Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெய்வீகன்
நல்லாட்சி அரசு ஆட்சி பீடமேறி, மஹிந்தவின் கறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நாட்டை சீர்திருத்துவதில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதை தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முயற்சிகள் பெரும்பான்மை சமூகத்தையும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களையும் எவ்வளவு தூரம் முன்னேற்றியிருக்கிறது என்பதற்குப் பல சான்றுகளைக் கூறலாம். ஆனால், எதிர்வரும் மே மாதத்துடன் போர் முடிந்த எழாவது ஆண்டை எட்டப்போகும் தமிழ் மக்களுக்கு தாம் கொடுக்கப்போவதாக அறிவித்த தீர்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் எவ்வளவு தூரம் சிங்கள தேசம் உண்மையாக நடந்திருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி தொடர்ந்து தொங்கியவண்ணமே உள்ளது.
இது விடயத்தில், மஹிந்தவின் ஆட்சியை சாட்டி இலகுவாக தப்பித்துக்கொள்ளலாம் என்று மைத்திரி அரசு போதும் கணக்குப்போடமுடியாது. ஏனெனில், இப்போதைய அரசின் சகல முயற்சிகளுக்கும் தமிழர் தரப்பு ஒத்துழைப்பாக துணைநின்றுகொண்டு சாதகமான முயற்சிகளை மேற்கொள்ளும் பயணத்திலாவது தமது பங்களிப்பை வழங்குவதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்த முயற்சிகளுக்கு மிகப்பெரிய படிக்கல்லாக இருக்கக்கூடிய நல்லிணக்கம் என்ற விடயத்திலாவது அரசு இதயசுத்தியுடன் செயற்படுகிறதா என்ற கேள்வியின் முன் மிகப்பெரிய சந்தேகங்கள்தான் தொடர்ந்தும் எதிரொலித்த வண்ணம் உள்ளன. அண்மையில், இலங்கைக்கு விஜயம் செய்த மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர், அரசுத்தரப்புடன் மேற்கொண்ட சந்திப்பின்போது, அரசு தரப்பு வழங்கியுள்ள பல பதில்கள் தமிழ் மக்களை பொறுத்தவரை நம்பிக்கை தரக்கூடியனவாக இல்லை என்றே கூறலாம். ஜெனீவா தீர்மானத்தின்படி, இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பெரிதாக திருப்திகரமாக இல்லை என்ற தோரணையில் பேசியுள்ள மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர்;, போரில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு விவகாரத்தையும் அதில் அரசு நடந்துகொள்ளவேண்டிய நம்பிக்கையான செயற்பாடுகள் குறித்தும் ஆழமாக பேசியிருக்கிறார்.
ஆனால், இதற்கான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதில்கள் அனைத்தும் ஆணையாளரை எப்படியாவது சமாளித்து வெளிநாட்டு நீதிபதிகள் என்ற விடயத்தை ஒரேயடியாக 'ஜகா' வாங்கிவிடுவதிலும் உள்நாட்டு பொறிமுறையின் மகத்துவத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி அதற்கான அங்கிகாரத்தை பெருமை கொள்ளச்செய்வதிலும்தான் அதிக சிரத்தை காட்டியிருக்கின்றன.
உண்மையை சொல்லப்போனால், இந்த இடத்தில்தான் தமிழர் தரப்பு இன்றைய காலகட்டத்தில் கைக்கொள்ளவேண்டிய மிகப்பெரிய இராஜதந்திர ஆயுதம் குறித்த தெளிவை பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.
அதாவது, ரணில் என்பவரை கையாள்வதில் தமிழர் தரப்பு எவ்வளவு சாதுரியத்துடன் நடந்துகொள்கிறது? அவரது உறுதிமொழிகள், அவருடன் நடைபெறும் பேச்சுக்கள், அவர் காட்டும் வழிமுறைகள் எல்லாம் நல்லாட்சி என்ற பெயர்ப்பலகையின் கீழ் புனிதமான பாதையில் சுத்திகரிக்கப்பட்ட செயன்முறைகளாக தென்படுகின்றனவா? அல்லது அவரது நடவடிக்கைகளை தமிழர் தரப்பு எச்சரிக்கையுடன்தான் கையாளுகின்றனவா?
ரணில் விக்கிரமசிங்க, கடந்த காலங்களில் சந்தித்த அரசியல் சவால்கள் மிகவும் கடுமையானவை. இப்போது மஹிந்த எதிர்கொள்ளும் தோல்விகளை விட மிகப்பயங்கரமான தடைகளையெல்லாம் தாண்டித்தான் இன்று மிகவும் உயரமான இடத்துக்கு வந்திருக்கிறார். ஆனால், அந்த தடைகளையெல்லாம் நேர்மையாகத்தான் உடைத்தெறிந்தார் என்று யாரும் வாதிடமுடியாது.
சாதாரண எம்.பியாக தனது அரசியலை ஆரம்பித்து அமைச்சராகி, பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகி பிரதமராகி விடுதலைப்புலிகளுடான பேச்சுக்களின்போதெல்லாம் தென்னிலங்கையில் மிகக்கடுமையாக எதிர்ப்புக்களை சந்தித்து, அவற்றை வெற்றிகரமாக முறியடித்து பல்வேறு அரசியல் கெடுபிடிகளை சந்தித்து அவற்றையும் வெற்றிகொண்டு சொந்தக்கட்சிக்குள்ளேயே அவரை தலைமை பதிவியிலிருந்து தூக்குவதற்கு எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றையும் முறியடித்து, ஜனாதிபதி பதவியை மயிரிழையில் தவறவிட்ட தோல்வியால்கூட துவண்டுவிடாமல் இன்று ஐந்து இலட்சம் விருப்பு வாக்குகளை பெற்ற - அதிகாரம் மிக்க - அரசியல் புள்ளியாக - பிரதமராக - விஸ்வரூபமெடுத்துள்ளார்.
இவரது அனுபவமும் அரசியல் சாணக்கியமும், தென்னிலங்கையில் கூச்சல்போடும் சாதாரண அரசியல்வாதிக்கு ஒப்பானதோ இல்லை. தமிழ் அரசியல்வாதிகளின் தொண்ணூறு சதவீதமானவர்களுக்கு சமமானதோ அல்ல. இலங்கையின் அரசியல் நாடித்துடிப்பை துல்லியமாக கணித்துக்கொள்ளக்கூடிய சிலரில் ரணில் முதன்மையானவர் என்று கூறலாம்.
மறைந்த விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் அடிக்கடி தனது உரைகளில் குறிப்பிடும் விடயம் 'ரணில் ஒரு நரி. அவரது நடவடிக்கைகளை இன்று நேற்றல்ல ஆரம்பத்திலிருந்து நுணுக்கமாக கவனித்துவருபவன் நான்' என்தாகும். உதாரணமாக, சமகால அரசியல் நிகழ்வுகளில், நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களையும் அவற்றுக்கு பின்னணியில் இடம்பெறும் தந்திரங்களையும் உற்றுநோக்கினால், ரணில் எவ்வளவுபெரிய சாணக்கிய சாரதி என்பதை அறிந்துகொள்ளலாம்.
தமிழர் தீர்வு தொடர்பான முயற்சிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. முன்னர் குறிப்பிட்டதுபோல, மஹிந்தவின் கறைகளை கழுவி நாட்டுக்கு வெள்ளையடித்து, வெளிநாடுகளின் கவர்ச்சிதேசமாக இலங்கையை மாற்றுவதானால் அதற்கு தமிழர்களுக்கான நீடித்த நிலைத்த தீர்வு என்பது அத்தியாவசிய மூலப்பொருள் தேவை இது சிங்கள தேசத்துக்கு தெரிந்த விடயம்.
மறுபுறத்தில், ஜெனீவா தீர்மானம், போர்க்குற்றவிசாரணை என்ற பல பிரச்சினைகள் அரசின் காலைச்சுற்றிக்கொண்டு பாம்புகள் போல நெளிந்துகொண்டிருக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வாகத்தான், ஆரம்பித்திலேயே கூறியதுபோல தீர்வு முயற்சிகளை நோக்கி துரிதமாக நகர்வதற்கு அரசு முடிவெடுத்துக்கொண்டது.
அதன் முதல்கட்டமாக, நாடாளுமன்றத்தை அரசமைப்பு சபையாக மாற்றி புதிய அரசமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்து அதற்கு நாடளாவிய ரீதியில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை கோருவதற்கு கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த தீர்வுப்பொதியினுள் தமிழர்களுக்கு என்ன தரப்போகிறார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.
தன்நாட்டின் நலத்தை கருத்திற்கொண்டும், அதேவேளை, பொதுச்சிந்தனையின் அடிப்படையிலும் தீர்வு வழங்குவது என்ற கூட்டு உடன்பாட்டுடன் ஒத்துப்போனாலும் பெரும்பான்மைவாத சிந்தனையிலிருந்து கொண்டு தமிழ்மக்களுக்கு, அவர்கள் கேட்பது போல, அளவுகடந்த அதிகாரங்களுடன் கூடிய தீர்வினை வழங்குவதற்கு ரணில் தரப்புக்கு ஒருபோதும் விருப்பமில்லை.
இதனை விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின்போதே தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. பலம் மிக்க தரப்பாக தமிழர்கள் விளங்கியபோதே சமஷ்டியை முன்மொழிந்த ரணில் தரப்பினர், தற்போது எந்த பலமும் இல்லாத கையறுநிலையில் நின்றுகொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அதே தீர்வினை தருவதாக உறுதியளிப்பது எந்த விதத்திலும் நம்பிக்கையளிப்பதாக படவில்லை.
ஆகவே, ஏதோ ஒன்றை கொடுப்பதாக தாங்கள் அறிவித்தாலும் அதற்கு தென்னிலங்கையில் எதிர்ப்பைக் காரணம் காண்பித்து அல்லது இந்த தீர்வு விவகாரம் மக்கள் வாக்கெடுப்புக்கு போகும்போது அவர்களது எதிர்ப்பினை இந்த தீர்வின்மீது சுமத்தி தீர்வுப்பொதியை இயலுமான வரை நீர்த்துப்போக செய்வதற்காகத்தான் தற்போது மஹிந்த என்ற பாத்திரத்தை அழகாக மேடையேற்றியிருக்கிறார் ரணில்.
இதில் ரணிலின் சாமர்த்தியம் எங்கு தூக்கலாக தெரிகிறது என்றால், இந்த நாடகத்தில் மஹிந்த பாத்திரமாக்கப்பட்டிருப்பது மஹிந்தவுக்கே தெரியாமல் பிரயோகிக்கப்படுவதில்தான்.
அதாவது, அரசுக்கு எதிரான வலுவான எதிர்தரப்பை உருவாக்குவதற்கு ரணில் போட்டிருக்கும் புதிய திட்டம்தான் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் நாடகம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, எதிர்க்கட்சி என்ற மகுடத்துடன் இருந்துகொண்டால் மாத்திரம் எதிர்க்கட்சியாகிவிட முடியாது. அது அரசாங்கத்துக்கோ, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கோ சவாலானது அல்ல.
அப்படியே, அது சவாலானதாக இருந்தாலும் மஹிந்தவின் எதிர்ப்புத்தான் இன்றைய அரசுக்கு, சர்வதேச அளவிலும் ஓர் அந்தஸ்துமிக்கதாக அமையும் என்பது யதார்த்தம். இந்த எதிர்ப்பு கிளர்ச்சிக்கொண்டு எழவேண்டும் என்பதற்காக மஹிந்தவின் மகனின் கைது மேற்கொள்ளப்படுகிறது. இந்த கைது சம்பவத்தினால் சுவாலை விடும் மஹிந்தவின் எதிர்ப்பு மேலும் கொழுந்துவிட்டெரிய வேண்டும் என்பதற்காகவே பொன்சேகாவுக்கு அரசியல் ஞானஸ்தானம் வழங்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் வழங்கப்படுகிறது.
இதுவரை பின்னங்கால்களால் புழுதியை கிளறிக்கொண்டிருந்த மஹிந்த இந்த சம்பவங்களால் கடும் சீற்றங்கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்து அரசுக்கு எதிராக களமிறங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். புதிய கட்சி அலுவலகத்தை திறந்து தனது படைகளை களமிறக்குவதற்கான சமிக்ஞைகளை காண்பித்திருக்கிறார். இதைத்தான் ரணிலும் எதிர்பார்த்தார்.
அரசுக்கு எதிரான இந்த மஹிந்தவின் கோபமும் தமிழர் தீர்வு விடயத்தில் மஹிந்த வழங்கவேண்டிய எதிர்ப்பும் இதே கொதிநிலையில் பேணப்படுவதை ரணில் நிச்சயம் உறுதிப்படுத்திக்கொள்வார். அது குறைந்தாலோ அல்லது தேவைக்கு அதிகமாக சென்று வேறு பாதகங்களை உண்டு பண்ணினாலோ, நாமலையும்கூட கைது செய்வதற்குக்கூட அவர் தயங்கமாட்டார்.
அனுபவத்தினாலும் அரசியல் தந்திரங்களாலும் பின்னப்பட்டிருக்கும் ரணிலின் வியூகங்கள் இவை. இப்படிப்பட்ட சமன்பாடுகளின் வழியாக பயணப்படுகின்ற அதிசிக்கல் வாய்ந்த அரசியல் சூத்திரத்துக்குள்ளால்தான் தமிழர் தரப்பு தங்களது அரசியலை தீர்க்கமுடன் நகர்த்தவேண்டியிருக்கிறது.
தமிழர் தரப்பு இவ்வளவு இராஜதந்திர கனதியுடன் விடயங்களை எதிர்கொள்ளுமா? சவால்களை முறியடிக்குமா? முதலிலேயே கூறியதுபோல, தமிழர் தரப்பு சர்வதேச சமூகத்தின் ஆதரவு - இந்திய ஆசிர்வாதங்கள் என்று எவ்வளவுக்கு எவ்வளவு ஏனைய மூலோபாயங்களின் மீது கவனம் செலுத்துகின்றனவோ அவற்றிலும் அதிகமாக ரணிலை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தாவிடின் பேரம் பேசுதல், உரிமைகளை வெல்லுதல் என்பவற்றுக்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் அனைத்தும் அஸ்தமனமாகிவிடும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago