2025 மே 15, வியாழக்கிழமை

வாக்குகளைப் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள்?

Thipaan   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா  

அரசியல் கைதிகள் மேற்கொண்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பான கவனம், மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, நல்லாட்சி அரசாங்கம் உருவாகியவுடன், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உடைக்கப்பட்டமையையும், அது ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இந்நிலையில் தான்,“நாங்கள் வாக்களித்த பிரதிநிதிகள் எங்கே?” என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய சூழல் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.  

அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது, தமிழ் மக்களுக்கான அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்று என்பது, காலாகாலமாகச் சொல்லப்பட்டு வருகின்ற ஒன்று. முறையான விசாரணைகளின்றி, தமது வாழ்நாளை, சிறைக்கம்பிகளை எண்ணுவதில் செலவளித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், தங்களது விடுதலைக்கான கதவு திறந்திருப்பதாகவே, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சியை நோக்கினார்கள்.  

அதுவும், நவம்பர் 7ஆம் திகதிக்குள், இக்கைதிகள் தொடர்பான முடிவை எடுக்கவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தபோது, அது உண்மையானது என்றே பலரும் நம்பினர். அதுவும், அதற்கு முன்னர் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலும் வேறு வழியில்லாத நிலையிலும், ஜனாதிபதியை நம்ப வேண்டியேற்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி காற்றில் போய், 9 மாதங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் கூட, அந்தக் கைதிகளின் நிலைமை குறித்துக் கேள்விகளே தொக்கி நிற்கின்றன.  

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பதென்பது, சவாலான ஒரு விடயம் என்பதை நிச்சயமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களை விடுவிப்பதென்பது, சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டியது. அதுவும், அவ்வளவு பேரையும் ஒரே நாளில் விடுவதென்பது, சவாலான ஒன்று. அதேபோல், பெரும்பான்மையின மக்களைப் பொறுத்தவரை, அவ்வாறானதொரு செயற்பாடொன்றுக்கு ஆதரவு வழங்குவதென்பது, கடினமானதாகவே இருக்கும். அதுவும், கடும்போக்கு அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், தெற்கில் அதிகரித்திருப்பது போல் தோன்றியுள்ள நிலையில், அரசியல் கைதிகளை விடுவித்தால், 'புலி வருது' என, பாதயாத்திரை ஒன்று உருவாகாது என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. ஆனால், 9 மாதங்களாகியும், சொல்லும்படியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத ஒன்று. கடும்போக்கு எதிரணியினரைச் சாக்குப் போக்காக வைத்து, இவ்விடயத்தை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகின்றதா என்ற சந்தேகம் தான் எழுகின்றது.  

முக்கியமானதொரு விடயத்தில் அரசாங்கத்தின் கவனம் காணப்படவில்லையென்றால், அதைத் தட்டிக் கேட்பதற்குத் தான் எதிர்க்கட்சிகள் காணப்படுகின்றன. இலங்கையின் வரலாற்றில் அனேகமான நாடாளுமன்றங்களில், பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தான், பிரதான எதிர்க்கட்சியாக இருந்திருக்கின்றன. ஆனால், ஜனவரி 8, 2015இல் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து உருவான தேசிய அரசாங்கத்தின் விளைவாக, பிரதான எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற, எதிர்க்கட்சித் தலைவராக அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாறினார். எனவே, அரசாங்கத்துக்கான அதிக அழுத்தங்களை வழங்குவதற்கு, தமிழ் மக்களைப் பிரதானமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அப்படியான எதுவும் நடந்திருக்கிறதா என்பது தான், தற்போது இருக்கின்ற முக்கியமான வினா.  

பொது எதிரணியின் வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக மாற்றுவதற்கு, தமிழ் மக்கள் (அதேபோல் முஸ்லிம்களும்) அவருக்களித்த வாக்குகள் முக்கியமானவை. தமிழ் மக்கள் அவ்வாறு வாக்களிப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்பட்ட கோபம் ஒரு காரணமென்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தமை, மிக முக்கியமான காரணமாகும். ஆகவே, நல்லாட்சி அரசாங்கத்தை அழுத்தத்துக்குள்ளாக்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயலுமெனவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீருமெனவும் எதிர்பார்க்கப்பட்டது.  

ஆனால், இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒருபுறமிருக்க, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை கூட, தீர்க்கப்படுவதற்கான சமிக்ஞைகளை வெளியிடுவதாகக் காணோம். அதற்கெதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பகிரங்கமாக வெளியிடும் எதிர்ப்புகளையும் காணோம். மாறாக, எதிர்ப்புகளைத் தடுப்பதற்கு அக்கூட்டமைப்பு முயலும் சந்தர்ப்பங்களைத் தான் காண முடிகிறது.  

அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த இரா. சம்பந்தன் எம்.பி, நல்லாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கக்கூடாது என்றவாறான கருத்தை வழங்கியிருந்தார். ஆக, அரசாங்கத்துக்குத் தாங்களாக அழுத்தம் கொடுக்கவும் போவதில்லை, அழுத்தம் கொடுப்போரை அனுமதிக்கப் போவதுமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே, அக்கூட்டமைப்புக் காணப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.  

உண்மையிலேயே, அரசாங்கத்துடன், திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை அக்கூட்டமைப்பு மேற்கொண்டு வரலாம். அதன் காரணமாக, அத்தகவல்கள், வெளியில் வராத நிலை இருக்கலாம். ஆனால், தமக்கு வாக்களித்த மக்களிடம், தாம் எதைச் செய்கிறோம் என்பதைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றதல்லவா? திரைக்குப் பின்னால் அற்புதமான விடயங்களைக் கூட்டமைப்புச் செய்கிறது என்று வைத்துக் கொண்டால், அவ்விடயங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லாமை, மக்கள் தொடர்பாடலில் பாரிய தவறில்லையா? இதில் குறிப்பிடத்தக்கதாக, கூட்டமைப்பின் மக்கள் தொடர்பாடல் பிரச்சினையென்பது, இன்னமும் சிக்கலானது. தமிழ் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களாக இருப்போர் மதிப்பதில்லை என்றொரு பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது. ஆங்கில அல்லது சிங்கள மொழிமூல ஊடகங்களிடமிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில்கள் வழங்கப்படும் நேரத்தில், தமிழ் ஊடகங்களுக்கோ அல்லது ஊடகவியலாளர்களுக்கோ அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை, அனேகமான தமிழ் ஊடகவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். தமக்கு வாக்களித்த மக்களுக்குத் தகவல்களை வழங்காமல், பெரும்பான்மை மக்களுக்கும் ஆங்கிலப் பத்திரிகைகளை வாசிக்கும் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கும் மாத்திரம் கருத்துகளை வழங்குவதை, மக்கள் தொடர்பாடலின் மிகத் தவறான நிலை என்றல்லவா அழைக்க முடியும்?  

ஊடகங்களிடம் நடந்து கொள்வது தான் அவ்வாறு என்றால், நாடாளுமன்றத்திலும் பெரும்பாலும் வாய்மூடி மௌனிகளாகவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது, முக்கியமான குற்றச்சாட்டு. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் செயற்படும் விதத்தை வைத்து, அவர்களைத் தரவரிசைப்படுத்தும் இணையத்தளமான 'மந்திரி'யின் தரப்படுத்தல்களிலும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், பின் நிலையிலேயே காணப்படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் விவாதங்களில் கலந்துகொண்டு, கேள்விகளை எழுப்பி, அவை நடவடிக்கைகளின் பங்கெடுத்தமைக்கான ஒட்டுமொத்தமான தரப்படுத்தலில், முதல் 25 இடங்களுக்குள், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரம் இடம்பிடித்துள்ளார். அவருக்கு 13ஆவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்துவரும் சில இடங்களில் ஞா. ஸ்ரீநேசன் (29), சி. சிறிதரன் (30), இரா. சம்பந்தன் (33), சார்ள்ஸ் நிர்மலநாதன் (38) ஆகியோர் காணப்பட, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு 56ஆவது இடம் கிடைக்கிறது. கே. துரைராஜசிங்கத்துக்கு 159ஆவது இடமும் ஷாந்தி சிறிஸ்கந்தராஜாவுக்கு 153ஆவது இடமும் கிடைக்கின்றன.  

ஒட்டுமொத்தமான தரப்படுத்தல்கள் மாத்திரம்தான் அவ்வாறென்றல், தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கமான விடயதானங்களிலும், சில உறுப்பினர்களின் தரப்படுத்தல்கள், நம்பிக்கையூட்டும்விதமாக இல்லை. குறிப்பாக, நல்லிணக்கமும் மீள்குடியேற்றமும் என்ற விடயப்பரப்பில், ஸ்ரீநேசன் எம்.பி முதலிடத்திலும் டக்ளஸ் எம்.பி இரண்டாமிடத்திலும் காணப்பட, ச. வியாழேந்திரன், ஈ. சரவணபவன் ஆகியோர் முறையே 3ஆம், 5ஆம் இடங்களில் காணப்படுகின்றனர். இவர்களைத் தவிர, கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் அவ்விடயதானத்தில் பங்குபற்றவில்லை என, அந்தத் தரப்படுத்தல் கூறுகிறது. அதேபோல், சிறுபான்மையினரின் உரிமைகள் உட்பட ஏனைய பல விடயங்களை உள்ளடக்கும் உரிமைகளும் பிரதிநிதித்துவமும் என்ற விடயதானத்தில், தமிழர்களில் முதலாமவராக 6ஆம் இடத்தில் காணப்படும் டக்ளஸ் எம்.பி காணப்படுகிறார். 7ஆம் இடத்தில் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி காணப்படுகிறார். முதல் 15 இடங்களுக்குள் வேறு எந்தத் தமிழரும் கிடையாது. இவ்வாறான முக்கிய விடயதானங்களில் கூட பங்களிப்புச் செய்யாமல், தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியுமென எண்ணுகிறார்கள் என்ற கேள்வி, முக்கியமானதல்லவா?  

இந்தக் கேள்விகள், கூட்டமைப்பு மீது மாத்திரமன்று, எதிர்க்கட்சியில் இருந்தபோது உரத்துக் குரல்கொடுத்துவிட்டு, இப்போது சிறிது அமைதியாக மாறியிருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் மீதும் கேட்கப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், இவர்களெல்லோரையும் விட, முக்கியமான கடப்பாடு, கூட்டமைப்புக்கே இருக்கிறது என்பது வெளிப்படையானது.  

இந்நிலையில் தான், இவ்விடயம் தொடர்பாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதன்மூலமாக மாத்திரமே, தமிழ் மக்களின் உதவியோடு ஜனாதிபதியாகத் தெரிவான ஜனாதிபதி சிறிசேனவுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத்தங்கள் முன்வைக்கப்பட முடியும். அப்போது தான், இந்தப் பிரச்சினை, சற்றுக் கொஞ்சமாவது முன்னகரும். அவ்வாறான அழுத்தங்களை முன்வைப்பதற்கு முயலாத அரசியல்வாதிகளை, நாடாளுமன்றக் கதிரைகளை வெறுமனே சூடாக்கும் அரசியல்வாதிகளை, அடுத்த தேர்தல் காலத்தில் சந்திக்கும் போது, உரிய கேள்விகளைக் கேட்பதற்கு, மக்கள் தயாராக இருப்பர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .