத்தே வந்திருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல், 2005, 2010 ஆகிய ஆண்டுகளில் அமையப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்களிலும் அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் பதவி வகித்தனர்.
இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து, இன்று வரைக்குமான அனைத்து அமைச்சரவைகளிலும் ஆகக் குறைந்தது ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராவது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து வந்துள்ளார் என்பதை, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுகின்ற போது புலனாகின்றது.
1947 இல் நிறுவப்பட்ட டீ.எஸ். சேனநாயக்க தலைமையிலான அமைச்சரவை, 1953 இல் ஜோன் கொத்தலாவல அமைச்சரவை, 1956 இல் பண்டாரநாயக்க அரசாங்கம், 1959 தஹநாயக்க அரசாங்கம், 1960 மற்றும் 1970 களில் சிறிமாவோ பண்டாரநாயக்க அமைச்சரவைகள், 1965 இல் டட்லி சேனநாயக்க அமைச்சரவை, 1977 இல் ஜே.ஆர் ஜெயவர்தன அரசாங்கம், 1989 இல் ஆர். பிரேமதாஸ அரசாங்கம் என, எல்லா அரசாங்கங்களின் அமைச்சரவையிலும் ஆகக் குறைந்தது, ஒரு முஸ்லிம் மக்கள் பிரதிநிதியாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக, இடம்பெற்றிருந்தார்.
மிகக் குறிப்பாக, 2004 இல் நிறுவப்பட்ட சந்திரிகா அம்மையாரின் ஆட்சி தொடக்கம், அதற்குப் பின்னர் ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால - ரணில் அரசாங்கங்களிலும் அதிகமான முஸ்லிம் எம்.பிக்கள், அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். ஆனால், ராஜபக்ஷக்களின் புதிய அமைச்சரவையில், முஸ்லிம்கள் எவரையும் காண முடியவில்லை.
உன்னிப்பாக அவதானிக்கின்ற போது, இப்புதிய அமைச்சரவை உறுப்பினர்களை, ஜனாதிபதியும் பிரதமரும் மிகக் கவனமாகத் தெரிவு செய்துள்ளதைக் காண முடியும்.
அதாவது, கடந்த ஆட்சிக் காலத்தில் ராஜபக்ஷ அணி, பெரும் அரசியல் சுழிக்குள் அகப்பட்டிருந்த நான்கு வருடங்களில், எந்தப் பக்கமும் தாவாமல், தொடர்ச்சியாகத் தம்மோடு இருந்தவர்களையே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமித்துள்ளார்கள்.
அதைவிடுத்து, ‘மொட்டுக் கட்சிக்காரர்கள் மட்டுமே, அமைச்சர்களாக, இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்பது போன்ற கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
மாறாக, தொடர்ந்து தம்மோடு பயணித்தவர்கள் என்ற அளவுகோலே, இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும். அப்படிப் பார்த்தால், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாஹ், ஒரு எம்.பியாக இருந்திருப்பாராயின் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கச் சாத்தியமிருந்தது; அதுவும் நடக்கவில்லை.
இந்த அடிப்படையில் பார்த்தால், பைசர் முஸ்தபாவையும் காதர் மஸ்தானையும் மேற்சொன்ன வகையறாக்களுக்குள் அவர்கள் சேர்க்கவில்லை என்றே, கருத வேண்டியுள்ளது.
அதைவிடுத்து, பைசர் முஸ்தபா, தமக்குப் பதவி தேவையில்லை என்று சொன்னதாகக் கூறப்படுவதும், மஸ்தானுக்கு வழங்கப்படாமைக்கு அளிக்கப்படும் விளக்கங்களும் வெறும் திரிவுபடுத்தப்பட்டவை ஆகும்.
உண்மையில், இவர்களுக்கு இராஜாங்க அமைச்சைக் கொடுக்கவே திட்டமிட்டிருந்ததாகவும் கடைசியில் அதுவும் ஏன் கிடைக்கவில்லை என்பதற்குப் பின்னால், வெளியில் வராத பல காரணங்கள் இருப்பதாக, அரசல் புரசலாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
பதவியும் அமைச்சரவை அந்தஸ்தும் மட்டுமே, ஓர் அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு வழங்குகின்ற அதிகாரங்கள் அல்ல; அத்துடன், முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அமைச்சரவையில் அங்கம் வகித்தபோதும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பலர், முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்தபோதும் ஆனபலன் ஒன்றுமில்லை என்றுதான் கூறவேண்டும்.
அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில், உண்மைக்குண்மையாக அந்தப் பதவியைத் தனது சமூகத்துக்காகப் பயன்படுத்தி, முஸ்லிம்களின் அபிலாசைகளை, நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்த்தவர்கள் ஓரிருவர் மாத்திரமே. மற்றைய எல்லோருமே, வெறுமனே காலத்தைக் கடத்திவிட்டுப் போனவர்கள்தான்.
எனவே, இந்தக் கோணத்தில் பார்த்தால், முஸ்லிம் சமூகத்துக்குப் பயன்படாத ஒரு பதவி குறித்து, அச்சமூகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற முடிவுக்கும் வர முடியும்.
அதேவேளை, முஸ்லிம்கள் யாரையும், அமைச்சராக அரசாங்கம் நியமிக்கவில்லை என்பதால், எடுத்த எடுப்பில், முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றது, வாக்களிக்காமையால் வஞ்சம் தீர்க்கப்படுகின்றது என்று ஒரு தரப்பினர் கூற முற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால், உண்மையில் ஓர் அமைச்சருக்கு இருக்க வேண்டும் என்று, அரசாங்கம் நினைத்த ‘தகுதி’களை’இப்போது ஆளுந்தரப்பில் இருக்கின்றவர்கள், பூர்த்தி செய்யவில்லை என்று, ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள் என்பதே, அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கான காரணம் என்ற விடயத்தை, முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு, பல நடைமுறை யதார்த்தங்கள் குறித்த விளக்கங்கள், முஸ்லிம்களுக்குக் கூறப்பட்டாலும் அதையும் தாண்டி, முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இல்லையே என்ற மனத்தாங்கல் ஏற்படுவதை, மனிதர்கள் என்ற ரீதியில், தடுக்க முடியாதுள்ளது.
அமைச்சரவையில் ஒரு முஸ்லிமும் இல்லை என்பது, முஸ்லிம்களின் குரல் அமைச்சரவையில் ஒலிப்பதற்குத் தடங்கலாக அமையும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த விடயங்களை எல்லாம், அரசாங்கம் அறியாதவை அல்ல; எனவே, முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கும் நல்லெண்ண சமிக்ஞையாக, மொட்டுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் கைமாறாக, தம்மோடு பாடுபட்ட குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு செய்யும் கௌரவமாக, உலக (முஸ்லிம்) நாடுகளுக்குக் காண்பிப்பதற்காகவேனும் அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்க அரசாங்கம் முன்வருமாயின், அது முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதலளிக்கும் நகர்வாக அமையும்.
‘இலங்கையர்’ உணர்வை உருவாக்குவதன் அவசியம்
இலங்கை ஒரு பல்லின, பல்கலாசார நாடாக இருந்தாலும், இந்த நாட்டில் இலங்கையர் என்ற பொதுப்பண்பையும் உணர்வையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் செயன்முறையில், மூவின மக்களும் ஈடுபட வேண்டியது அவசியம். இருந்தபோதிலும், முஸ்லிம்களும் தமிழர்களும் இது விடயத்தில், கூடிய அக்கறை காட்ட வேண்டியிருக்கின்றது.
ஒருகாலத்தில், நமது தேசிய அடையாள அட்டையில், தேசிய இனம் எது என்று கேட்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இலங்கைச் சோனகர், மலையகத் தமிழர், இலங்கைத் தமிழர் என்றே எழுதி வந்தோம். ஆனால் பின்னர், இவ்வாறு இனரீதியாகக் குறிப்பிடாமல், தேசிய அடிப்படையில் நோக்க வேண்டும் என்பதற்கு அமைவாக, ‘இலங்கையர்’ (Srilankan) என்று குறிப்பிடச் சொல்லி, அறிவுறுத்தப்பட்டோம்.
ஆனால், விண்ணப்பப்படிவங்களில், நமது இனத்தைப் பிரித்துக் குறிப்பிடாமல், பொதுமையாக இலங்கையர் எனக் கூறிப்பிடப் பழகிய முஸ்லிம்களும் தமிழர்களும், நிஜ வாழ்க்கையில், இன்னும் இலங்கையர் என்ற பொதுத் தளத்துக்குள் நுழையவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. இந்த நிலை, மாற வேண்டும். இந்திய மக்களை, இதற்கு முன்மாதிரியாக, நாம் எடுத்துக் கொள்ளலாம்.
நாட்டின் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை செலுத்துவதில் இருந்து, தேச உணர்வையும் இலங்கையர் என்ற பொதுவான மனநிலையையும் வளர்க்கத் தொடங்கலாம். தேசிய கீதம் இசைக்கப்படுகின்ற போது, அதற்கு மரியாதை வழங்குகின்ற பல முஸ்லிம்களும் தமிழர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.
ஆயினும், தேசிய கீதம் பெரும்பாலும் சிங்கள மொழியில் இசைக்கப்படுவதாலும் நமது பழக்க தோசத்தாலும் அதைப் பெரும்பான்மைச் சமூகத்தின் தேசிய கீதமாகப் பார்க்கின்ற சிந்தனை, நம்மில் பலருக்கு இருக்கின்றது.
ஆகவே, நாமும் இலங்கையர் என்றால், அந்தத் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டியது, நமது கடமை என்பதை நினைவில் கொள்வது நல்லது.
அதுபோலவே, போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்தல், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், முஸ்லிம்கள் அதற்குக் கட்டுப்பட வேண்டும். பெரும்பான்மைச் சமூகங்கள் வாழ்கின்ற பிரதேசத்துக்கு அல்லது ஒரு பொது இடத்தில் பிரசன்னமாகின்ற முஸ்லிமோ, தமிழரோ ‘ஹபாயா’ அணிந்திருப்பதும், வேட்டி அணிந்திருப்பதும் பிரச்சினையில்லை; அது அவரவர் உரிமையும் கூட.
மிகக் குறிப்பாகச் சிங்கள மக்கள், பெருமளவில் வாழ்கின்ற பகுதிகளில் வசிக்கின்ற முஸ்லிம்களும் தமிழர்களும், இலங்கையர் என்ற அடையாளத்துக்குக் குந்தகம் இல்லாமல், தமது கலாசாரங்களை முன்னிறுத்த வேண்டும்.
அத்துடன், இலங்கையில் சிங்கள கடும்போக்குச் சக்திகள் மாத்திரமே இனவாதம் பேசிக் கொண்டிருப்பதாகச் சிறுபான்மை மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நிதர்சனம் அதுவல்ல; முஸ்லிம்கள் பக்கத்தில் பேசப்படுகின்ற கலாசாரம் சார்ந்த பல விடயங்களையும் தமிழர்கள் முன்வைக்கின்ற இன ரீதியான கோரிக்கைகளையும் முறையே மத, இனவாதங்களாகவே பெரும்பான்மை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை, மறந்து விடக்கூடாது.
எனவேதான், இலங்கையர் என்ற பொதுப்படையான குடையின் கீழ், அதற்குரிய பண்புகளுடன் ஒன்றுகூடுவதோடு, அதற்குள் நின்றுகொண்டு, தமது இனத்துவ அடையாளங்களையும் கலாசாரங்களையும் பேண, முஸ்லிம்களும் தமிழர்களும் முன்வர வேண்டும்.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிங்களவர்களில்த்தான் பிழை; அவர்கள்தான் திருந்த வேண்டும் என்ற வெற்றுக் கோஷங்களை எழுப்புவதைக் கைவிட்டு, நமது பக்கத்தில் எங்கு பிழை உள்ளது? எனத் தேடிப் பார்த்து மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
இலங்கையர் என்ற பொதுமையை கட்டியெழுப்புவதே பல நெருக்கடிகளுக்கு, மறைமுகத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago