Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Administrator / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கருணாகரன்
இந்திரகுமாருக்கு வயது 28. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் அவர்தான் முதலாவது பட்டதாரி. அவர், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியபோது, குடும்பமே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. இருக்காதா பின்னே, குடும்பத்தில் முதலாவது ஆளாகப் பட்டதாரியாகப் போகிறார், படித்துத் தொழில் செய்யப்போகிறார் என்றால், எவ்வளவு பெரிய மகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படும் அந்தக் குடும்பத்துக்கு!.
இந்திரகுமாரை நினைத்து, மிகப் பெரிய மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டது. சந்தோஷத்தில் தங்களுக்குச் சிறகுகள் முளைத்ததாகக் கூட உணர்ந்தனர். அந்த நாட்கள், பெரிய கொண்டாட்டமாகவே அவர்களுக்கு இருந்தன.
நேற்று முன்தினமிரவு (01.04.2012), இந்திரகுமாரைச் சந்தித்தேன். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள, “வேலைகோரிப் போராடும் பட்டதாரிகளின்” கொட்டகையில், நண்பர்களோடிருந்தார். தாங்கள் நடத்துகின்ற போராட்டத்தைப்பற்றி, மங்கிய ஒளியில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இரவு பகலாக, அங்கேயே தொடர்ந்திருப்பதால், களைப்படைந்திருந்தது முகம். உடலும் கூடச் சோர்ந்தேயிருந்தது. “இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்” என்று கேட்டேன்.
“வேலை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம். இப்ப இதுதான் வேலை” என்றார் மெல்லிய புன்னகையுடன். குரலும் கூடக் களைத்துச் சோர்ந்திருந்தது. ஆனால், அந்தச் சிரிப்பில்,ேகலியும் கலந்திருந்தது. அது, இந்த நாட்டைப் பார்த்துக் கேலி செய்வதாக, இந்த ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேலிப்படுத்துவதாக, ஏன், தம்மையும் தாம் படித்துப் ெபற்றக் கொண்ட படிப்பையும் கூட, உள்ளூர நினைத்துக் கேலி செய்வதாக இருந்தது. கூட இருந்த நண்பர்களும், மெல்லிய கேலிச் சிரிப்பை உதிர்த்தனர். அவர்களும் அப்படித்தான், எல்லாவற்றையும் கேலிப்படுத்துகின்றனர் போலும். இப்படிக் கேலி செய்வதை விட, இப்போது அவர்களுக்கு வேறு வழியில்லை.
இந்த மாதிரியான நிலைமையில், வடக்குக் கிழக்கில் ஏறக்குறைய எட்டாயிரம் பட்டதாரிகள், வேலைகோரிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வடக்கில், மூவாயிரத்துக்கு அதிகமானவர்களும் கிழக்கில் ஐந்தாயிரம் வரையானவர்களும், வேலைகோரிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், பல்கலைக்கழகப் படிப்பை முடித்து, மூன்று, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஏறக்குறைய, 27, 28, 29 வயதுடையவர்கள். ஒரு கணம் உங்களின் கண்களை மூடிக் கொண்டு, இந்த எட்டாயிரம்பேரையும் நினைத்துப்பாருங்கள். ஒரு பெரிய அணியாக அவர்கள் நிற்பது தெரியும்.
அவ்வளவுபேரும், படித்துப் பட்டம் பெற்றவர்கள். அவ்வளவு பேரும் படித்து விட்டு, மூன்று நான்கு ஆண்டுகளாக வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்றால், இந்த எட்டாயிரம்பேரின் சக்தியும் பயன்படாமல் இருக்கின்றது. இது, இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பாகும்? அதுவும், படித்தவர்களின் ஆற்றலைப்பயன்படுத்தத் தவறும் இழப்பு. மட்டுமல்ல, இவர்களுக்கும் இவர்களுடைய குடும்பங்களுக்கும் கூட, இது பெரிய இழப்பே.
இவர்கள் படிக்கும்போது, தங்களுடைய எதிர்காலம் குறித்து, ஆயிரமாயிரம் கனவுகளோடிருந்தவர்கள். புதிதாக, நிறைய விடயங்களைச் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையோடிருந்தவர்கள். இந்திரகுமாரே கூறும்போது,
“எங்களுடைய குடும்பத்தில் நான்தான் முதன் முதலில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானவன். அதனால், எப்படியாவது ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று, எனக்கும் எங்களுடைய குடும்பத்துக்கும் ஒரு விருப்பம் இருந்தது. மக்களுக்கு சிறப்பானதொரு சேவையை, முன்மாதிரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதிலும், போரினால் பாதிக்கப்பட்ட, கஷ்டப்பிரதேசத்திலிருக்கும் மக்களுக்கான பணிகளைச் செய்ய விரும்பினேன். ஆனால், அதற்குரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. காலம் போய்க்கொண்டிருக்கிறது. வயதும் ஏறிக்கொண்டு போகிறது.
இப்படியிருந்தால், எங்களுடைய மனதில், சலிப்பும் கவலையும்தான் மிஞ்சும். காலம் பிந்தினால், பின்னர் எங்களுடைய எதிர்காலம், திருமணம், குடும்ப வாழ்க்கை என்று, நிலைமையே மாறிவிடும். அப்போது, நாங்கள் விரும்பியதையெல்லாம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஆகவேதான், எங்களுக்கான வேலையை, உரிய காலத்தில் தரும்படி கேட்கிறோம்.
“கட்டாயம் அரசாங்க உத்தியோகத்தில் இணைந்துதான் வேலை செய்யவேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். கட்டாயமாக அரசாங்க உத்தியோகத்திலிருந்துதான் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்றோ, அப்படியிருந்தால்தான் சேவை செய்யமுடியும் என்றோ, நான் இங்கே சொல்ல வரவில்லை. ஆனால், போரினால் நலிவுற்ற நிலையிலிருக்கும் என்னால், அல்லது என்னைப்போன்றவர்களால், வேறு என்னதான் செய்ய முடியும்? சுயதொழில் செய்யலாம். அதாவது, சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடலாம். அதற்காக, வங்கிகள் தாராளமாக நிதி உதவி அளிக்கின்றன என்று, நீங்கள் இதற்கொரு பதிலைச் கூறுவீர்கள். ஆனால், அதையெல்லாம் கூறுவதற்கு இலகுவாக இருக்குமே தவிர, நடைமுறையில் மிகச் சிக்கலானது. ஆகவேதான், நாங்கள் அரசாங்கத்திடம், எங்களுடைய வேலைவாய்ப்புக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
“எங்களுடைய தகுதியின் அடிப்படையில், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது, அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கத்தில் அதற்கான இடமில்லை. அதாவது, இவ்வளவு பேருக்கும் வேலை வாய்ப்பு இல்லை என்றால், வெற்றிடங்கள் இல்லை என்றால், பிற துறைகளில், தனியார் துறைகளில் வேலை செய்யக்கூடிய ஒரு நிலைமையை, இந்த நாட்டில் உருவாக்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்குத்தானே உள்ளது? அதற்கான பொருளாதாரக் கொள்கையையும் அரசியற் சூழலையும் உருவாக்க வேண்டியது அரசாங்கம்தானே!” என்றார்.
ஏறக்குறைய இதே கருத்தையும் இதன் தொடர்ச்சியையும் தான், ஏனைய பட்டதாரிகளும் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வாதத்தின்படி, “பட்டதாரிகள் எவரும் கட்டாயமாக அரசாங்க உத்தியோகம்தான் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தோடு இருக்கவில்லை. வேறு தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் பிரச்சினையே. குறிப்பாக வடக்கு, கிழக்கில் தனியார் துறை வளர்ச்சியடையவே இல்லை. நடந்த போர், இதற்கான சூழலை, இல்லாமல் செய்துவிட்டது. போருக்குப் பின்னர், அதற்கான சூழலை உருவாக்கியிருக்க வேண்டும். அதைச்செய்வதில் அரசாங்கமும் தமிழ் அரசியற் தலைமைகளும் தவறிவிட்டன. இதுதான் இன்றைய இந்த நெருக்கடிக்குக் காரணமாகும். சமூக நிலைமை என்ன என்று உணர்ந்து கொள்ளாமல், பொறுப்பற்று இருந்ததன் வெளிப்பாடே இது.
இதற்கான சூழலை உருவாக்குவதற்கு, மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து, சில பொறிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு, வடக்கு, கிழக்கின் அரசியல் தலைமைகளும் மத்திய அரசாங்கமும், அடிப்படையான விடயங்களில், ஒத்திசைவைக் கொண்டிருந்தாலே, சாத்தியம் ஆகும். ஆனால், இது நடக்கவில்லை. இங்கே நடந்து கொண்டிருப்பது, முரண்நிலை அரசியல். இந்த முரண்நிலை அரசியலினால், எத்தகைய தீர்மானங்களையும் கூடிப்பேசித்தீர்மானிக்க முடியாது. கூடிப்பேசித்தீர்மானிக்கவில்லை என்றால், கூட்டாகச் செய்ய வேண்டிய வேலைகள் நடக்காது. இதுதான் நடந்தது. இதனால் அரசாங்க வேலைவாய்ப்பைப் பெறுவதிலும், பிரச்சினையாக இருக்கிறது. தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதும் சிக்கலாக உள்ளது.
இதைக்குறித்து இன்னொரு பட்டதாரி குறிப்பிடும்போது, “சுயமாக ஒரு தொழிற்றுறையை ஆரம்பிக்கக்கூடிய அளவுக்கு, கல்வி அறிவும் ஆற்றலும் இருந்தாலும், பொருளாதார வளம் பலருக்கும் இல்லை. வங்கிகளில் கடன் எடுத்துத் தொழிற்றுறையை ஆரம்பிக்கலாம் என்றால், அந்தத் தொழிற்றுறையை மேம்படுத்தக்கூடிய அளவுக்கு, வடக்குக் கிழக்கின் சமூக, பொருளாதார நிலை இல்லை. மக்களுடைய வாழ்க்கைத்தரம் மிகப் பின்தங்கியிருப்பதால், அதாவது கீழ் நிலையில் இருப்பதால், மேற்கொள்ளப்படும் தொழிற்றுறையை மேம்படுத்தி, வங்கிக் கடனைத்திருப்பி அடைக்க முடியாத நிலையே உண்டு. ஏற்கெனவே, தொழிற்றுறையை ஆரம்பித்த பலரும், நட்டத்தினால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் சென்றிருக்கிறார்கள். இதை விட வங்கிகள், வழங்கிய கடனையே திரும்பப்பெற முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. இதனால், வடக்குக் கிழக்கில், கடன் கொடுக்கும் நடைமுறையை, வங்கிகள் வேறாக மாற்றியுள்ளன. விசாரித்தால், கடனளிப்பை மீளப்பெறுவதில் உள்ள நெருக்கடியே, தங்களை இத்தகைய நடைமுறை மாற்றத்துக்குத் தள்ளியது, என்று சொல்லப்படுகிறது.
“இப்படியான சூழலில், எப்படிச் சுயமாகத் தொழிற்றுறையை ஆரம்பிக்க முடியும்? வேறு தனியார் துறை நிறுவனங்கள் கூட, வடக்குக் கிழக்கில் இயங்கவில்லை. அப்படி இயங்குவதற்கான நிலைமையையும், அரசாங்கமும் தமிழ் அரசியற் தலைமைகளும், மாகாணசபையும், உருவாக்கவில்லை. யுத்தம் முடிந்த பின்னரான எட்டு ஆண்டுகளில், இளைய தலைமுறைக்காக எத்தகைய புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், எதுவுமே தெரியவில்லை. இதுவே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகும். இளைஞர் விவகார அமைச்சு என்ற பேரில் ஓர் அமைச்சு இயங்குகின்றது. ஆனால், அது இளைய தலைமுறைக்கு வெளியேதான் உள்ளது. இதைப்போன்றுதான், மாகாணசபைகளும் இருக்கின்றன. யாருக்குத்தான் எங்களைப் பற்றிய கவலை இருக்கு?” என்று அவர் கூறினார்.
இன்னொரு பெண் பட்டதாரியின் கேள்விகள், வேறொரு கோணத்தில் உள்ளன. “அரசாங்க உத்தியோகம், எல்லாருக்கும் சாத்தியமில்லை. ஆகவே, சுயதொழில் முயற்சியில் ஈடுபடுங்கள். அல்லது தனியார் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு முயற்சியுங்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படிச் சொல்கின்றவர்களில் பலர், ஏற்கெனவே அரசாங்க உத்தியோகத்திலிருந்தவர்களும் இருப்பவர்களுமாகும். இப்போது, மாகாணசபையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கின்ற முதலமைச்சர், சபை முதல்வர், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலரும், அரசாங்க உத்தியோகத்திலும் உயர் பதவிகளிலும் இருந்தவர்களே. இவர்கள் எங்களைப் பார்த்து, எப்படி இப்படிக் கூற முடியும்? நாங்கள் அரசாங்க உத்தியோகம் செய்ய முடியாது என்று, இவர்களோ அல்லது யாருமோ எப்படிச் சொல்ல முடியும்?
ஏனென்றால், அது எங்களுக்கான உரிமை. இன்னாருக்குத்தான் அரசாங்க வேலைவாய்ப்பு என்று சொல்ல முடியாது. ஆனால், அப்படித்தான் இங்கே நிலைமை உள்ளது. அரசியற் கட்சிகள், தங்களுக்கு இசைவானவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றன. அரசாங்கமும் இதற்கு இசைவாக உள்ளது. இப்படியான நிலைமையில், கல்வித்தகுதியோ, பிற தகமைகளோ கேலிப்படுத்தப்படுகின்றன. இதைப்பற்றி நாம் யாரிடமும் பேசத்தயாராக உள்ளோம். ஆனால், அதை எதிர்கொள்வதற்குத்தான் யாருமே தயாராக இல்லை” என்று அவர் கூறுகின்றார்.
இப்படியே, பட்டதாரி இளைய தலைமுறை, கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக்கொண்டும் இருக்கிறது. இந்த நாடு, இளைய தலைமுறையை உரியமுறையில் கவனத்தில் எடுக்கத்தவறியதன் விளைவுகளே, ஜே.பி.வியின் போராட்டங்களும் ஈழவிடுதலைப்போராட்டத்தின் ஒரு பக்கமுமாகும். இதற்காக, இலங்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில், ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரக்கும் அதிகமான இளைஞர்களை இழந்திருக்கிறது. இவர்களெல்லாம், உரிய முறையில் செயற்படுவதற்கான வாய்ப்பை அளித்திருந்தால், இன்று இந்த நாட்டின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கண்டிருக்கும்.
ஆனால், இவ்வளவு இழப்புகளையும் பின்னடைவையும் சந்தித்த பிறகும், ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், புத்திவரவேயில்லை. இதனால்தான், இன்று இந்தளவு எண்ணிக்கையானவர்கள் படித்துப் பட்டம் பெற்று விட்டும், போராடிக்கொண்டிருகிறார்கள்.
இந்தப் பட்டதாரிகளை, கடந்த 10.03.2017 அன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது “அடுத்து வரும் மூன்று வாரங்களுக்குள், வடமாகாணத்தில் காணப்படுகின்ற அரசாங்க நியமனங்களுக்கான விவரங்களைச் சேகரித்துத் தருவதாகக் கூறியிருந்தார். ஆனால், இந்தப் பத்தி எழுதப்படும் (02.04.2017) வரை, பிரதமரிடமிருந்து எத்தகைய பதிலும் கிடைக்கவில்லை. இதைப்போலவே, பட்டதாரிகள், 15.03.2017 அன்று, வடமாகாணசபையின் அவைத்தலைவர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். அப்போது, வடமாகாணத்தில் உள்ள அரச பணி வெற்றிடங்களைச் சேகரித்துத் தருவதாக, மாகாணசபையினர் தெரிவித்திருந்தனர். இதுவரையில் அவர்களிடமிருந்தும் எத்தகைய தரவுகளும் கிடைக்கவில்லை. இவ்வளவுக்கும், இந்த விவரங்கள், மாகாணசபையின் கைகளில் இருக்க வேண்டியது. ஆனால் வெறுங்கையோடே இருக்கின்றனர்.
அடுத்த சந்திப்புகள், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன், 24.03.2017 மற்றும் 28.03.2017 ஆகிய இரண்டு நாட்களில் நடந்தன. இரண்டு சந்திப்புகளும் நம்பிக்கை அளிக்கக்கூடியனவாக அமையவில்லை என்று, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். இருந்தபோதும், எதிர்வரும் 05.04.2017 புதன்கிழமை, மீண்டும் முதலமைச்சரைச் சந்திக்கவுள்ளதாகப் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அரசாங்க நியமனங்களில் சில துறைகளில், தமிழ்த்தரப்பினர் முயல்வதில்லை என்று முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, பொலிஸ்துறையில் படித்தவர்களுக்குரிய இடங்களும் உள்ளன. அவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், ஏற்கெனவே அப்படி விண்ணப்பித்தவர்களுக்குரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ்ப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்க முன்வருவதில்லை என்று, பொதுவாக அரசாங்கமும் பிற தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால், அதற்காக விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் தட்டிக்கழிக்கப்படுகின்றன எனப் பட்டதாரிகள் கூறுகின்றனர். இதைப்பற்றி பொலிஸ் தரப்பும் அரசாங்கமுமே, உரிய விளக்கத்தை அளிக்க முன்வரவேண்டும் அல்லது மாகாணசபை, இவர்களுடைய விண்ணப்பத்தை ஏற்று, அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்தி ஏற்பாடுகளைச் செய்யலாம்.
இதேவேளை, வடமாகாணப் பட்டதாரிகள், தமது வேலைவாய்ப்புத் தொடர்பாக, வட மாகாண ஆளுநரையும் 14.03.2017 அன்று சந்தித்துப் பேசியிருக்கின்றனர். மத்திய அரசாங்கத்திடம் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களைக் கண்டறிந்து சொல்வதாகவும் 172 அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான, கால எல்லையை நீடிப்புச் செய்வதாகவும், ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது. ஆயினும், அது தொடர்பாக, மேலதிக நடவடிக்கைகளை தம்மால் அறிய முடியவில்லை என்று, வடக்கு மாகாண வேலைகோரும் பட்டாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்படியே, பொறுப்பான தரப்புகளில், நம்பிக்கை இழந்திருக்கின்ற நிலையே இன்று காணப்படுகிறது. இதே நிலைமைதான், கிழக்கிலும் தொடர்ந்து கொண்டிருப்பதாக, அங்குள்ள பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். உண்மையில், இந்த அவல நிலைக்குக் காரணம், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையும் நாட்டின் உற்பத்தி சார் நடைமுறைத்திட்டங்களின் குறைபாடுகளுமேயாகும்.
இவற்றைச் சீர்செய்யாமல், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியாது. படித்துப் பட்டம் பெறுகின்ற அத்தனைபேருக்கும், அரசாங்கத்தினால் உத்தியோகத்தை வழங்க முடியாது. அப்படி வழங்கினால், அந்த நாடு பொருளாதார ரீதியில் பின்னடையக்கூடிய நிலையே ஏற்படும். படித்தவர்கள், தாம் படித்த துறைகளில் வேலை செய்யக்கூடியவாறு ஏற்பாடுகளைச் செய்வதே, அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கு, கல்வித்திட்டத்தில் முதலில் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இப்போது, வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போரைப் பார்த்தால், இவர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறைப்பட்டதாரிகளும் முகாமைத்துவப்பட்டதாரிகளுமே அதிகமாக இருக்கின்றனர். ஆண்டுதோறும் பல்கலைக்கழகக்கல்விக்கு உள்வாங்கப்படுகின்றவர்களில், 60 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கலைத்துறைக்குரியவர்களாகவே உள்ளனர்.
அடுத்தது, வர்த்தகக் கல்வி- முகாமைத்துவக் கல்விக்குரியவர்கள். இதை மாற்றியமைப்பதற்காகவே, தற்போது தொழில்நுட்பக்கல்வி க.பொ.த உயர்தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், இது நடைமுறை ரீதியில் பலமடைவதற்கு முன்பு, ஏற்கெனவே படித்தவர்களுக்கு உரிய வழிகளைக் காட்ட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததே.
வடக்குக் கிழக்கில் இன்றுள்ள பிரச்சினைகளில் முக்கியமானது, வேலையில்லாப் பிரச்சினையே. பட்டதாரிகளுக்கு மட்டுமல்ல, முன்னர் போராளிகளாகச் செயற்பட்டவர்கள் தொடக்கம், சமூக மட்டத்தில் உள்ள பலருக்கும் வேலையில்லாத நிலையே காணப்படுகிறது. போரினால் நலிவாக்கப்பட்ட சமூகத்தினர், மேலும் நலிவடைந்து கொண்டிருக்கின்றனர். இதனால், சமூகப் பிறழ்வான நடத்தைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்தநிலையில், இது ஒரு பெரிய நோய்க்கூறாக மாறுவதற்கு முன், இதற்கான பரிகாரத்தை மத்திய மாகாண நிர்வாகங்கள் காண வேணும்.
எப்போதும், இளைய தலைமுறையே புதிதாகவும் நுட்பமாகவும் சிந்திக்கும். இளைய தலைமுறையே வினைத்திறனோடு செயற்படும். அப்படியான இளைய தலைமுறை செயற்படுவதற்கான களச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது, ஆட்சி அதிகாரத்திலிருப்போரின் பொறுப்பாகும். அரசாங்கமும் மாகாணசபையும் தலைவர்களும் இதைக்குறித்துச் சிந்தித்திருக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago