Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Administrator / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து பிரதேசத்தில் வில்பத்து தேசிய வனத்துக்கு வடக்கே நான்கு பிரதேசங்களை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதிகாரிகளும் எவ்வளவு அவசரப்பட்டார்கள் என்றால், ஜனாதிபதியின் அண்மைய ரஷ்ய விஜயத்தின் போது, மொஸ்கோ நகரத்தில் வைத்துத்தான் அதற்குரிய வர்த்தமானிஅறிவித்தலில் கையொப்பமிட்டார். ஜனாதிபதி நாடு திரும்பும் வரையாவது அதற்காக அவர்களுக்கு பொறுத்திருக்க முடியவில்லை.
இந்த வர்த்தமானியைக் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதிக்கும் அதிகாரிகளுக்கும் இவ்வளவு அவசரம் இருந்தது ஏன்? ஜனாதிபதி ரஷ்யாவில் குடியேறப் போகவில்லையே? அவர் நாடு திரும்பும் வரை காத்திருக்க ஏன் முடியாமல் போய்விட்டது? அன்றேதான் அதனைக் கைச்சாத்திட வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததா?
இப்போது அந்த வர்த்தமானி பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழீழ விடுதலை புலிகள் தம்மை வடக்கிலிருந்து விரட்டும்முன், தாம் வாழ்ந்த, தமது பூர்வீக நிலங்களும் இந்த வர்த்தமானி மூலம் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அப்பகுதியில் முன்னர் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் கூறுகிறார்கள்.
முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பதாக சுற்றாடல்த் துறையைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் சிங்கள, பௌத்த இனவாதிகளும் கூறி வருகிறார்கள்.
இந்தச் சர்ச்சை இந்த வர்த்தமானி அறிவித்தல் கைச்சத்திடுவதற்கு முன்னரே சுமார் நான்காண்டுகளாக நாட்டில் இருக்கிறது. அதனைத் தீர்த்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்தவோ, நாட்டின் இன ஒற்றுமைக்கு உகந்த சூழலை உருவாக்கவோ மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கோ மைத்திரிபாலவின் அரசாங்கத்துக்கோ தேவை இருந்ததாகத் தெரியவில்லை.
உண்மையிலேயே மஹிந்தவின் அரசாங்கமே இந்தப் பிரச்சினையைத் தோற்றுவித்தது. புலிகள், முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டியதைப் போலவே, இந்தப் பிரச்சினையை இந்த நிலைக்கு இட்டுச் சென்று, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில் மஹிந்தவின் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததும் வரலாற்றில் மாபெரும் குற்றங்களே.
1990 ஆம் ஆண்டு புலிகள் வடக்கில் சகல மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை ஒரு நாள் அவகாசம் கொடுத்து, அம்மாகாணத்தில் இருந்து வெளியேற்றினர். இதற்குப் புலிகள் பல காரணங்கள் கூறிய போதிலும், அவை ஆதார பூர்வமானவையல்ல.
2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, மீண்டும் வடக்குக்கு வந்து குடியேறுமாறு புலிகள் அழைத்த போதிலும், போர் முடிவடையாத நிலையில் பல இடையூறுகள் இருந்தமையினால் முஸ்லிம்கள் வடக்கில் குடியேற அவ்வளவு முற்படவில்லை.
முஸ்லிம்கள் தொழில் செய்வதற்கும் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. எனவே, ஒரு சிலர் மட்டுமே அக்காலத்தில் மீண்டும் குடியேறச் சென்றனர்.
போர் முடிவடைந்ததன் பின்னரே, பரவலாக முஸ்லிம்கள் மீண்டும் வடக்கில் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முற்பட்டனர். ஆனால், 19 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்கள் மன்னார் மாவட்டத்தில் தாம் வாழ்ந்த இடங்களுக்குச் சென்றபோது, அப்பிரதேசங்கள் கிராமங்கள் என்ற அடையாளமே இல்லாது பாரிய வனாந்தரங்களாக மாறியிருந்தன.
அந்தக் காடுகளை வெட்டித் தமது பழைய காணிகளை அடையாளம் கண்டு, புதிதாக வீடுகளை நிர்மாணித்துக் குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது.
இதற்கிடையில் 2012 ஆம் ஆண்டு மஹிந்தவின் அரசாங்கம் மன்னார் மாவட்ட முஸ்லிம்களுக்குச் செய்யக் கூடிய மகா துரோகத்தைச் செய்தது. அதாவது அப்போதைய அமைச்சராகவிருந்த அனுர பிரியதர்ஷன யாப்பா மன்னார் மாவட்டத்தில் மரிச்சிக்கட்டி போன்ற வில்பத்து பிரதேசத்தில், முஸ்லிம்கள் வாழ்ந்த சில பிரதேசங்களை வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானவையாக பிரகடனப்படுத்தி, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.
அதாவது, புலிகள் வில்பத்து முஸ்லிம்களை விரட்டினார்கள்; மஹிந்தவின் அரசாங்கம் அவர்கள் மீண்டும் திரும்பி வராதிருக்கும் வகையில் அவர்களது காணிகளைச் சட்டத்தின் துணைகொண்டு பறித்தது. எனவே, அம் மக்களைப் பொறுத்தவரை புலிகளுக்கும் மஹிந்தவின் அரசாங்கத்துக்கும் இடையே எந்தவொரு வித்தியாசமும் இல்லை.
வில்பத்து பிரதேசத்தில், 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், மஹிந்தவின் காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானியை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர்களோடு விரட்டப்பட்டுப் பின்னர் இடம்பெயர்ந்த நிலையிலேயே படித்து, தற்போது அமைச்சராக இருக்கும் ரிஷாட் பதியுதீன், அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையை அப்போது கையாண்டார்.
தமக்கு ஜனாதிபதியின் சகோதரரான பஷில் ராஜபக்ஷவுடன் இருந்த நல்லுறவைப் பாவித்து, அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டார்.
பின்னர், மஹிந்தவின் அரசாங்கம், வன விலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட செயலணியொன்றை உருவாக்கியது. அந்தச் செயலணியின் மேற்பார்வையில் விரட்டப்பட்ட மக்களை மீண்டும் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படியே அம் மக்களின் கிராமங்களில் புதிதாக வளர்ந்து இருந்த காடுகள் வெட்டப்பட்டன.
ஆனால், அப்போதும் அப்பிரதேசங்களை வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு வழங்கிய வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே, இதோ முஸ்லிம்கள் வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான காடுகளை அழிக்கிறார்கள் எனச் சிங்கள இனவாதிகளும் சில சுற்றாடலியல் அமைப்புகளும் கூச்சலிட ஆரம்பித்தன.
உண்மைதான், மக்களின் குடியிருப்புகளை வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படாத வரை, மக்கள் வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான காடுகளை அழிக்கிறார்கள் என்றும் வாதிடலாம் தான்.
ஆனால், அதேவேளை நாம் எமது கிராமத்தில் புதிதாக வளர்ந்த காடுகளையே அரச அனுமதியுடன் வெட்டுகிறோம் என்று அந்த மக்களும் வாதிடலாம். ஏனெனில், அதுவும் உண்மை. அதுதான் இப்போது நடைபெற்று வருகிறது.
“ரிஷாட் பதியுதீன் சமயத்தை முன்னிருத்தி, காடுகளை அழித்து, சுற்றாடலுக்குப் பெரும் சேதம் விளைவிக்கிறார்” எனச் சில இனவாதிகளும் சில சுற்றாடலியலாளர்களும் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் முஸ்லிம்கள் என்பதற்காக ரிஷாட் அவர்களுக்காக போராடவில்லை. ஒரு மக்கள் தொகுதி, பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனாலும் தாமும் அவர்களோடு பாதிக்கப்பட்டவர் என்பதனாலுமே அவர் போராடுகிறார். அவரும் அம்மக்களும் முஸ்லிம்களானமை தற்செயலானதென்றே கூற வேண்டும்.
ஆனால், இந்த இனவாதிகளும் சுற்றாடலியலாளர்களும் இந்த மக்கள் முஸ்லிம் என்பதனாலேயே அவர்களது மீள்குடியேற்றத்தைத் தடுக்க முற்பட்டுள்ளார்கள். அவர்கள் உண்மையிலேயே காடுகள் மீதான காதலால் இந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை.
காடுகள் மீதான காதலால்தான் அவர்கள் இந்த விடயத்தில் தலையிடுவதாக இருந்தால், அவர்கள் சிங்கராஜ காட்டிலும் லாஹூகல காட்டிலும் இடம்பெறுவதாகக் கூறப்படும் காடழிப்பைப் பற்றி பேசாதிருப்பது ஏன்? லாஹூகல காட்டில் 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் காடழிப்பு இடம்பெற்றுள்ளதாக அண்மையில் ஒரு செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
சுற்றாடலைப் பற்றி இவர்கள் இவ்வளவு அக்கறையுள்ளவர்கள் என்றால், இந்த நாட்டில் குப்பைப் பிரச்சினையைப் பற்றி அவர்கள் வாய் மூடியிருப்பது ஏன்? அண்மையில் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பிரிட்டிஷ் நிறுவனமொன்றுடன் இணைந்து மீத்தொட்டமுல்லை குப்பை மேட்டை அகற்றி அந்தக் குப்பைகளை மீள்சுழற்சி செய்ய முற்பட்டார்.
ஆனால், ஜா-எலையில் ஒரு காணியில் அந்தக் குப்பைகளைக் கொட்டி அந்தக் காணி உரிமையாளரிடம் சில பயன்களைப் பெற நினைத்த சிலர், அந்த முயற்சியைச் சீர்குலைத்தனர். சுற்றாடலியலாளர்கள் இதற்கு எதிராக என்ன செய்தார்கள்? செய்வது ஒரு புறமிருக்க அவர்கள் இதனைக் கண்டுகொள்ளவே இல்லை என்றே கூற வேண்டும்.
முஸ்லிம் தலைவர்கள், இனவாதக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையைப் பார்ப்பதாகச் சிங்கள இனவாதிகள் கூறுகிறார்கள். ஆனால், வெளியேற்றப்பட்ட மக்கள் தமது பூர்வீக கிராமங்களில் தமது காணிகளின் உரிமையைக் கோருவது இனவாதமாவது எவ்வாறு?
உண்மையிலேயே அவர்கள்தான் இந்தப் பிரச்சினையை இனவாதக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அதனால்தான் வன்னியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற உண்மையைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் சுற்றாடல்ப் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இந்தச் சிங்கள இனவாதிகளும் சுற்றாடலியலாளர்களும் வெளியேற்றப்பட்ட மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்க முன்வருவதில்லை.
அவர்களது வாதங்களின்படி சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் செல்லக் கூடாது. அவ்வாறாயின்அவர்களும் அவர்களது சந்ததியினரும் எங்கே போவது?
அன்று புலிகளால் விரட்டப்பட்ட மக்கள், புத்தளம் மற்றும் அனுராதபுரம் போன்ற பகுதிகளுக்குச் சென்று அகதி முகாம்களில் இருந்தார்கள். ஆனால் 20, 25 வருடங்கள் என்பது நீண்ட காலமாகும்.
அவர்கள் முகாம்களில் இருக்கும் போதே, சிலர் சிறியளவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சிலர் விவசாயத்தில் ஈடுபட்டனர்; மேலும் சிலர் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில்களில் ஈடுபட்டனர்.
இவ்வாறு, அன்று வெளியேற்றப்பட்ட சிலர் முன்னேறி காணி, நிலம் விலைக்கு வாங்கியும் இருக்கிறார்கள். வெளியேறித் தங்கியிருந்த பகுதியிலேயே சிலர் திருமணம் செய்து கொண்டார்கள். இவ்வாறு, அன்று அகதிகளாக இருந்தவர்களில் சிலர், வேறு பகுதிகளில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால், அதனால் தமது பூர்வீக நிலத்தில் வாழும் உரிமையை அவர்கள் இழக்கவில்லை. வேறு பகுதிகளில் காணி, நிலம் வாங்கியிருந்தாலும் அவர்களது பூர்வீக நிலம் அவர்களுடையதே. அவற்றை அடையும் உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும்.
அதேவேளை தற்போது மன்னாரில் தமது பழைய நிலங்களைத் தேடிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் அகதியாக இருந்த காலத்தில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் என்று கூற முடியாது. அவ்வாறு முன்னேறிச் செல்வந்தர்களாக மாறியிருந்தால், அவர்கள் அந்தக் காட்டில் வசதிகளில்லாமல் குடிசைகளில் தங்கியிருக்கப் போவதில்லை.
சுற்றாடல் அமைப்புகளை வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே சுற்றாடல் மீதான பற்றினால் அந்த அமைப்புகளை நடாத்திக் கொண்டிருக்கவில்லை. சுற்றாடல், மனித உரிமை, பெண்ணியம் ஆகியவை இன்று விலைப் பொருளாக மாறியுள்ளன. இவை சம்பந்தமான அமைப்புகளை நடத்துபவர்கள் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புகளிடம் பணத்தைப் பெற்றே பெரும்பாலும் இந்த அமைப்புகளை நடத்தி வருகிறார்கள்.
எனவே, அவர்கள் நாட்டில் சுற்றாடல், மனித உரிமை போன்ற துறைகளில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாகத் தமக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்குக் காட்ட வேண்டும்.
எனவே, அவர்களுக்கு வில்பத்து பிரதேசத்தில், வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான காடுகளை சிலர் அழிக்கிறார்கள் என்று கூற முடியுமானால், அது மற்றொரு அறிக்கையைத் தயாரித்து, தமக்கு நிதி வழங்கும் நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க, அவர்களுக்கு சிறந்த வாய்ப்பை அளிக்கின்றது.
அரசாங்கத்துக்கும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளால் தாம் பதவிக்கு வந்ததை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது மறந்துவிட்டார் போலும்!
அதனால்தான் அவர் ஆரம்பத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை எதிர்க்காதிருந்து, இப்போது எதிர்க்கிறார்.
தமிழ்க் கைதிகளின் பிரச்சினை மற்றும் வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை ஆகியவற்றையும் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல்தான் இந்த அரசாங்கம் வில்பத்துப் பிரச்சினையையும் அணுகுகிறது. ஒரு வாரத்துக்குள்ளேயே அரசாங்கத்துக்கு இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். வில்பத்துப் பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள் என்பது தெரிந்த விடயம்.
அங்கு மரிச்சிக்கட்டி போன்ற பகுதிகளில் இன்னமும் காணக் கிடைக்கும் பள்ளிவாசல்களினதும் ஏனைய கட்டடங்களினதும் எச்சங்கள் மக்கள் அப்பகுதியில் வாழ்ந்ததற்குச் சான்றாக இருக்கின்றன.
ஆனால், அம்மக்கள் உண்மையிலேயே அவர்களது கிராமங்களில்தான் குடியேறப் போகிறார்களா அல்லது அதற்கு அப்பால் செல்கிறார்களா என்பதைக் கண்டறிவது பெரிய விடயம் அல்ல.
அப்பிரதேசங்களில் முன்னர் கடமையாற்றிய கிராமசேவை அதிகாரிகள், மன்னார் கச்சேரி, நில அளவைத் திணைக்களம், தபால், தேர்தல் திணைக்களங்கள் ஆகியவற்றின் மூலம் உண்மையலேயே மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள், அவற்றில் வாழ்ந்த மக்களின் விலாசங்கள் மற்றும் ஏனைய தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதன்படி அவர்கள் தமது பழைய நிலங்களில் குடியேற வசதிகளைச் செய்து கொடுக்க முடியும்.
ஆனால், அரசாங்கம் அதனைச் செய்யத் தயாராக இருக்கிறதா என்பது சந்தேகமே. அண்மையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியின் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையொன்றை அடுத்து, இம் மாதம் 27 ஆம் திகதி அரசாங்க அதிகாரிகள் சிலர் அப்பகுதிக்குச் சென்று அங்கு மக்கள் வாழ்ந்த பிரதேசங்களை அடையாளம் காணப் போவதாக செய்திகள் கூறின.
இவ்வளவு சர்ச்சைகள் ஏற்பட்டதன் பின்னரா அவ்வாறு போக வேண்டும்? ஊடகங்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு இது விவாதப் பொருளாக இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு இது உரிமைப் போராட்டம்; வாழ்க்கைப் போராட்டம்.
ஆனால், இந்தப் பிரச்சினையை மேற்கண்டவாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாகத் தீர்த்தால், அரசாங்கம் காடுகளை அழிக்க, முஸ்லிம்களுக்கு இடமளித்ததாக சிங்கள இனவாதிகள் கூறுவார்கள் என்றும் அதனால் சிங்கள வாக்குகள் தமக்கு குறையும் என்றும் ஜனாதிபதி நினைப்பதாகத் தெரிகிறது.
அண்மைக் காலமாக ஜனாதிபதி சிங்கள இனவாதிகளுக்கு வளைந்து கொடுக்கிறார் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.
அதேவேளை, இதுபோன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பிரச்சினைகள் தீர்க்கப்படாது இருப்பது எந்தவொரு அரசாங்கத்துக்கும் சாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கும். அந்தப் பிரச்சினைகள் இருக்கும்போது மக்கள் அரசாங்கம் தீர்க்க வேண்டிய பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க முற்படுவது குறையும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago