Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 மார்ச் 03 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முகம்மது தம்பி மரைக்கார்
மான்கள் விரித்த வலையில், வேடர்கள் சிக்கிக் கொள்வதுதான் காதல்’ என்று, ஒரு கவிதை உண்டு. மனிதக் காதலுக்கு அன்னங்கள் தூது சென்ற கதைகள் நமது இலக்கியங்களில் ஏராளம் உள்ளன.
வீரர்களை யானைப் பலம் கொண்டவர்கள் என்றும், பெண்களின் அழகினை மயிலுடன் ஒப்பிட்டும் எழுதப்பட்ட இலக்கிய வரிகள் இன்னும் நமது புழக்கத்தில் உள்ளன.
ஆனால், நிஜ வாழ்க்கையில் நிலைமைகள் வேறாக இருக்கின்றன. வனஜீவராசிகளுக்கு நமது கதைகளில் கொடுக்கின்ற இடங்களை நிஜ வாழ்க்கையில் கொடுப்பதில்லை. உலகிலுள்ள ஏராளமான உயிரினங்கள் அலட்சியமான மனித நடத்தைகளால் அழிந்து வருகின்றன.
நம்மைச் சுற்றியிருந்த கணிசமான உயிரினங்கள் உலகில் இல்லாமல் போகின்ற நிலைவரங்கள் உருவாகியுள்ளன. ஆனாலும், நம்மில் அதிகமானோர் இவை தொடர்பில் அலட்டிக் கொள்வதில்லை. கருணையும், இரசனையும் நம்மிடம் இல்லாமல் போனமைதான் இதற்கான காரணங்களாகும்.
மாம்பழக் குருவி என்கிற ஒரு பறவையினம் பற்றி இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? உங்களில் எத்தனை பேர் அதனை உங்களின் வீட்டுச் சூழலில் பார்த்திருக்கிறீர்கள்?
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நமது வீட்டு மரங்களில் சிறகடித்துத் திரிந்த மாம்பழக்குருவி பற்றி, நமது குழந்தைகளுக்குத் தெரியாது. அப்போது நமது வாசலுக்கு வந்து போன மாம்பழக் குருவிகளுக்கு இப்போது என்னதான் நடந்து விட்டது. மாம்பழக் குருவிகள் வந்து போகும் வகையில் இருந்த நமது சூழல்களை, நாம் ஏகத்துக்கு அழித்து விட்டோம்.
அதனால், மாம்பழக் குருவிகள் நமது இடங்களுக்கு வருவதில்லை; மாம்பழக் குருவிகளும் முன்பு போல் இல்லை.
இப்படி நமது சூழலில் வசித்த அநேகமான உயிரினங்கள் அருகி விட்டன. சில இல்லாமலேயே போய் விட்டன.
நமது மாமரங்களிலும் பலா மரங்களிலும் கூடு கட்டி வாழ்ந்த கொக்குகளை இப்போது, எங்காவதொரு குளக்கரையில் மட்டுமே காண முடிகிறது. முன்னர், நமது முன்னோர் தங்கள் வீட்டில் முயல் வளர்த்தார்கள் என்று நமது குழந்தைகளிடம் சொன்னால், நம்ப மாட்டார்கள்.
முயல் என்பது, ஓர் அரியவகை விலங்கினம் என்று, நமது குழந்தைகள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அவலமான நிலைவரத்துக்கு நாங்கள்தான் காரணமாகி விட்டோம்.
உலகம் என்பது வெறும் கோள வடிவான ஒரு பொருளல்ல. அது பல்வகை உயிரினங்களாலான ஒரு வாழ்விடம். மனிதர்கள் வாழுமிடத்தைத்தான் வீடு என்கிறோம். மனிதர்கள் வாழாத வீடுகள் வெறும் கட்டடங்களாகும்.
அதுபோலவே, அஃறினை - உயர்திணை, நீர் - மண், சத்தம் - வெறுமை மற்றும் தாவரங்கள் போன்றவற்கினால் நிறைந்ததே உலமாகும். ஆனால், மனிதர்கள் வசிப்பது மட்டுமே உலகம் என்று நாம் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.
அந்த நம்பிக்கைதான், நம்மைச் சுற்றியுள்ள ஏனைய உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வினை நம்மிடம் இல்லாமல் செய்துள்ளது.
இன்று (மார்ச் - 03) உலக வன ஜீவராசிகள் தினமாகும். நமது கதைகளில் மட்டும் நமக்கு நண்பர்களாக இருக்கும் உயிரினங்கள் குறித்து, நிஜத்திலும் கவனம் செலுத்துவதற்காக இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
2013ஆம் ஆண்டு, ஐ.நா சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் உலக வன ஜீவராசிகள் தினமாக மார்ச் 03ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது. உலகிலுள்ள வன ஜீவராசிகள் மற்றும் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக, இந்த நாள் பிரகடனம் செய்யப்பட்டது.
இவ்வருடம் ‘இளைய குரல்களைச் செவிமடுப்போம்’ எனும் தொனிப்பொருளில், உலக வன ஜீவராசிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 10 முதல் 24 வயதுடையவர்களின் எண்ணிக்கையானது உலக சனத்தொகையில் கால்வாசியாகும்.
இவர்கள்தான் எதிர்காலத்தில் உலகத் தலைவர்களாகவும் தீர்மானங்களை மேற்கொள்பவர்களாகவும் இருக்கப் போகின்றனர். எனவே, அழிந்து வரும் வன ஜீவராசிகளைப் பாதுகாப்பது குறித்து, மேற்படி இளையவர்களின் தீவிர கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த வருடத்துக்கான தொனிப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகளைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றுக்குரிய வாழ்விடங்களை அமைத்துக்கு கொடுக்கும் வகையிலும், இலங்கையில், பல சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 தேசிய சரணாலயங்களாகும்.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் ஐந்து தேசிய சரணாலயங்கள் உள்ளன. குமண, கல்ஓயா, லஹுகல கிதுலான, சோமாவதிய மற்றும் நிலாவெளியிலுள்ள புறாத்தீவு தேசிய சரணாலயங்களே அவையாகும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களை அபிவிருத்தி செய்யும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, அண்மையில் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, குமண தேசிய வன ஜீவராசிகள் சரணாலயத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வினை, இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில், குமண தேசிய வனஜீவராசிகள் சரணாலயத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடலை மேற்கொண்டதோடு, பல்வேறு தீர்மானங்களையும் அங்கு மேற்கொண்டார்.
குமண தேசிய வன ஜீவராசிகள் சரணாலயமானது அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குள் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 35 ஆயிரத்து 644.74 ஹெக்டேயர்களாகும். யுத்த காலங்களில் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையிலிருந்த குமண தேசிய வன ஜீவராசிகள் சரணாலயமானது, இப்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கடந்த வருடம் குமண தேசிய வன ஜீவராசிகள் சரணாலயத்தைப் பார்வையிடுவதற்காக, சுமார் ஆறாயிரம் வெளிநாட்டவர்களும் நான்காயிரம் உள்நாட்டவர்களும் வருகை தந்திருந்தனர். இதன் மூலம், 168 இலட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்குச் சொந்தமான பறவைகள், கரடி, சிறுத்தை, யானை, முள்ளுமுதலை மற்றும் வரிஆமை உள்ளிட்ட பல உயிரினங்கள் குமண தேசிய வன ஜீவராசிகள் சரணாயலத்தில் உள்ளன. மேலும், இந்தச் சரணாலயத்தில் பம்பரகஸ்தலாவ, போவத்தைக் கலலேன, கிரிபொகுன, குடும்பிமலை மற்றும் நெலும்பொகுன்ன உள்ளிட்ட புராதன இடங்களும் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலையாக வாழ்கின்ற 32 உயிரினங்கள் குமண வன ஜீவராசிகள் சரணாலயத்தில் உள்ளன. இலங்கையில் பௌதீக ரீதியாக வாழ்கின்ற மிகப் பெரிய மாமிச உண்ணி விலங்கான புலியையும் இங்கு காண முடியும். அதேவேளை யானை, கரடி, புள்ளிமுயல், மரை, பெரியகீரி, குள்ளநரி, காட்டுஎருமை, காட்டுப்பூனை, சுருண்ட வால்பன்றி, காட்டுப்பன்றிகள், கபலயா மற்றும் இலங்கைக்கே உரித்தான தங்கக் கொடிப்புலி ஆகியவையும் இங்கு உள்ளன.
குமண தேசிய வன ஜீவராசிகள் சரணாலயமானது, ‘பறவைகளின் சுவர்க்கலோகம்’ என்கிற அடைமொழியால் உலம் முழுவதும் பிரபலமானதாகும். இலங்கையில் மிகவும் அரியவகைப் பறவையாகவுள்ள கறுப்புக் கழுத்து நாரை, இந்தச் சரணாலயத்தில் உள்ளது.
குமண சரணாலயத்துக்குள் அமைந்துள்ள இடிகல மற்றும் யாகல களப்புகளை அண்மித்துக் கறுப்புக் கழுத்து நாரைகளைக் காணமுடியும். மேலும், இலங்கையில் வாழ்கின்ற மிக உயரமான பறவையாகக் கருதப்படும் யானைக் குருவியினையும் குமண சரணாலயத்தில் காணலாம்.
அந்த வகையில், இலங்கையில் வாழ்வதாக அறிக்கையிடப்பட்டுள்ள 492 பறவையினங்களில் 267 பறவையினங்கள் குமண வன ஜீவராசிகள் சரணாலயத்தில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
குமண வன ஜீவராசிகள் சரணாலயமானது இலங்கையின் வறள் வலயத்தில் அமைந்துள்ளது. அதேவேளை, இதனுள் பல சூழல் கட்டமைப்புகள் உள்ளமை விசேடமானதாகும். வறண்ட மற்றும் களப்பு வனங்கள், ஈரநிலங்கள், வறண்ட மலைகள், ஆற்றங்கரைகள், கடற்கரை மற்றும் கண்டல் தாவரங்கள் என்று, பல்வேறு விதமான சூழல் கட்டமைப்புகளைக் குமண சரணாலயம் கொண்டுள்ளது.
அந்த வகையில், குமண சரணாயத்துக்குள் அமைந்துள்ள ஈரநிலப் பகுதிகளை அண்டி, பல பறவை இனங்கள் வாழ்கின்றன. அவற்றில் கார்கனி, மலர் வாத்து, பவளக்காலிப் பறவை மற்றும் ருடி ரேன்ஸ்டோன் போன்றவை முக்கியமானதாகும்.
மேலும், இலங்கையில் வாழ்கின்ற முக்கரமுதலை மற்றும் முள்ளுமுதலை ஆகிய இரண்டு வகை முதலைகளையும் இங்கு காணலாம். அதேபோன்று, உலகில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள மூன்று வகை ஆமை இனங்களான ஒலிவ் ரிட்லி ஆமை, பச்சை ஆமை மற்றும் வரி ஆமைகளை இங்கு காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
குமண தேசிய பூங்காவின் கிழக்கு எல்லையான கடற்கரைப் பகுதிக்கு முட்டை இடுவதற்காக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை இந்த ஆமைகள் வந்து போகின்றன.
இவ்வாறு வன ஜீவராசிகளின் வாழ்விடமாகவும் வசிப்பிடமாகவுமுள்ள குமண தேசிய வன ஜீவராசிகள் சரணாலயத்தை, அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நமது தேசத்தில் என்ன வகையான வன ஜீவராசிகள் உள்ளன என்று நம்மில் ஏராளமானோருக்குத் தெரியாது. அந்த ஜீவராசிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் நம்மில் கணிசமானோர் அறியவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
எனவே, தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களைப் பார்வையிடுவதற்கு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுதல் அவசியமாகும். குறிப்பாக, வன ஜீவராசிகள் தொடர்பில் நமது இளைய தலைமுறைகளான மாணவர்கள் கட்டாயமாகத் தெரிந்திருத்தல் வேண்டும். அதனூடாகவே, வன ஜீவராசிகளைப் பாதுகாக்க முடியும்.
நாட்டில் உணவுக்காகவும், வேறு தேவைகளுக்காகவும், அச்சத்தின் காரணமாகவும் கணிசமானளவு விலங்குகள் கொல்லப்படுகின்றன. குறிப்பாக, இன்று மிக உரத்துப் பேசப்படுகின்ற விடயங்களில் ஒன்று, யானை - மனிதன் மோதலாகும்.
இதன் காரணமாகக் கணிசமானளவு யானைகள் பலிகொள்ளப்பட்டுள்ளன. யானைகளால் மனிதர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் தமது தேவைகளுக்காக அழித்தமையும் யானைகளின் வழித்தடங்களை மறிக்கும் வகையில் மனிதர்கள் செயற்பட்டு வருகின்றமையும்தான், மனிதர்களுடன் யானைகள் மோதலில் ஈடுபடுவதற்குப் பிரதான காரணங்களாகும். மனிதர்களால் தமது வாழ்விடங்களை இழக்கும் யானைகள், ஒரு கட்டத்தில் மனிதர்களின் வாழ்விடங்களுக்குள் நுழையத் தொடங்குகின்றன.
இதனால், அச்சம் கொள்ளும் மனிதர்கள் ஒரு கட்டத்தில் யானைகளைக் கொன்று விடுகின்றார்கள். இலங்கையில் மொத்தமாக ஐயாயிரத்துக்கு உட்பட்ட யானைகள்தான் உள்ளன. இந்தக் கணக்கின்படி பார்த்தால் நான்காயிரம் மனிதர்களுக்கு ஒரு யானைதான் இலங்கையில் உள்ளது.
இவ்வாறு குறைவாக உள்ள ஓர் உயிரினத்தின் அருமை, பெருமைகள் தெரியாமல், அவற்றினை நாம் அலட்சியமாகக் கொன்று விடுகின்றோம் என்பது எவ்வளவு கவலைக்குரிய விடயம்.
எனவேதான், வன ஜீவராசிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவும் அது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் ‘உலக வன ஜீவராசிகள் தினம்’, இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களை அபிவிருத்தி செய்யும் வகையில், குமண சரணாலயத்துக்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா வருகை தந்த நிகழ்வுக்கு, சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளருமான ஏ.எம். ஜவ்பர் தலைமை தாங்கினார்.
இதன்போது, தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதனூடான செயற்பாடுகள் குறித்துச் சில கோரிக்கைகளை அமைச்சரிடம் அவர் முன்வைத்திருந்தார்.
இவற்றில் முக்கியமானது, தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களைப் பார்வையிடுவதற்கு மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டுமென்பதாகும். இந்தக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அமைச்சர், விரைவில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் இதன்போது கூறினார்.
சரணாலயங்கள் பற்றிய வரை படங்களை ஒவ்வொரு சரணாலயங்களின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்துதல் வேண்டுமெனவும் இதன்போது ஜவ்பர் கோரிக்கை விடுத்தார்.
அதேபோன்று, ‘சபாரி’ வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள், வழிகாட்டி மற்றும் சரணாலய உத்தியோகத்தர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டிக் கொண்டார். அதேபோன்று, தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
குமண தேசிய வன ஜீவராசிகள் சரணாலயத்துக்குள் கைத் தொலைபேசிகளுக்கான தொலைத் தொடர்புகளை வழங்கும் எந்தவொரு சேவைகளும் கிடைப்பதில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதனால், சரணாலயத்தைப் பார்வையிடச் செல்வோர் அவசரத் தேவைக்காக வெளியாருடன் தொடர்பு கொள்ள முடியாது. மேலும், ஒருவர் சரணாலயத்துக்குள் வழி தவறி விட்டாலும், ஏனையவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு இயலாது.
எனவே, குமண சரணாலயம் மட்டுமன்றி இவ்வாறான தொலைத் தொடர்புக் குறைபாடுகள் நிலவும் அனைத்து சரணாலயங்களிலும் தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவது உடனடித் தேவையாகும்.
மேலும், சரணாலயங்களைக் காண வருவோர் தங்குவதற்கு வசதியான தங்குமிடங்களை முடிந்த வரையில் அதிகமாக அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்றும், இதன்போது ஏ.எம். ஜவ்பர் கோரிக்கை விடுத்தார்.
குறித்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்ட அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, அவற்றினை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைளை மேற்கொள்வதாகக் கூறியிருந்தார்.
‘வன ஜீவராசிகளைப் பாதுகாத்தல்’ என்பதற்கான விழிப்புணர்வினை வெறுமனே வெறும் பிரசாரங்களினூடாக மட்டும் நிறைவேற்றி விட முடியாது. அதற்காக அனைத்துத் தரப்பினரும் உழைக்க வேண்டும். அவை தொடர்பான விழிப்புணர்வுகளை எல்லா வழிகளிலும் ஏற்படுத்த வேண்டும். வன ஜீவராசிகளின் உலகங்களில், நமது மூக்குகளை நுழைக்காமல் விடுவதுதான், அவற்றினைப் பாதுகாப்பதற்கான முதல் படியாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago