2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முஸ்லிம்களுக்கான அரசியல் மீண்டெழுமா?

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை தெட்டத்தெளிவாக உணரப்படுகின்ற ஒரு காலத்தில் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்வது என்பது வேறு விடயம். ஆனால், சமகாலத்தில் ஒரு சமூகமாக முஸ்லிம்கள் தமக்கான பிரத்தியேக அரசியல் வழித்தடம் ஒன்றை வைத்திருக்க வேண்டியுள்ளது.

இங்கே, முஸ்லிம்களுக்கான அரசியலைப் பலப்படுத்துவது என்பது ‘ஆட்கள்’, அதாவது அரசியல்வாதிகள் பற்றியதல்ல.  மாறாக, சமூகத்தை மையமாகக் கொண்ட, அரசியலைத் தனித்துவமாக முன்னெடுக்கக் கூடிய ஒரு கொள்கை, கோட்பாடு, ஒழுங்கமைப்பு, வழித்தடம் அவசியம் என்பதையே வலியுறுத்துகின்றது. 

 ஆழமாகச் சிந்திக்கின்ற மக்கள் பிரிவினர் இதனைக் கொஞ்சம் உணர்ந்திருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் தமக்கான அரசியல் தூர்ந்து போவது பற்றிய பாரதூரத்தைப் பெரிதாகக் கவனத்தில் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் முசுப்பாத்திகளில் காலம் கழிகின்றது.

இந்த விடயத்தின் பாரதூரத்தன்மையை அதிகம் உணர்ந்து செயற்பட வேண்டியவர்கள் முஸ்லிம் கட்சித் தலைவர்களாவர். ஏனெனில், முஸ்லிம் அரசியலின் இறங்குமுகம் என்பது சமூகத்திற்கு நீண்டகால ரீதியாக ஒரு இழப்பாக அமைவது ஒருபுறமிருக்க, உடனடியாகவே அது முஸ்லிம் கட்சிகளின் பிழைப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

ஆனால், அந்தப் புரிதல் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றதா? என்பதை விட, அதனை அடைவதற்கான களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் திட்டமிட்டிருக்கின்றார்களா? என்ற கேள்வியே பலமாக எழுகின்றது.

முஸ்லிம்கள் பெருந்தேசியக் கட்சிகளுடன் கலந்து அரசியல் செய்வதை பார்க்கின்றபோது, சமூக நல்லிணக்கம், பொதுமை என தோன்றினாலும், தமக்கான அரசியலைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு பெரும்பான்மை கட்சிகளில் கலந்து கிடப்பது நீண்டகால அடிப்படையில் ஆரோக்கியமானதல்ல.

3 பிரதான முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இவை தவிர, தேசிய சமாதான கூட்டமைப்பு, தேசிய ஐக்கிய முன்னணி, ஜனநாயக ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி, என சிறிய கட்சிகளும் உள்ளன. இது தவிர, அறிக்கைகளில் மட்டும் உயிர் வாழும் சில பெயரளவிலான முஸ்லிம் அரசியல் அணிகளும் உள்ளன.

எது எப்படியிருப்பினும், முஸ்லிம்களுக்கான அரசியலைத் தக்க வைப்பதில் மூன்று காங்கிரஸ்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமே முதன்மைப் பொறுப்புள்ளது.  
முஸ்லிம் காங்கிரஸின் தேக்கநிலை என்பது பெரும்பாலும் அதனது தலைவர் றவூப் ஹக்கீமின் போக்குகளால் ஏற்பட்டதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், அவர் மட்டுமே காரணமல்ல.

ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் காலத்தில் ஒரு பலமான அடித்தளத்தைக் கொண்டிருந்த மு.கா. பின்னர் சரியத் தொடங்கியது. கட்சியில் பிளவுகள் ஏற்பட்டது மட்டுமன்றி ஊர்களுக்குள்ளும் பல அணிகள் உருவாகின அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. இதனை மக்கள் காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது எனலாம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா. தலைவர் ஹக்கீம் தனது வழக்கமான சூத்திரங்களை மீள் வாசிப்புச் செய்தார். தனக்குத் தலையிடியாக உருவாகிவிட்ட அதேநேரம், மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளான ஓரிருவரை கழற்றி விட்டார். எம்.எஸ்.உதுமாலெப்பையை களமிறக்கினார்.

ஹக்கீம், தனது காலத்தில் செய்த, சமூகத்தால் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட சாணக்கிய நகர்வாக உதுமாலெப்பையை வேட்பாளராகப் போட்டு, எம்.பி. ஆக்கியதைக் குறிப்பிடலாம். ஆனால், இதனை சிலர் இன்னும் ஜீரணிக்கவில்லை.  

உதுவமாலெப்பை தேசிய காங்கிரஸில் மாகாண அமைச்சராக இருந்த காலத்தில் செய்த ஏகப்பட்ட சேவைகளும்,  அவரது பண்பியல்புகளும் வெற்றிக்கு வழி விட்டன. இவரது வெற்றிமூலம் ஹக்கீம் மீதான சில விமர்சனங்களைக் குறைக்க முடிந்தது.

இந்த நிலையில், இப்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மு.கா. களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் எல்லோருமே சிறப்பானவர்கள் என்று கூறி விட முடியாது. அத்துடன், கடந்த காலத்தில் மு.கா. உள்ளூராட்சி சபைகள் ஊடாக அல்லது குறிப்பிட்ட ஊரில் உள்ள எம்.பி. ஊடாக மக்களுக்கு ஏதாவது சேவை செய்திருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள்.

அல்லது, இம்முறை நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அதனைச் செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்க வேண்டும். மு.கா. என்கின்ற பிரபலமான வர்த்தக நாமத்தை சிவ ஊர்களில் சந்தைப்படுத்துவது இவகுவானது என்றாலும் அது எல்லா இடங்களிலும் பலிக்காது.  

அதுமட்டுமன்றி, ஒவ்வொரு ஊரிலும் பல குழுக்களாக இயங்கிக் கொண்டு அல்லது அட்டாளைச்சேனையில் இடம்பெற்றதைப் போல எம்.பிக்கும் மத்திய குழுவுக்கும் இடையில் முரண்பாட்டை வைத்துக் கொண்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தவும் முடியாது. சபைகளை கைப்பற்றவும் இயலாது.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், அதாவுல்லா கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியை நழுவ விட்டு விட்டார்.

அக்கட்சி எந்தப் பிரதிநிதித்துவ அரசியல் பதவிகளிலும் தற்போது இல்லை.
எனவே, தேசிய காங்கிரஸ் கட்சியானது உள்ளூராட்சி சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் என மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கான களமாக இத்தேர்தல் அமைந்துள்ளது.

இதில் கோட்டை விட்டால், அரசியல் சூனியத்திற்குள் அதாவுல்லாவின் கட்சி மாட்டிக் கொள்ளும்.இதனை அவர் அறியாதிருக்க முடியாது. அதனாலேயே நீதிமன்றம் வரைச் சென்று வேட்புமனுக்களை எற்றுக் கொள்ளச் செய்திருக்கின்றார்.

இத்தேர்தலில் தே.கா. சார்பில் அவரது சொந்த ஊர் உட்பட ஒரு சில பிரதேசங்களில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் ‘பரவாயில்லை’ என்ற ரகத்திற்குள் உள்ளடங்குபவர்களாகத் தெரிகின்றனர்.

ஆனால், அதாவுல்லா ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி கட்சியை வளர்க்காமல் விட்டதன் சவாலை ஏனைய பல உள்ளூராட்சி சபைகளில் வேட்பாளர் தெரிவின்போது, சந்தித்திருப்பார் என்று ஊகிக்க முடிகின்றது.

அவ்வாறான வேட்பாளர்கள் கடுமையாக வேலை செய்யாத விடத்து வெற்றி தூரமாகிவிடும்.அதாவுல்லா மீதும் பல விமர்சனங்கள் உள்ளன. ஆயினும், கிழக்கு மாகாணத்தில் அஷ்ரபிற்கு பிறகான அபிவிருத்தி அரசியலில் ஏனையவர்களை விட அதிக அபிவிருத்தி சார் சேவைகளைச் செய்தவர் தேசிய காங்கிரஸ் தலைவர்தான் என்ற கருத்து பரவலாக உள்ளது. 

அதனை அவர் பிற்காலத்தில் அரசியல் மூலதனமாக்கத் தவறி விட்டார். உரிமை சார் விடயங்களைப் பேசாதிருந்தாலும், தான் செய்த சேவைகளுக்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்று எண்ணி தன்னை மீள் வாசிப்புச் செய்யாமல் இருந்து விட்டார் எனலாம்.

ஆனால், இம்முறை களத்தில் இறங்கியே தீரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி ஒவ்வொரு வட்டாரத்திலும் பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால். அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்தால், தே.காவின் தேவைப்பாட்டை மக்கள் உணர்ந்தால்; மட்டுமே முடிவுகள் சாதகமானதாக அமையும்.  

இதேவேளை, மு.காவுக்கு பிறகு, குறுகிய காலத்திற்குள் பெருவளர்ச்சி பெற்ற கட்சி என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸைக் குறிப்பிடலாம். இதற்கு அடிப்படைக் காரணம் அதன் தலைவர் றிசாட் பதியுதீனின் அணுகுமுறையாகும்.

அவர் இயல்பான தலைவராகவும் கட்சியை வளர்க்க செலவழிக்கக் கூடியவராகவும் இருந்தார். அதற்காகவும் பணம், பதவிக்காகவும் அவரை நாடி அரசியல்வாதிகள் வந்தனர்.

மறுபுறத்தில் அவர் மீதான அபிமானத்தினால் மக்கள் ஆதரவும் ஏறுமுகமாக இருந்தது.வட மாகாண அரசியலில் றிசாட் தவிர்க்க முடியாதவர். கிழக்கு களம் வேறு விதமானது. ஆனால், அதனையும் தாண்டி கிழக்கு மாகாணத்திலும் மக்கள் காங்கிரஸின் அரசியல் வியாபித்தது. 

 ஆயினும், அவர் மீதான அபிமானத்தை, அனுதாபத்தை சரியாக றிசாட் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அத்துடன், அவர் போக்கில் மாற்றம் அவதானிக்கப்படுகின்றது. முன்னைய காலங்களைப் போலல்லாமல், அவரை யாரோ கூடவிருந்து தவறாக வழிநடத்துகின்றனரா? என்ற கேள்வி அடிக்கடி எழுவதுண்டு.

பொருத்தமற்றவர்களை, அவர்களது பின்புலம், சமூகத்தில் அவர்கள் எப்படி நோக்கப்படுகின்றார்கள் என்று எதனையும் ஆராய்ந்து அறியாமல் எல்லோரையும் கட்சியில் இணைத்துக் கொள்கின்ற போக்கை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மக்கள் காங்கிரஸ் ஒரு எம்.பியை பெற்றுள்ளது. ஆகவே, முன்னாள் எம்.பி. முசாரப்பின் பிரிவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கருத இடமுள்ளது. ஆனால், கட்சியில் அண்மைக்காலத்தில் இணைந்து கொண்ட சிலரை ‘என் இவர் இணைத்தார்?’ என்றுதான் உண்மையான ஆதரவாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

ஆகவே, றிசாட் பதியுதீனுக்காக அல்லது அதிகம் செலவழிக்கின்றார்கள் என்பதற்காக எல்லா வட்டாரங்களிலும் உள்ள மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது. உள்ளூராட்சி சபைகளுக்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் றிசாட் இன்னும் கொஞ்சம் சரியாகக் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் சில ஊர்களின், ஒரு சில வட்டார வேட்பாளர்களைப் பார்க்கும் போது ஏற்படுவதாக அரசியல் அவதானி ஒருவர் கூறுகின்றார்.

ஆக, முஸ்லிம்களுக்கான அரசியலை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தலைவர்கள் உணர்ந்து, பொருத்தமான வேட்பாளர்களைக் களமிறக்கி, தீயாய் வேலை செய்தால் மட்டுமே, ஒரு விடிவை எதிர்பார்க்கலாம்.

மொஹமட் பாதுஷா 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .