Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
அதிரதன் / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணர்வு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் வாழும் வாழ்க்கையில் இப்போது காணாமல் போனோர் விவகாரம் ஒரு வேண்டாத விடயமாகப் பெரும்பாலானோர்களால் பார்க்கப்படுகின்ற நிலையே காணப்படுகிறது.
பிரச்சினைகளை அனுபவித்தவனுக்கே அதன் துன்பம் தெரியும் என்பதுதான் யதார்த்தம். வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் எதையும் இனப்பிரச்சினையுடனேயும், கடந்த காலப் போரின் வடுக்களுடனும் தொடர்புபடுத்திப் பேசுகின்ற நிலை இருக்கிறது.
இத்தகைய மனநிலையிலிருந்து மீண்டுவிடவேண்டும் என்று எல்லோரிடமும் சிந்தனை தோன்றினாலும், எங்கு தொட்டாலும் அது சுற்றிக் கொண்டுவந்து, குறித்த இடத்தில் நிற்பதையே காணமுடிகிறது.
எதுவும் வேண்டாம் என்று விட்டுவிடுவதற்கு முதலில், அவர்கள் இழந்தவற்றுக்கு வட்டியும் முதலுமாகக் கொடுக்கவேண்டிய ஏற்பாடுகளைச் செய்வது கட்டாயம்.
இதற்காக, அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதை யார் செய்து முடிப்பது என்பதுதான் கேள்வி. இதன்போதான கண்துடைப்புகள், வாய்ச்சவடால்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாதவைகளாகும்.
1983 கலவரம் உலகறிந்த கொடூரங்களில் ஒன்று; அந்தக் கொடுமையில் ஏழு பேர்தான் பலியாகியிருக்கிறார்கள் என்பது அரசாங்கத்தின் அறிக்கைகளின்படி உள்ள எண்ணிக்கையாகும்.
அப்படியிருக்கையில், காணாமல்போனோர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படுகையில், எத்தனை பேர் பட்டியலில் இருப்பார்கள் என்பது கேள்வியாக இருந்தாலும், ஒன்று வந்தால் இன்னொன்று காணாமல் போய்விடும் என்பது போல், 83 கலவரத்தில் இறந்தவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான சலசலப்பு ஓய்ந்தது போன்றே காணாமல்போனோருடைய விடயங்களும் இல்லாமல் போகும் என்பதே, இப்போதுள்ள சூழ்நிலையில் வெளிப்படையாகத் தெரியும் அம்சமாகும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமுலுக்கு வந்து ஒரு வருடமும் கடந்து விட்டது. ஆனால் அதன் ஊடாக, எத்தனை விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன; எத்தனைக்குப் பதில் கிடைத்திருக்கின்றன என்றால் சிறியதொரு தொகையாகவே இருக்கும். தகவல் அறியும் சட்டம் அமுலுக்கு வந்திருந்தாலும், அதன் அடிப்படையான விடயங்களைக் கூடச் சரியாகத் தெரிந்து வைக்காத, அரச அதிகாரிகள்தான் அநேகம் பேர் இருக்கிறார்.
அதேபோன்றுதான், காணாமல்போனோருக்கான அலுவலகம் தொடர்பான சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கும் வந்தது. ஒரு வருடம் கடந்தும் இருக்கிறது. ஆனால், என்ன நடந்திருக்கிறது? இதுதான் கேள்வி.
இந்த இரண்டு விடயங்களும் ஏன் சம்பந்தப்படுத்தப்பட்டுப் பேசப்படுகிறது என்பதற்குப்பதில் கொடுத்தே ஆக வேண்டும். சர்வதேச நீதிமன்றம், யுத்தக்குற்றம், மனித உரிமை மீறல் என்றெல்லாம் உலக நாடுகள் முழுவதிலும் பேசப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி, நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைமாறு கால நீதிச் செயல்வடிவத்தின் அங்கங்கள் இவை இரண்டையும் தவிர இன்னும் பல இருக்கின்றன.
இலங்கை நாட்டில் நான்கு தசாப்தங்களாக இருந்த யுத்தம் ஓய்ந்து, ஒரு தசாப்தம் எட்டப்போகிறது. எனினும், இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தென்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை எரிந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக, வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளும் பாதிக்கப்பட்ட சமூகங்களும் இன்னும் தமது அன்புக்குரியவர்களைத் தேடியலைந்து கொண்டிருக்கின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேராயத்துடன் இணைந்து ஒக்டோபர் 01, 2015 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இது, ஏற்பாட்டு உறுப்புரை 04 ஆனது, நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகக் காணாமற்போனோர் அலுவலகத்தை அமைப்பது மற்றும் அதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் உட்பட, சர்வதேசத் தரப்புகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்து எடுத்துரைக்கிறது.
இலங்கையில் காணாமற்போனோர் அலுவலக சட்டமூலமானது பாதிக்கப்பட்டோர், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினரின் பங்கேற்பு மற்றும் கருத்துகள் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இருந்தபோதிலும், அது வெளிப்படைத் தன்மையற்ற முறையில் உருவாக்கப்பட்டு, பிரதமரின் பணிப்புரைக்கு அமைய வர்த்தமானிப்படுத்தப்பட்டது என்ற கருத்து பல தரப்பினரிடையேயும் இருக்கிறது. அதன் பின்னர், நாடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டு 26 ஓகஸ்ட் 2016 அன்று, வர்த்தமானிப்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகமானது, எந்த ஒரு சட்ட நடவடிக்கையையும் எடுக்கும் அதிகாரமற்ற அங்கமாகும். தகவல்களைத் திரட்டுவதற்காக மாத்திரமே இது செயற்படும்.
இந்தத் தகவல்கள் சட்ட நடவடிக்கைகளுக்கான சாட்சியங்களாக பயன்படுத்தப்படாது.
அத்துடன் இந்தத் தகவல் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கப்படமாட்டாது என்றெல்லாம் பலவேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தொடக்கப்பட்ட விடயமாக, இந்த காணாமல்போனோருக்கான அலுவலகத்தைக் காண முடிகிறது.
இந்த இடத்தில்தான், தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எதைச்சாதித்துவிட்டன என்ற கேள்வியும் இருக்கிறது.
இருந்தாலும் நேற்றைய தினம், (ஓகஸ்ட் 30) சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள், கிராமிய பெண்கள் அமைப்புகள், விவசாய மீனவ சம்மேளனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆகியன இணைந்து வடக்கில் வவுனியாவிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கவன ஈர்ப்புகளைச் செய்திருந்தன.
இவர்கள், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கு தங்களது கோரிக்கைகள் அடங்கிய பகிரங்கச் சமர்ப்பித்தல் ஒன்றையும் முன்வைத்திருந்தனர்.
இதில் பல்வேறு விடங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யிட் ராட் அல் ஹுசைன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐ.நா பணிக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியோருக்கும் இந்த அறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ,தேசிய ரீதியில் கொழும்பிலும் காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
காணாமல்போனோருக்கான அலுவலகம் என்பது சிறப்பான செயற்பாட்டுக்குரியதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அது ஒரு வெற்றுப்பானையாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவிக் கொண்டிருக்கிறது.
எப்படியிருந்தாலும் கணவனை இழந்த ஒரு பெண், குடும்பத்தைத் தலைமை தாங்குவதும், மகனை இழந்த, சகோதரத்தை இழந்தவர்கள் சிரமப்படுவதும் சாதாரணமான விடயமாகவே இருக்கிறது. எத்தனை வழிமுறைகளைக் கையாண்டும், தமக்கான நீதி சரியான முறையில் கிடைக்குமா என்ற கேள்வி இவ்வாறானவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இந்த இடத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான குற்றமாகும். இது ஒரு போர்க்குற்றமேயாகும்.
ஐ.நாவின் தீர்மானம் 30: 1 இன் உறுப்புரை 6 ஆனது, மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை உள்நாட்டில் அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது.
அதனடிப்படையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளைக் கண்டறியவும் இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் சுயாதீனமான விசேட நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்தக் குற்றங்களுக்கான நீதி விசாரணைகள் 1983ஆம் ஆண்டிலிருந்து 2014 வரையான காலகட்டத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, சுயாதீனமான விசேட நீதிமன்றம் அமைத்தலையும் வலியுறுத்தப்படுகிறது.
இலங்கை அரசாங்கமானது, வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு, முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதோடு, இக்குற்றம் இனிமேல் தொடராமல் தடுக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்.
ஆனாலும், காணாமலாக்கப்பட்டவர்களது விடயத்தில், பொலிஸ், இராணுவம், மற்றும் அதனுடனிணைந்த குழுக்களும் செய்து முடித்துவிட்டவற்றுக்கு அரசாங்கம் மாத்திரம் எப்படி உண்மையைக் கண்டிறியும் என்பது கேள்வியாம். அதற்கு இவ்வாறான குற்றங்களைச் செய்தவர்கள் அனைவரும், தாமாக முன்வந்து பட்டியலை வெளியிடும்வரையில், காணாமல் போனோர் என்கிற பட்டியலை பூரணப்படுத்துவது சாத்தியமற்றதே.
காணாமல் போனோருக்கு பல்வேறு அர்த்தப்பாடுகளை ஏற்படுத்தினாலும், ஒரே பெயரே கொடுக்கப்படுகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயத்தின் விடயங்கள் ஐந்தாம் திகதி ஜுலை 2017 அன்று நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தும் அரசியல் காரணங்களினால் இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இலங்கை அரசானது, இலங்கை மக்கள் அனைவரினதும் சுதந்திரத்தையும் உயிர்வாழும் உரிமையையும் முன்னிறுத்தி இச்சட்டத்தை உடன் நிறைவேற்றுவதன் மூலம், காணாமல் ஆக்கப்படுதலை ஒரு குற்றமாக்க வேண்டும்.
இதன்மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து, இலங்கை மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இது சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்வியே. உயிர்வாழ்தலுக்கான உரிமை என்பது மிகத் தீவிரமாகக் கோரப்படுகின்ற விடயம் என்பது இதிலிருந்து வெளிப்படையாகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் ஆட்கள் கைது செய்யப்படுவது 1983களிலிருந்து தீவிரமாகியது. இவ்வாறு கைதான பலரும் அரச முகவர்களால் கடத்தப்பட்டோரும் திரும்பி வரவில்லை. இவர்கள் குறித்து எதுவித தகவல்களும் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.
அதேபோல் 1987 - 1990 காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களின் நிலையும் இதுவே. அத்துடன் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தெற்கில் ஊடகவியலாளர்களும் அரசாங்கத்தைச் எதிர்த்தவர்களும் அரசாங்க முகவர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
1983களிலிருந்து வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் தெற்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் முழுமையான தனித்தனி விவரப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அத்துடன் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதும் தெரியாத தகவலே.
காணாமல்போனோர் உயிருடன் உள்ளனரா இல்லையா, உயிருடன் இல்லாவிட்டால் என்ன நடந்தது, யார் காரணம், அவரது உடல் எச்சங்கள் எங்கு உள்ளன என்பன யாரால் அடையாளபடுத்தப்படும் என்பதும் தெரியாததே.
அதேபோன்று, போரின் இறுதியில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டோர் நிலை, போர் முடிவடையும் போது, யுத்த பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த, குறிப்பிட்ட எண்ணிக்கையான குடும்பத்தினர் தமது உறவுகளைப் மேலதிக விசாரணைக்காக இராணுவத்திடம் கையளித்தனர். இவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் திரும்பி வரவில்லை.
‘தெரியாது’ என்பதே கடந்த அரசாங்கத்தின் பதிலாக இருந்தது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் இது பற்றி எந்த அக்கறையும் இல்லாது உள்ளது. எனவே, இவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள், குறித்த முழுமையான பெயர், விவரத்தை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும்.
மேலும், இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதை உத்தியோகபூர்வமாக அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தவண்ணமே உள்ளன. இவற்றுக்குத் தீர்வுகள் எப்போது முன்வைக்கப்படும் என்பதும் கோரிக்கைகளே.
அதேபோன்று, வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரில் கூடுதலானவர்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச் சார்ந்த ஆண்களாவர். இவ்வாறான குடும்பங்கள் இவர்களின் உழைப்பிலேயே வாழ்ந்துள்ளனர். குடும்பத்தின் பாதுகாப்பாளரை இழந்துள்ளதால் இந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு, குடும்பத்தை கொண்டு நடத்தும் வகையில் மாதாந்த ஊதியத்தை யார் வழங்குவார்கள் என்ற வகையில் ஊதியத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும் என்ற வாழ்வாதாரக் கோரிக்கையும் முன்வைக்கப்படாமலில்லை.
அதேபோன்று, காணாமல் ஆக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான அரசாங்கத்தின் சிபாரிசுகள் மற்றும் சுயதொழில் மானியங்கள், வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்படுகிறது.
அத்தோடு, உளவள ஆற்றுப்படுத்தல் மற்றும் மருத்துவ உதவிகள், பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள், பொது நலன் வழக்கு பதிதலை சட்டமாக்குதல், மீள நிகழாதிருத்தலை உறுதிப்படுத்துதல் என்பவையும் கோரிக்கைகளாக இருக்கின்றன.
இந்த இடத்தில்தான், காணாமல் ஆக்கப்படுதலுடன் தொடர்புடைய படைத்தரப்பினர், பொலிஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தல், அதிகாரங்களைக் குறைத்தல், கொடுப்பனவுகளை ரத்துசெய்தல் ஆகியன மூலம் காணாமலாக்கப்பட்டோருக்கான சட்டமூலம் மற்றும் அதன் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கைககள் முன்வைக்கப்படுகின்றன.
அதனடிப்படையில்தான் இலங்கையின் இனப்பிரச்சினையில் முக்கிய பகுதியாக இருக்கும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவந்து, சிவில் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புதல் என்பது முன்வைக்கப்படுகிறது.
நிலை மாறுகால நீதிச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக காணாமல்போனோரின் விடயம் இருக்கின்ற நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான இழப்பீடுகள் வழங்குதல் என்பதுவே முக்கியமானதாகும்.
அதேபோன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புதல, அடுத்து முன்நின்னிற்கின்ற முக்கிய பிரிவு. வீதிகளை அமைப்பதும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் தொழில் துறைகளை உருவாக்குவதும், மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்கு முக்கியமானது. இவற்றை மேற்கொள்வதற்கு பங்கு பிரித்தல் என்பது விடையல்ல.
உதாரணமாக, சம்பூர் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்டு 10 வருடங்கள் வேறு இடங்களில் அகதி வாழ்க்கை வாழச் செய்யப்பட்டனர். அவர்களை மீளக் குடியமர்த்திவிட்டு, சொற்பத் தொகைகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது பொருட்டாகப்பார்க்கப்பட முடியாது. அவர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே இருந்த கட்டுமானத்தை உருவாக்குவதே ஓரளவுக்குச் சரியான தீர்வாக இருக்கும்.
இந்த இடத்தில்தான் இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதி நடவடிக்கைகளை ஐ.நாவுடன் இணைந்து மேற்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நல்லிணக்கத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துதல் வேண்டும் என்பதும், வடக்கு, கிழக்கு சிறுபான்மை மக்கள் திருப்திகொள்ளத்தக்க அரசியல் தீர்வை ஏற்படுத்துதல் வேண்டும் என்பதும் தொக்கி நிற்கின்றன.
எது எவ்வாறிருந்தாலும், காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை நாட்டின் ஜனாதிபதி முன்வைக்கின்ற கருத்துகளும், பிரதம மந்திரி வெளியிடுகின்ற கருத்துகளும் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைவதும் 83ஆம் ஆண்டு கலவரம் போன்ற விடயங்களில் அமைச்சர்கள் தெரிவிக்கின்ற கணக்கெடுப்புகளும் குழப்பங்களைத் தோற்றுவிப்பதும் இனிவரும் காலங்களிலேனும் இல்லாமலாக்கப்படட்டும்.
இவற்றைவிடவும், அதிகளவிலிருக்கின்ற பாதுகாப்புப்படையின் எண்ணிக்கையைக் குறைத்தல், படைத்தரப்புடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களைத் தடைசெய்தல், அவர்களது கடந்த கால குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதுடன் தண்டனை வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்கள் மீதான, கெடுபிடிகளைக் களைந்து அச்சுறுத்தல்களிலிருந்து வெளிக்கொணர்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தராதரங்களுக்கு அமைய மறுசீரமைத்தல் என்பவற்றுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? என்பதுடன், காணாமற்போனோர் அலுவலகத்தினால் நீதியும் உண்மையும் நிலைநாட்டப்படும் எனும் நம்பிக்கையை நாம் இழந்திருக்கிற உறவுகளுக்கு நீதி பெறறுக் கொடுக்கப்படுமா என்பதும் கேள்வியே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
4 hours ago