Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 14 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
முரண்பாடுகளின் அனைத்து வடிவ இடர்பாடுகளையும் அழிவினையும் சந்தித்து நிற்கின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம், நீதி பரிபாலனம், பரஸ்பர நம்பிக்கை உள்ளிட்டவற்றினூடு கட்டமைக்கப்படும் நல்லிணக்கத்தினூடே சாத்தியமாகும். சுதந்திர இலங்கைக்கான பேச்சுக்கள் ஆரம்பித்த காலத்தில் தோற்றம் பெற்ற அரசியல் பிரச்சினைகளும் அது ஏற்படுத்திவிட்ட இனமுரண்பாடுகளும், இலங்கையை இன - மத- பிராந்திய ரீதியாகப் பிளவுபடுத்தி விட்டிருக்கிறது. அதுவே, பெரும் ஆயுத மோதல்கள் தோன்றுவதற்கும் காரணமாகியது.
ஆயுத மோதல்களின் பெரும் அழிவுகளை எதிர்கொண்டு அல்லாடுகின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர்களும் பாதிப்புக்கு காரணமானவர்களும் வெளியவர்களும் நோக்கர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அது, சம்பிரதாயமான உரையாடல்கள் என்கிற அளவினைத் தாண்டி, அர்ப்பணிப்புக்களைக் கோரி நிற்கிறது. அந்த அர்ப்பணிப்பு, எதிர்காலத்தில் பெரும் அழிவுகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தாதிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்.
அப்படிப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லிணக்கம் பற்றிய உரையாடல்கள் மீது பெரும் கவனம் செலுத்தி வருவதாக, கடந்த நாட்களில் காட்டிக்கொள்கின்றார். குறிப்பாக, நல்லிணக்கம் பற்றிய உரையாடல்கள், வடக்கு மக்களிடம் மாத்திரமல்லாமல், தெற்கிலிருந்தும் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றார். அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று 18 மாதங்களாகியுள்ள நிலையில், நல்லிணக்கம் பற்றிய அவரின் உரையாடல்கள், சில அடையாளப்படுத்தல்களைச் செய்திருக்கின்றன. அது, இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் யாரும் முன்வைக்காத விடயங்கள் சிலவற்றையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தெற்கிலுள்ள பௌத்தர்களை நோக்கி அவரின் விழிப்பானது, கருத்திலேற்கப்பட வேண்டியது. நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களின் போது, மைத்திரிபால சிறிசேனவின் போக்கு நான்கு கட்டங்களை அடைந்திருக்கிறது.
முதலாவது கட்டம், எல்லோரும் பேசிக் கொள்வது போல, 'நாட்டின் அனைத்துத் தரப்பினரும் நல்லிணக்கத்துக்கான வெளிப்பாட்டினை காட்ட வேண்டும்.' என்று ஆரம்பித்து, இரண்டாவது கட்டமாக, 'வடக்கு மக்கள் நம்பிக்கைகளின் பக்கத்துக்கு வர வேண்டும். அது, நல்லிணக்கத்தை உருவாக்க உதவும்.' என்றார். மூன்றாவது கட்டமாக, கொஞ்சம் எரிச்சல் கலந்த தொனியில், 'வடக்கில் மாத்திரம் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தரப்புக்கள், தெற்கிலும் கவனம் செலுத்த வேண்டும்.' என்று வலியுறுத்தினார். இன்றைக்கு நான்காவது கட்டத்தை அடைந்திருக்கின்றார். அதுவே, 'தெற்கிலுள்ள பௌத்தர்களுக்கு நல்லிணக்கம் பற்றிய தெளிவுபடுத்தல்கள் அவசியமாகின்றன.' என்பது.
மைத்திரிபால சிறிசேனவின் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பிலான உரையாடல்கள், சில தருணங்களின் கவனம் பெறுகின்றன. ஆனால், அவற்றின் செயற்பாட்டு வேகம் அல்லது திறன் முன்னைய ஆட்சியாளர்களின் காலங்களின் போக்கிலிருந்து மாறுபட்டவையாக அடையாளப்படுத்தவில்லை. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி என்கிற அதிகார நிலையிலிருந்தாலும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் ஆபத்பாண்டவராக மாறும் வாய்ப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, அவரின் செயற்றிறன், தென்னிலங்கையின் பௌத்த அதிகார பீடத்தினையும் அதன் கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமையோடு இல்லை. அந்தக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யாது, நல்லிணக்கம் பற்றிய உரையாடல்கள் உண்மையான பக்கத்தில் நகர முடியாது. ஏனெனில், முரண்பாடுகளின் தோற்றுவாய்களில் முக்கியமான தளமாக தென்னிலங்கை பௌத்த அதிகார பீடமும் காணப்படுகிறது. அது, இலங்கையின் ஒட்டுமொத்த அதிகாரமும் தங்களிடம் குவிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. அத்தோடு, அதற்கான தயார்ப்படுத்தல்களை காலம் காலமாக வடிவமைத்து வருகிறது. அது தயார்ப்படுத்தி வரும் தென்னிலங்கை பௌத்த சமூகமே, நாட்டின் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கின்ற போது, பரஸ்பர நம்பிக்கைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நியாயமான பக்கத்தினை அடைய முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.
'நல்லிணக்கம் என்பது, சீமெந்து, கல், மணலினால் உருவாக்கக்கூடியது அல்ல. போர் வெற்றியுடனேயே, போருக்கு வித்திட்ட காரணிகள் தொடர்பிலும் கண்டறியப்பட்டிருக்க வேண்டும். மீண்டுமொரு முறை, அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தீர்வு காணப்படல் வேண்டும். அதன் மூலம், நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும். தெற்கிலுள்ள பௌத்தர்களை, இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த நாடு, எம் அனைவருக்கும் சொந்தமானது. நல்லிணக்கம் தோல்வியுற்றால், நாமும் தோல்வியுற்றவர்களாகி விடுவோம்' என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். குறித்த பகுதி, நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைகளும் ஒவ்வொரு காரணிகளினூடு தீர்க்கப்பட வேண்டும் என்கிற விடயத்தை குறித்து நிற்கிறது. அதாவது, 'நாட்டில் ஆயுத மோதல்கள் (போர்) இடம்பெற்றமைக்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் என்பதுவும் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படாதிருக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுவும் தான், இலங்கையின் சமாதானம், ஒருங்கிணைவு, சுபீட்சம் பற்றி நம்பிக்கைகளை இறுதி செய்யும்.
ஆனால், மைத்திரிபால சிறிசேன, ஆயுத மோதல்களுக்கான காரணங்களை அடையாளம் காணுவதற்கோ, அப்படியானதொரு நிலைமையை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கோ முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவை, என்கிற கேள்வி எம்மத்தியில் எழுகிறது. சுதந்திர இலங்கைக்கு முந்திய காலம் தொட்டு ஆரம்பித்துவிட்ட அரசியல் பிரச்சினைகள் தோற்றுவித்துவிட்டவையே ஆயுத மோதல்கள். அப்படிப்பட்ட நிலையில் 68 ஆண்டுகளைத் தாண்டிய வரலாற்றினைக் கொண்டிருக்கின்ற அரசியல் பிரச்சினைகளை இனித்தான் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்கிற உரையாடல்கள், இவ்வளவு உவப்பானவையாக இல்லை. குறிப்பாக, தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுவரும் தரப்பான தமிழ் மக்களினால், மைத்திரிபால சிறிசேனவின் உரையாடல்களின் மீது நம்பிக்கை கொள்வதற்கான எந்தவித காரணங்களும் இல்லை. ஏனெனில், இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்களும் இவ்வாறான உரையாடல்களை இதனைவிட இன்னமும் இனிப்புத்தடவிய நாக்குடன் பேசிச் சென்ற காட்சிகள் உண்டு.
ஆயுத மோதல்களுக்கான காரணங்களைக் கண்டறிதல் என்பது, அந்த மோதல்கள் ஏற்படுத்திவிட்ட பாதிப்புக்களையும் பெரும் அழிவையும் சரி செய்வதிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக, பாதிக்கப்பட்ட தரப்புக்கான நீதி என்கிற விடயத்தினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையைப் புறந்தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்ல முடியாது. அப்படிப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்கும் வல்லமை மைத்திரிபால சிறிசேனவிடம் இருக்கின்றதா என்கிற கேள்விக்கு அப்பால், அதனை தென்னிலங்கை பௌத்த அதிகார பீடம் அனுமதிக்குமா என்கிற விடயம் முன்னோக்கி வருகிறது. இறுதி மோதல்களின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை முன்னெடுப்பதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதியளித்துவிட்டு வந்த இலங்கை அரசாங்கம், தன்னுடைய பீடங்களைக் காப்பாற்றுவதிலேயே கடந்த 12 மாதங்களில் கவனம் செலுத்தியிருக்கிறது.
குறிப்பாக, வடக்கு மக்களுக்கும் தெற்கு மக்களுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையினூடு நல்லிணக்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்கிற விடயம், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதிலிருந்தே ஆரம்பிக்க முடியும். அது, எந்தத் தரப்பு எப்போது, எவ்வாறான தப்புக்களைப் புரிந்திருக்கின்றதோ அவை குறித்து திறந்த மனதோடு விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அதுதான், எதிர்காலத்தில் அவ்வாறான அநீதிகள் நிகழாதிருப்பதை உறுதி செய்யும். அதுவே, இனமுரண்பாடுகளைக் களைவதற்கான அடிப்படையாக இருக்கும். ஆனால், இரு தரப்புக்களுக்கிடையிலும் எந்தவித நம்பிக்கையையும் ஏற்படுத்தாத முனைப்புக்கள் எவ்வாறு நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களை உண்மையான பக்கத்துக்கு நகர்த்த முடியும்?
'இடைமாற்ற கால நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும்போது, சகல இலங்கையரும் உள்ளடக்கப்படுவதுடன் அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்' என்று ஜெனீவாவில், கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடரின் போது உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், இலங்கையின் புதிய அரசாங்கமோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, சகல இலங்கையர்களையும் உள்ளடக்கிய நீதி பரிபாலனத்துக்கான முனைப்புக்களில் ஈடுபட்டமைக்கான காட்சிகளை கடந்த காலத்தில் காண முடியவில்லை.
இறுதி மோதல்களின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் (மற்றும் போர்க்குற்றம்) தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களினை உள்வாங்காது, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான தரப்பின் பங்களிப்போடு மாத்திரம் உருவாக்கப்படும் பொறிமுறை, நீதியை உறுதி செய்யும் என்று முன்வைக்க முனைவதும் அது நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் என்று நம்புவதும் நீரின் மேல் எழுதப்படும் எழுத்துக்களுக்கு ஒப்பானது. அப்படியான நிலையில், நல்லிணக்கத்தைப் பற்றி மைத்திரிபால சிறிசேன மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது எந்தவித அர்த்தத்தையும் வழங்கிவிடாது. தென்னிலங்கை பௌத்த அதிகார பீடத்தின் மீதும், அதன் கட்டமைப்பின் மீதும் சர்வதேச ரீதியில் எழுந்திருக்கும் அழுத்தங்களைத் தாண்டுவதை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு மைத்திரிபால சிறிசேன செயற்படுவாரானால், அது, அநீதிகளின் தொடர்ச்சியாகவே இருக்கும். அது நல்லிணக்க உரையாடல்களுக்கு அப்பாலானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
56 minute ago