2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ரஜினிகாந்த்: இழந்து போன வாய்ப்பு

Administrator   / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்

ஜசல்லிக்கட்டு விவகாரத்துக்குப் பின்னர், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் சூடுபிடித்துள்ள விவகாரம் ரஜினிகாந்தின் இலங்கைப் பயணத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் ஊடக யுத்தம்தான்.  

தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் இந்த இரண்டு இடங்களிலும் ரஜினிகாந்தையும் ஒரு நிறுவனத்தையும் முன்னிறுத்தி நடத்தப்படுகின்ற இந்த அரசியல் விளையாட்டு, சமூக ஊடகப் பரப்பிலும் தீவிர விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது.   

ரஜினிகாந்த் நல்லவரா? ஈழத்தமிழர் விவகாரத்தில் அவரது கடந்தகால அணுகுமுறை எத்தகையது? அவரது இலங்கைப் பயணம் மாற்றங்களையோ திருப்பங்களையோ ஏற்படுத்தி விடப் போகிறதா? என்பதெல்லாம் இங்கு விவாதத்துக்குரிய விடயங்கள் அல்ல.   

அதுபோலவே, அவரை அழைத்து வந்து, தாம் கட்டிக்கொடுக்கும் வீடுகளைத் திறந்து வைக்கும் நிறுவனம் தொடர்பான விவாதங்களும் இங்கு அவசியமற்றது.  

ஒரு நிறுவனம், தனது அறக்கட்டளை ஊடாகக் கட்டிக் கொடுத்த வீடுகளை ரஜினிகாந்தை அழைத்து வந்து, திறந்து வைக்கத் திட்டமிட்டதிலும் தவறு ஒன்றும் இருப்பதாகக் கூறமுடியாது. இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இதனைத்தான் செய்கின்றன.  

150 வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர்கள், தம்மைப் பிரபலப்படுத்த முயற்சிப்பார்கள். அதை வைத்து தமக்கு விளம்பரம் தேடிக் கொள்ள முனைந்திருக்கிறார்கள். இது கூட பிரச்சினைக்குரிய விவகாரமாகத் தெரியவில்லை.  

ரஜினிகாந்தின் வருகையை இந்தளவுக்குச் சிக்கலாக்கியவர்கள், ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் என்று காட்டிக் கொள்ளும், தமிழக அரசியல் தலைவர்கள் சிலரும், வடக்கின் அரசியல் களத்தில் இருக்கின்ற சிலரும்தான்.  

முதலில் திருமாவளவன், வைகோ, வேல்முருகன், ராமதாஸ் போன்றவர்கள் தான், ரஜினிகாந்தின் பயணத்துக்கு எதிரான கருத்தை முன்வைத்தனர். அதற்குப் பிறகு சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பில் எதிர்ப்பை வெளியிட்டார்.  

உண்மையில், இந்தப் பயணத்துக்கு குறுக்கே தடை போட்டவர்கள் யார்? திருமாவளவன் விகடனுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில், ‘வடக்கு மாகாணத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தான், ரஜினிகாந்தின் இந்தப் பயணத்தை தடுக்குமாறு தம்மிடம் கேட்டுக் கொண்டனர்’ என்று கூறியிருக்கிறார்.  

ரஜினிகாந்தைத் தடுத்த பாவம் தமக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, அவர் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டுத் தன்னை நியாயப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுத் தலைவர்களை ரஜினிகாந்தின் பயணத்துக்கு எதிராகத் தூண்டி விட்டவர்கள் யார் என்ற கேள்வி உள்ளது. நிச்சயமாக அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல. ஏனென்றால் இரா. சம்பந்தனும் விக்னேஸ்வரனும் அந்த நிகழ்வில் பங்கேற்க இணங்கியிருந்தனர். 

ஆனால், கூட்டமைப்பில் உள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், “ரஜினிகாந்தின் வருகை தற்போது அவசியமற்றது” என்று கருத்து வெளியிட்டிருந்தார்.  

“இங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணிகளை இழந்தவர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் இந்தியப் பிரதமருக்கு நெருக்கமானவர். அவர் அந்தச் செல்வாக்கை பயன்படுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தீர்த்து விட்டு இங்கு வந்தால் நிச்சயம் வரவேற்புக்குரியது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  

ஆனால், திருமாவளவன் தனது விகடன் பேட்டியில், “இலங்கையில் நிலைமைகள் சரியில்லை என்றும் ரஜினிகாந்த் இங்கு வந்தால், அதனை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பிரசாரங்களை மேற்கொண்டு, எல்லாவற்றையும் மறைத்து விடும் என்றும் வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள்  கூறியிருந்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.  

இந்தியப் பிரதமருக்கு ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்தான். அதற்காக இங்குள்ள பிரச்சினைகளை அவரால் தீர்த்து விடமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது.   

இது இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய விடயம். இலங்கைக்கு மோடி அழுத்தங்களை கொடுக்கலாமே தவிர, தீர்வுகளை வழங்க முடியாது.   

அதைவிட, இந்தியப் பிரதமருடன் பேரம் பேசுவதற்கு ரஜினிகாந்த் ஓர் அரசியல்வாதியும் அல்ல. 

முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நெருங்கிய நண்பர் தான் வைகோ. வாஜ்பாய் பிரதமராக இருந்த பா.ஜ.க அரசாங்கத்தில் ம.தி.மு.கவும் அங்கம் வகித்திருந்தது.  

அண்மையில், நடந்த வைகோவின் இல்ல திருமண விழாவுக்கு முன்னாள் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹாவும் வந்திருந்தார். அந்தளவுக்கு பா.ஜ.கவின் மூத்த தலைவர்களுடன் வைகோவுக்கு நெருக்கம் இருந்தது.  

அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி வாஜ்பாய் அரசாங்கத்திடம் இருந்து, தமிழர்களின் பிரச்சினைக்கு வைகோ தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்கலாமே என்று எவரும் கேள்வி எழுப்பவில்லை.  

ஏனென்றால், தனிப்பட்ட உறவு வேறு; அரசியல் வேறு. இதைவிட இது இரண்டு நாடுகளின் விவகாரம்.  

ரஜினிகாந்தின் பயணத்தைப் பயன்படுத்தி, இலங்கையில் சுமுக நிலை ஏற்பட்டு விட்டது. தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று இலங்கை அரசாங்கம் பிரசாரப்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக ஒரு நியாயம் கூறப்பட்டிருக்கிறது.  

அதைவிட, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தை விட, இப்போது இலங்கையில் தமிழர்கள் மோசமான நிலைக்குள் வாழ்வதாக திருமாவளவன் ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறார். இது உண்மையா பொய்யா என்பது தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், இங்குள்ளவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்.  

இன்னொரு வகையில் பார்த்தால், இதனை மஹிந்த அரசாங்கத்துக்கு திருமாவளவன் கொடுத்த நற்சான்றிதழாகக் கூட எடுத்துக் கொள்ள முடியும்.   

ரஜினிகாந்த் வருகையை வைத்து, இலங்கை அரசாங்கம் எந்த அரங்கில் போய் பிரசாரப்படுத்தப் போகிறது? எப்படித் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது? என்ற கேள்விக்கான பதிலை, எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் யாருமே வழங்கவில்லை.  

போர் நடந்த காலத்துச் சூழல் இப்போது வடக்கில் இல்லை. போர் முடிந்த பின்னர் மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் இருந்த இறுக்கமான கட்டுப்பாடுகளும் இப்போது இல்லை.   

இப்போது, எல்லோருமே வந்து போகிறார்கள். யாரிடமும் அதனைக் கேட்டு, அனுமதிபெற வேண்டியதில்லை. ஐ.நா பொதுச்செயலரில் இருந்து, அனைவருமே வந்து நிலைமையைப் பார்க்க முடிகிறது. உண்மைகளை அறிய முடிகிறது.   

இதற்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதிக்கவில்லை. ஆனால், ரஜினிகாந்தினால் அவ்வாறு வர முடியவில்லை. அவருக்கு தடை போட்டது யார்?   

ரஜினிகாந்தின் வருகையின் மூலம் மாத்திரம், இங்குள்ள உண்மையான நிலைமைகள் மறைக்கப்பட்டு விடும் என்றோ, பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு விடும் என்றோ சொல்வது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.  

இலங்கை அரசாங்கம் தனக்கான ஆதரவை சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தி விட்டது. அதற்கு ரஜினிகாந்தைப் பயன்படுத்தப் போகிறது என்று சிறுபிள்ளைத்தனமாகக் கணக்குப் போடுவது முட்டாள்தனம்.  

வடக்கில் அரசியல்வாதிகள் சிலரும், புலம்பெயர் தமிழர்கள் சிலரும், அவர்களுக்கு நெருக்கமான தமிழக அரசியல் தலைவர்களும் இன்னமும் போர்க்கால மனோபாவத்தில் இருந்து மாறவில்லை என்பதை உணர்த்தியுள்ளது இந்த விவகாரம்.  
இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன; பாதிப்புகள் உள்ளன; அவலங்கள் உள்ளன. அதையெல்லாம் சில கலை நிகழ்வுகள் மூலம் மறைத்து விடவோ மறக்கச் செய்து விடவோ முடியாது.  அவ்வாறு செய்ய முடியும் என்றால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, எல்லாவற்றையுமே குழி தோண்டிப் புதைத்திருக்கும்.  

நீண்ட போருக்குள்ளேயும் அவலங்களுக்குள்ளேயும் வாழ்ந்த மக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக கிடைக்கும் வாய்ப்புகளைக் கூட தட்டிப்பறிப்பதற்குத்தான் இவர்கள் முனைகிறார்கள்.  

இதனை வெளிப்படையாகப் பேச முனைந்தால், அவர்களுக்கு வேறு விதமான பட்டங்கள் சூட்டப்பட்டு சமூக வலைத்தளங்களில் சேறடிக்கப்பட்டு, முத்திரை குத்தப்படும். இது தான் இன்றைய அவலச் சூழல்.  

ரஜினிகாந்த் வருகையை தமிழர் தரப்புத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.   

இலங்கை அரசாங்கம் ரஜினிகாந்த் பயணத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பது உண்மையாக இருந்தால், அதனை அவருக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, நிலைமையைக் கையாண்டிருக்க முடியும்.   

வடக்குக்கு வரும் ரஜினிகாந்தை போராட்டம் நடக்கின்ற இடங்களுக்கு அழைத்து செல்ல முயன்றிருக்கலாம்; பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ஒழுங்கு செய்திருக்கலாம். அவையெல்லாம் இந்தப் போராட்டங்களுக்குப் பலம் சேர்த்திருக்கும்.   

அதற்காக, இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்கும் வல்லமை ரஜினிகாந்துக்கு இருப்பதாக இந்தப் பத்தி கருதவில்லை. இதனை எதிர்த்தவர்கள் மத்தியில்தான் அவருக்கு அப்படியொரு சக்தி இருப்பதான எதிர்பார்ப்பு இருக்கிறது.  

ரஜினிகாந்தின் வருகையை இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று திருமாவளவனே அறிக்கை ஒன்றில் காட்டிக் கொடுத்திருக்கிறார்.  

அவருக்குப் பதிலடி கொடுப்பது என்ற பெயரில், நல்லூரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது, அதைவிடப் பெரிய கேவலமான செயல். எதற்கெதற்காக நாம் போராட வேண்டும் என்பது கூடத் தெரியாதளவுக்கு தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியிருக்கிறது.  

தமிழர்களான நாம் எமக்கான பலத்தைத் தேடிக் கொள்வதில் இன்னமும் தவறிழைத்து வருகிறோம். உலக அரங்கில் அதிகளவு நண்பர்களைத் தேடிக் கொள்வதுதான் இப்போது எமக்கு முக்கியம்.   

நண்பர்களைவிட நாம் அதிகளவில் விரோதிகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்; எமக்குள் சண்டையிட்டுக் கொள்வதிலும், ஆளை ஆள் காட்டிக் கொடுப்பதிலும்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வாய்ப்பைத் தமிழர் தரப்பை நசுக்க முனையும் சக்திகள், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை உணரத் தயாராக இல்லை.  

தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்படுவதாகக் காட்டிக் கொள்ளும் பலரும், அதற்கு எதிரான செயல்களையே செய்து வருகின்றனர். இதன் விளைவுகள் நிச்சயம், தமிழர்களின் நலன்களுக்குச் சாதகமானதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X